ஒரு மோட்டார் சைக்கிள். சாயுங்காலம் பணி முடிந்ததும் அலுவலகத்திலிருந்து
வெளியே வரும் அந்த இளைஞன் மோட்டார்
சைக்கிளை எடுக்க எத்தனிக்கிறான். குப்பென்று
பறக்கின்றன அதுவரை அந்த மோட்டார்
சைக்கிளைச் சூழ்ந்திருந்த கொசுக்கள். நூறல்ல, இருநூறல்ல... ஆயிரத்துக்கும்
மேற்பட்ட கொசுக்கள். அந்த இளைஞன் அருகே
நிறுத்தப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களைத் தட்டுகிறான். மேலும் பல்லாயிரம் கொசுக்கள்.
அவனை அவை ஆக்கிரமிக்கத் தொடங்க
தன்னுடைய மோட்டார் சைக்கிளைக் கிளப்புகிறான். விளக்கொளியைச் சூழ்கின்றன... அந்தச் சாலை முழுவதையும்
ஆக்கிரமித்திருக்கும் கொசுக்கள். சென்னையில் இந்த வருடம் பலருக்கும்
காணக் கிடைத்த ஓர் அனுபவம்
இது.
ஒருகாலத்தில் கிராமங்களில் வேப்ப இலைகளுக்கும் நொச்சி
இலைகளுக்கும் அடங்கிய கொசுக்கள், வேப்ப
எண்ணெய் விளக்குக்கும் கற்பூரத் தண்ணீருக்கும் மயங்கி விழுந்த கொசுக்கள்,
மின் விசிறிக் காற்றுக்கு முன் பறக்க முடியாமல்
முடங்கிய கொசுக்கள்... இன்றைக்கு மின் விசிறி, கொசுவர்த்திச்
சுருள், பூச்சிக்கொல்லி தெளிப்பான், கொசுக்கொல்லி திரவம்... அத்தனையையும் தாண்டி படை எடுக்கின்றன.
நள்ளிரவில் தூக்கம் கெட்டு எலெக்ட்ரிக்
பேட்டுகள் துணையோடு போராடுகிறோம். கொசுக்கள் வர வர சாகின்றன...
சாக சாக வருகின்றன. ``எங்கள்
வாழ்நாளில் இவ்வளவு கொசுக்களை நாங்கள்
பார்த்தது இல்லை’’ என்று சொல்கிறார்கள்
வயது முதிர்ந்த பெரியவர்கள். நமக்கு கொசுக்கள் எங்கிருந்து
வருகின்றன என்று யோசிக்க நேரம்
இல்லை. அடுத்து எதை வாங்கி
கொசுக்களைச் சமாளிக்கலாம் என்று யோசிக்கிறோம். சரி,
வீட்டுக்குள் வரும் கொசுக்களை இன்னும்
வீரியமான விஷத்தைத் தெளித்துக் கட்டுப்படுத்திவிடலாம் என்று தேற்றிக்கொள்கிறோம். வீட்டுக்கு
வெளியில்?
அடிப்படையிலேயே இந்த உலகம் பூச்சிகளுடையது.
பூமி முழுவதும் மொத்தம் 20 லட்சம் முதல் 3 கோடி
வரையிலான பூச்சியினங்கள் இருக்கலாம் என்று கருதுகிறார்கள் பூச்சியியலாளர்கள்
(கொசுக்களில் மட்டும் இதுவரை 3500-க்கும்
மேற்பட்ட வகையினங்கள் கண்டறியப்பட்டு உள்ளன). ஒரு மிதமான
மதிப்பீடு என்று வைத்துக்கொண்டாலும், 50 லட்சம் பூச்சியினங்கள்
இருக்கலாம் (இதுவரை 10 லட்சம் பூச்சி வகைகளே
கண்டறியப்பட்டுள்ளன. அதாவது, 80 சதவிகிதப் பூச்சியினங்கள் கண்டறியப்படவில்லை). அமெரிக்காவில், நல்ல கோடைகாலத்தின்போது ஒரு
சோயாபீன்ஸ் செடியில் மட்டும் 2000 அசுவுணிப் பூச்சிகள் இருக்குமாம். ஒரு ஏக்கர் பரப்பளவில்
20 ஆயிரம் சோயாபீன்ஸ் செடிகளை நட முடியும்
எனில், ஒரு ஏக்கர் பரப்புக்குள்
மட்டும் எவ்வளவு அசுவுணிகள் இருக்கும்
என்று யோசியுங்கள்.
