காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?தென்காசி போயிருந்தேன். ரயிலில் வழக்கம்போல் உடன் பயணித்தவர்களுடன் உற்சாகமான உரையாடல் அமைந்தது. இளைஞர்கள் இருவர் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் தொடர்பாகப் பேச ஆரம்பித்தனர். உரையாடல் மெல்ல சாதி நோக்கி நகர்ந்தது. பேச்சு சமகால தலித் இயக்கங்கள், அம்பேத்கர், காந்தி என்று விரிந்து, காந்தி எனும் புள்ளியைத் தொட்டபோது, அவர்களிடமிருந்து கசப்பான வார்த்தைகள் விழத் தொடங்கின. “சமூக விடுதலைக்கு காந்தியை எப்படி ஒரு வழிகாட்டியாகக் கருத முடியும்?” என்றார் ஒருவர். “இந்தியாவில் தலித் அரசியலை சிசுவிலேயே சிதைக்கப்பார்த்தவர் காந்தி” என்றார் இன்னொருவர். சாதியத்துக்கு எதிரான காந்தியின் செயல்பாடுகள் சிலவற்றை நான் குறிப்பிட ஆரம்பித்தபோது, “காந்தி தலித்துகளுக்காகப் பேச ஆரம்பித்ததெல்லாம் பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகுதானே? அதுவும் அம்பேத்கர் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் பேச ஆரம்பித்தார்?” என்றார்கள் இருவரும். இப்படியான புரிதலற்ற பேச்சுகள் புதியன அல்ல. எனினும், நாளுக்கு நாள் இத்தகைய கசப்புணர்வுகள் இளைய தலைமுறையிடம் வளர்வது, இந்தியாவில் விளிம்புநிலை அரசியல் எதிர்கொள்ளும் பேராபத்தாகவே தோன்றுகிறது. காந்திய வெறுப்பு அரசியலுக்குப் பின், குறைந்தது நூற்றாண்டு வரலாறும் பலதரப்பு அரசியல் சதிகளும் இருக்கின்றன. காங்கிரஸை ஒழித்து தம் அரசியலை முன்னே கொண்டுவர அநேகமாக இந்தியாவின் ஏனைய அரசியல் கட்சிகள் பெரும்பான்மையும் காந்தி எதிர்ப்பை ஒரு செயல்திட்டமாகவே முன்னெடுத்திருக்கின்றன. மறுபுறம், காங்கிரஸோ காந்திய மதிப்பீடுகளிலிருந்து விடுபட காந்தியை மறக்கத் துடித்தது. இன்றைய சூழலில் எந்த அரசியல்வாதிக்குத்தான் காந்தி தேவைப்படுவார்!

சிறு வயதில் வீட்டு வேலைக்காரர் ஒருவரின் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் காந்தி. இதைப் பார்க்கும் புத்திலிபாய் காந்தியை அழைத்து, அந்தச் சிறுவனுடன் பேசக் கூடாது என்று கூறி காந்தியைக் குளிக்கச் சொல்கிறார். காந்தி காரணம் கேட்கிறார். அந்தச் சிறுவன் கீழ்சாதியைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடும் புத்திலிபாய், அவனுடன் பேசியதால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது காந்தி தன் தாயிடம் கேட்கிறார், “நாம் எல்லோரும் ராமனின் குழந்தைகள் என்று சொல்வீர்களே, அப்படியென்றால் உக்காவும் ராமனின் குழந்தைதானே?”

உயர் கல்விக்காக காந்தி லண்டன் செல்ல முடிவெடுக்கும்போது அவருக்கு வயது 15. அவர் சார்ந்த மோத் சாதி வழக்கப்படி வெளிநாட்டுப் பயணத்தை அனுமதிக்க முடியாது என்று சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள் சாதியத் தலைவர்கள். “வெளிநாடு செல்வேன். இதில் சாதி தலையிடவே கூடாது” என்கிறார் காந்தி. காந்தியை சாதி பிரஷ்டம் செய்கிறார்கள். சாதியை மீறியே காந்தி வெளிநாடு சென்றார்.

தென்னாப்பிரிக்காவில் அவர் எதிர்கொண்ட முதல் அடித்தட்டு மனிதரின் வழக்கு பாலசுந்தரத்தினுடையது. தன்னுடைய முண்டாசுத் துணியைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு, இரு கைகளையும் கூப்பியவாறு கூனிக்குறுகி, உடைந்த பற்களிலிருந்து ரத்தம் வழிய காந்தி முன் வந்து நின்ற தமிழர். கூலித் தொழிலாளி. அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த ஆங்கிலேயர் பாலசுந்தரத்தை அத்துமீறித் தாக்கியிருக்கிறார். பாலசுந்தரத்தின் முழுக் கதையையும் கேட்கும் காந்தி அவருக்காகப் பேச முடிவெடுக்கிறார். பாலசுந்தரத்திடம் இதைத் தெரிவிக்கும்போது கூடவே சொல்கிறார், “தயவுசெய்து உங்கள் முண்டாசுத் துணியைக் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்.” பின்பு ‘சத்திய சோதனை’யில் எழுதுகிறார். “மனிதர்கள் தம் சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்துவதன் மூலம் தாங்கள் கவுரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது என்றைக்குமே எனக்குப் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக இருக்கிறது.”

