கருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை!


தோல்விகளால் வீழாத அறிவாலயம், இன்று துவண்டு கிடக்கிறது. இது திமுகவின் தலைமை அதிகாரத்துக்கான யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் கலக்கம். கட்சித் தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பலரும் உடைந்து அவரிடம் அழுததாகவும் அவர் தேற்றியதாகவும் சொல்கிறார்கள். இந்தியாவில் 13 முறை தோல்வியையே சந்திக்காமல் ஒருவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது வரலாறு. தன்னுடைய 33-வது வயதில் சட்டசபைக்குள் நுழைந்தவர் கருணாநிதி; இன்றைக்கு 92-வது வயதிலும் சட்டசபை உறுப்பினர். இம்முறை மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையோடு சேர்த்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியாக, ஐந்து முறை முதல்வராக எல்லா உச்சங்களையும் அவர் தொட்டுவிட்டார்.

திமுகவில் அதிகார மாற்றமானது புத்தாயிரமாண்டின் தொடக்கத்திலேயே நடந்திருக்க வேண்டியது. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் முழுமையானதாகவும் ஒப்பீட்டளவில் சிறந்ததாகவும் மதிப்பிடப்படும் 1996-2001 ஆட்சிக் காலகட்டத்திலேயே கருணாநிதி அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தைக் கைமாற்றியிருக்க வேண்டும். அப்போதே அவர் 75 வயதைக் கடந்திருந்தார். அன்றைக்கு அந்த முடிவை அவர் எடுத்திருந்தால், இன்றைக்கு அரை நூற்றாண்டு, கால் நூற்றாண்டு காலமாக அடுத்தடுத்த பொறுப்புகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களும் கூடவே ஒதுங்கியிருப்பார்கள். பிற்காலத்து அவப்பெயர்களையும் கருணாநிதி பெரிய அளவில் தவிர்த்திருக்கலாம். ஸ்டாலின் தலைமையையும் பரிசோதித்திருக்கலாம். பந்தயத்தில் தொடர்ந்து நேரடியாகத் தானே நிற்க வேண்டும் என்ற கருணாநிதியின் முடிவின் விளைவாகவே திமுக இன்று கெட்டிதட்டி நிற்கிறது.


ஒரு அரசியல்வாதியின் வயது, உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை அவருடைய செயல்பாட்டோடு ஒப்பிடாமல் இருக்கவே முடியாது. வயது ஆக ஆக, மனதளவில் கனிந்து தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் எல்லோருக்கும் இனியவராய் மாறுவது நம் சமூகத்தில் இயல்பு. கருணாநிதி அப்படி மாறியபோது, ஒரு அரசியல்வாதி என்பதாலேயே அவர் கைவசமிருந்த அதிகாரம் அவருடைய சுற்றத்தார் அனைவருக்கும் ஆயுதமும் கேடயமும் ஆனது. கடந்த கால ஆட்சியின்போது, மத்தியிலும் மாநிலத்திலும் திமுகவினர் மீது சுமத்தப்பட்ட ஊழல் - முறைகேடு் குற்றச்சாட்டுகள் பலவும் ஆரம்ப நிலையில் கருணாநிதிக்கே தெரியாமலும், தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகே அவற்றை எதிர்கொள்ளும் சூழலில் கருணாநிதி நிறுத்தப்பட்டதும் இங்கு நினைவுகூரப்பட வேண்டியவை. இன்றைக்கும் யாரெல்லாம் கருணாநிதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அவரிடம் சொல்கிறார்களோ அவர்களில் பெரும்பாலானோர் அதிகாரத்தைப் பெறுவதற்கான / தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான கருவியாகவே கருணாநிதியைப் பயன்படுத்துகிறவர்கள்.

உண்மையில், திமுக இன்றைக்கு தொண்டர்களால் கீழிருந்தோ தலைமையால் மேலிருந்தோ நடத்தப்படும் கட்சி இல்லை. எந்தப் பார்வையும் அற்ற இடைத்தரகர்களான குறுநில மன்னர்களின் கையில் அது சிக்கித் திணறுகிறது. அவர்களில் பலர் செயல்படுவதும் இல்லை; ஏனையோரைச் செயல்பட விடுவதுமில்லை. திமுகவின் தலைமை பீடத்தில் உருவான குடும்ப அதிகார மையங்களின் தீய விளைவுகளே கட்சியை நேரடியாக ஆளும் அதிகார மையங்களான மாவட்ட நிர்வாகிகள் மட்டத்தில் ஊழல், அடாவடித்தனக் கரைகளாக உறைந்து கிடக்கின்றன.