உலகெங்கும் பரவி இருக்கும் பூச்சிகளில்
ஓர் இனம் எறும்பு இனம்.
உலகிலுள்ள ஒட்டுமொத்த எறும்புகளை மட்டும் சேர்த்து எடை
போட்டாலே, அது ஒட்டுமொத்த பாலூட்டிகளின்
எடையைவிடவும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்
பூச்சியிலாளர்கள். எனில், 50 லட்சம் பூச்சியினங்களையும் அவற்றின்
கூட்டத்தோடு சேர்த்தால்? குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதன் மீதும்
200 கோடி பூச்சிகளை ஏவலாம் என்கிறார் பூச்சியிலாளர்
ஹாக்ஸ்.
இவ்வளவு பூச்சிகள் இருந்தாலும்
அவை கட்டுக்குள் இருக்க முக்கியமான காரணம்…
பூச்சிகளை உணவாகக் கொண்ட உயிரினங்கள்.
முக்கியமாக பறவைகள். உதாரணமாக, ஒரு கையில் அடங்கிவிடக்
கூடிய தைலாங்குருவி ஒரு நாளைக்கு 60 பூச்சிகளை
உண்ணக் கூடியது. அமெரிக்காவில் அருகிவரும் பர்பிள் மார்டின் பறவை
ஒரு நாளைக்கு 2000 கொசுக்களை உண்ணக் கூடியது. இந்தியாவுக்கு
வலசை வரும் பச்சைக் கதிர்க்குருவி
ஒரு நாளைக்கு 12,000 பூச்சிகளை உட்கொள்ளக் கூடியது. ஒரு நாளைக்கு ஆயிரம்
பூச்சிகளையேனும் உண்ணக் கூடிய பறவை
இனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கணக்கில்
இருக்கின்றன என்கிறார்கள் பறவையிலாளர்கள்.
இயற்கையாக உருவாக்கி இருக்கும் இந்தச் சமநிலை குலையாத
வரைக்கும் பூச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால், சமநிலை குலையும்போது
பூச்சிகள் விஸ்வரூபம் எடுக்கும். ஏற்கெனவே காடுகள் அழிப்பின் மூலமாகவும்
பறவைகள் அழிப்பின் மூலமாகவும் அந்தச் சமநிலைக் குலைவை
அசுர வேகத்தில் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய வெறித்தனமான நுகர்வுக் கலாசாரமும் மோசமான கழிவு மேலாண்மையும்
பூச்சிகளுக்குப் புதிய சூழல் வாழிடங்களை
உருவாக்குகின்றன. ஒவ்வொரு நிமிஷமும் 20 கால்பந்து
மைதானங்கள் அளவுக்கான காடுகளை அழித்து, உயிர்ச்சங்கிலியை
நாம் உடைக்கும் சூழலில், மறுபுறம் ஒவ்வொரு நிமிஷமும் நாம்
உருவாக்கிக்கொண்டிருக்கும்
கழிவுகளும் கழிவிடங்களும் பூச்சிகளுக்கு எதிரிகளே இல்லாத இருப்பிடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.
உலகின் எந்த ஒரு
நாடும், எந்த ஒரு சமூகமும்
இதற்கு விதிவிலக்கு இல்லை என்றாலும், தமிழ்ச்
சமூகம் இன்னும் இந்த விஷயத்தில்
கூடுதல் வெறித்தனத்தோடு செயல்படுகிறதோ என்று தோன்றுகிறது. இந்தியாவிலேயே
அதிகமாக ஒவ்வொரு நாளும் 429 டன்
பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவது சென்னைவாசிகள்தான் என்கிறது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு
வாரியம். சென்னையைவிடவும் அதிகமாக நாள்தோறும் 689 டன்
பிளாஸ்டிக் கழிவுகளை டெல்லி உருவாக்கினாலும், சென்னையைவிட
இரு மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட
நகரம் அது; தவிர, பரப்பளவிலும்
சென்னையைப் போல நான்கு மடங்கு
பெரிய நகரம். சென்னைவாசிகளுக்குக் கொஞ்சமும்
சளைத்தவர்கள் அல்ல ஏனையவர்கள் என்பதை
தஞ்சாவூருக்கோ திருநெல்வேலிக்கோ செல்லும்போது பார்க்க முடிகிறது.
