பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

         
  
                        முகநூலில், சமீபத்தில் ஓர் அழகான பெண்ணின் பக்கத்தில் அந்தப் பதிவைக் கண்டேன்: ‘ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள்?’
ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள்  அந்தப் பதிவைப் பகிர்ந்திருந்ததால், ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன்.


                         ‘‘அவள் அமைதியாக இருந்தால்,  ‘என்னாச்சு செல்லம்’ என்று கேளுங்கள். அவள் உங்களைப் பொருட்படுத்தவில்லை என்றால், உங்கள் கவனத்தை அவளுக்கு ஒதுக்குங்கள். எப்போது அவள் உங்களைச் சீண்டுகிறாளோ, அப்போது அவளை நீங்கள் சிரிக்கவையுங்கள். ஒருபோதும்  மற்ற பெண்களை அவளுக்கு முன் புகழாதீர்கள். எப்போது அவள் உங்கள் விழிகளில் தன்னைப் பார்க்கிறாளோ, அப்போது உங்கள் பார்வையை வேறு எங்கும் மாற்றாதீர்கள். அவள் எப்போது மோசமான மனநிலையில் இருக்கிறாளோ, அப்போது அவள் அழகாக இருப்பதாகச் சொல்லுங்கள்.  எப்போது அவள் அழத் தொடங்குகிறாளோ, அப்போது அவளைக் கட்டியணைத்துக்கொண்டு இந்த வாக்கியத்தைச் சொல்லுங்கள்: ‘என் இளவரசியை யார் காயப்படுத்தியது?’ ’’
- இப்படி அவள் தலையணையால் அடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதிலிருந்து பேச்சை முடிக்கும்போது அவளுக்கு முன் ஏன் செல்பேசியை அணைக்காமல் தொடர்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது வரையிலான செல்லக் கட்டளைகள்.

                         ஆங்கிலப் பத்திரிகைகளின் ஞாயிற்றுக்கிழமை இணைப்புகளில் அடிக்கடி இப்படியான குறிப்புகள் காணக் கிடைப்பதுண்டு. ‘உங்களவளை வசப்படுத்துவது எப்படி?’ என்பது போன்ற தலைப்புகளில் யாராவது ஒரு பெண் எழுதியிருப்பார். திரும்பத் திரும்ப பிரசுரிக்கப்படும் இத்தகைய குறிப்புகளுக்கான தேவையை இதுவரை யோசித்தது இல்லை. முகநூலில் படித்தபோது பிடிபட்டது. அந்தப் பதிவை  ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்திருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா, பெரும்பான்மையானோர் பெண்கள்!

                         எல்லா இடங்களிலும் நாம் கவனிக்கப்பட வேண்டும், கொஞ்சப்பட வேண்டும், மெச்சப்பட வேண்டும் என்கிற கவனக் கோரிக்கை மனோபாவம் குழந்தைமையின் வெளிப்பாடு. எந்த வயதிலும் நம்மிடம் எஞ்சியிருக்கும்  குழந்தைமையிடம் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதில், ஆண் - பெண் பாலின வேறுபாடு கிடையாது. பெண்களுக்கு எப்படி இந்த எதிர்பார்ப்பு உண்டோ,  அப்படியே ஆண்களுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பரஸ்பரம் கொஞ்சிக்கொள்வதில், பிரச்னை இல்லை. ஆனால், பெண் என்றாள் கொஞ்சப்பட வேண்டியவள் - மெச்சப்பட வேண்டியவள், அவளுடன் சுமுகமாக இருக்க வேண்டும் என்றால், ஆண் இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து, கொஞ்சிக் கெஞ்சித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்கிற சூத்திரங்கள் போலித்தனமானவை; ஆபத்தானவை. எதிரில் இருக்கும் ஆணும் சகஜீவிதான் என்கிற யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் இத்தகைய எதிர்பார்ப்புகளே இன்றைக்குப் பல குடும்பங்களின் சிதைவுகளுக்கு அடிப்படை விதையை விதைக்கின்றன. ஒருவகையில், ஆணாதிக்கம் விளைவித்த சிந்தனையின் எச்சம் என்றுகூட பெண்களின் இந்த அதீத எதிர்பார்ப்பைச் சொல்லலாம்... எப்படி பெண்ணுரிமை பேசும் பல பெண்கள் ஆணுலகின் விருப்பத்துக்கேற்ற உடைகளுடன் உடலை வெளிக்காட்டுகிறார்களோ அப்படி. பெண் என்றால், கொஞ்சப்பட வேண்டியவள் என்பதும்  ஆராதிக்கப்பட வேண்டியவள் என்பதும் பெண்களைப் போக உடைமையாக்கிக்கொள்ளும் உத்திகளில் ஒன்றுதானே?

