
நெடுநாட்களுக்கு முன்பு கேட்ட ஒரு கதை இது. ஒரு மானுடவியலாளர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சட்டம், நீதியெல்லாம் எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ள கள ஆய்வுக்காகக் கடந்த காலத்துக்குள் பயணமாகிறார். பெரிய அலைச்சலுக்குப் பின் ஒரு ராஜாவைச் சந்திக்கிறார். நீதி, நியாயம், அவர்களுடைய சட்டதிட்டங்கள் தொடர்பாகக் கேட்கிறார். “எங்கள் வழக்கப்படி எதிரிகள் என்று முடிவெடுத்துவிட்டால், எதிரிகளைத் துவம்சப்படுத்திவிடுவோம் -குடியிருப்புகளைச் சூறையாடுவோம். ஆண்கள் மீது தாக்குதல் நடத்துவோம். பெண்களைத் தூக்கிவிடுவோம். எதிர்ப்பவர்களைச் சிறை பிடிப்போம்; அச்சமூட்ட முடியாதவர்களைக் கொன்றுவிடுவோம்’’ என்கிறார் ராஜா. மானுடவியலாளர் கேட்கிறார். “இதெல்லாம் தவறு என்று நீங்கள் நினைக்கவில்லையா?” ராஜா சொல்கிறார். “எப்படி தவறாகும்? இதுதான் எங்கள் சட்டம். சட்டம் சொல்வது எதுவோ அதுதானே நீதி!” மானுடவியலாளர் கேட்கிறார், “அப்படியென்றால், உங்கள் பார்வையில் எதெல்லாம் அநீதி?” ராஜா சொல்கிறார். “இதையே எங்கள் எதிரிகள் எங்களுக்குச் செய்தால், அதெல்லாம் அநீதி!” மானுடவியலாளர் சந்தேகப்பட்டு ராஜா மீது பாய்ந்து அவர் அலங்காரத்தைக் கலைக்கிறார் - ராஜாவின் இடத்தில் இப்போது, மானுடவியலாளர் நாட்டின் அப்போதைய அதிபர் உட்கார்ந்திருக்கிறார்.
அரசு எனும் அமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது, அது பேசும் சட்டங்களையும் நீதி, அநீதி, வரலாற்று நியாயங்களையும் உண்மையான நியாய தர்மத்தையும் வரலாற்றையும் மக்களுடைய பார்வையிலிருந்து எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பதற்கு அடிக்கடி நான் நினைவுபடுத்திக்கொள்ளும் கதை இது. நவீன உலகின் மிக ஆபத்தான, அபாயகரமான மதம் எதுவென்றால், அரசுத்துவம்தான்.
மக்கள்தான் நாடு; அரசு அல்ல!
மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு அமைப்பு அரசு. அரசுக்கென்று ஒரு ஆன்மா இருக்கிறது. எனினும், அது மக்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்த உயிரினத்துடையது அல்ல. அந்த ஆன்மாவைத் தனித்த உயிரினமாக்கி, அதன் பெயரால் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொண்டு மக்களை ஒடுக்க ஆட்சியாளர்கள் முற்படும்போது அரசுத்துவம் பிறக்கிறது. தாங்களும் மனிதர்கள், எல்லா மனிதர்களுக்கும் உரிய சகல பலங்கள், பலவீனங்களைக் கொண்டவர்கள், தவறிழைக்கும் வாய்ப்புள்ளவர்கள், மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள், தங்களுக்குத் திசை காட்டும் அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்பதை மறந்து, ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் தங்களையே அரசாகவும் நாடாகவும் கற்பித்துக்கொள்ளும் அபத்தம் அரங்கேறத் தொடங்கும்போது அரசுத்துவம் ஒரு மதம் ஆகிறது.
நவீன உலகில் அரசுத்துவம் எப்படி அரசை ஒரு மதம்போலக் கட்டியமைக்கிறது என்பதை அரசுக் கட்டமைப்புகளோடும் மதக் கட்டமைப்புகளோடும் ஒப்பிடுபவர்கள் உண்டு. “மதம் நமக்கு எதைக் கற்பிக்கிறது? கடவுளையும் மதகுருமார்களையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் வழிபடக் கற்றுக்கொடுக்கிறது. அரசுத்துவமும் அரசைக் கேள்வி கேட்காமல் வழிபடக் கற்றுக்கொடுக்கிறது. இரண்டுமே அதிகாரங்களை மையமாகக் குவிக்கின்றன; அந்த மையத்தைச் சுற்றியிருப்பவர்களின் நலன்களைப் போற்றிப் பராமரிக்கின்றன. மனிதர்கள் எதிர்க் கேள்வி கேட்பதைப் புனித நூல்கள் மூலம் கட்டுப்படுத்துகிறது மதம். சட்ட நூல்களைப் புனித நூலாக்கிவிடுகிறது அரசு. இரண்டுமே எதிர்ப்பற்ற விசுவாசிகளை உருவாக்கவும் விமர்சகர்களை அச்சுறுத்தவும் ஏராளமான புனைகதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இரண்டுக்குமே மேல்தட்டு வர்க்கத்தினர் பிரச்சாரகர்களாக இருக்கிறார்கள். விமர்சகர்களைக் கடவுள் விரோதியாக்கிவிடுகிறது மதம்; தேச விரோதியாக்கிவிடுகிறது அரசு” என்று சொல்லப்படுவதுண்டு.