ஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்!


சென்னையில் ஏராளமான மரம், செடி - கொடிகள் சூழ அமைந்த அரிதான பள்ளிகளில் ஒன்று ஜே.கிருஷ்ணமூர்த்தி நிறுவிய ‘தி ஸ்கூல்’. குட்டிப் பிள்ளைகளுக்கு அந்தப் பள்ளி வளாகம் ஒரு குட்டிக் காடுதான். நடந்து செல்லும் பாதைகள் எங்கும் பூக்களும் முதிர் இலைகளும் மரப்பட்டைகளுமாக உதிர்ந்து கிடக்கும். காலடிகளைக் கவனமாக எடுத்துவைக்க வேண்டியிருக்கும். பட்டுப்பூச்சிகள் பாதையினூடே கடந்து செல்லும். அன்றைக்கு ஒரு காரியமாக அந்தப் பள்ளி பக்கம் சென்றபோது, ஏதோ யோசனையில் ஆட்பட்டவனாக ஆலமரத்தடியில் உலவிக்கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஒரு மணி நேரம் இருக்கும். வேலை முடிந்து திரும்பும்போதும், அவன் அங்கேயே இருந்தான். மரத்தடியில் உட்கார்ந்து கைகளில் அழகழகான கருப்பு - சிவப்பு ஆல விதைகளைக் குவித்து உருட்டிக்கொண்டிருந்தான். பள்ளி நேரம் அது என்பதால், ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அந்த மரத்தடிப் பள்ளி முதல்வரின் அறையின் ஜன்னல் பார்வைத் தூரத்தில் இருந்தது. இதனிடையே அவனைக் கடந்த இரு ஆசிரியர்கள் அவனிடம் ஏதோ பேசிவிட்டு, கடந்து சென்றனர். பிறகு, மரத்தடியில் இரு முரட்டு வேர்களின் நடுவே ஏதோ சாய்வு நாற்காலியால் வசதியாகப் படுத்துக்கொள்வதைப் போல அவன் சரிந்துகொண்டான். ஆர்வமிகுதியில்  விசாரித்தபோது, மூடு சரியில்லை என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு, மரத்தடிக்கு வந்த கதையைச் சொன்னான். ஆச்சரியமாக இருந்தது. பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தால், “இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது; பிள்ளைகள் ஒரு நியாயமான விஷயத்தை நம்மிடம் கொண்டுவரும்போது அதற்குக் காது கொடுப்பதுதானே நியாயம்?” என்றார்கள்.

உண்மைதான். இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஒரு பிள்ளை, ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தால், கொஞ்சம் அமைதியாக, தனித்திருக்க விரும்பினால், பள்ளி வளாகத்திலேயே அனுமதிப்பதில் என்ன ஆச்சரியம் கிடக்கிறது? ஆனால், நம்முடைய இன்றைய பள்ளிகளின் அசாதாரண சூழல் சாதாரண விஷயங்களைக்கூட நம் சமூகத்தில் ஆச்சரியமானவையாக்கிவிடுகிறது.

நல்ல பள்ளி ‘தி ஸ்கூல்’. ஆசிரியர்களைப் பிள்ளைகள் அண்ணா, அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். பொதுத் தேர்வுகள் வரை தேர்வுகள் கிடையாது. மதிப்பெண்கள் கிடையாது. பரிசுகள் கிடையாது. தண்டனைகளும் கிடையாது. துரதிருஷ்டம் என்னவென்றால், தமிழ்நாட்டில் ஒரு ‘தி ஸ்கூல்’தான் இருக்கிறது. ஒரு வகுப்புக்கு 25 பிள்ளைகளைத்தான் சேர்ப்பார்கள். அப்புறம், ஆண்டுக் கட்டணம் ஐம்பதாயிரத்தைத் தாண்டும். நம்முடைய அரசுப் பள்ளிகள் சூழலை ‘தி ஸ்கூல்’ சூழலுடன் ஒப்பிடுவது முற்றிலும் முரணானது என்றாலும், இன்றைக்கு நம்முடைய சமூகச் சூழலில் கொஞ்சமேனும் பிள்ளைகளுக்கான சுதந்திரச் சூழல் மிச்சமிருப்பது அரசுப் பள்ளிகளில்தான். ஆண்டுக்கு பத்துப் பதினைந்து பள்ளிகளுக்காவது செல்ல நேர்கிறது; காற்றோட்டமான வெளியில் தொடங்கி உற்சாகமான உரையாடல்கள் வரை அரசுப் பள்ளிகளில் உள்ள சுதந்திரமான சூழல் தனியார் பள்ளிகளில் காணக் கிடைக்காதது. இப்போது அந்த அரசுப் பள்ளிகளிலும் பிள்ளைகள் வதைபட ஆரம்பிப்பதுதான் பெருந்துயரம்.