                        யாரும் யாருக்கும் அடிமை இல்லை.  மேலும், பார்த்து பார்த்து நடந்துகொண்டு, சுமுக உறவைப் பேண பெண்கள் ஒன்றும் மனநோயாளிகள் இல்லை... அல்லவா?
ூன்  2013




13 கருத்துகள்:

  1. இப்படி ஒரு எதிர்பார்ப்பும் அதற்கு இத்தனை லைக்குகளும் ஷேர்களும் இருக்கின்றன என்பதே அது நடைமுறையில் இல்லை ஆனால் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதாகவே நான் அவதானிக்கிறேன் சமஸ்.
    உண்மையில் ஆண், தாயாலும் சகோதரிகளாலும் மனைவியாலும் சீராட்டப்பட்டே வ்ருகிறான். தன் மனைவி தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் எத்தனை ஆண்கள், பணிக்குச் சென்று திரும்பும் மனைவியின் களைப்படைந்த முகத்தைக் கவனிக்கிறார்கள்?
    ஆண் பெண்ணையே சார்ந்திருக்கிறான். அவள் தன்னைக் கொஞ்ச வேண்டும், கவனிக்க வேண்டும், சமாதானப்படுத்த வேண்டும், நேரம் ஒதுக்கி உரையாட வேண்டும், சமையல் செய்ய வேண்டும், பரிமாற வேண்டும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஆணுக்கு உண்டு. சமூகத்தாலும் நியாயப்படுத்தப்படும் இத்தகைய எதிர்பார்ப்புகள் இயல்பானதாகப் பார்க்கப்படுவதுடன் பெண்களால் நிறைவேற்றப்படவும் செய்கிறது.
    காலம்காலமாக ஆணைத் திருப்திப்படுத்தி வந்த பெண், இன்றைக்குத் தனக்கும் அத்தகைய கவனிப்பைக் கோருகிறாள். இது ஒரு உளவியல் கோரிக்கை.
    //எதிரில் இருக்கும் ஆணும் சகஜீவிதான் என்கிற யதார்த்தத்தைப் புறக்கணிக்கும் இத்தகைய எதிர்பார்ப்புகளே இன்றைக்குப் பல குடும்பங்களின் சிதைவுகளுக்கு அடிப்படை விதையை விதைக்கின்றன. // உண்மைதான். எதிரில் இருக்கும் பெண்ணும் சகஜீவிதான் என்று எத்தனை ஆண்கள் நினைக்கிறார்கள் சமஸ்?

    பதிலளிநீக்கு
  2. சமஸ்.. உண்மையில் உங்கள் பார்வை சரியே. ஆனால் ஒரு போதும் இதை பெண்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்கள் அந்த சுகமான வலியில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். ரிஷீகேஷ் டூருக்கு போன நண்பர் ஒருவரின் அனுபவம் இதற்கு கச்சிதமாக பொறுந்துகிறது. மலைமேல் ஏறிக்கொண்டேயிருக்கும்போது குளிரில் அதீத அலுப்பின் காரணமாக நண்பரும் உடன் வந்த வழிகாட்டியும் சிறிது நேரம் கண்ணயருகிறார்கள்.
    திடீரென அந்த வழிகாட்டி “ஏண்டா என்னை உளவு பார்க்க வந்தவன் தானே நீ.. எந்திரிடா.. என்னடா தூக்கம் வேண்டி கிடக்கு.” என நண்பரை எட்டி எட்டி உதைக்கிறார்.

