ஆணைக் கொல்லுங்கள்!

           
           அடிக்கடி கை நீட்டும் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட தோழி அவள். ஒருகட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அவன் எல்லோர் முன்பும் கை நீட்ட, தோழி நொறுங்கிப்போனாள். கடுமையான மன அழுத்தத்தில் உறைந்திருந்த அவளும் அவனும் மனநல மருத்துவரிடம் கலந்தாய்வுக்காகச் சென்றார்கள். அவன் எதற்கெடுத்தாலும்அடிக்கிறான் என்று அவள் உடைந்து அழுதபோது மருத்துவர் சொன்னது இது... ‘‘உன்னுடைய தவறு இது. முதன் முதலாக அவர் அடித்தபோதே, பதிலுக்கு நீ ஓங்கி அறைந்திருக்க வேண்டும் அல்லது கையில் துடைப்பத்தை எடுத்திருக்க வேண்டும்.’’ அதிர்ச்சியோடு இருவரும் பார்க்க, அவர் தொடர்ந்திருக்கிறார்... ‘‘ஆமாம். ஓர் ஆணுக்கு எதிராகக் கை நீட்ட வேண்டும் என்று சொன்னால், இவ்வளவு அதிர்ச்சி அடைகிறீர்களே... ஒரு பெண் தாக்கப்படுவது ஏன் கொஞ்சமும்  அதிர்ச்சி தரக் கூடியதாக இல்லை? ஏனென்றால், இந்த அசிங்கத்தை வரலாற்றுக் காலம் தொட்டு நாம் பழகி இருக்கிறோம். நம்முடைய மரபணுக் களிலேயே பெண்கள் கையாளப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் புதைந்திருக்கிறது. வேட்கை யோடு அது காத்திருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் அது பாய்கிறது!’’

          அஸ்ஸாம் பெண் பலாத்காரச் சம்பவம் தொலைக்காட்சியில் ஓடியபோது, அந்த மருத்துவர் சொன்ன வார்த்தைகள்தான் திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்தன. குவாஹாத்தி போன்ற ஒரு நகரத்தில், பரபரப்பான சாலையில், ஓர் இளம் பெண் இருபதுக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலால் துரத்தித் துரத்தி மானபங்கப்படுத்தப்படுகிறார். பொதுமக்கள் பார்த்துக் கொண்டே கடக்கிறார்கள். சம்பவ இடத்தில் இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபர் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றத் துளியும் முயற்சிக்காமல், தன்னுடைய நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, குழுவினரை அழைத்து அணுஅணுவாக அதைப் படம் பிடிக்கிறார். அது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பாகிறது. இவ்வளவு பேர் பார்க்க நடக்கும் ஒரு சம்பவ இடத்துக்குக் காவல் துறை வந்து சேர அரை மணி நேரம் ஆகிறது. ‘‘என் பணி செய்தி சேகரிப்பது. அதை மட்டும்தான் நான் செய்ய முடியும்’’ என்கிறார் நிருபர். ‘‘குற்றம் நடக்கும் இடத்துக்கு நீங்கள் அழைத்த நிமிஷமே வர காவல் துறை ஒன்றும் ஏ.டி.எம். அல்ல’’ என்கிறார் மாநிலத்தின் காவல் துறை இயக்குநர். இவை எல்லாம் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், இந்தியாவில் இவை எதுவும் ஆச்சர்யம் அல்ல. கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் பதிவாகி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 2.25 லட்சம்!

             ஹரியானா மாநிலத்தில், ஜிந்த் மாவட்டத் தைச் சேர்ந்த துவா கிராமத்தில் சில மாதங் களுக்கு முன் நிலச்சுவான்தார்கள் அடங்கிய கும்பலால் 13 வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள். விஷயத்தைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லக் கூடாது என்று தடை விதித்தது கிராமப் பஞ்சாயத்து. அவமானத்தில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டாள் அந்தச் சிறுமி. இது எத்தனை பேருக்குத் தெரியும்?

