![]() |
படம்: ரா. செழியன் |
“எங்க ஊர் வேற; கோயில் வேற இல்லை. எங்க ஊர் சாமிக்குப் பேர் சுவாமிநாத சுவாமி. எங்க ஊர்ல வந்து 'சுவாமிநாதன் வீடு எது?'ன்னு கேட்டா, ஆளாளுக்கு ஒரு வீட்டைக் காட்டுவாங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் குறைஞ்சது ஒரு சுவாமிநாதனாவது இருப்பார். பிள்ளைகளைக் கூப்பிடும்போதுகூட 'குமார் முருகா', 'சீனிவாச முருகா'ன்னு முருகனைச் சேர்த்துதான் கூப்பிடுவோம். பெரும்பாலும் எல்லா வீட்டுக் கல்யாணங்களும் கோயில்லதான் நடக்கும். அதனால முகூர்த்த காலத்துல, ஒரே சமயத்துல எழுபது, எண்பது கல்யாணங்கள் நடக்குறதெல்லாம் இங்கே சர்வ சாதாரணம். ஊருக்கும் கோயிலுக்கும் எப்படி ஒரு உறவு பாத்தீங்களா?”
- தன் சொந்த ஊரான சுவாமிமலையைப் பற்றி ஒருசமயம் பத்திரிகையில் தேனுகா சொல்லியிருந்தது இது.
சுவாமிமலையையும் முருகன் கோயிலையும் பற்றி மட்டும் அல்ல; தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் எதைப் பற்றியும் தேனுகாவால் பேச முடியும். அந்தக் கோயில்களின் வரலாறு, கட்டமைப்பு, ஓவியங்கள், சிற்பங்கள், கோயில் கலைகள், பிரத்யேக இசைக் கருவிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அவரால் சொல்ல முடியும். வழூவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஐம்பொன் சிலையின் தாள, லய முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே கஜசம்ஹாரமூர்த்தியின் ஆனந்த தாண்டவப் புராணத்துக்கு அவரால் செல்ல முடியும். தேவாரத்தில், கஜசம்ஹாரமூர்த்தியைக் கரி உரித்த சிவன் என வர்ணிக்கும் பாடலைப் பாட முடியும். அங்கிருந்து நேரே பின்நவீனத்துவக் கோட்பாட்டுக்குத் திரும்ப முடியும். ஃபிராய்டின் கோட்பாடுகள், ஆந்த்ரே பிரதோன் கவிதைகள், டாலி, மாக்ஸ், மெஸ்ஸான் ஓவியங்கள் என்று போக முடியும். அப்படியே நேரே நம்மூரில் நவீன ஓவியங்களுக்கு வந்து இங்கே அவற்றின் தாக்கத்தைப் பொருத்திப் பேச முடியும். தமிழ்ச் சமூகத்தின் அற்புதமான பண்பாட்டு வரலாற்றாய்வாளர். கலை விமர்சகர். இன்று இல்லை.