    நல்ல தூக்கத்திலிருந்த நண்பருக்கு கோபம் தலைக்கேறி பயங்கர கோபத்தில் உடனடியாக எழுந்து வழிகாட்டியை அடிக்க பாய்கிறார். அவரை தடுத்து அந்த வழிகாட்டி சொன்னாராம். “ நான் நன்றாக கண்ணயர்ந்துவிட்டேன்.திடீரென விழித்தபோது உங்கள் மீது மலையிலிருந்து பனிக்கட்டிகள் விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதைப்பார்த்தேன். அது சுகமாக தான் இருக்கும். இன்னும் கொஞ்சம் கண்ணய்ர்ந்தால் தேவலை என்று கூட தோன்றும். ஆனால் அந்த பனியே நம்மை அமுக்கி விடும். அதனால் தான் நான் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேன். மன்னிக்கவும்” என்றாராம். தோழிகளுக்கு இந்த கொஞ்சுதல் சுகமாகதான் இருக்கின்றன! ஆனால் அவர்களை அது அமுக்குகிறது என புரிந்து கொள்ள காலம் ஆகும்!

    பதிலளிநீக்கு
  3. // எல்லா இடங்களிலும் நாம் கவனிக்கப்பட வேண்டும், கொஞ்சப்பட வேண்டும், மெச்சப்பட வேண்டும் என்கிற கவனக் கோரிக்கை மனோபாவம் குழந்தைமையின் வெளிப்பாடு. எந்த வயதிலும் நம்மிடம் எஞ்சியிருக்கும் குழந்தைமையிடம் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதில், ஆண் - பெண் பாலின வேறுபாடு கிடையாது. பெண்களுக்கு எப்படி இந்த எதிர்பார்ப்பு உண்டோ, அப்படியே ஆண்களுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பரஸ்பரம் கொஞ்சிக்கொள்வதில், பிரச்னை இல்லை. //

    சமஸ் இதில் உங்களோடு உடன் படுகிறேன்.

    ஆனால், இவ்வளவு காலமும் ஆணாதிக்க சமூகம் பெண் பிறந்தது முதலே தாய்மையுணர்வோடு இருப்பது போலவும், ஆண் சாகும் வரை ஒன்றுமறியா குழந்தையாய் இருப்பதுபோலவும் கருத்துகளை சமூக, உளவியல் தளத்தில் கட்டியமைத்திருக்கிறது,. ஆணை, குறிப்பாக மனைவி, கணவனை எப்போதும் குழந்தை போல கையாள வேண்டுமென ஆணாதிக்க உளவியல் கூட கற்பிக்கிறது.
    அதனால்தான் பெண்ணை தாயாகவும், தெய்வமாகவும்( உயர்வாக)மட்டும் பார்ப்பது மட்டுமே சிறந்தது என போற்றப்படுகிறது. குறைந்த வயது பெண்ணை வயது மூத்த ஆணுக்குத் திருமணம் செய்வதும் இதனால்தான்.

    அதனால் இந்த வேண்டுகோள்கள் பெண் தன்னுள்ளிருக்கும் குழந்தமை உணர்வுக்கும் மதிப்புக் கொடுக்கச் சொல்லும் வேண்டுகோள்கள் என்றே பார்க்கப்பட வேண்டியவை. எல்லாக் கருத்துக்களிலும் சிறிது பக்குவமற்ற, அதிதீவிர வெளிப்பாடுகள் இருக்கும். அதனால் அவற்றில் சில குறைகள் இருக்கலாம். அது போலவே இந்தத் தளத்திலும் வெளிப்படும். குறிப்பாக கணவன் மனைவி உறவில். அதை நாம் ஆணாதிக்கமாகவோ, அராஜகப் பெண்ணியமாவோ பார்க்கத் தேவையில்லை என் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. யாரும் யாருக்கும் அடிமை இல்லை. மேலும், பார்த்து பார்த்து நடந்துகொண்டு, சுமுக உறவைப் பேண பெண்கள் ஒன்றும் மனநோயாளிகள் இல்லை..

    நீங்கள் சொல்வது மிகச்சரி,ஆனால் பெண்களுக்கான தலையான கட்மையாக இந்த சமுகம் இதைத்தான் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  5. பேஸ்புக்கில் வரும் இது போன்ற பதிவுகள் ஒரு பேண்டசியின் வெளிப்பாடு. இப்படியெல்லாம் இருந்தா நல்லா இருக்குமே என்ற ஆசை. இதே போல் ஆண்கள் இருக்க வேண்டுமென்று இதைப் படித்து எதிர்ப்பார்ப்பை யாரும் வளர்ப்பதில்லை. ஆண்களின் போர்னோ கதைகளின் பேண்டசி போல இது. சும்மா அந்த நேர கிளுகிளுப்புக்கு... நிஜத்தில் இப்படி யாரும் இருந்தால் பெண்கள் கடியாகத்தான் செய்வார்கள்...

