நாம் அத்தனை பேரும் பயங்கரவாதிகளாக ஆக முடியாது!


ன்றைக்கு நம்முடைய ஞாபக அடுக்குகளில் புதைந்துவிட்ட 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை மீண்டும் நினைவுகூர்வது பலருக்குச் சங்கடம் அளிப்பதாக இருக்கலாம். எனினும், நியாயத்தின் உண்மையை நோக்கி நகர வேண்டும் என்றால், ஆரம்பக் கதைகளை நாம் புறக்கணிக்க முடியாது. காட்சி ஊடகங்களால் ‘தேசத்தின் மீதான போர்’ என்று வர்ணிக்கப்பட்ட 2008 மும்பை தாக்குதலைவிடவும் பெரும் உயிர்ச் சேதத்தை உருவாக்கிய பயங்கரவாத நடவடிக்கை அது. 1993 மார்ச் 12 அன்று மதியம் 1.33-க்கும் 3.40-க்கும் இடையே மும்பை அன்றைய பம்பாய் - கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த ஒரு நகரமாகத்தான் இருந்தது.

முதல் குண்டு வெடித்தது மும்பைப் பங்குச்சந்தையில், அடுத்து கதா பஜார், சேனா பவன், செஞ்சுரி பஜார், மாஹீம், ஏர் இந்தியா வளாகம், சவேரி பஜார், ஹோட்டல் சீராக், பிளாஸா திரையரங்கம், ஜுஹு செந்தூர் ஹோட்டல், விமான நிலையம்… 127 நிமிடங்களில் அடுத்தடுத்து 12 இடங்களில் வெடித்தன குண்டுகள். சர்வதேச அளவில் முதல் முறையாக பயங்கரவாதக் குழுக்களால் ‘ஆர்டிஎக்ஸ்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டதும், உலகப் போருக்குப் பின் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதும் இந்தச் சம்பவத்தில்தான். எங்கும் ரத்தச் சகதியும் மரண ஓலமும். 257 பேர் செத்துப்போனார்கள். 713 பேர் படுகாயமுற்றார்கள்.எல்லா மதத்தினரும்தான் அதில் அடங்கியிருந்தார்கள்.

பாபர் மசூதி இடிப்பின் தொடர்ச்சியாக, அதற்கு இரு மாதங்களுக்கு முன்புதான் தொடர்ச்சியான மதக் கலவரங்களைச் சந்தித்திருந்தது நகரம். ஒவ்வொரு நாளும் இங்கே 10 பேர், அங்கே 15 பேர் என்று கிட்டத்தட்ட 900 உயிர்களைப் பறித்திருந்தன அந்தக் கலவரங்கள். இத்தகைய சூழலில், இந்தத் தொடர் குண்டுவெடிப்பு உருவாக்கிய சேதங்களைவிடவும், இது எத்தகைய பின்விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சம் ஏற்படுத்திய கலக்கம் அந்நாட்களில் அதிகம். பாகிஸ்தான் பின்னிருந்து நிகழ்த்திய மிகப் பெரிய சதி அது. உண்மையில் இந்தக் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டவர்களின் நோக்கம் இந்தக் குண்டுவெடிப்பு ஏற்படுத்தப்போகும் சேதங்களை மட்டுமே இலக்காகக் கொண்டதாக என்னால் கருத முடியவில்லை. குண்டுவெடிப்பின் தொடர்ச்சியாக, ஒரு மிகப் பெரிய மதக்கலவரத்தை  எதிர்பார்த்தே அவர்கள் இதை அரங்கேற்றியிருக்கிறார்கள்.  சர்வதேச அளவில் நடத்தப்பட்ட முதல் தொடர் குண்டுவெடிப்பு அது. தேசத்தின் மீதான தாக்குதல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


இந்த வழக்கை 20 வருஷங்கள் விசாரித்தது இந்திய நீதித் துறை. 2013 மார்ச் 22 அன்று இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். வழக்கின் பிரதான குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம், அனிஸ் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோர் சிக்காத நிலையில், இந்தியப் புலனாய்வு அமைப்புகளாலும் விசாரணை நீதிமன்றத்தாலும் தன் முன் நிறுத்தப்பட்டவர்களில், பெரும்பாலானோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; யாகூப் மேமனுக்கு மட்டும் தூக்குத் தண்டனையை உறுதிசெய்தது.