மக்கள் தன்னுடைய சுற்றம் தொடர்பாக என்ன நினைக்கிறார்கள் எனும் பிரக்ஞையையே கருணாநிதி இழந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. தேர்தல் மேடைகளில் ராஜாத்தி அம்மாளையும் தயாநிதி மாறனையும் அவர் பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டபோது, திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகாரம் யார் கைகளுக்கெல்லாம் போகும் என்பதை ஒரு அபாய சமிக்ஞையாக வெளியிட்டதுபோல இருந்தது. பிரச்சார வாகனத்தில் உட்கார்ந்து, அவர் ஊழலுக்கும் மதுவுக்கும் எதிராகப் பேசியபோது வாகனத்தின் உள்ளே ஜெகத்ரட்சகன் சிரித்துக்கொண்டிருந்தது மக்களுக்குத் தெரிந்தது. எல்லாவற்றையும்விட மோசம், தனக்கு இயற்கையாக ஏதேனும் நேர்ந்தால்தான் தலைமைப் பொறுப்புக்கு அடுத்தவர் வர முடியும் என்று அவர் சொன்னது. ஜனநாயகத்தில் தலைமைப் பொறுப்பை எப்படி ஒருவர் தன்னுடைய முற்றுரிமையாகக் கருத முடியும்?

கருணாநிதிக்கு ஒரு யதார்த்தம் புரிந்ததாகத் தெரிய வில்லை. தன்னுடைய அரசியல் வாரிசாக அவர் முன்னிறுத்தும் ஸ்டாலினுக்கு இப்போது 63 வயதாகிறது. ஐந்தாண்டுகள் கழித்து அடுத்தடுத்த தேர்தல்களை அவர் எதிர்கொள்ளும்போது அவர் எழுபதுகளை ஒட்டிய பெரியவர் ஆகியிருப்பார். கட்சியோ அவசரச் சிகிச்சைக்குத் துடிக்கிறது. “திமுக தோற்கவும் இல்லை; ஒருநாளும் தோற்கப்போவதும் இல்லை” என்று சொல்கிறார் கருணாநிதி. இப்படியான வெற்று வார்த்தை ஜாலங்கள் கட்சியை மேலும் சிதைத்து மூழ்கடிக்கவே செய்யும். உண்மையில், இந்தத் தேர்தலில் திமுகவின் பலவீனம் பட்டவர்த்தனம் ஆகியிருக்கிறது. அதிமுக வாங்கிய வாக்குவீதம் 2011 தேர்தலில் 51.9%. 2016 தேர்தலில் 40.8%. திமுக வாங்கிய வாக்குவீதம் 2011 தேர்தலில் 39.5%. 2016 தேர்தலில் 39.7%. ஏனைய பிரதான எதிர் சக்திகளான மக்கள் நலக் கூட்டணி, பாமக இரண்டும் மட்டுமே 11.36% வாக்குகளைப் பெற்றிருப்பது ஆட்சிக்கு எதிரான மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்லப்போனால், இந்தத் தேர்தலில் அதிமுக மிகவும் பலவீனப்பட்டிருந்தது. காங்கிரஸ், தேமுதிக, பாமக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக இவை எதையும் கூட்டணிக்கு ஈர்க்கக் கூடிய நிலையில் அதிமுக இல்லை. சில்லறைக் கட்சிகள் கூட்டணியோடு தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா முன்புபோல உற்சாகமான உடல்நிலையில் இல்லை. கருணாநிதிக்காவது 234 தொகுதிகளுக்கும் அனுப்ப அடுத்த நிலையில் ஒரு ஸ்டாலின் இருக்கிறார்; ஜெயலலிதாவிடம் அப்படியும்கூட ஒரு ஆள் இல்லை. கிட்டத்தட்ட 11% வாக்குகளை இழந்தும் ஆட்சியை அதிமுக தக்கவைத்திருக்கிறது என்றால், அது அம்பலப்படுத்தும் பெரிய உண்மை அதிமுகவுக்கு முழு மாற்றுச் சக்தியாக நிற்கும் திராணி இன்றைய திமுகவுக்கு இல்லை!

