தமிழின் பொக்கிஷம் சங்க இலக்கியம்:டேவிட் ஷுல்மன்

     
பத்திரிகையாளர் சமஸ் டேவிட் ஷுல்மனுடன்
சமஸ் டேவிட் ஷுல்மனுடன்
  

                                        டேவிட் ஷுல்மன் உலகின் மிக முக்கியமான இந்தியவியலாளர்களில் ஒருவர். அமெரிக்காவில் பிறந்த யூதரான டேவிட், ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறார். ஹீப்ரு, சம்ஸ்கிருதம், தமிழ், அரபி, பாரசீகம், கிரேக்கம் என உலகின் புராதன மொழிகள் பலவற்றில் புலமை மிக்கவர். இந்தியக் கலை மற்றும் கலாசாரம் குறித்து நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஒருபுறம் இப்படிப் பல்வேறு மொழிகள், கலாசாரம் தொடர்பான ஆய்வுகளில் தன் வாழ்வைக் கழிக்கும் ஷுல்மன் மறுபுறம், இஸ்ரேல் & பாலஸ்தீனம் பிரச்னையில், அமைதியை உருவாக்கும் பணியில் ‘தாயுஷ்’ அமைப்பின் மூலமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலியர்களின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுவரும் இஸ்ரேலிய அறிஞர் இவர். ஷுல்மன் இப்போது தமிழுக்கு முக்கியமான ஒரு பங்களிப்பைச் செய்கிறார். உலகுக்கு பைபிளைத் தந்த ஹீப்ரு மொழியில், நம்முடைய சங்கக் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த ஷுல்மனைச் சந்தித்தேன்.

                                        ‘‘உங்களுக்குத் தமிழ் எப்படி அறிமுகம் ஆனது?’’
‘‘என் ஆசிரியர் ஜான் மார் மூலம். ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் படிக்கும்போது தமிழ் அறிமுகம். 1972-ல் முதல்முறையாக சென்னை வந்தேன். இங்கு உள்ள சிவன் கோயில்களும் அவற்றின் தல புராணங்களும் என்னை வசீகரித்தன. 1976-ல் தமிழ்நாட்டு சிவன் கோயில்களின் தல புராணங்களைப் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றேன். அப்போதே தமிழுக்கு நெருக்கமாகிவிட்டேன்.’’

                                        ‘‘சங்க இலக்கியம் மீது எப்படி ஈர்ப்பு வந்தது?’’
‘‘தமிழை ஆர்வத்துடன் கற்க வரும் எவரையாவது சங்க இலக்கியம் விட்டுவைக்குமா என்ன? வேறு எந்த மொழியிலும் இல்லாத பிரத்யேகமான பல அம்சங்கள் சங்கத் தமிழ்  இலக்கியத்தில் இருக்கின்றன. இந்தச் சமூகத்தினுடைய ஒரு காலகட்டத்தின் வாழ்க்கையை அப்படியே அது படம் பிடித்து இருக்கிறது. சங்க இலக்கியத்தைப் பார்க்கும்போது, அந்தக் காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்-துக்குப் பெண் கவிகள் ஆற்றியிருக்கும் பங்களிப்பும் பெண்களின் குரல் அதில் தனித்துக் கேட்பதும் என்னைப் பிரமிக்கச் செய்கின்றன. என்னைப் பொறுத்த அளவில் தமிழின் பொக்கிஷம் சங்க இலக்கியம்.’’

                                        ‘‘இதுவரை நீங்கள் மொழிபெயர்த்து பிரசுரமாகி இருக்கும் சங்க காலக் கவிதைகளுக்கு அங்கு வரவேற்பு எப்படி?’’
‘‘மொழிகளுக்கு அப்பாற்பட்டு கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது. நல்ல கவிதைகளை எல்லா எல்லைகளையும் தாண்டி அது எடுத்துச் சென்றுவிடும். சங்கக் கவிதைகளுக்கு ஹீப்ரு அறிஞர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.’’

                                        ‘‘பிற மொழிகளின் ஆதிக்கத்தால், தமிழ் அழிந்துவிடுமோ என்கிற அச்சம் தமிழர்களிடம் இருக்கிறது. உங்களுடைய பல்வேறு மொழி அனுபவங்களில் நீங்கள் தமிழின் எதிர்காலத்தை எப்படிக் கணிக்கிறீர்கள்?’’
‘‘உங்களுடைய பயம் அவசியமானதுதான். எந்த ஒரு மொழியைப் பேசுபவர்களுக்கும் இந்த அச்சமும் அக்கறையும் அவசியம். ஆனால், தமிழின் எதிர்காலம் மிகச் சிறப்பாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், இது மக்களின் பயன்பாட்டில் இருக்கும் மொழி. சம்ஸ்கிருதம் போன்றோ, லத்தீன் போன்றோ வெறும் நூலகங்களில் உயிர் வாழும் மொழி அல்ல தமிழ். கிட்டத்தட்ட 7 கோடிப் பேர் அன்றாட வாழ்வில் பேசிக்கொண்டு இருக்கும் மொழி. பிற மொழிக் கலப்பு என்பது ஒரு மொழியின் நீண்ட பயணத்தில் அவ்வப்போது நிகழக் கூடியதுதான். ஆகையால், தமிழின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். ஆனால், தாய்மொழியை ஒரு சமூகம் இரண்டாம் பட்சமாகக் கருதுவது மிக ஆபத்தான போக்காக அமைந்துவிடும்.’’