தென்னாப்பிரிக்காவில் கூலிகளாக இருந்த இந்தியர் களில் கணிசமானோர் தாழ்த்தப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்களுடனான ஆழமான உறவு காந்திக்கு அங்கே ஏற்பட்டுவிட்டது. இந்தியச் சேரிகளுக்கு இணையான குடியிருப்புகளே அங்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. “நாம் நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்றால், முதலில் கண்ணியமான வாழ்க்கை முறைக்கு நாம் மாற வேண்டும்” என்று அவர்களிடம் கூறினார் காந்தி. கூலிகளின் சேரிகளுக்குச் சென்று பணியாற்றுகையில் அவர் தொடர்ந்து அவர்களிடம் வலியுறுத்திய இரு விஷயங்கள்: 1. சுகாதாரம், 2. கல்வி. தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள ஆங்கிலம் படிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார் காந்தி.

ஆரம்ப நாட்களிலேயே உடன் வேலைசெய்வோரைப் பாகுபாடின்றி வீட்டில் தங்கவைக்கும் பழக்கம் காந்தியிடம் இருந்தது. அப்படித் தங்கியிருந்த ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரின் கழிவுச்சட்டியைச் சுத்தம்செய்ய கஸ்தூர் பா மறுத்ததே காந்தி அவரிடம் கடுமையாக நடந்துகொள்ளக் காரணமாக இருந்தது. 1904-ல் பீனிக்ஸ் குடியிருப்பில் வேலைகள் தொடங்கிவிட்டன. பல்வேறு சமூகத்தினரும் சமத்துவத்தோடும் கூட்டுறவோடும் வாழும் முயற்சி இந்தக் குடியிருப்பு. ‘யார் எந்தப் பணியில் இருந்தாலும் சரி, உடலுழைப்பிலும் ஈடுபட வேண்டும், எல்லோரும் எல்லா வேலைகளிலும் பங்கேற்க வேண்டும்’ என்பது காந்தி வகுத்த அடிப்படைக் கட்டுப்பாடுகளில் ஒன்று. மலம் அள்ளுவது உட்பட.

1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் காந்தி ஆற்றிய தலைமை உரையில் குறிப்பிடுகிறார், “நாம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்காகப் போராடுகிறோம். ஆனால், நம்மில் பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல், தீண்டாமைக் கொடுமையால் பிரித்துவைத்திருக்கிறோம். தீண்டாமை தொடரும் வரை நமக்குச் சுயராஜ்யம் சாத்தியமே இல்லை.”

வைக்கம் போராட்டம் 30.3.1924 அன்று தொடங்கியது. முன்னதாக வைக்கத்தில் உள்ள மோசமான சூழலை விவரித்து கேசவ மேனன் எழுதும் கடிதத்துக்கு 19.03.24 அன்று பதில் கடிதம் எழுதுகிறார் காந்தி. வைக்கம் போராட்டத்துக்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்து எழுதும் இக்கடிதத்தில், காந்தி குறிப்பிடுகிறார், “அவர்கள் தீண்டாதவராக இருப்பது மட்டுமல்ல; சில தெருக்களில் நடக்கவும் கூடாது என்ற நிலை எவ்வளவு வேதனைக்குரியது! நமக்கு ஏன் இன்னமும் சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமே இல்லை. நம் நாட்டின் தாழ்ந்த வர்க்கத்தினர் பொது வழிகளில் நடக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றே தீர வேண்டும்.”

முக்கியமான விஷயம், இந்த விஷயங்கள் எல்லாம் நடந்த காலகட்டங்களில் அம்பேத்கர் பிறக்கவேயில்லை அல்லது சிறுபிராயத்தில் இருந்தார் அல்லது படித்துக்கொண்டிருந்தார்.


காந்தி 2.10.1869-ல் பிறந்தவர். அம்பேத்கர் 14.4.1891-ல் பிறந்தவர். காந்தியின் மூத்த மகனான ஹரிலாலைக் காட்டிலும் மூன்று வயது இளையவர் அம்பேத்கர். 1925-ல் சைமன் ஆணையத்தில் அறிக்கை சமர்ப்பித்த பிறகே, இந்திய அரசியல் அரங்கம் கவனிக்கும் இடத்துக்கு வருகிறார் அம்பேத்கர். அதன் பிறகே தீண்டாமைக்கு எதிரான, தண்ணீருக்கான, ஆலயப் பிரவேசத்துக்கான அவருடைய தொடர் மக்கள் போராட்டங்கள் நடக்கின்றன.

1930-லேயே காந்தியும் அம்பேத்கரும் முதன்முதலில் சந்திக்கின்றனர். காந்தி அம்பேத்கரின் முழு ஆளுமையை இதன் பின்னரே உணர்கிறார். கூடவே, சாதியின் முழு குரூர முகத்தையும் காந்திக்கு முழுமையாகப் புரியவைக்கிறார் அம்பேத்கர். 1923-ல் நடந்த நாராயண குருவுடனான சந்திப்புக்குப் பிறகு, சாதி தொடர்பான காந்தியின் சிந்தனைகளில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கிய சந்திப்பும் உரையாடல்களும் அம்பேத்கருடனானவை.