பள்ளிகள் என்பவை வகுப்பறைகளும் கரும்பலகைகளும் பாடப்புத்தகங்களும் மட்டுமே அல்ல. இந்த உலகத்தையும் வாழ்க்கையையும் எப்படி அணுகுவது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதுமே பள்ளிகளின் மிக முக்கியமான, அடிப்படைப் பணி. உலகத்தையும் வாழ்க்கையையும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்த நாளை அந்தப் பிள்ளைகள் பயன்பட வேண்டும் என்றால், அவர்களுக்குள் இருக்கும் படைப்பூக்கம் வெளிக்கொணரப்பட வேண்டும். படைப்பூக்கம் வெளிவர சுதந்திரச் சூழல் எவ்வளவு முக்கியம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; மறுபுறம் நேரம் எவ்வளவு முக்கியம்! பிறவியிலேயே ஒரு குழந்தையிடம் இசை ஞானமும் இன்னொரு குழந்தையிடம் கண்டுபிடிப்பாற்றலும் இருப்பதாகக் கொள்வோம். அந்தக் குழந்தைகள் பாடிப் பழகவும் எதையோ செய்துபார்க்கவும் அன்றாடம் நேரம் இருப்பது எவ்வளவு அவசியம்! இன்றைய குழந்தைகளுக்கு, அவர்களுக்கே அவர்களுக்கான நேரம் எந்த அளவுக்கு இருக்கிறது?

இந்தியாவில் தனியார் பள்ளிகளில் ‘பொதுத்தேர்வுச் சதவெறி’ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுக்கப்பட்டுவிட்ட சூழலில், அரசுப் பள்ளிகளையும் இப்போது மதிப்பெண்கள் துரத்துகின்றன. ஆசிரியர்கள் வெறும் மதிப்பெண் உற்பத்தி இயந்திரங்களாக மாற்றப்படும் சூழலில், அதே இயந்திரமயமாக்கலை மாணவர்களை நோக்கி அவர்கள் திருப்புகிறார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் பிரத்யேகக் கவனம் அளித்துக் கற்பிக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் பெருந்திரள் கூட்டத்தை எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் முன்பு இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டிருந்தால், பிரம்பைக் கையில் எடுத்திருப்பார்கள். இப்போது பிரம்பை எடுக்க முடியாத சூழலில், பிள்ளைகளை நோட்டுகளை எடுக்கச் சொல்கிறார்கள். நண்பர்களே, நம்மில் எத்தனை பேர் நம் பிள்ளைகளின் புத்தகப் பைகளை முழுமையாகப் பார்க்கிறோம் என்று தெரியவில்லை. நம்முடைய தலைமுறையினர் கற்பனையே செய்திராத அளவுக்கு இன்றைக்கு நம் பிள்ளைகள் எழுதவைக்கப்படுகிறார்கள். எழுத்து வேலை நம் பிள்ளைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரித்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சராசரி குழந்தையின் எடையில் 10%-க்கும் மேல் அவர்கள் சுமக்கக் கூடாது; அவர்களுடைய புத்தகப் பைகள் அதற்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்காகவே கல்வியாளர்கள் தொடர்ந்து பாடப்புத்தகங்கள் சுமையைக் குறைக்க வலியுறுத்துகிறார்கள். அரசாங்கமும் அதற்கேற்ற மாற்றங்களைச் செய்கிறது. ஆனால், பெருகிக்கொண்டே போகும் நோட்டுப் புத்தகங்களை யார் தடுப்பது? ஒவ்வொரு குழந்தையின் பையிலும் குறைந்தது 10 - 20 நோட்டுப் புத்தகங்களாவது இருக்கின்றன. எல்லாப் பக்கங்களையும் கூட்டினால், ஆயிரங்களைத் தொடுகிறது. கேட்டால், பள்ளியிலும் எழுத்து வேலை, வீட்டுப்பாடத்திலும் எழுத்து வேலை என்கிறார்கள். எழுத்து வேலை பள்ளியிலும் வீட்டிலுமாக அவர்களை விடுமுறை நாட்களில்கூடத் துரத்திக்கொண்டே இருப்பதால், உடல் பாதிப்புகளைத் தாண்டி பெரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்,  இந்த எழுத்து வேலைகளில் துளியும் பிள்ளைகளின் சொந்த யோசனைக்கோ, படைப்பூக்கத்துக்கோ இடம் தரப்படுவதில்லை என்பது. பாடப்புத்தகங்களையும் வகுப்பறையில் எழுதிப் போடுவதையும் மீண்டும் மீண்டும் பல முறை பார்த்து எழுதவைக்கும் இவர்களுடைய பயிற்சியானது, பிள்ளைகளின் மொழியைச் செழுமைப்படுத்துவதோ, மனதில் பதிவதோகூட இல்லை; மாறாக, பிள்ளைகள் தாங்கள் என்ன எழுதுகிறோம் என்பதையே பிரக்ஞையில் வைத்துக்கொள்ளாமல், இலக்கைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்காக வேகவேகமாக எழுதி முடிக்க ஓடுகிறார்கள். கட்டாய மனப்பாடத்தைவிட மோசமான கற்பிப்பு முறை இது. எழுத்து மீது, புத்தகங்கள் மீது என்று கல்வி மீதே பிள்ளைகளுக்குப் பெரும் வெறுப்பை உருவாக்கிவிடக்கூடிய முறை இது. கொடுமையிலும் கொடுமை, இதை யாரிடமுமே அவர்கள் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு இங்கு வீடுகளிலும் சூழல் மோசமாகி இருப்பது. எந்தப் பள்ளியில் பிள்ளைகளுக்கு அதிக வேலை தரப்படுகிறதோ, அந்தப் பள்ளியைத்தானே சிறந்த பள்ளிகளாகக் கருதுகிறார்கள் பெற்றோர்கள்! ஆக, அதீத எழுத்து வேலைகள் வேகவேகமாகச் சிதைக்கின்றன நம் பிள்ளைகளை, அவர்களுடைய குழந்தைமையை, அவர்களுடைய படைப்பூக்கத்தை, அவர்களுடைய கனவுகளை…

அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளில் ஒன்று இது. ஆட்சியாளர்கள் இதுபற்றி யோசிக்க வேண்டும். “நானெல்லாம் என் பள்ளி நாட்களில் குளத்தில் அப்படிக் குதியாட்டம் போட்டிருக்கிறேன்; தோட்டத்தில் மாங்காய் அடித்துச் சாப்பிட்டிருக்கிறேன்; நுங்கு வண்டி செய்து ஓட்டுவேன்; விடுமுறை நாளில் தெருவில்தான் கிடப்பேன்” என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஜல்லியடிக்கும் பெற்றோரும் பொதுச் சமூகமும் இதுபற்றி யோசிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், ஆசிரியர்கள் இதுபற்றி யோசிக்க வேண்டும். கட்டிடங்கள் அல்ல; பிள்ளைகள் நடுவே ஒரு ஆசிரியர் உட்காரும்போதுதான் மரத்தடியும்கூடப் பள்ளி வகுப்பறையாக மாறுகிறது. பிள்ளைகளிடம் நாள் கணக்கில் பேசி பெற்றோர் உருவாக்க முடியாத எத்தனையோ விஷயங்களைப் பள்ளிப் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர்களுடைய ஆசிரியர்கள் பேசும் சில வார்த்தைகள் கண நேரத்தில் உருவாக்குவதை இன்னமும் கண்ணெதிரே பார்க்கிறோம். குழந்தைகள் அவ்வளவு மதிக்கிறார்கள் ஆசிரியர்களை. அவ்வளவு உயர்பீடத்தில் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர்களை. இந்த மதிப்புக்கு ஆசிரியர்கள் நியாயம் செய்ய வேண்டும்.

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடித வரிகள் நினைவுக்கு வருகின்றன: “ஆசிரியரே, புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்துகாட்டுங்கள். அதேவேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்!”

செப். 2015, ‘தி இந்து’

4 கருத்துகள்:

  1. முன்பெல்லாம் ஆசிரியரைப் பார்த்தால் மரியாதையால் வரும் பயம் இருக்கும். அதன் காரணம் நல்லொழுக்கங்களைப் பெற முடிந்தது. தற்போதைய வாழ்க்கைச் சூழலில், அனைத்துமே வணிகமயமாகிவிட்ட நிலையில் அவரவர்களும் தம் பொறுப்பை மறந்துவிடுவதைக் காணமுடிகிறது. மாணவனுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும், நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் மனப்பாங்கோ சூழலோ அரிதாகிவிட்டது. மாணவனுக்கும் ஆசிரியருக்கும் ஆன இடைவெளி அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இந்த இடைவெளி குறைந்தால்தான் நல்ல சமூகம் உருவாக முடியும்.