இன்றைக்கு யாகூப் மேமன் தூக்குக் கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், நம்மைச் சுற்றி இரு கோஷங்கள் உரக்க எழுப்பப்படுவதைக் கேட்க முடிகிறது. “இப்படியான பயங்கரக் குற்றங்களோடு தொடர்புடைய யாகூப் மேமனைப் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள், அவரை உடனே தூக்கிலிட வேண்டும்” என்பது முதலாவது. “பிரதான குற்றவாளிகள் கிடைக்காத நிலையில், அகப்பட்ட அப்பாவியைத் தூக்கிலிட்டு ஆறுதல் தேடிக்கொள்கிறது இந்திய அரசு” என்பது இரண்டாவது. அடிப்படையில், இவை இரண்டுமே இரு துருவங்களைத் தொட்டு நிற்கும் வாதங்கள். இரண்டுமே ஆபத்தானவை. மரண தண்டனைக்கு எதிராகப் பேசுவது வேறு; அதற்கான நியாயங்களை அடுக்கப்போய் அதன் உச்சத்தில் குற்றவாளிகளை அப்பாவிகளாக உருமாற்றுவது வேறு.

மும்பை வீதிகளில் வெள்ளந்தியாகப் போய்க் கொண்டிருந்த யாரோ ஒருவர் அல்ல யாகூப் மேமன். பிரதான குற்றவாளிகளால் ஒருவரான டைகர் மேமனின் தம்பி என்பதைத் தாண்டியும் இந்தச் சம்பவத்தில் அவருக்கு இருந்த தொடர்புகளை விசாரணை அமைப்புகள் நிரூபித்திருக்கின்றன. இந்த வழக்கில் யாகூப் மேமன் மீது அரசுத் தரப்பு வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகள்: இதற்கான நிதியுதவி; இதை நிகழ்த்தியவர்கள் பயிற்சி பெற பாகிஸ்தான் அனுப்பியது; குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கித் தந்தது. எல்லாமே கடுமையான குற்றச்சாட்டுகள். சம்பவம் நடப்பதற்கு இரு நாள் முன்பு தன் குடும்பத்தினருடன் துபாய் சென்றுவிட்ட யாகூப் மேமன், அடுத்த வாரமே அங்கிருந்து பாகிஸ்தான் சென்றிருக்கிறார். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் அங்கு பாகிஸ்தான் ராணுவ / உளவு அமைப்பின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார். இதை அவரே சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்டவர்களை விசாரித்து, 13,000 பக்க  ஆவணங்களைப் படித்து, 2000+ பக்கத்தில் தீர்ப்பளித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.  “குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் அவர் மும்பையைவிட்டு, துபாய்க்குப் புறப்பட வேண்டிய தேவை என்ன?” என்ற ஒரு வரிக் கேள்வி போதுமானது அவருக்கு இந்தச் சம்பவத்தில் உள்ள தொடர்புக்கு (மும்பையிலிருந்து துபாய்க்கு இந்திய பாஸ்போர்டிலும் பின் துபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு பாகிஸ்தான் பாஸ்பார்டிலும் சென்றார் மேமன். சம்பவத்துக்கு ஒரு வருஷம் பின்தான் இந்தியா திரும்பும் முடிவை எடுத்தார் அவரது கூற்றுபடியே).

நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் விசாரணையை எதிர்கொள்ள வசதியும் இல்லாமல், படிப்பறிவும் இல்லாமல், மொழியும் தெரியாமல் தனது விதியை நொந்துகொண்டு சிறைக்குள் வதைப்படும் எத்தனையோ ஆயிரம் ஏழைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அல்ல யாகூப். ஒரு தணிக்கையாளர். நல்ல ஆங்கில அறிவுகொண்டவர். வசதியானவர். போதுமான அவகாசம் அவருக்கு தரப்பட்டிருக்கிறது தன்னுடைய தரப்பை நிரூபிப்பதற்கு. இத்தனையையும் கடந்துதான் அவருடைய குற்றத்தை உறுதிசெய்திருக்கிறது நீதிமன்றம்.  யாகூப் மேமன் குற்றவாளி என்பது எப்படி நம்மில் பலருக்கும் நேரடியாகத் தெரியாதோ, அப்படியே அவர் நிரபராதி என்பதும் நமக்கு நேரடியாகத் தெரியாதது. இந்த வழக்கின் முடிவையே மாற்றக்கூடும் என்று சொல்லப்பட்ட, இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான மறைந்த ராமன் எழுதிய கட்டுரையிலும்கூட “தூக்கிலிடும் அளவுக்குக் குற்றங்களைச் செய்திடாத ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்” என்றே யாகூப் மேனின் குற்றத்தைக் குறிப்பிடுகிறார் ராமன்; “குற்றத்தோடு தொடர்பே இல்லாதவர் யாகூப்” என்று அல்ல.

இது எதையும் பற்றிக் கவலைப்படாமல், போகிற போக்கில் யாகூப் மேமனுக்கு அப்பாவி உருவம் கொடுப்பது அரைவேக்காட்டுத்தனமும் அபத்தமும் மட்டும் அல்ல; குற்றம். ஏற்கெனவே பல்வேறு வகைகளிலும் பாரபட்சத்தை எதிர்கொள்ளும் இந்திய முஸ்லிம் சமூகத்திடையே இதுபோன்ற விஷயங்கள் எத்தகைய மன பாதிப்பையும் அது எத்தகைய பின்விளைவுகளையும் உருவாக்கும் என்று உணராமல் கக்கப்படும் நஞ்சு.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார்? இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே?”

நாம் இந்தத் தவறைத் தொடர்ந்து செய்கிறோம், மரண தண்டனைக்கு எதிர்க் குரல் என்ற பெயரில் குற்றங்களிலிருந்து ஒருவரை விடுவிக்கும் வேலையில் ஈடுபடுவது; கூடவே நீதி அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாகக் குலைப்பது. இது முறையற்றது மட்டும் அல்ல; நாம் எவருடைய உயிருக்காகக் குரல் கொடுக்கிறோமோ, அவர்களுக்கும் எதிராகத் திரும்பக் கூடியது. இன்னமும் நம் சமூகத்தில் மரண தண்டனைக்கு ஆதரவான குரல்களே ஆகப்பெரும்பான்மைக் குரல்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. வாதத்தில், நம்முடைய குரல்கள் உச்சத்தில் உண்மையற்றதாக மாறும்போது, எதிர்க் குரல்கள் உச்சத்தில் வெறுப்பை நோக்கியே நகரும். மேலும் இதன் நாம் சொல்ல விழைவதுதான் என்ன, ஒருவேளை யாகூப் மேமன் பிரதான குற்றவாளி என்றால் மட்டும், தூக்கிலிடலாம் என்றா?

ஒரு கொலையை எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஒரு எளிய நீதி போதும் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதற்கு. ஒரு நாகரிகச் சமூகம் ஒருபோதும் மரணத்தை ஒரு நீதி வழிமுறையாகக் கொண்டிருக்க முடியாது. அதுவும் “கண்ணுக்குக் கண் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் குருடாக்கவே வழிவகுக்கும்” என்று சொன்ன மகாத்மாவை தேசப் பிதாவாகக் கொண்ட இந்த தேசம் மரண தண்டனையைச் சுமந்துகொண்டிருப்பது அடிப்படை பொருத்தமற்றது. நாம் யாருடைய குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்க வேண்டியதில்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். குற்றவாளி திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும். இது இன்றைக்கு யாகூப் மேமனுக்கு மட்டும் அல்ல; நாளை டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் பொருந்தும். கொலைகாரர்களுக்காகவும் பயங்கரவாதிகளுக்காகவும் ஒட்டுமொத்த சமூகமும் கொலைகாரர்களாகவும் பயங்கர வாதிகளாகவும் ஆக முடியாது!