தேர்தல் காலத்தில் மட்டும் வெளியே வந்து மக்களுக்குக் கும்பிடு போடுபவர்களாக திமுகவினர் மாறி நீண்ட காலமாகிவிட்டது. அவர்கள் போராட்டவாசம், சிறைவாசம் மறந்து யுகமாகிவிட்டது. துடிப்பான எதிர்ப்பரசியலுக்குப் பேர் போன ஒரு கட்சி, ஜெயலலிதா தானாகத் தடுக்கிவிழும் ஒரு சந்தர்ப்பத்துக்காக மட்டும் ஏங்கி இயங்கிக்கொண்டிருப்பது அவலம். அதிமுக மீதான அதிருப்தியின் அனுகூல எதிர்பார்ப்பு அல்லது அதிமுக போலச்செய்யும் உத்தி இவை இரண்டின் வாயிலாக மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று திமுக நம்பியதும் நம்புவதும் மூடநம்பிக்கையன்றி வேறென்ன?

அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் போட்டியிடத் தயங்கி பின்வாங்கிய வரலாறு இதுவரை திமுகவுக்கு இல்லை. இந்தத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அது நடந்தது. எஸ்.எஸ்.ராஜ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்வாங்கினார். அவரை எதிர்த்து நின்றவர், அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையிலிருக்கும் ஐந்து பெருந்தலைகளில் ஒருவரான அமைச்சர் வைத்திலிங்கம். மாற்று வேட்பாளராக சாதாரணர் ராமச்சந்திரனை நிறுத்தியது திமுக. இந்தப் பண அலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற வெகு சிலரில் ஒருவராகியிருக்கிறார் அவர். இது சொல்லும் செய்தி என்ன? ராமச்சந்திரன்கள் இல்லாமல் இல்லை; கட்சியோ ராஜ்குமார்களை நம்பி அல்லாடுகிறது.

கருணாநிதி காலத்தில் திமுக எதிர்கொண்ட மிகப் பெரிய வீழ்ச்சி,  ஒருகாலத்தில் இளைஞர்களால்  ‘ஈவினிங் காலேஜ்'  என்றழைக்கப்பட்ட மாலை நேரக் கூட்டங்கள் எல்லாம் பேசி அரசியல் வளர்த்த கட்சி அரசியலற்றதன்மையிலானதாக ஆவேசமாக உருமாறிக்கொண்டிருப்பது. 1967-ல் எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டபோது தமிழ்நாடே அல்லோகலப்பட்டது. கழுத்தில் துப்பாக்கிக் குண்டுபாய்ந்த இடத்தில் போடப்பட்ட கட்டுடன் எம்ஜிஆர் காட்சியளிக்கும் சுவரொட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு, “இதற்கு நியாயம் கிடைக்க திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும்!” என்று வீதிவீதியாகப் பிரச்சாரம் செய்தார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள். “எம்ஜிஆரும் திராவிட இயக்கம், அவரைத் துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர்.ராதாவும் திராவிட இயக்கம். இடையில் நாங்கள் என்ன பாவம் செய்தோம்?”என்று அங்காலாய்த்தார்கள் காங்கிரஸ்காரர்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸை அடியோடு சாய்த்த அந்தத் தேர்தல் வெற்றிக்கான காரணங்களில் எம்ஜிஆர் சுவரொட்டிகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. அங்கு தொடங்கி எம்ஜிஆர், அடுத்து ஜெயலலிதா என்று இருவராலும் வரலாறு நெடுக தீவிர ரசிக மனோநிலையிலேயே வளர்த்தெடுக்கப்பட்ட இன்றைய அதிமுகவின் மிக முக்கியமான அம்சம், அதன் அரசியலற்றதன்மை. காலங்காலமாக பிம்பங்களே அக்கட்சியைத் தூக்கிப் பிடித்திருக்கின்றன. மாறாக, தமிழக மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டதன் மூலம் அனுகூலம் அடைந்த கட்சிகளில் ஒன்று திமுக. அரசியலவற்றவர்களுக்கு என்றும் அதிமுகவே வசதியான தேர்வாக இருக்கும். மேலும், பிம்பங்களை வைத்துக் கூட்டத்தை ஈர்க்கவும் கட்சியைக் கட்டிக்காக்கவும் திமுகவில் இன்றைக்கு எந்தப் பிம்பங்களும் இல்லை.