காந்தி - சாதி தொடர்பான விவாதங்களில் ஈடுபடும்போது ஒரு முக்கியமான புரிதல் நமக்கு வேண்டும். காலம் முழுவதும் காந்தி மாறிவந்திருக்கிறார்; குறிப்பாக, 1893-க்கு முந்தைய காந்திக்கும் 1915-க்குப் பிந்தைய காந்திக்கும் வேறுபாடுகள் உண்டு. 1923-க்கு முந்தைய காந்திக்கும் 1932-க்குப் பிந்தைய காந்திக்கும் வேறுபாடுகள் உண்டு. 1945-க்குப் பிந்தைய காந்தி இன்னும் உக்கிரமானவர். சாதி அமைப்பு இந்திய நாகரிகத்தைக் காத்துவருகிறது என்று நம்பியவர் ஆரம்பக் கால காந்தி; சாதி முற்றிலுமாக ஒழிய வேண்டும்; சாதி மறுப்புத் திருமணங்களுக்கு மட்டுமே என் ஆசி உண்டு என்ற நிலைப்பாட்டை எடுத்தவர் இறுதிக்கால காந்தி. எனினும், சாதி அமைப்பை நம்பிய காலங்களிலும்கூட காந்தி பிரிவினையையோ, சாதி துவேஷத்தையோ, அசமத்து வத்தையோ ஏற்றுக்கொண்டவர் அல்ல. தவிர, தன்னளவில் அவர் வாழ்நாள் முழுவதுமே சமத்துவராகவே வாழ்ந்தார்.

சாதி தொடர்பான காந்தியின் சிந்தனைப் போக்குகளைத் தீர்மானித்ததில் பலருக்குப் பங்கு உண்டு. முக்கியமானவர் அம்பேத்கர். ஆனால், அவர்கள் இருவரிடையேயான உரையாடல், சமகால இரு போட்டி அரசியல்வாதிகளின் அரசியல் அல்ல. ஒட்டுமொத்தக் குடும்பப் பொறுப்பையும் வரலாற்றுச் சிக்கல்களையும் கையில் வைத்துக்கொண்டு, சர்வ வல்லமை மிக்க ஒரு எதிரியோடு யுத்த களத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு தகப்பனுக்கும், காலங்காலமாக அநீதி இழைக்கப்பட்ட ஒரு மகனின் நீதிப் போராட்டத்துக்கும் இடையேயான உரையாடல். இருதரப்பிலும் நிறை குறைகள், புரிதல் போதாமைகள் இருந்த உரையாடல்.

பூனா ஒப்பந்தம் தொடர்பாக இன்றைக்குப் பேசுபவர்கள் பலர் சமகால யதார்த்தங்களைக்கூடப் பொருட்படுத்தாமல் பேசுகிறார்கள். திருநாள்கொண்டசேரி தலித் தம்பதி குஞ்சம்மாள் - செல்லமுத்து இருவரின் சடலங்களும் பொதுப் பாதையில் எடுத்துச்செல்லப்படுவது ஆதிக்கச் சாதியினரால் தடுக்கப்பட்டதும் அரசு இயந்திரம் அதை வேடிக்கை பார்த்ததும் எப்போது நடந்தது? தலித்துகளுக்கு அரசியல் உரிமைகள் கிடைக்க ஆரம்பித்த முக்கால் நூற்றாண்டுக்குப் பின் இன்றைக்கு நடந்திருப்பது. அப்படியென்றால், நூறாண்டுகளுக்கு முந்தைய சூழல் எப்படி இருந்திருக்கும்!

கொடிக்கால் ஐயா சொல்வார், “ஆங்கிலேயர் கொடுக்க முன்வந்த அந்த இரட்டை வாக்குரிமை தலித்துகள் எல்லோருக்குமானது அல்ல. படித்தவர்களுக்கும் நிலவுடைமை உடையவர்களுக்கும் மட்டுமானது. ஆகையால், அது எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கியிருக்கும் என்பதை இன்றைக்கு உத்தரவாதமாகப் பேச முடியாது. தவிர, அன்றைக்கு அம்பேத்கர் கோரியபடி தலித்துகள் மட்டுமே ஓட்டுப் போட்டு தங்களுடைய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும்படி வந்திருந்தால், ஒரு பெரும் இனப்படுகொலையையும் இந்தியா சந்தித்திருக்கும். வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையின் கீழ், தலித்துகளுக்கு என்று தனித் தொகுதிகளில், இன்றைக்கு இருப்பதுபோல எல்லா மக்களும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் முறைப்படி தலித் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதே, சமூகங்கள் தமக்குள் நெகிழ்ந்து வரவும் ஊடாடவும் வழிவகுக்கும். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரைகூட நம்முடைய கிராமங்கள் எவ்வளவு கொந்தளிப்பாக இருந்தன என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. அரைப்படி நெல் அதிகம் கேட்டுப் போராடினார்கள் என்பதற்காக கூட்டமாக வைத்து 44 பேர் கொளுத்தப்பட்டார்களய்யா, இதே தமிழ்நாட்டில்..” இதைச் சொல்லும்போதெல்லாம் கொடிக்கால் ஐயா கண்ணீர் வடிப்பார்.

காந்தியம், அம்பேத்கரியம் இரண்டையும் சரிவிகிதத்தில் ஏற்றுக்கொண்டவர் கொடிக்கால். அம்பேத்கர் வழியைப் பின்பற்றியே கொடிக்கால் செல்லப்பாவாக இருந்தவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவாக மாறினார். அவரே இன்றைக்கு, “பொதுச் சமூகத்துடனான உறவாடலிலேயே எந்த ஒரு சமூகத்தின் முன்னேற்றமும் இருக்கிறது” என்பதைச் சொல்பவராகவும் இருக்கிறார்.

