![]() |
கிராஃபிக்ஸ்: ரெமோ |
இந்தியாவில் மாநிலங்கள் அமைப்பு என்பது, பல்வேறு நாடுகளையும்போல நிர்வாக வசதிக்கான வெறும் பிராந்தியரீதியாலான பகுப்பு அல்ல. மாறாக, அது பல்வேறு இனங்களின் மொழி, கலாச்சாரம், வரலாற்று உரிமைகளோடு பிணைக்கப்பட்டது. மேலும், உண்மையான அதிகாரப் பரவாக்கலும் பல இன மக்களுக்கான பிரதிநிதித்துவமும் மாநில உரிமையிலிருந்தே தொடங்குகின்றன. ஆக, இன்று நடைமுறையிலிருக்கும் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் எனும் அமைப்பே சங்கப்பரிவாரங்களுக்கும் அவற்றின் ‘ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே தேசியம்’ எனும் ஒற்றைக் கலாச்சாரக் கனவுக்கும் நேர் எதிரானது. ஏனென்றால், இந்த மொழிவாரி அமைப்பு ஒருவகையில் இந்தியாவின் பல்வேறு இன மக்களையும் மொழி அடிப்படையில் ஒன்றிணைக்கிறது - மறுவகையில் மத அடிப்படையில் அவர்களைப் பிளக்கவிடாமல் தவிர்க்கிறது. ஆக, மொழிவாரி மாநிலங்கள் எனும் அமைப்பு ஒரு உறங்கும் புலி. சீண்டினால் அது எப்படிக் கிளர்ந்தெழும் என்பதற்கான சமீபத்திய உதாரணத்தையே ‘2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ வாயிலாக டெல்லி பார்த்தது. ஆக, இந்த நாட்டை எப்படியானதாக மாற்ற வேண்டும் என்று சங்கப்பரிவாரங்கள் வைத்திருக்கும் வரைபடத்தின்படி, அழிக்கப்பட வேண்டிய அடிப்படையான கூறுகளில் ஒன்றாகிறது இன்றைய மாநிலங்கள் அமைப்பு. அதன் ஆரம்ப கட்டப் பணியே மாநிலங்கள் உரிமைப் பறிப்பு.
ஆர்எஸ்எஸ்ஸைப் பற்றிப் பேசுகையில், ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ எனும் அது வெளியே அதிகம் வெளிக்காட்டும் ஒரு முகத்தைப் பற்றிதான் அதன் எதிரிகளும் விமர்சகர்களும் அதிகம் பேசுகிறார்கள். ‘ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம்’ எனும் கனவையும் நெடுங்காலமாகக் கொண்ட இயக்கம் அது என்பதை நாம் உணர வேண்டும். ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தாந்தத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான எம்.எஸ்.கோல்வல்கர், 1961-ல் தேசிய ஒருமைப்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இன்றைய கூட்டாட்சி வடிவம், பிரிவினைவாத உணர்வுகளுக்கு வித்திடுவதுடன் அதற்கு ஊட்டம் அளிக்கவும் செய்கிறது. ஒரே தேசம் எனும் கருத்தாக்கத்தை அங்கீகரிக்க மறுப்பதுடன் அதைச் சிதைக்கவும் செய்கிறது. அது முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் சீரமைக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி நிறுவப்பட வேண்டும்.”
இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் எப்படியான மாநிலங்களைக் கட்டமைக்க விரும்புகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்: “மையப்படுத்தப்பட்டதாக அரசு இருக்க வேண்டும். மாநிலங்கள் என்பவை நிர்வாகரீதியான பிரதேசங்களாக இருக்க வேண்டும்… நமது ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய, துண்டாடக் கூடிய, பிராந்தியம் சார்ந்த, குறுங்குழுவாத, மொழி அடிப்படையிலான அல்லது வேறு எவ்விதமான பெருமித உணர்வும் சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு, ‘ஒரே நிலம், ஒரே தேசம், ஒரே நாடாளுமன்றம், ஒரே நிர்வாகி’ என்பது பறைசாற்றப்பட வேண்டும்.”
இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகமே தேவை; நாட்டை இதற்காக 50 நிர்வாகப் பிரிவுகளாகக்கூடப் பிரித்து நிர்வகிக்கலாம் என்பதே ஆர்எஸ்எஸ் கனவில் உள்ள மாநிலங்களுக்கான வரைபடம். கோல்வல்கரின் வார்த்தைகளிலிருந்து பார்த்தால், மோடி இன்றைக்குச் சொல்லும் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ எனும் சொல்லாடல் பின்னாளில் இந்திய மாநிலங்களை எப்படியானதாகப் பிரிக்க வழிவகுக்கும் என்பது புரியவரும்.