இறுக்கமான மனநிலையில் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தபோது, “இனி, உங்களுக்கெல்லாம் நான் அறிவுரை சொல்ல ஏதுமில்லை” என்று சொல்லியிருக்கிறார் கருணாநிதி. உண்மையில், இப்போது அவருடைய பங்களிப்பு கட்சிக்கு அந்த வகையிலேயே தேவைப்படுகிறது. தன்னுடைய பிற்காலத்தில் திமுகவுக்கு வெளியிலிருந்து பெரியார் எப்படி வழிகாட்டினாரோ அப்படி தீவிர அரசியலுக்கு வெளியிலிருந்து கட்சியைக் கருணாநிதி வழிநடத்துவதே அவர் இனி அளிக்க வேண்டிய பங்களிப்பு. தன் இளமைக் காலத்தில் போர்க்குணத்தோடு நடத்திய அந்நாளைய ‘முரசொலி’ பிரதிகளையும் தலைமை நாமம் பாடும் கட்சிப் பிரமுகர்களின் குடும்ப ஆல்பமாகிவிட்ட இந்நாளைய ‘முரசொலி’ பிரதிகளையும் அவர் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்கிருந்தே தன் சீர்திருத்த யோசனைகளைக் கட்சிக்கு அவர் சொல்லத் தொடங்கலாம். கட்சியை வழிநடத்த ஸ்டாலினோடு கூடவே ஒரு அணியை உருவாக்கிக் கொடுக்கலாம். கட்சியை இன்று பீடித்திருக்கும் செயலற்றதன்மையிலிருந்து வெளிக்கொண்டுவர அவரால் நிறைய ஆலோசனைகளையும் கறாரான, கண்டிப்பான வழிமுறைகளையும் சொல்ல முடியும். அதற்கு முதலில் அவர் தன்னை அதிகாரப் பீடத்திலிருந்து விடுவித்து வெளியே வர வேண்டும். கூடவே, கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு காலமாகக் கட்சிப் பதவிகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் பழம்பெருச்சாளிகளுக்கும் கூண்டோடு விடைகொடுக்க வேண்டும். இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளாமல் திமுகவை அடுத்துவரும் காலத்துக்கு யாராலும் கொண்டுசெல்ல முடியாது.

சுமுகமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டும் அல்ல; சுமுகமாக அதிகாரத்தைக் கையளித்தலும் மகத்தான கலை!


13 கருத்துகள்:

  1. நடுநிலையான அலசல். ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவில் ஈர்ப்பு பிம்பங்கள் இதுவரை இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது கருணாநிதி திமுகவை பலப்படுத்த வேண்டும். இனிமேலும் களைகளை அகற்றா விட்டால் கருணாநிதியின் கடைசி பக்கங்களில் வெற்றி வாசகத்திற்கு வாய்ப்பிருக்காது என்று தான் தோன்றுகிறது. திமுகவின் தேர்தல் தோல்வியை மேம்போக்காக பார்க்காமல் ஆழ ஆராய்ந்து துணிவோடு வெளியிட்டதற்கு தங்களைப் பாராட்டுகிறேன். ஜெயாவைப் போல் இல்லாமல், கருத்துகளை கேட்கும் பக்குவம் கொண்ட கருணாநிதி இந்தக் கட்டுரையின் நிதர்சனத்தை ஏற்க வேண்டும் என்பதே பலரது விருப்பம்.

    பதிலளிநீக்கு
  2. நான் ஒரு திமுக அனுதாபி,இந்த அலசல் கட்டுரை கட்சிக்கு நன்மை செய்யும் என்று வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அவசியமான பதிவு.துணிச்சலான பதிவு. தி மு க வினர் படிக்க வேண்டிய அவசிய சிந்தனைகள். தலை வணங்குகிரேன்.

    பதிலளிநீக்கு
  4. இப்பொழுதே காலம் கடந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. இனி எடுக்கப்படும் எவ்வித முடிவும் எவ்வித பயனையும் தராதோ என்றுகூட சிந்திக்கவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. திமுக தனது இருப்புக்கான தேவையை தொலைத்து வெகு நாட்களாகிவிட்டது. கொள்கையற்ற, தனிநபர் துதிபாடும் அரசியலையும், குடும்ப அரசியலையும் அக்கட்சி தனதாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மற்றவர்கள் காரணம் என்பதைவிட கருணாநிதிதான் மூல காரணம். அரசியல் ரீதியில் தான் விரும்பும் உச்சத்தை ஒருவர் தொட பிறரை எவ்வாறு லாவகமாக பயன்படுத்திக் கொள்வது என்பதற்கு அவரே முன் உதாரணம். வினைவிதைத்துவிட்ட ஒருவர் வினையைத்தான் அறுவடைச் செய்ய முடியும். கருணாநிதியோடு சேரந்து திமுகவும் தனது கடைசிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது. அக்கட்சி தற்பேது பெற்றுள்ள வெற்றியும் அணையும் விளக்கு கூடுதல் பிரகாசத்தேடு எரிவதைப் போன்றதுதான் என எண்ணுகிறேன். இதற்கான காரணம் தெரிய வேண்டுமானால், மீண்டும் முதல் வாக்கியத்தைப் படித்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  6. இரத்தம் வராமல் இதை விட நறுக்கென்று யாராலும் கொட்ட முடியாது ..மிகச் சரியான கட்டுரை ..வாழ்த்துக்கள் சமஸ்

    பதிலளிநீக்கு
  7. ''போராட்டவாசம், சிறைவாசம் மறந்து யுகமாகிவிட்டது. துடிப்பான எதிர்ப்பரசியலுக்குப் பேர் போன ஒரு கட்சி'', எவ்வளவு உண்மை, தன் பலத்தினை இழந்து எதிரியின் பலவினத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. திமுக குடும்ப அரசியலை விட்டு வெளிவரவேண்டும், திராவிட கொள்கையில் பற்றுள்ள தலைவரை திமுக கலைஞருக்கு அடுத்து முன்னிறுத்த வேண்டும்.திராவிட கொள்கைக்கு ஸ்டலினுக்கும்
    சம்பத்தமில்லை, Corporate நம்பியிருக்கும் இவரால் திமுக சிதையும். இந்தியாவில் 13 முறை தோல்வியையே சந்திக்காமல் ஒருவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது வரலாறு. தன்னுடைய 33-வது வயதில் சட்டசபைக்குள் நுழைந்தவர் கருணாநிதி; இன்றைக்கு 92-வது வயதிலும் சட்டசபை உறுப்பினர். இம்முறை மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையோடு சேர்த்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியாக, ஐந்து முறை முதல்வராக எல்லா உச்சங்களையும் அவர் தொட்டுவிட்டார்.ஆனால் தமிழக்தில் இன்றும்
    சாதிய கொலைகளும், ஊழலும் நிறைந்து காணபடுகிறது. மக்கள் இன்றும் ஏழ்மையிலும் வேலையில்லா திண்டாட்டத்தில் தவிக்கிறது.காமராஜர் நாட்டுக்கு செய்ததை ஒப்பிடும் போது கருணாநிதியின் சாதனை மிகசிறியதே , ஆனாலும் இவர் குடும்பம் அடைத்த வளர்ச்சி மிகபெரியது.

    பதிலளிநீக்கு
  8. அக்ரையுள்ள விமர்சனம் புரிந்து கொண்டால் தி.மு.க வுக்கு, நல்லது.

    பதிலளிநீக்கு
  9. பிரயோசனம் இல்லை.அழிவு காலம் தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது.விதைத்த வினை அறுவடை ஆகிக்கொண்டிருக்கின்றது.இனி கட்சியும் பிணமும் பாடை ஏறவேண்டியதுதான்.இது காலத்தின் கட்டாயம்.

    பதிலளிநீக்கு
  10. பிரயோசனம் இல்லை.அழிவு காலம் தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது.விதைத்த வினை அறுவடை ஆகிக்கொண்டிருக்கின்றது.இனி கட்சியும் பிணமும் பாடை ஏறவேண்டியதுதான்.இது காலத்தின் கட்டாயம்.

    பதிலளிநீக்கு