திமிங்கில ராசா!


ரு நள்ளிரவில் அந்தச் சத்தம் எனக்குக் கேட்கக் கிடைத்ததை இப்போது நான் பாக்கியம் என்று சொல்லலாம். ஆனால், சத்தியமாக அன்றைக்கு அந்த மனநிலை இல்லை. “ராசா பாட்டு பாடுறார், இப்ப எங்கே இருக்கும்னு நெனைக்கிறீங்க, பல கடல் மைலுக்கு அந்தாண்ட போய்க்கிட்டு இருக்கும்” என்றார் அருகில் இருந்த மீனவ நண்பர். அப்படியும் என்னால், நடுக்கத்தை மறைக்க முடியவில்லை. திமிங்கிலங்களுக்கு அவற்றின் குரல்தான் அவை பெற்றிருக்கும் மிகச் சிறந்த கருவி. சப்தம் எழுப்பி, அது எதிரொலிக்கும் அலைகளை வைத்து, இரை எங்கே இருக்கிறது என்று கண்டறிவதில் தொடங்கி, பல நூறு கடல் மைல் தொலைவில் உள்ள சக திமிங்கிலங்களுக்கு சமிக்ஞைகளை அனுப்புவதற்கு வரை அவை தம் குரலைப் பயன்படுத்துகின்றன. அவர் முகத்திலும் கொஞ்சம் கலக்கம் தெரியத்தான் செய்தது. கடலைக் கூர்ந்து கவனித்தவர், “நீங்க பயப்பட ஒண்ணும் இல்ல தம்பி. புலால்க சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுங்க” என்றார். அப்புறம் கைகூப்பி ஒரு நிமிடம் முணுமுணுவென்றார். அதன் பின்னர் அவர் கண்களில் இதற்கு முன் தெரிந்த கொஞ்சநஞ்ச பயத்தையும் பார்க்க முடியவில்லை. “சத்தியத்துக்கு மரியாதை இருக்குல்ல?” என்றார் சிரித்துக்கொண்டே.

அந்தச் சத்தியம் என்ன?
திமிங்கிலங்களைப் பற்றிக் கடலுக்கு வெளியே கதை கேட்டால், கேட்கும் ஒவ்வொரு விஷயமும் சுவாரசியம். கடலுக்குள் போய்விட்டாலோ சகலமும் திகில். சும்மா, இல்லை. திமிங்கிலத்தின் ஒவ்வொரு அசைவும் அப்படி. ஒரு நீலத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரலாம் என்றும், அதன் நாக்கின் எடை மட்டுமே ஒரு யானை எடைக்குச் சமம் என்றும் ஒரு மீனவர் சொன்ன தகவல் போதும், அதன் ஒவ்வொரு பாகத்தின் பிரம்மாண்டத்தையும், ஒட்டுமொத்தத் தோற்றம் தரும் திகைப்பையும் ஊகிக்க. ஆனால், நம்மூர் மீனவர்கள் அதற்கு அஞ்சுவதில்லை. குமரி ஆத்தாவின் முன் எடுத்துக்கொண்ட சத்தியம் அவர்களைக் காப்பதாகச் சொல்கிறார்கள்.

திமிங்கிலங்களையும் பெரிய மீன்களையும் பொதுவாக ‘புலால்' என்று குறிப்பிடுகிறார்கள். “குமரி ஆத்தா, உன் மேல ஆணையா சொல்றோம், புலால்களுக்கு எங்களால எந்த ஆபத்தும் நேராது. அதேபோல, அதுகளால எங்களுக்கும் எந்த ஆபத்தும் நேரக் கூடாது. நீயே துணை” என்பதுதான் அந்தச் சத்தியம். பெரிய மீன்களைக் கண்ட வேகத்தில் கைகூப்பி இப்படி ஒரு பிரார்த்தனை செய்துவிட்டு, ஊம்ம்ம்ம்… என மெல்லமாக அழுவதுபோல் ஓசை தந்தால், பெரிய மீன்கள் தானாகப் போய்விடும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் தங்களை இன்றளவும் காப்பதாகச் சொல்கிறார்கள். இந்தச் சத்தியத்தை மீறி புலால்களைச் சீண்டியவர்களை அவை கட்டுமரத்தோடு பந்தாடியிருப்பதாகவும் சொல்கிறார்கள். திமிங்கிலம் வாலால் ஒரு அடி அடித்தால், கட்டுமரம் ஒரு கால்பந்து பறப்பதுபோல் பறந்துபோய் பல நூறு அடிகளுக்கு அப்பால் விழுமாம். திமிங்கிலத்தின் தூவியே கடலில் ஒரு பாய்மரம் அளவுக்குத் தெரியும் என்றால், அது வாலால் அடித்தால் என்னவாகும் என்று விவரிக்கத் தேவையில்லை.

திமிங்கிலம் மீனா?
பொதுவாக, மீன்களுக்கும் திமிங்கிலங்களுக்கும் முக்கியமான சில வேறுபாடுகள் உண்டு. மீன்களைப் போல முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்காமல், குட்டி போட்டுப் பால் கொடுத்தே திமிங்கிலங்கள் தம் பிள்ளைகளை வளர்க்கின்றன. அதாவது, திமிங்கிலங்கள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. மீன்களைப் போல செவுள்களால் அல்லாமல், திமிங்கிலங்கள் நம்மைப் போல நுரையீரல் மூலமே சுவாசிக்கின்றன. உலகின் மிகப் பெரிய பிராணியான நீலத்திமிங்கிலம் உட்பட திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. இவற்றில் ஆகப் பெரும்பாலானவை சாதுக்கள். சில மட்டுமே மூர்க்கர்கள்.