           உத்தரப்பிரதேசத்தில், பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்ரா கிராமப் பஞ்சாயத்து, ‘பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, காதல் திருமணம் செய்துகொள்ளக் கூடாது, 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் முக்காடு போடாமல் வெளியே வரக் கூடாது’ என்று பகிரங்கமாக உத்தரவிட்டது. அரசால் என்ன செய்ய முடிந்தது?

           இந்தூரைச் சேர்ந்த சோகன்லால் தன் மனைவியின் கற்பைப் பாதுகாக்க  பிறப்பு உறுப்பு அருகே ஒரு துளையிட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது எல்லாம், தன் பூட்டு போட்டுச் சென்றிருக்கிறார்... நான்கு வருடங்களாக. அவரை நம்முடைய சட்டங்களால் என்ன செய்துவிட முடியும்?

           தமிழகத்தில், பெரியகுளத்தைச் சேர்ந்த பெரியசாமி என்கிற கூலித் தொழிலாளியின் மனைவி வசந்தியை, அவர் தன் கைக் குழந்தை யோடு நடந்து சென்றபோது பிடித்துச் சென்ற கடமலைக்குண்டு போலீஸார் அடித்து, துன்புறுத்தி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். உயர் நீதிமன்றப் படி ஏறிப் போராடிக்கொண்டு இருக்கிறார் அந்தப் பெண். இதுவரை போலீஸார் மீது முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவுசெய்யப்படவில்லை. தமிழகத்தை ஒரு பெண் ஆள்வதாக நாம் நம்புகிறோம்.

           இந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றின் ஆணி வேரும் எங்கு புதைந்திருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். உண்மை புரியும். குவாஹாத்தியில் பெண்ணைப் பலாத்காரப்படுத்தியவர்களைக் குற்றவாளிகள் என்கிறோம். தொலைக்காட்சிகளிலும் சமூக வலை தளங்களிலும் அந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் பார்த்துப் பரவசம் அடைபவர்களையும் சமூகதளங்களில் காணொளிக் குக் கீழ் விருப்பம் தெரிவிப்பவர்களையும் எப்படி அழைப்பது?

           பெயர்கள் மாறுகின்றன... சம்பவங்கள் மாறுகின்றன... நபர்கள் மாறுகிறார்கள்... அடிப்படைப் பிரச்னை ஒன்றுதான். சுவிஸ் மனோதத்துவ நிபுணர் கார்ல் யூன் ‘சமூக நனவிலி மனச் செயல்பாடு’ (collective unconscious) என்று சொல்வார். ஒரு சமூகம் தன்னையே அறியாமல், அதன்ஆழ் மனத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், மதிப்பீடு களுக்குச் ‘சமூக நனவிலி மனச் செயல்பாடு’ என்று பெயர். இந்தியாவின் மனம் ஆண் மனமாக அப்படித்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. பெண்களுக்கு எதிரான நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் இந்தியச் சமூகத்தின் மரபணுக்களில் அப்படித்தான் உறைந்து இருக்கின்றன. என்னதான் படித்தாலும், முற்போக்கு வேஷங்கள் போட்டாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அவை, வாய்ப்பு கிடைக்கும்போது தன் குரூர முகத்தைக் காட்டிவிடுகின்றன.  அஸ்ஸாமைத் தொடர்ந்து, குவாஹாத்தி சம்பவத்துக்குக் காரணமானவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்ற முழக்கங்கள் நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியா முதலில் தன்னுடைய ஆண் மனோபாவத்தைத் தூக்கிலிட வேண்டும். அதற்கு, நம் வீட்டில் இருந்து, பள்ளிக்கூடங்களில் இருந்து, ஆண் - பெண் சமத்துவத்தைக் கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்கத் தொடங்க வேண்டும்!
ஆனந்த விகடன் ஜூலை 2012   

2 கருத்துகள்: