என்கவுன்டர் தொழில் அல்ல - திரிபாதி ஐ.பி.எஸ்.

  
திரிபாதி ஐ.பி.எஸ்.


                                இந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர்,  நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த என்கவுன்டர்களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து... 
                           ‘‘வேளச்சேரி என்கவுன்டருக்கு என்ன தேவை இருந்தது?’’
‘‘எல்லா என்கவுன்டர்களுக்கும் என்ன தேவையோ அதே தேவைதான்!’’

                          ‘‘உங்கள் முதல் என்கவுன்டர் எது? இதுவரை எத்தனை என்கவுன்டர்கள் உங்கள் தலைமையில் நடந்திருக்கின்றன?’’
 ‘‘ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். யாரைக் கொல்வதும் எங்கள் நோக்கம் இல்லை. அதற்கு எங்களுக்கு அதிகாரமும் இல்லை. நீங்கள் கேட்பதைப் பார்த்தால், இதையே நான் தொழிலாக வைத்துக்கொண்டு அலைவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆபத்தான சூழலில், தவிர்க்கவே முடியாத சூழலில்தான் துப்பாக்கியை எடுக்கிறோம். ப்ளீஸ்... நம்புங்கள்!’’

                          ‘‘என்கவுன்டர்களுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?’’
(சிரிக்கிறார்... பின் ஆழமான பார்வையோடு...) ‘‘போகும்போது என்கவுன்டருக்காகச் செல்கிறோம் என்றே தெரியாதே?’’

                          ‘‘சரி, என்கவுன்டர் முடிந்து வரும்போது..?’’
‘‘ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும். ஏனென்றால், செத்தவர்களுக்கும் - அவர்கள் எவ்வளவு பெரிய கொடியவர்களாக இருந்தாலும் - ஒரு குடும்பம், உறவினர்கள் எல்லோரும் இருப்பார்கள் இல்லையா?’’

                          ‘‘உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா?’’
‘‘ம்... ஆனால், இந்தப் பேட்டி என் வேலை சார்ந்தது மட்டும்தான் இல்லையா? நான் இங்கு குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை!’’

                          ‘‘உங்களுக்குப் பாவ - புண்ணியங்களில் நம்பிக்கை உண்டா?’’
‘‘நான் ஒரு போலீஸ். வேலை என்று வந்துவிட்டால் சாதி, மதம், கடவுள்... இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது!’’

                          ‘‘சரி, வேலைக்கு அப்பாற்பட்டு... ஒரு தனிப்பட்ட மனிதனாக?’’
‘‘அப்படிப் பார்த்தாலும், என் கையில் எதுவும் இல்லை. (மேலே கையைக் காட்டி) அவனுக்கு முன் நாமெல்லாம் யார்? எல்லாவற்றையும் அவன்தான்  செய்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்!’’

                          ‘‘போலி என்கவுன்டர்களை நடத்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அவ்வளவுதான். ஒரு என்கவுன்டர் நடந்தால் யாரையும் யாரும் சும்மா விட்டுவிடுவது இல்லையே? மனித உரிமை ஆணையம், விசாரணை எல்லாம் இருக்கிறது. தவறு செய்து இருந்தால் தண்டனை கொடுங்கள். அவ்வளவு தான். நாம் பேட்டியை முடித்துக்கொள்ளலாம்!’’

ஆனந்த விகடன் 2012

3 கருத்துகள்:

  1. அருமையான அவசியமான அனைவரின் மனதிலும் கனந்து கொண்டிருந்த கேள்விகள்.. தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  2. Alavaana, edhilum sikaadha badhilgal...
    Badhilgalukum virudhu tharalam ivaruku..

    பதிலளிநீக்கு
  3. The questions are quiet sensible, matured and not the usual ones we see elsewhere, but the answers are unexpected and the beaten-track response of a Police Officer. Here, I would like to add that there are two types of police encounters, one circumstantial and the other intentional. The first one is acceptable and depending upon the situation unavoidable. The second category is inhuman and condemnable. Many of the encounters here in India fall under the second category, may be due to the prejudicial mind set-up of the Police force.

    பதிலளிநீக்கு