பூனா ஒப்பந்தத்தை ஆதரித்து நடைபெற்ற பம்பாய் மாநாட்டில் அம்பேத்கர் பேசியது இது: “சமரசப் பேச்சுவார்த்தைகள் மகாத்மா காந்தியால்தான் வெற்றி பெற்றன... வட்ட மேஜை மாநாட்டில் எனக்கு எதிரான நிலையெடுத்தவர் இங்கே என் உதவிக்கு வந்தார்; மாற்றுத் தரப்புக்கு அல்ல. தாழ்த்தப்பட்ட பிரிவினர் எல்லோரும் இந்த உடன்பாட்டை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வியைப் பத்திரிகைகள் எழுப்புகின்றன. என்னைப் பொறுத்தவரை, என் தலைமையிலுள்ள கட்சியைப் பொறுத்தவரை நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம். இங்கு வந்திருக்கும் என் நண்பர்கள் ஒவ்வொருவர் சார்பிலும் ஒப்பந்தத்துக்கான ஆதரவை அறிவிக்கிறேன்.”

உண்மையில், வட்ட மேஜை மாநாட்டில் நிகழாத சாதனையை காந்தியுடனான உரையாடல்களில் அம்பேத்கர் நிகழ்த்திவிட்டார். காந்தியை முழுமையாகச் சாதிக்கு எதிராகத் திருப்பிவிட்டதுதான் அது.

தன்னை எவ்வளவோ சாடியபோதும், “அம்பேத்கர் இந்து மதத்தைவிட்டு வெளியேறினால் அதற்கு நாமே காரணம். அவ்வளவு அநியாயங்களை நாம் செய்திருக்கிறோம். அவர் செருப்பால் நம்மை அடித்தாலும் திருப்பித் தாக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்று காந்தியை எது சொல்லவைத்தது? காந்தியின் நூல்கள் மூலம் கிடைக்கும் நிதியில் ஒரு பங்கும், காந்தி நினைவிடத்தில் அளிக்கப்படும் காணிக்கை மொத்தமும் ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக்கான அமைப்புகளுக்கே செல்கின்றன. எது இப்படியொரு பிணைப்பை உருவாக்கியது?

காந்தி - அம்பேத்கர் பார்வையில் மூன்று முக்கியமான வேறுபாடுகள் உண்டு. 1. எல்லா மாற்றங்களையும்போல சாதியத்துக்கு எதிரான யுத்தமும் கீழிருந்து மேல் நோக்கி விரிய வேண்டும் என்று காந்தி நினைத்தார். அம்பேத்கர், அரசுக்கும் அரசியலதிகாரத்துக்கும் இதில் பிரதான பங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தார். 2. ஒடுக்கப்பட்டவர்களை இந்து மதத்திலிருந்து பிரிக்கவே முடியாது என்று காந்தி கருதினார். ஒருபுறம் சாதிகள் தமக்கிடையே வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், இன்னொருபுறம் பரஸ்பர சார்புத்தன்மையை அவை கொண்டிருந்ததையும் அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டினார். மேலும், சாதிய துவேஷமும் தீண்டாமையும் தற்காலிக நிலையே; அவை ஒழிக்கப்பட்டால் சூழல் மாறும் என்றும் அவர் நம்பினார். அம்பேத்கரோ, சாதியக் கொடுமையிலிருந்து விடுபட இந்து மதத்திலிருந்து விடுபடுவதே ஒடுக்கப்பட்டவர்களுக்கான சாத்தியம் என்று நம்பினார். 3. ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையில் பெரும்பான்மைப் பங்கு அவர்களுடைய போராட்டத்திலிருந்து நிகழ வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டிலும் பிறருடனான தொடர் உரையாடல்கள்- பங்கேற்பிலும் சமமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார் காந்தி.

ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு காந்தி கண்ட இயக்கம் ‘அரிஜன சேவகர் சங்கம்.’ கடுமையான எதிர்ப்புகளினூடே டெல்லியில் தொடங்கி நாட்டின் 26 மாகாணங்களுக்கும் விரிந்த இந்த இயக்கத்தின் பணிகள் இன்றைக்கும் வியக்கவைக்கக் கூடியது. தீண்டாமைக்கு எதிராக காந்தி நடத்திய நாடு தழுவிய நடைப்பயணம், ஒருபுறம் ஆதிக்கச் சாதி இந்துகளிடம் கடும் எதிர்ப்புகளை உண்டாக்கியது. பல இடங்களில் அவருக்கு இந்து மகா சபையினரின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் காத்திருந்தன. புனாவில் அவர் மீது மலத்தையே வீசினார்கள். மறுபுறம், பல்லாயிரக்கணக்கான ஆதிக்கச் சாதி இளைஞர்களைச் சாதிக்கு எதிராக அவருடைய பேச்சு திருப்பியது. அவர்கள் சேரிகளில் போய் உழைத்தார்கள். மலம் அள்ளினார்கள். துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டார்கள். சுத்தம் சுகாதாரத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கல்வியளித்தார்கள். குடிக்கு எதிராக அறப்போர் நடத்தினார்கள். அவர்களில் பலர் சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொண்டார்கள்.

தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தை ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நடத்திய வைத்தியநாத ஐயர், எல்.என்.கோபால்சாமி ஐயர்; தன்னுடைய சொத்தின் பெரும் பகுதியையும் ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்காகச் செலவிட்ட கோபிசெட்டிப்பாளையம் லட்சுமண ஐயர் (பின்னாளில், நாட்டிலேயே முன்னோடியாக மனிதர்கள் கழிவள்ளும் முறையை கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியில் ஒழித்தவர்), சேலம் காந்தி ஐயர், மானாமதுரை அரிஜன ஐயங்கார், சேலத்தில் பர சுப்பாராவ் போன்றோரெல்லாம் இந்த ‘அரிஜன சேவகர் சங்க’த்தின் மூலம் வெளிப்பட்டவர்களே.