வாழ்வாங்கு வாழ்க்கை
ஒரு நீலத்திமிங்கிலக் குட்டி பிறக்கும்போதே ஒரு யானை எடையோடு, 25 அடி நீளத்தில் பிறக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் கூனிப்பொடிக் கூட்டத்தைச் சாப்பிடத் தொடங்கும் இவை நன்கு வளர்ந்த நிலையில், சுமார் 40 யானை எடையோடு இருக்கும்போது, ஒரு நாளைக்கு நான்கு டன் அளவுக்குக் கூனிப்பொடிக் கூட்டத்தைக் கபளீகரம் செய்யும். சராசரியாக, 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை திமிங்கிலங்கள். அபாரமாக நீந்தக் கூடியவை. சில வகை திமிங்கிலங்கள் வலசைபோகும். பருவநிலைக்கு ஏற்ப இடம் மாற்றிக்கொண்டு, வலசை செல்லும் திமிங்கிலங்கள் ஆண்டுதோறும் பல்லாயிரம் கடல் மைல்கள் பயணிக்கும். வலசை செல்லும் பாலூட்டிகளில் மிக நீண்ட தொலைவு செல்லக்கூடியவை திமிங்கிலங்கள்தான்.

தம்முடைய தலைப் பகுதியில் உள்ள துளைகள் வழியே திமிங்கிலங்கள் சுவாசிக்கின்றன. கடல் பரப்பில் அவை சுவாசிப்பதைப் பார்த்தால், ஏதோ பெரிய குழாய்களிலிருந்து நீர் பீய்ச்சியடிப்பதுபோல இருக்கும். திமிங்கிலங்களுக்குத் தனித்தன்மை மிக்க சுவாச மண்டலம் உண்டு. கடலின் மேற்பரப்புக்கு வந்து மூச்சை இழுத்துக்கொண்டு, ஒரு முறை உள்ளே போனால், இருபது நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை தண்ணீருக்குள்ளேயே அவற்றால் தாக்குப்பிடிக்க முடியும். இதற்குக் காரணம், சுவாசத்தில் அவை சுவாச வாயுவை எடுத்துக்கொள்ளும் வீதம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். மனிதர்கள் சுவாசிக்கும்போது, அந்தக் காற்றிலிருந்து 15% ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், திமிங்கிலங்கள் சுவாசிக்கும்போது, 90% ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ளுமாம்.

நீலத்திமிங்கிலத்தின் வாயில் சீப்பு போன்ற தோற்றத்தில் பல நூறு சிறிய இழைகள் போன்ற தகடுகள் உண்டு. கூனிப்பொடி லட்சக் கணக்கில் கூட்டமாக வரும்போது, வாயை அகலமாகத் திறக்கும் நீலத் திமிங்கிலம், தண்ணீரோடு சேர்த்து அந்தக் கூட்டத்தை அப்படியே வாய்க்குள் இழுத்துவிடும். அப்படி இழுக்கும்போது, இன்னொரு நீலத் திமிங்கிலம் அதன் வாய்க்குள் நுழையும் அளவுக்கு அதன் வாய் விரியுமாம். வாய்க்குள் அவை சென்றதும் அந்தச் சீப்பு போன்ற தகடுகளால் கூனிப்பொடிக் கூட்டத்தைச் சலித்து வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு, தண்ணீரை வெளியேற்றிவிடும்.

திமிங்கிலம் ஏன் கடல் ராசா?
மீனவ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, இன்னொரு விஷயத்தைச் சொன்னார்கள். ஒவ்வொரு திமிங்கிலமும் செத்த பிறகு பல லட்சம் உயிரினங்களுக்கு உணவாகுமாம். இறப்புக்குப் பின் ஒரு மாமிச மலைபோலக் கடல் அடியில் போய் அடங்கும் திமிங்கிலங்களின் உடலை எண்ணற்ற நுண்ணுயிரிகளும், பெயர் அறியாத உயிரினங்களும் ஆண்டுக் கணக்கில் சாப்பிடுமாம். “உசுரோட இருக்கும்போது அத்தனை கம்பீரமா உலாத்துற புலால்க செத்த பிறவு சின்னச் சின்ன உசுருங்கல்லாம்கூட அது மேல கூட்டம்கூட்டமாக ஏறி நின்னு பங்கு போடும்” என்கிறார் ஒரு நண்பர். “ஆனாலும், ராசா எப்போதும் ராசாதான்” என்கிறார் இன்னொரு நண்பர்.

ராசாவின் பாட்டு இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ராசாவின் வாழ்க்கைதான் என்ன? ராசாவின் சாவுதான் என்ன?

ஜூலை, 2014, ‘தி இந்து’

8 கருத்துகள்:

  1. திமிங்கிலத்தைப் பற்றி திமிங்கில அளவு செய்தி. அவ்வளவும் புதிய செய்திகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உயிரோடு இருக்கும்போது லட்சக்கணக்கான கூனிபொடிகளை உண்கிறது .இறந்தபின் லட்சக்கணக்கான உயிர்களுக்கு இது உணவாக மாறுகிறது .ஆச்சர்யமான படைப்பு

    பதிலளிநீக்கு
  3. சார் உங்களுடைய எழுத்தில் எப்பவும் ஒரு வசீகரம் இருக்கும் சார், திமிங்கலம் பற்றி எழுதிய இந்திலும் அது நன்றாக தெரிகிறது

    பதிலளிநீக்கு
  4. அருமையான தகவல்களுக்கு நன்றி சமஸ் !

    பதிலளிநீக்கு