இந்த நாடு யாருடையது?


   இந்தியர்களுக்கு ஊழல் அந்நியமல்ல. உண்மையை ஒத்துக்கொள்வதில் நமக்குச் சங்கடம் இல்லை என்றால், அது இந்திய வாழ்வின் ஓர் அங்கம். இந்த நாட்டின் குடியரசுத் தலைவர், முதன்மைச் செயலர்களில் தொடங்கி ஊராட்சி மன்ற உறுப்பினர், உதவியாளர்கள் வரை எவரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட வாழ்வில் ஊழலை எதிர்கொள்கிறோம். நம் வீட்டுக்கு மிக அருகிலும் அல்லது வீட்டுக்குள்ளேயும்கூட ஊழலில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களை எதிர்ப்பதில்லை. தேவைப்படும் தருணங்களில் அவர்களுடன் கலப்பதிலும்கூட நமக்குச் சங்கடம் இருப்பதில்லை.
   இந்தியா இப்போது ஊழலுக்கு எதிராக கொஞ்சம்போல முணுமுணுக்கிறது. எண்ணிக்கை காரணமாக இருக்கலாம். ரூ. 1763790000000. எண்ணிக்கைதான் நம்மை ஆள்கிறது. ஆ. ராசாவைப் பற்றி அதுதான் நம்மைப் பேசவைக்கிறது. நீரா ராடியாவைப் பற்றி அதுதான் பேசவைக்கிறது. ரத்தன் டாடாவைப் பற்றி, அம்பானி சகோதரர்களைப் பற்றி, சுனில் மிட்டலைப் பற்றி, தருண் தாஸைப் பற்றி, கருணாநிதியைப் பற்றி, ராசாத்தியைப் பற்றி, தயாநிதி மாறனைப் பற்றி, பிரபு சாவ்லாவைப் பற்றி, பர்கா தத்தைப் பற்றி...
   எண்ணிக்கையானது எண்களுடன் முடிந்துவிடுவதில்லை; எப்போதுமே அது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான துருப்புச் சீட்டு. நாம் இப்போது எண்ணிக்கையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நல்லது. ஆனால், ஏன் எண்ணிக்கையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம்; அதிகாரத்தைப் பற்றி ஏன் பேச மறுக்கிறோம்?
   நீரா நிறைய பேசியிருக்கிறார். அவருடைய உரையாடல்களில் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' 104 பதிவுகள் மட்டுமே இப்போது ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருக்கின்றன. மொத்தம் 5,800 பதிவுகள் மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் மேலும் பேசியிருக்கலாம்.
   நமக்கு மூன்று பதிவுகள் போதும்: ராசா மீதான கவலையை வெளிப்படுத்தும் டாடா - நீரா உரையாடல் பதிவு, அம்பானி சகோதரர்கள் இடையேயான வழக்கின் தீர்ப்பு தொடர்பாகக் கவலையை வெளிப்படுத்தும் பிரபு சாவ்லா - நீரா உரையாடல் பதிவு, மிட்டல் மீதான கவலையை வெளிப்படுத்தும் தருண் தாஸ் - நீரா உரையாடல் பதிவு. இவை மூன்றும் போதும், இந்த நாட்டைப் புரிந்துகொள்ள; இந்த நாட்டில் ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களையும் புரிந்துகொள்ள.
  நீண்ட நெடுங்காலமாக நமக்கு ஒரு பொய் உரக்கச் சொல்லப்பட்டுவந்தது. நாம் அந்தப் பொய்க்குப் பழக்கப்படுத்தப்பட்டோம்: "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நம் முன்னோர்கள் இந்த நாட்டை ஒரு சமதர்ம நாடாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.''
  நீண்ட நெடுங்காலமாக நமக்கு ஓர் உண்மை கசிந்துவந்தது. ஆனால், நாம் அந்த ரகசியத்தை நம்ப மறுத்தோம்: "பெருநிறுவனங்களின் முதலாளிகள்தான் இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள். நாட்டின் நிதிநிலை அறிக்கையே அவர்களுடைய விருப்பப்படிதான் உருவாக்கப்படுகிறது.''
    நீராவின் உரையாடல்களை முழுமையாகக் கேளுங்கள். அவை ஊழலை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இந்த நாட்டின் உண்மையான அதிகாரம் யாரிடம் குவிந்திருக்கிறது என்பதையும் அம்பலப்படுத்துகின்றன. இந்திய அரசை மக்கள் இயக்கவில்லை; அதிகாரிகள் இயக்கவில்லை; அரசியல்வாதிகள் இயக்கவில்லை; முதலாளிகளே இயக்குகிறார்கள். இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதையும் யார் ஆளக்கூடாது என்பதையும் அவர்களால் தீர்மானிக்க முடிகிறது. அரசின் கொள்கை முடிவுகளை அவர்களால் தீர்மானிக்க முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளைத் அவர்களால் தீர்மானிக்க முடிகிறது. எவரையும் விலைக்கு வாங்க அவர்களால் முடிகிறது.
  வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினரிடம் நீரா கூறுகிறார்: "ஆமாம். இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ஆ. ராசாவுடன் பேசினேன். என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச் சாதகமாக அரசின் முடிவை மாற்றினேன். அதற்காக ரூ. 60 கோடி பெற்றேன். அது என் சேவைக்கான கட்டணம்.''
  உச்ச நீதிமன்றத்தில் டாடா கூறுகிறார்: "இந்த உரையாடல் பதிவுகள் வெளியானது இந்திய அரசு அளிக்கும் வாழ்வதற்கான உரிமையையும் குடிமகனின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களைக் காக்கும் கடமையையும் மீறும் செயலாகும்.''
  நம்புங்கள்: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நம் முன்னோர்கள் இந்த நாட்டை ஒரு சமதர்ம நாடாகக் கட்டமைத்திருக்கிறார்கள்!
2010 தினமணி

2 கருத்துகள்:

  1. // உச்ச நீதிமன்றத்தில் டாடா கூறுகிறார்: "இந்த உரையாடல் பதிவுகள் வெளியானது இந்திய அரசு அளிக்கும் வாழ்வதற்கான உரிமையையும் குடிமகனின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களைக் காக்கும் கடமையையும் மீறும் செயலாகும்.'' //

    தங்களின் லாப நோக்கங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் பேரம் பேசும் , வியாபாரம் செய்யும் இவர்களின் நடவடிக்கை கள் இதனை எப்படி ஒருதனி மனிதனின் தனிப்பட்ட வாழ்கை ரகசியங்களாக இவைகளை கருத முடியும்?

    எனக்கு குண்டுவைக்கவும் ரயிலை கவிழ்க்கவும் எண்ணம் இருக்கிறது. அவ்வாறு செய்து மாட்டிக்கொண்டேன்.
    இது என்னுடைய தனிப்பட்ட வாழ்கை ரகசியம். இந்திய அரசு என் தனி மனித உரிமையை மீறி என்னை கைது செய்துவிட்டது என்று நான் கூறினால் ஏற்றுக்கொள்வார்களா கோர்டில்?

    பதிலளிநீக்கு
  2. ஒருவனுடைய உண்மையான சுயருபம் தெரியணும்ன அவனுக்கு அதிகாரத்தையோ அதிகமான செல்வதையோ கொடுத்துபார்னு அந்த காலத்தில் பெரியவர்கள் எதுக்கு சொன்னாங்ன்னு இப்போதான் தெரியுது

    பதிலளிநீக்கு