தமிழ்நாட்டில் காந்திக்குப் பிந்தைய இந்த 67 ஆண்டுகளில் எந்த தலித் இயக்கமும் செய்யாத சாதனை கிருஷ்ணம்மாள் - ஜெகந்நாதன் தம்பதி செய்தது. பல்லாயிரக்கணக்கான ஏழை தலித் பெண்களை நிலவுடைமையாளர்கள் ஆக்கினர் அவர்கள். கிருஷ்ணம்மாள் - தலித்; ஜெகந்நாதன் தேவர். ஆனைமலையில் ஒடுக்கப்பட்டோரின் கல்வி, வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்காக ரங்கநாதன் - வசந்தா தம்பதி நடத்தும் காந்தி ஆசிரமம் எவரையும் நெகிழவைக்கக் கூடியது. ரங்கநாதன் - வன்னியர்; வசந்தா - தலித். ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வைத் தூக்கி நிறுத்த இன்றைக்கும் அமைதியாக காந்திய ஆசிரமங்கள் அவர் வழியில் செயலாற்றிக்கொண்டிருக்கின்றன. கட்டணமில்லாக் கல்வி - பல இடங்களில் உண்டு, உறைவிடத்தோடு. சென்னையில், மதுரையில், மேலூரில், கோபிசெட்டிப்பாளையத்தில், பொள்ளாச்சியில், திண்டுக்கல்லில், திருக்கோவிலூரில், பழநியில், உடுமலைப்பேட்டையில், கோகிலாபுரத்தில்.. இப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில்.

வார்த்தைகளில் அல்ல; செயல்பாடுகளில் இருக்கிறது மதிப்பீடு. காந்தியின் ‘அரிஜன்’ எனும் ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவரை விமர்சிப்பவர்கள் இவர்களோடு ஒப்பிடுகையில் இன்றைக்கு எப்படியான காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை ஆத்மசுத்தியோடு கேட்டுக்கொள்ள வேண்டும்.

நித்ய சைதன்ய யதியின் அனுபவம் இங்கு நினைவுகூரத்தக்கது. இளமைத் துடிப்போடும் மார்க்ஸியம் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடும் இருக்கும் அவர் காந்தியைப் பார்க்கச் செல்கிறார். இருவருக்கும் இடையே சின்ன விவாதம். காந்தி கேட்கிறார். “நீங்கள் ஏன் உங்கள் சுய பார்வையைப் புறக்கணித்துவிட்டு மார்க்ஸின் பார்வையிலிருந்து உண்மையைப் பார்க்கிறீர்கள்? நீங்கள் ஏன் என்னிடமும் கொஞ்சம் தாராள மனதுடன் நடந்துகொள்ளக் கூடாது?” தொடர்ந்து கேட்கிறார். “உண்மைக்கு எத்தனைப் பரிமாணங்கள் உள்ளன?” யதி சொல்கிறார். “ஒன்று”. காந்தி மறுமொழி சொல்கிறார். “இல்லை, உண்மை வைரத்தைப் போன்றது. அது பல பட்டைகளைக் கொண்டது.”

இந்திய அரசியலுக்கு காந்தி அளித்த மிகப் பெரிய கல்வி பல்தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பார்வை. ஒட்டுமொத்த இந்தியாவையும் நூற்றுக்கணக்கான சிறுபான்மையினங்களின் தொகுதியாகவே அவர் பார்த்தார். மேலும், சமூகங்களுக்கு இடையேயான உறவாடலும் பரஸ்பர நெருக்கமுமே விளிம்புநிலைச் சமூகங்களை மேலே கொண்டுவரும் என்றும் அவர் நம்பினார். அதுதான் உண்மையும்கூட. தலித்துகள் மட்டும் அல்ல; இங்கு எவருமே தம்முடைய சுய இன அடையாளத்துடன் கூடியவர்களை மட்டுமே ஒருங்கிணைத்து சமூக முன்னேற்றங்களைச் சாத்தியப்படுத்திவிட முடியாது. இந்திய அரசியலுக்கு காந்தி அளித்த மிகப் பெரிய கொடை அவர் அளித்த இந்தப் பார்வை.

காந்தியின் வார்த்தைகள் கிட்டத்தட்ட 28,000 பக்கங்களுக்கு விரிந்து கிடக்கின்றன. அங்கொன்றையும் இங்கொன்றையும் உருவி இளைய தலைமுறையிடம் எவர் ஒருவருக்கு எதிராகவும் அவரைக் கட்டமைத்துவிடுவது சுலபம். ஆனால், காந்தியைப் புறக்கணிப்பது அவருக்கான இழப்பல்ல; நம்முடைய இழப்பு. நேரு சொன்னதுபோல, “வியக்கத்தக்க அளவில் அவர் இந்தியாவின் பிரதிநிதி. பழமை கொண்டதும், வதை செய்யப்படுவதுமான இந்த நாட்டின் மூச்சை வெளிப்படுத்தியவர் அவரே. அவர்தான் இந்தியா. அவருடைய குறைகள் எல்லாம் இந்தியாவின் குறைகள். அவரைப் புறக்கணிப்பது தனித்த சங்கதியல்ல. அது இந்தியாவையே புறக்கணிப்பதாகும்!”

இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, இந்தியாவில் யாருக்காக அரசியல் பேசப்போகிறோம்?