ஜூலை 2015, ‘தி இந்து’

13 கருத்துகள்:

 1. மரணதண்டனை தீவிர வாதத்தை முற்றிலும் ஒழிக்காது என்றாலும் அது ஒரு ஸ்பீட் ப்ரேக்கர். எத்தனையோ ஒளிந்திருக்கும் யாகூபுக்கள் வெளிவரத் தயங்குவர். தவிர, சந்தர்ப்பத்தால் தவறிழைத்தவன் கூட திருந்த முடியும். ஆனால், இது போன்ற திட்டமிட்டு குற்றம் இழைப்பவர்களுக்கு எத்தனை ஆயுள் தண்டனை கொடுத்தாலும் திருந்தப் போவதில்லை.

  பதிலளிநீக்கு
 2. Very rational depiction. Thank you.
  Proving your caliber again and again; Great!

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. நீதி என்ற பெயரில் யார் தவறு செய்தாலும் குற்றமே, நேரடியாகவோ மறைமுகமாகவோ மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் பலியாவதர்க்குரியவராக யாகூப் மேனன் இருந்தால் மரண தண்டனை சரியே

  பதிலளிநீக்கு
 5. //வாதத்தில், நம்முடைய குரல்கள் உச்சத்தில் உண்மையற்றதாக மாறும்போது, எதிர்க் குரல்கள் உச்சத்தில் வெறுப்பை நோக்கியே நகரும்// - ஆழ்ந்த சிந்தனைக்குரிய வரிகள்!

  இப்படியொரு கட்டுரைக்காக நன்றி! ஆனால் அதே நேரம், ஒரு கொலையை எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாது என்கிற ஓர் எளிய நீதி மட்டுமே மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதற்குப் போதும் எனத் தோன்றவில்லை. இந்திய நீதித்துறை, விசாரணைத்துறை ஆகியவற்றின் நம்பகமற்ற தன்மைதான் மரண தண்டனையை ஒழிப்பதற்கான வலுவான காரணமாக இருக்க முடியும், அப்படித்தான் அஃது இருக்கிறது என்பதே என் நம்பிக்கை.

  தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் மற்ற ஏழைக் கைதிகளைப் போன்றவர் இல்லை என்றும், குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டவர் என்றும் நீங்கள் கூறும் அத்தனையும் இந்தக் குற்றவாளி ஒருவருக்கு வேண்டுமானால் பொருந்தலாமே ஒழிய நீங்கள் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தியுள்ள இன்ன பிற பெரும்பான்மைக் கைதிகளுக்குப் பொருந்தாது என்பதே அதன் மூலமாகத் தாங்களே வலியுறுத்தும் எதிர்ப் பக்கத்து உண்மை இல்லையா? அப்படியிருக்க, "ஒருவேளை தீர்ப்பு தவறு என்று பின்னாளில் உறுதியானால் இந்தத் தீர்ப்பைத் திருத்த முடியுமா?" என்பதே மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அத்தனை பேரும் மீண்டும் மீண்டும் முன்வைக்கும் வாதமாக இருப்பதில் என்ன தவறு ஐயா?

  கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் மகனின் விடுதலைக்காகப் போராடும் அகவை முதிர்ந்த தாயான அற்புதம்மாள், "முதலில் நான் என் மகன் மட்டும்தான் குற்றம் புரியாமலே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளான் என்று நினைத்தேன். ஆனால், அவனுக்காகப் போராடத் தொடங்கிய பின் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்துதான் தெரிய வருகிறது, இந்தியாவில் மரண தண்டனைக்குக் காத்திருக்கும் பலரும் என் மகனைப் போலவே நிரபராதிகள்தாம் என்பது" என்று கூறியிருக்கிறார். அந்த அப்பாவி மூதாட்டியின் சொற்களை நான் நம்புகிறேன்! தம் சொந்த மக்கள் எப்படிச் செத்துச் சின்னபின்னமானாலும் கவலையில்லை எங்களுக்கு நாங்கள் நினைத்தது நடப்பதுதான் முக்கியம் என்கிறார்களே, அப்பேர்ப்பட்ட இந்த நாட்டு அரசியலாளர்களையும், ஆட்சியாளர்களையும், ஊழல் சாக்கடையில் ஊறிப் போயிருக்கும் காவல்துறை, நீதித்துறைப் பெரிய மனிதர்களையும் விட நான் அந்தம்மாவை நம்புகிறேன்!