    பதிலளிநீக்கு
  6. //எல்லா இடங்களிலும் நாம் கவனிக்கப்பட வேண்டும், கொஞ்சப்பட வேண்டும், மெச்சப்பட வேண்டும் என்கிற கவனக் கோரிக்கை மனோபாவம் குழந்தைமையின் வெளிப்பாடு. எந்த வயதிலும் நம்மிடம் எஞ்சியிருக்கும் குழந்தைமையிடம் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதில், ஆண் - பெண் பாலின வேறுபாடு கிடையாது. பெண்களுக்கு எப்படி இந்த எதிர்பார்ப்பு உண்டோ, அப்படியே ஆண்களுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பரஸ்பரம் கொஞ்சிக்கொள்வதில், பிரச்னை இல்லை. //
    இதில் நிறைய உண்மைகள் பொதிந்துள்ளன.... ஆனால் ,,, நிகழ்வில்... அப்படித்தான் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  7. எல்லா இடங்களிலும் நாம் கவனிக்கப்பட வேண்டும், கொஞ்சப்பட வேண்டும், மெச்சப்பட வேண்டும் என்கிற கவனக் கோரிக்கை மனோபாவம் குழந்தைமையின் வெளிப்பாடு. எந்த வயதிலும் நம்மிடம் எஞ்சியிருக்கும் குழந்தைமையிடம் அந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதில், ஆண் - பெண் பாலின வேறுபாடு கிடையாது.

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  8. @அன்பென்று கொட்டு முரசெ. /* எதிரில் இருக்கும் பெண்ணும் சகஜீவிதான் என்று எத்தனை ஆண்கள் நினைக்கிறார்கள் சமஸ்? */ சரிதான், அப்போது எதை நோக்கி நாம் நகர வேண்டும்? இருவரும் சமம், இருவருக்கும் ஒரே மாதிரியான சமூக/உளவியல்/குடும்ப/தனி நபர் தேவைகள் உள்ளன அதை அடைய தடைகள் கூடாது என்பதை நோக்கித்தானே? எல்லா இடத்திலும் பெண்ணுரிமை பேசிவிட்டு, பின்னர் கணவன் மனைவிக்கு கார் கதவைத் திறந்துவிட வேண்டும், பேருந்தில் உட்கார இடம் கொடுத்து நின்று கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரி? பெண்ணை தனித்துவமாக நடத்த வேண்டும் என்றால் அதற்கேற்ப எதிர்பார்ப்புகள் இருக்குமல்லவா? நீங்கள் சொல்லும் விசயங்களிலெல்லாம் சம உரிமை வேண்டும் சமமாக நடத்தப் பட வேண்டும் ஆனால் நீங்கள் சொல்லும் பிற விசயங்களில் கொஞ்ச வேண்டும் என்றால் எப்படி? பெண் தினமும் சமைப்பது சம உரிமைக்கு எதிரான செயல், ஆனால் உள்ளூரில் தினமும் பைக்கில் டிராப் செய்வதோ இல்லை வெளியூருக்கு கார் ஓட்டினால் பெரும்பான்மையான தொலைவு ஆணே ஓட்டுவதும் அப்படிப்பட்டதல்ல அது ஆணுக்கே விதிக்கப்பட்டது. அதில் அவன் சிறிது தொய்வைக் காட்டினாலோ மறுபடியும் ஆண் எப்படி நடக்க வேண்டும் என்று பாடம் நடத்த தொடங்கிவிடுவீர்கள் அல்லவா? இதை பொதுமைப் படுத்த முடியாது. ஒருவிதமான கணவனுக்கும் ஒரு விதமான மனைவிக்கும் இடையில் சரியான எதிர்பார்ப்பு இருக்கிறதா என பார்க்க வேண்டும். இன்றைக்கு இல்லத்தரசிகள் கூட கல்லூரி வரை சென்று படித்திருப்பதால் வேலைக்கு செல்லாவிட்டாலும் கூட தனக்கு எல்லாவகையிலும் பொருளாதாரம் உட்பட சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். வீட்டு வேலைகளில் கணவன் பங்கெடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் பொருளீட்டுவது/வாகனம் ஓட்டுவது/மார்கெட் சென்று வருவது எல்லாம் ஆண்களில் வேலையே!

    பதிலளிநீக்கு