ஜனவரி, 2016, ‘தி இந்து’

16 கருத்துகள்:

 1. சாதியத்தை காந்தி தான் காத்தார் என்று அரைகுறை இயக்கம் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு தேவையான கருத்துக்களை தக்க நேரத்தில் கொடுத்துள்ளீர்கள்.. மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 2. மிக அருமை.
  எனக்கும் சில தவறான கண்ணோட்டம் இருந்தது. அது இன்று தீர்ந்தது.

  - மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. இந்த கட்டுரையை நான் முன்று நான்கு முறை படித்துவிட்டேன்...காந்தியம் பற்றிய ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது. இந்த தலைமுறையும் இனி வரும் தலைமுறையும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. வாழ்க உங்கள் சேவை.

  பதிலளிநீக்கு
 7. கிருஷ்ணம்மாள் - தலித்; ஜெகந்நாதன் தேவர்? இது தான் உங்க சாதி பற்றிய புாிதலா அண்ணாச்சி.. ஒரு பகுதியை வா்க்க பொது பெயரிலும் மற்றொரு பகுதியை போலி சாதி பெயரிலும் குறிப்பது?? ஒன்று கிருஷ்ணம்மாள் அவா்களை தேவேந்திர குல வேளாளா் என்றும் ஜெகந்நாதன் அவா்களை அகமுடையோா் எனு பதிவு செய்திருக்க வேண்டும்..இல்லையா.. கிருஷ்ணம்மாள் அவா்களை தலித் என்றும் ஜெகந்நாதன் அவா்களை குற்றப்பரம்பரைனு பதிவு செய்திருக்க வேண்டும்..

  இது பொது புத்தியில் இருந்து வந்த வாா்த்தையாக வாியாக பாா்க்க முடிகிறது..

  அப்புறம்.

  சினிமாகளில் கடைசி காட்சியில் வில்லன்கள் திருந்து நல்லா இருங்கனு கதாநாயகன் கதாநாயகியை வாழ்த்தி செல்கிற 80 - 90 களில் வருகிற படம் மாதிாி..
  ஆட்சி அகாரம் இருக்கும் போது அதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூக மக்களை அரசியல் அதிகாரத்திற்குள் இழுக்க விரும்பாத காந்தி அவா்கள்.. இறுதி காலத்தில் அப்படி பேசினாா்..இப்படி அழுதாா்னு சொல்லுவது அந்த படம் தான..

  இரட்டை வாக்குாிமை எனபதை எப்படி நாசுக்கா திருப்புறீங்கனு பாருங்க.. புரட்சியாளா் அம்பேத்கா்
  மிகவும் கவணமாக இரண்டு முக்கிய அம்சமாக அவா் பேசினாா். 1. ஒடுக்கப்பட்ட சமூக மக்களால் தோ்வு செய்யப்பட்ட ஒருவா் வேண்டும் 2. ஒடுக்கப்பட்ட சமூக மக்களும் சோ்ந்து தோ்வு செய்யப்பட்ட ஒருவா் வேண்டும். என்பது அது.. இது நிறவேறினால் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் அதிகாரத்தை அடைய நினைக்கும் யாரும் இவா்களை தவிா்க்க முடியாதபடி இருந்து இருக்கும்.. இப்ப என்ன நடக்குது? டம்மிகளை வைத்து தனிதொகுதியில் வெற்றி பெருகிறது.. அந்த தனிதொகுதியில் இருக்கும் பெரும்பாண்மை சாதி சமூக மக்களை கவா்ந்தால் போதும் என்ற மனநிலை தான் இருக்கு.. அதன் விளைவு தான் திருநாள் கொண்டான் சோியும் முதுகுளத்துாரம் மற்ற கிராமம் நிகழ்வுகளும். ஹாிசன சேவ சங்கம் எல்லாம் இந்த காலத்து தீண்டாமை ஒழிப்பு சங்கம் மாதிாி வேரை விட்டுவிட்டு செடியை வெட்டுகிற பணி. சாதி இருக்கனும் ஆனால் ஏற்றதாழ்வு வேண்டாம் என்றால் அது நடக்குமா.. சாதி என்பதே கீழ்மேல் அடுக்கு என்பது கூடவா இந்த மகான்களுக்கும் அவா்கள் விவாசிக்கும் தொியவில்லை. மதுரை கோவிலுக்குள்ள தான் போக முடியுது அதே அய்யா் அயங்காா் கள் இன்னும் கருவறையில் நுழைய போராடுவாங்களா? என்பது தான் கேள்வி?? என்னமோ நீங்க எழுத ஒரு நாளிதழ் இருக்கு.. நல்லது அது உங்க தொழில்.. அதை படிப்பது எங்க பொழுது போக்கு.. அடுத்து என்ன கட்டுரை?

  அடுத்த முறையாவது சாதியை குறிங்க இல்லையா வா்க்க பொது பெயரை குறிங்க.. போட்டு குழப்பாதீங்க தோழா்..

  பதிலளிநீக்கு
 8. கடந்த நூற்றாண்டில் அதிகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர்களில் காந்தியும் ஒருவர்.

  ஜின்னாவின் இரங்கல் செய்தியைச் சொல்லி இருந்தால் முஸ்லிம்கள் அவரை எப்படி தவறாக புரிந்து கொண்டார்கள் என்று தெரிந்திருக்கும்.