  பதிலளிநீக்கு
 6. மரண தண்டனையை நாம் இன்னும் வைத்துக்கொண்டிருப்பது நமக்கு இழுக்கே.

  பதிலளிநீக்கு
 7. யாகூப் மேமன் தூக்கும் மும்பை குண்டுவெடிப்பு வழக்கும்>>>>>>
  குண்டுவெடிப்புகளுக்கு பிண்ணணியில் பெரும்பாலும் அரசு உளவுத்துறைகள் இருப்பது போன்ற சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இருக்கும்போது நடக்கும் பயங்கரவாத்திதிற்கு தனி நபர்களை மட்டுமே குற்றம் சாட்டுவது பொருத்தமாகாது..... பாராளுமன்ற தாக்குதல் மற்றும் மும்பை தாக்குதல் போன்ற பயங்கரவாத சம்பவங்கள் அப்போதைய அரசால் நடத்தப்பட்டது என்ற சந்தேகம் இருந்து வரும் நிலையில் தனி நபர்களை நோக்கிய வெறும் விமர்சனம் உண்மை பிரச்சினையை விட்டு திசை திருப்புவதாக அமையலாம்.....
  http://timesofindia.indiatimes.com/…/articlesh…/21062116.cms

  பதிலளிநீக்கு
 8. If some one got hurted from this blogger family during the blast, his perception and all this so called blog would be in different angle. At any cost we can' tollerate terrorism so make some due diligence write a blog otherwise your blogging skill would be questionable.Don't make your thought process in paralysis.

  பதிலளிநீக்கு
 9. ஒட்டு மொத்த நீதித்துறையின் செயல்பாடுகளின் நம்பிக்கையில் சந்தேகம் குடிகொண்டுவிட்டது.
  சமூக அமைதி & ஒருமைப்பாட்டையும் சேர்த்து பல குடும்பங்களை நிர்க்கதியாக்கும்
  இது போன்ற குற்றங்களுடன் "தெரிந்தே" தொடர்பு வைத்திருந்தாலே அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கப்படவேண்டும். யாகூப்மேமன் அத்திட்டத்தின் ஒரு பிரிவின் காரியதரிசி. மிக நீண்ட தெளிவான திட்டமிட்ட படுகொலையை அரங்கேற்றியுள்ளார்.
  அவர் ஏன் சரணடையவேண்டும்? கைது செய்யப்பட்டதால் இந்த நிலை.

  பதிலளிநீக்கு
 10. இங்கே பெரும்பாலானவர்கள் யாகூப் மேமன் அப்பாவி. அவராகவே தான் சரணடைந்தார் என்று சொல்லி அவருடைய தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்தை பரப்ப பார்த்தனர். உண்மையில் அவர் சரணடைய வரவில்லை. நேபாளில் அவர் விமானம் மாறி மீண்டும் துபாய் செல்லும் விமானத்திருக்கு மாற முயற்சித்த போது நேபாள போலீசாரால் கைது செய்ய பட்டார் என்பதே உண்மை. அமெரிக்க போல சதாம் ஹுசேன் பிடி பட்டவுடன் தூக்கிலிட வில்லை. போதிய அளவு வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது அந்த வாய்ப்பை தான் குற்றமற்றவர் என்று அவரால் நிருபிக்க முடியவில்லை. ஒருவர் கொல்லப்பட்டதற்கு இத்தனை எதிர்ப்புகள். ஆனால் 253 மரணங்கள் 713 கைகால் இழந்தவர்கள் என்று ஒரு பெரிய கூட்டம் இருக்கு. அவர்களுக்கு இன்று எதிர் குரல் கொடுப்பவர்கள் என்ன சமாதானம் சொல்ல போகிறார்கள். அனுபவித்தவர்களுக்குதான் தெரியும் வலியும் வேதனையும் மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

  பதிலளிநீக்கு