பொதுவாகவே, சூழல்களை மாற்றிக்கொண்டு, விரைவில் தனக்கேற்ப ஒரு சூழலைத் தகவமைத்துக்கொள்ளும்
இயல்பைக் கொண்டவை பூச்சிகள். காட்டுச்
சூழலிலிருந்து நாட்டுச் சூழலுக்கு அவை மாறும்போது அவற்றைக்
கட்டுப்படுத்தும் எதிரிகளிடமிருந்து தப்ப ஆரம்பிக்கின்றன. காடுகளில்
வாழும்போது அவற்றுக்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டவை. ஆனால், புதிய சூழலுக்கு
மாறும்போது அவற்றுக்கு எல்லாமும் வசதியாக மாறிவிடுகிறது. மரங்களில்
பறவைகளின் அச்சுறுத்தலுக்கு இடையே வாழும் கொசுக்களையும்
எந்தத் தொல்லையும் இல்லாமல் செப்டிக் தொட்டிக்குள் அடைக்கலமாகும் கொசுக்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.
சரியாக அரை நூற்றாண்டுக்கு
முன் (மார்ச் 28, 1963) வெளியான ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின்
புகழ்பெற்ற ‘தி
பேர்ட்ஸ்’ படம் ஞாபகத்துக்கு வருகிறது.
அந்தப் படத்தில் கலிஃபோர்னியாவின் போடகா பே கடற்கரை
நகரைத் திடீரெனச் சூழும் ஒரு பறவைக்
கூட்டம். காரணங்களை விவரிக்க முடியாத திடீர் வன்தாக்குதலில்
அந்தப் பறவைகள் இறங்கும். வீடுகளின்
கதவுகளை, ஜன்னல்களைத் தகர்த்துக்கொண்டு உள்ளே வந்து மனிதர்களின்
தலையைக் குறிவைத்துக் கொத்தும். நகரம் பதற்றம் அடையும்.
மக்கள் குழம்பிப்போவார்கள். எங்கும் குழப்பம் மூளும்.
என்ன செய்வது என்றே யோசிக்க
முடியாத சூழலுக்கு எல்லோரும் தள்ளப்படுவார்கள். இந்த உலகுக்கு அப்படியொரு
தாக்குதல் பறவைகள் வாயிலாக வருவதற்கான
வாய்ப்புகள் இல்லை. ஆனால், பூச்சிகளின்
வாயிலாக வருவதற்கான எல்லா சாத்தியங்களையும் நாம்
அதிகரித்துக்கொண்டே போகிறோம். சில மாதங்களுக்கு முன்
பருவநிலை மாறுபாடுகள் தொடர்பாக விவாதித்த உலகச் சுகாதார நிறுவனம்
இனிவரும் காலங்களில் பூச்சிகள் – குறிப்பாக கொசுக்கள் - மிகப் பெரிய பிரச்னையாக
உருவெடுக்கும் என்று கூறியது. இந்த
ஆண்டு கொசுக்களின் படையெடுப்பைப் பார்க்கும்போது, அதற்கான முன்னோட்டம்போலத்தான் தோன்றுகிறது. திடீரென
ஒரு நாள் நம்முடைய வீடுகளையும்
ஊர்களையும் விசித்திரமான பூச்சிகள் சூழ்ந்தால் நாம் என்ன செய்யப்போகிறோம்?
தினமணி
2013
படிக்கும் பொழுதே கனமாய் உணர்கிறேன்... எங்கு செல்கிறோம் என்ன செய்யப் போகிறோம் என்று அறியாமல் பணம் பணம் பணம் மட்டுமே தேடி ஓடிக் கொண்டுள்ளோம்
பதிலளிநீக்குsir could you plz remove the word verification... it ll help to comment easily
பதிலளிநீக்கு