  அம்பேத்கர் இரங்கல் செய்தி தெரிவித்தாரா இல்லையா என்று சொல்லி இருந்தால் தலித் மக்கள் அவரை எப்படி புரிந்து கொண்டார்கள் என்று தெரிந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 9. (பின்னாளில், நாட்டிலேயே முன்னோடியாக மனிதர்கள் கழிவள்ளும் முறையை கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியில் ஒழித்தவர்) இது குறித்து எழுதுங்கள் சமஸ்.

  பதிலளிநீக்கு
 10. தலைப்பில் கேள்வியிலேயே மறுமொழியைத் தரும் தங்களின் உத்தி பாராட்டத்தக்கது. அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 11. அம்பேத்கர், காந்தி இருவரது கோட்பாடுகளும் நிறை குறைகள் இணைந்தவையே.
  ஒவ்வொரு தனி மனிதன் மனதிலும் சாதி குறித்த பெருமித/தாழ்வான எண்ணங்கள் நீங்க வேண்டும்; அனைவரும் சமம் என்னும் நிலை எல்லா வகையிலும் நிரூபிக்கப்பட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. காந்தியை ஏன் இவ்வளவு போராடி ஒரு "மகாத்மா" என்றுக் கட்டமைக்க முனைகின்றீர்கள்? அதுவும் தலித்துகளுக்கும் அவரே வேண்டும் என்று ( வட்ட மேசை மேனாட்டில் ஒரு மூன்றாம் தர அரசியல் வாதி போல் தன்னை தலித்துகளின் தலைவன் என்று நிறுவ முயன்று மூக்குடைந்த காந்தி பற்றித் தெரியமா?. ) இந்தக் கட்டுரைக்கு மறுப்பு எழுதியுள்ளார் எமது சகோதரர் ஸ்டாலின். முடிந்தால் படித்து உங்கள் வாதத்தை வையுங்களேன். >> http://dalithkudiyarasu.blogspot.in/2016/01/blog-post_61.html?

  பதிலளிநீக்கு
 13. அருமையான பயனுள்ள படைப்பு. தாழ்த்த பட்ட சமூகம் மட்டும் ஜாதிகொடுமைக்கு புலியல்ல. மாறாக என்னை பொறுத்த வரையில் உயர்சாதி சமூகத்தினர் தங்களை மேல்ஜாதியினர் என்று நினைப்பதுஉம் ஒரு வித மனநோய் தான் அதற்கும் பெயர் ஜாதிகொடுமை. எந்த ஒரு பிரச்சனைக்கும் முதல் ஆரம்ப காரணியை கண்டறிந்து அவைகளில் இருந்து விடுபட்டால்தான் முழு தொலை தூர தீர்வு கிடைக்கும். அதே போல்தான் ஜாதிக்கொடுமையின் ஆரம்ப காரணத்தை அறிந்து அவைகளில் இருந்து விடுபட்டால் தான் முழு தீர்வு கிடைக்கும். சகோதரதுவமின்மை ஜாதிகொடுமை தீண்டாமை இவைகள் இயற்கையானது அல்ல. அப்படியென்றால் இவைகளை மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட சித்தாந்தமும் இயற்கையானது அல்ல. உயர் ஜாதி என்றொரு நிலை இயற்கையில் இல்லை. அதே மாதிரியே தாழ்ந்த ஜாதி என்றொரு நிலையும் இயற்கையில் இல்லை. இயற்கைக்கு மாற்றமாக சித்தாந்தங்கள் மனிதனின் குறுகிய கால சிந்தனையின் விளைவால் (முன் சென்ற காலத்தில் வாழ்ந்த உயர் ஜாதி)ஆதிக்க சக்தியின் பலகீனமான சிந்தனையின் விளைவால் பெரும்பான்மை சமூகத்தில் விதைக்க பட்டவை. அது இப்போது ஒரு முல்புடர் அடர்ந்த காடாய் மக்களின் மனதை பாதித்டுகொண்டு இருக்கிறது.இக்காலத்தில் வாழும் உயர்ஜாதியினரும் தாழ்ந்த ஜாதியினரும் இந்த சித்தாந்தத்தில் இருந்து விடுபட முடியாது இந்த போலியான இயற்கைக்கு மாற்றமான சித்தாந்தங்கள் ஒழியும் வரை. அதனை ஒழிக்க இவ்விரு பிரிவாரும் இந்த போலி சித்தாந்ந்ததின் உள் இருந்துகொண்டு அதனை தன் மதமாகவோ வாழ்க்கை நெறியாகவோ தன மனதில் அதனை பிடித்துகொண்டு இருக்கும் காலம் வரை இந்த மனித சமூகத்தின் உள் திணிக்க பட்ட போலியான ஜாதிக்கொடுமை தீண்டாமை சகோதரத்துவமின்மை ஒரு போதும் ஒழியாது இந்த பூமியும் ஏழு வானங்களும் நிலைத்து இருக்கும் காலம்வரை... இயற்கையை சார்ந்து வாழும் நமக்கு எந்த வழி இயற்கையாக இவ்விரு பிரிவாற்கும் அதாவது உயர் ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி மக்களுக்கும் இடையில் சகோதரதுவதையும் ஜாதியின்மையும் அதன் வாழ்க்கை நெறியாக கொள்கையாக மதமாக கொண்டு இருக்குமோ அந்த இயற்கை சித்தாந்தத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக இவ்விரு பிரிவாரும் ஏற்று கொள்வார்களோ அப்போது தான் ஜாதிக்கொடுமையில் இருந்து விடு பட முடியும். ஒரு உருவமில்லா இறைவனை மட்டுமே இறைவனாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் ஏதோ அந்த சமூகத்தில்தான் இவ்விரு பிரிவார்க்கும் சகோதரத்துவம் உண்டு... அது இஸ்லாமே இல்லை. "இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து" .கீழ் ஜாதியினர் மட்டும் இன இல்லை. இன இழிவு மேல்சாதி வர்கத்திலும் உண்டு என்பதை மேல் ஜாதியினர் மறுக்க முடியாது.....சிந்திப்பிர்களாக !!!

  பதிலளிநீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. அருமையான பயனுள்ள படைப்பு. தாழ்த்த பட்ட சமூகம் மட்டும் ஜாதிகொடுமைக்கு ஆளாக வில்லை . மாறாக என்னை பொறுத்த வரையில் உயர்சாதி சமூகத்தினர் தங்களை மேல்ஜாதியினர் என்று நினைப்பதுஉம் ஒரு வித மனநோய் தான் அதற்கும் பெயர் ஜாதிகொடுமை. எந்த ஒரு பிரச்சனைக்கும் முதல் ஆரம்ப காரணியை கண்டறிந்து அவைகளில் இருந்து விடுபட்டால்தான் முழு தொலை தூர தீர்வு கிடைக்கும். அதே போல்தான் ஜாதிக்கொடுமையின் ஆரம்ப காரணத்தை அறிந்து அவைகளில் இருந்து விடுபட்டால் தான் முழு தீர்வு கிடைக்கும். சகோதரதுவமின்மை ஜாதிகொடுமை தீண்டாமை இவைகள் இயற்கையானது அல்ல. அப்படியென்றால் இவைகளை மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட சித்தாந்தமும் இயற்கையானது அல்ல. உயர் ஜாதி என்றொரு நிலை இயற்கையில் இல்லை. அதே மாதிரியே தாழ்ந்த ஜாதி என்றொரு நிலையும் இயற்கையில் இல்லை. இயற்கைக்கு மாற்றமாக சித்தாந்தங்கள் மனிதனின் குறுகிய கால சிந்தனையின் விளைவால் (முன் சென்ற காலத்தில் வாழ்ந்த உயர் ஜாதி)ஆதிக்க சக்தியின் பலகீனமான சிந்தனையின் விளைவால் பெரும்பான்மை சமூகத்தில் விதைக்க பட்டவை. அது இப்போது ஒரு முல்புடர் அடர்ந்த காடாய் மக்களின் மனதை பாதித்டுகொண்டு இருக்கிறது.இக்காலத்தில் வாழும் உயர்ஜாதியினரும் தாழ்ந்த ஜாதியினரும் இந்த சித்தாந்தத்தில் இருந்து விடுபட முடியாது இந்த போலியான இயற்கைக்கு மாற்றமான சித்தாந்தங்கள் ஒழியும் வரை. அதனை ஒழிக்க இவ்விரு பிரிவாரும் இந்த போலி சித்தாந்ந்ததின் உள் இருந்துகொண்டு அதனை தன் மதமாகவோ வாழ்க்கை நெறியாகவோ தன மனதில் அதனை பிடித்துகொண்டு இருக்கும் காலம் வரை இந்த மனித சமூகத்தின் உள் திணிக்க பட்ட போலியான ஜாதிக்கொடுமை தீண்டாமை சகோதரத்துவமின்மை ஒரு போதும் ஒழியாது இந்த பூமியும் ஏழு வானங்களும் நிலைத்து இருக்கும் காலம்வரை... இயற்கையை சார்ந்து வாழும் நமக்கு எந்த வழி இயற்கையாக இவ்விரு பிரிவாற்கும் அதாவது உயர் ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி மக்களுக்கும் இடையில் சகோதரதுவதையும் ஜாதியின்மையும் அதன் வாழ்க்கை நெறியாக கொள்கையாக தொலைதூர சிந்தனையாக மதமாக கொண்டு இருக்குமோ அந்த இயற்கை சித்தாந்தத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக இவ்விரு பிரிவாரும் ஏற்று கொள்வார்களோ அப்போது தான் ஜாதிக்கொடுமையில் இருந்து விடு பட முடியும். ஒரு உருவமில்லா இறைவனை மட்டுமே இறைவனாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் ஏதோ அந்த சமூகத்தில்தான் இவ்விரு பிரிவார்க்கும் சகோதரத்துவம் உண்டு... அது இஸ்லாமே தவிர வேறு ஒன்றும் இல்லை. "இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து" என்றார் பெரியார். அவர் உயர்ந்த ஜாதியினரும் ஒரு வித மனநோயான ஜாதிக்கொடுமை என்ற போலி சிந்தனையில் ஆட்கொண்டு உள்ளனர் என்பதை விளங்காமல் இருந்துள்ளார் போலும் ..கீழ் ஜாதியினர் மட்டும் இன இழிவில் பாதிக்க படவி ல்லை. இன இழிவு (மேல் ஜாதி வர்கத்தின் உல் பிரிவுகளில்) மேல்சாதி வர்கத்திலும் உண்டு என்பதை பொது சாமானிய மேல் ஜாதியினர் ஒரு போதும் மறுக்க முடியாது..ஆதிக்க சக்திகளில் உள்ள மேல்ஜாதியினர் வேண்டுமென்றால் தன் அறியாமையினால் மறுக்கலாம். ...சிந்தனை சிதைவுதான் ஒரு சமூகத்தை அழிக்கும் ...சிந்தனை மாற்றமே சமூகத்தின் வெற்றி
  ..சிந்திப்பிர்களாக !!!

  பதிலளிநீக்கு