![]() |
படம்: பிரபு காளிதாஸ் |
திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார்.
திரும்பிப் பார்க்கையில் இந்த 50 ஆண்டு அரசியல் வாழ்வில் எதை முக்கியமானது என்று சொல்வீர்கள்?
அரசியல் குடும்பத்துலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த 50 வருஷங்களைத் தனிச்சு பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனா, தனியா ஒரு தொடக்கம்னு வரையறுக்கணும்னா, கோபாலபுரம் சண்முகம் அண்ணன் சலூன்ல உருவாக்கின ‘இளைஞர் திமுக’ மன்றமும் 1967 செப்டம்பர் 15 அன்னைக்கு நடத்தின அண்ணா பிறந்த நாள் கூட்டமும்தான் தொடக்கம். அங்கிருந்து பார்த்தா கட்சி கூடவே உயரங்கள்லேயும் பள்ளங்கள்லேயும் மாத்தி மாத்தி பயணிக்கிறதாவே என் வாழ்க்கையும் இருந்திருக்கு. கொஞ்ச காலம் முன்னாடி இதே கேள்வியைக் கேட்டிருந்தீங்கன்னா, நெருக்கடிநிலைக் காலகட்டத்தை முக்கியமானதா சொல்லியிருப்பேன். அப்போதான் கல்யாணம் ஆகிருந்துச்சு. ஒரு புது வாழ்க்கையில நுழைஞ்சிருந்தோம். கைது நடந்துச்சு. துர்கா மிரண்டுட்டாங்க. சிறைக்குள்ள எப்பவும் ஒழிச்சுக்கட்டப்படலாம்கிற நிலைமை. ஒவ்வொரு நாளும் அடிச்சு நொறுக்கப்படுற கட்சித் தோழர்களோட மரண ஓலம் அறையில கேட்டுக்கிட்டே இருக்கும். வெளியே திமுகவை நிர்மூலமாக்குற முயற்சிகள். எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடிக்கிட்டிருந்தார் தலைவர். மறக்கவே முடியாத நாட்கள். ஆனா, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிடுச்சு, தலைவர் உடல் நலம் குறைஞ்சு வீட்டோட முடங்கின பிறகான இந்த ஒரு வருஷம். களத்துல எவ்வளவு சுமையையும் சுமந்துடலாம். முடிவு எடுக்குறது எவ்வளவு பெரிய சுமைன்னும் கிட்டத்தட்ட ஐம்பது வருஷம் இந்தச் சுமையை அவர் சுமந்திருக்கிறது எவ்வளவு பெரிய வலிங்கிறதும் இப்போதான் புரியுது!