    பதிலளிநீக்கு
  2. பிள்ளைகளின் பள்ளிப்பைச்சுமையினைக் குறிக்க வேண்டும், லிங்கனின் கடித்த்தில் கூறியவாறு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் போன்ற தங்களது கருத்துக்களில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
    ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பள்ளிச்சூழலை தற்போதைய சூழலுடன் நிச்சயம் ஒப்பிட முடியாது. பெற்றோரைத்தவிர குழந்தைகளுக்கு இவ்வுலகினைக் குறித்த விலாசமான பார்வையினை வழங்க்க்கூடிய ஒரே நபராக ஆசிரியர் இருந்த நிலை மாறி இன்றைய தொலைக்காட்சிகளும் செல்பேசிகளும் சில நல்விசயங்களோடு ஏராளமான வயதுக்கு மீறிய விசயங்களைத்தரும் நிலையில் அவ்வகை கவனச்சிதறல்களிலிருந்து மாணவர்களை வகுப்பறைச்சூழலுக்கு மீட்டெடுப்பதே இன்றைய ஆசிரியர்களுக்கு முதற்பெரும்பணியாக இருக்கிறது. கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே நம் பள்ளிகளுக்குப் பொருந்தும்.
    மேலும், மதிப்பெண்களைக்கொண்டே ஒரு மாணவனின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் நம் கல்விச்சூழலில் தனியார் பள்ளி மாணவனுடன் போட்டியிட்டு கல்லூரிகளில் இடம்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொரு அரசுப்பள்ளி மாணவனும் ‘பொதுத்தேர்வுச் சதவெறி’க் கலாசர்ரத்தில் ஒரு பிரஜையாவது தவிர்க்க முடியாத்தாகிறது.
    செயல்வழிக்கல்வி, படைப்பாற்றல் கல்வி, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை போன்ற கற்றல் மற்றும் மதிப்பீட்டு முறைகள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எழுத்துச் சுமையிலிருந்து பெரும் விடுதலை அளித்துள்ளது என்பது எனது கருத்து.
    அனைத்திற்கும் மேலாக, பல்வேறு வகையான குடும்ப மற்றும் ச்மூக்ச் சூழலிருந்து விதம்விதமான உடல் மனப்பிரச்சனைகளுடன் வரும் மாணவர்களைப் புரிந்து அரவணைத்து வழிநட்த்தும் ஒரு சில அபூர்வ ஆசிரியர்களைப்போல அனைத்து ஆசிரியர்களும் மாற வேண்டும் என்ப்தே அனைவரது அவாவும்.

    பதிலளிநீக்கு
  3. 100% correct. The teachers situation is very pathetic. ALB,ALM,ALM+ methods of teaching are upto 9th std., Then what? 10th handling teachers situation are horrible. They concentrate results. All are chasing marks. marks. marks...... What are we doing sir? In the melee I know the status of students.I create three groups and give three kind of works.I do not give much writing works. Who will change the system? As soon as possible situation must be changed.Otherwise ........... . Let us see sir. I read all of your articles in Tamil Hindu. Superb sir... continue.

    பதிலளிநீக்கு
  4. காஞ்சிபுரத்தில் பாவேந்தர் பெயரை கெடுப்பதற்கென்றே ஒரு பள்ளி இயங்கி வருகிறது. ஜெயில் வாழ்க்கை. அங்கு பயிலும் மாணவர்கள் சினிமாவுக்கு போகக்கூடாது. 10,12 வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறும் வகுப்பு உண்டு. வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்கலாம். பள்ளிக்கு வெளியேயும் கண்காணிக்கிறார்கள். தினமும் பெற்றோரின் காலில் விழுந்தேன் என்று கையொப்பம் பெற்று வர வேண்டும். வகுப்பை விட்டு வெளியே வந்தால் கையை கட்டிக்கொண்டு தலை குனிந்து நடக்கிறார்கள். சென்ற ஆண்டு ஒரு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். எனவே இவ்வாண்டு பெற்றோரிடம் 'எது நடந்தாலும் பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல' என்று எழுதி வாங்கி இருக்கிறார்கள். எல்லாம் மதிப்பெண் படுத்தும் பாடு. 7500 மாணவர்கள் படிக்கிறார்கள் இப்பள்ளியில். இதை நேரடியாக கண்டபின் மன வேதனை அடைந்தேன். பெற்றோருக்கு புத்தியே வராதா..!? போதாக்குறைக்கு அந்த பள்ளியின் முதலாளி (கரஸ்பாண்டன்ட்) அங்கு படித்த 12 வகுப்பு மாணவியை 4வதாக திருமணம் செய்திருக்கிறார். எங்க போய் முட்டிக்க...????

    பதிலளிநீக்கு