                                        ‘‘திருவாரூர் கோயில் சுவரோவியங்கள் பராமரிப்பை ‘யுனெஸ்கோ’வின் பார்வைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். தமிழகச் சுவரோவியங்கள் பராமரிப்புபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘மிக மோசமாக இருப்பதாகவே நினைக்கிறேன். தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர், திருப்புடைமருதூர், விருத்தாசலம், காஞ்சிபுரம், ராமநாதபுரம், அழகர்கோவில், மதுரை, சிதம்பரம், சித்தன்னவாசல், திருக்கர்ணம் என்று பல இடங்களில் முக்கியமான சுவரோவியங்கள் காணக் கிடைக்கின்றன. இந்த ஓவியங்கள் தமிழர்களுடைய வரலாற்றின் ஒரு பகுதி. இந்த ஓவியங்களில் கடந்த காலம் உறைந்து இருக்கிறது. ஆனால், இதை எல்லாம் எந்த அளவுக்குத் தமிழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காலமும் இயற்கைப் பாதிப்புகளும் பாதி ஓவியங்களை ஏற்கெனவே அழித்துவிட்டன. மீதம் இருக்கிற ஓவியங்களை கோயில்களுக்கு வந்து செல்லும் பார்வையாளர்களின் ஆர்வக்கோளாறும் கோயில் தீபங்கள், சூடம் ஏற்றும்போது ஏற்படும் புகையும் அழித்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றோடு கோயிலைப் புனரமைப்பதாகக் கருதி, இந்த ஓவியங்களின் மீது வண்ணம் பூசும் கோயில் நிர்வாகிகளின் அறியாமையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். திருவாரூர் கோயிலின் உட்கூரையில் உள்ள ஓவியங்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் ‘பிரகிருதி அறக்கட்டளை’ உதவியுடன் புகைப் படங்கள் எடுக்கச் செய்து அதைப் புத்தகமாகக் கொண்டுவந்தேன். ‘யுனெஸ்கோ’வின் பார்வைக்கு இந்த ஓவியங்களைக் கொண்டுபோய் இருக்கிறேன். திருவாரூர் கோயில் ‘யுனெஸ்கோ’வின் பராமரிப்பின் கீழ் வரலாம். ஆனால், தமிழகம் எங்கும் உள்ள கோயில் சுவர் ஓவியங்களின் எதிர்காலம் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கிறது.’’

                                        ‘‘இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?’’
‘‘சமாதானத்தை ஏற்றுக்கொள்ளுதல்தான் தீர்வு (சிரிக்கிறார்). மேற்குக் கரை, காஸா பகுதி இரண்டிலும் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமான பகுதிகளை இஸ்ரேல் முழுமையாக அவர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் தலைநகராகவும் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராகவும் இருக்க வேண்டும். இஸ்லாமியர்களின் புனித இடமான ஹராம் அல் ஷரீஃப் பாலஸ்தீனத் தின் இறையாண்மைக்கு உடப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் அமைதியை விரும்புவோர் கடந்த 20 வருடங்களாக இதைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். கேம்ப் டேவிட் உச்சி மாநாட்டிலும் பில் கிளின்டன் மேற்கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தையிலும் முக்கியமாக இந்த விஷயங்கள்தான் வலியுறுத்தப்பட்டன. இப்போது பாலஸ்தீனம் இதை ஏற்கத் தயாராக இருக்கிறது. இஸ்ரேல் அரசுதான் இறங்கி வர மறுக்கிறது. இன்னொரு தீர்வும் முன்வைக்கப்படுகிறது. அதாவது ஒரே நாடு... இரண்டு தனித் தனி அரசுகள். ஆனால், என்னைப் பொறுத்த அளவில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இரண்டும் தனித் தனி நாடுகளாகச் செயல்படுவதே சரியான தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறேன்.’’

                                        ‘‘இஸ்ரேலியராக இருந்துகொண்டு இஸ்ரேல் அரசின் தவறுகளை விமர்சிக்கும் உங்களைப் போன்றவர்களை இஸ்ரேல் அரசும் இஸ்ரேலியச் சமூகமும் எப்படிப் பார்க்கின்றன?’’
‘‘எப்போதெல்லாம் இந்தப் பிரச்னையைக் கையில் எடுக்கிறோமோ, அப்போது எல்லாம் ராணுவம் மற்றும் காவல் துறையின் கைது நடவடிக்கைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால், நீண்ட காலம் சிறைவைக்க மாட்டார்கள். எங்கள் நாட்டில் ஜனநாயகம் நன்றாகவே இருக்கிறது. எங்கள் கருத்துகளை நாங்கள் துணிச்சலாகச் சொல்ல எந்தத் தடையும் இல்லை. அரசாங்கம் எங்களை எதிரியாகப் பாவித்தாலும்கூட, மக்களைப் பொறுத்த அளவில் நாங்கள் தவறாக வழி-நடத்தப்படுபவர்கள் அல்லது எதிரிகளுக்கு உதவுபவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய உண்மையான வருத்தம் நாங்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்பு அல்ல. பாலஸ்தீனியர்களுக்கு உதவ முடியாதவர்களாக இருக்கிறோம் என்பதே.’’
ஆனந்த விகடன் அக்டோபர் 2011

2 கருத்துகள்:

  1. தமிழின் பெருமையை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது, இக்கட்டுரை.
    வருத்தம் என்னவென்றால், நம்மில் எத்தனை பேர் உலக மொழியின் தாய் மொழியான நம் தமிழ் மொழியை நம் தமிழர்களே உணராத நிலையின் அன்னிய மொழி ஆர்வலர்களாக தமிழ் மறந்து, பிற மொழி கலந்து பேசிக்கொண்டு வாழ்கிறோம் என்பது தான்- தேவ்குமார் ஆறுமுகம்

    பதிலளிநீக்கு