திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த வரிசைத் தலைவர்களில் முக்கியமானவர் என்பதோடு, அவருடைய அன்றாட ஜமாவிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் துரைமுருகன். 1971-ல் சட்ட மன்றத்தில் நுழைந்த துரைமுருகனிடம்தான் கருணாநிதி தன் பொறுப்பில் வைத்திருந்த பொதுப்பணித் துறையைக் கையளித்தார். தமிழக நீர்நிலைகளை முற்றுமுதலாக உணர்ந்தவர் என்று கருணாநிதியிடம் பெயரும் வாங்கினார். ஒரு அரசியல் தலைவராக, கட்சியையும் ஆட்சியையும் எப்படி கருணாநிதி கையாண்டார் என்பதை துரைமுருகன் பகிர்ந்துகொண்டார்.
கருணாநிதியின் ஜமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேல் நீடிக்கிறீர்கள்... என்னவெல்லாம் பேசுவீர்கள்?
அவருக்கும் எனக்கும் 15 வயது வித்தியாசம். அடுத்தடுத்த தலைமுறையினர் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதில் பெரிய ஆர்வம் அவருக்கு உண்டு. அப்படித்தான் ஒரு கல்லூரி மாணவனாக நான் அவர் வீட்டுக்குள் போனேன். கட்சிக்குள் அடுத்தடுத்த மட்டங்களில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன, தேசிய அரசியல் எப்படிப் போகிறது, புதிதாக என்ன நாவல் வந்திருக்கிறது, புதிதாக வந்த சினிமாவில் எது நன்றாக இருக்கிறது - இப்படி எதுபற்றியும் பேசுவோம். வரையறை எல்லாம் கிடையாது. அவர் அதிகமாக எதைப் பேசுவார் என்றால், இயக்கம் கடந்துவந்த பாதையைப் பேசுவார். வெளியூர்ப் பயணங்கள் என்றால், வண்டி ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போது அந்தந்த ஊர் முன்னோடிகள், அவர்களுடைய தியாகங்களைச் சொல்வார். அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கட்சி வரலாற்றைக் கடத்திவிட வேண்டும் என்பதில் எப்போதும் முனைப்பாக இருப்பார்.
விசித்திரமாக, எம்ஜிஆர் வழியே கருணாநிதியிடம் சென்றவர் நீங்கள். எப்படி அவர் உங்களை ஈர்த்தார்?
ஒரு நிகழ்ச்சிக்குப் பச்சையப்பா கல்லூரிக்கு வந்திருந்த எம்ஜிஆருக்கு என் பேச்சும் துடிப்பும் பிடித்துவிட்டது. நெருக்கமாகிவிட்டேன். அவர்தான் இன்னொரு நிகழ்ச்சியில் கலைஞரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் என்பதெல்லாம் வாஸ்தவம்தான். முதல்வரான பின்புகூட, ‘உனக்கு என்ன வேண்டும்? கேள்! நீ இங்கே வந்துவிடு’ என்று கூப்பிட்டிருக்கிறார். ஆனால், அண்ணாவைப் பார்த்துக் கட்சிக்கு வந்தவன் நான். கவர்ச்சிக்கும் ஆளுமைக்கும் வித்தியாசம் தெரியுமில்லையா? அண்ணாவுக்குப் பின் தமிழ்நாட்டில் ஒரு தலைவர் என்றால், கலைஞர்தான். அவருடைய ஆளுமையையும் பன்முகத்தன்மையையும் யாருடனும் ஒப்பிடவே முடியாது. எம்ஜிஆர் ஆண்டால் என்ன, ஜெயலலிதா ஆண்டால் என்ன? அப்போதுகூட எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்துகொண்டு அவர்களுடைய ஆட்சியின் முக்கியமான போக்குகளை இவர்தானே தீர்மானித்தார்!
பாதிக்கும் மேற்பட்ட காலகட்டம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும், திமுகவில் ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது. இதற்கான மையவிசை எது?
ஜனநாயகம். கட்சிக்குள் யாருமே அசைக்க முடியாத இடம் கலைஞருடையது. அவர் நினைத்தால், ஒரு சர்வாதிகாரியாக நடந்துகொள்ளலாம். பல கட்சிகள் ‘ராணுவக் கட்டுப்பாடு’ என்று வெளியே தம்பட்டம் அடித்துக்கொள்வது அப்படிப்பட்ட யதேச்சதிகாரத்தைத்தான். ஆனால், கலைஞர் ஜனநாயகவாதி. “கட்சிங்கிறது குடும்பம் மாதிரிதான்யா. அரசியலுக்கு வர்றவன் சமூகத்துக்காகத் தன் வாழ்க்கையோட ஒரு பகுதியையே தர்றான். அதிகாரத்தோட எந்தப் புழக்கமும் இல்லாத சமூகங்கள்லேர்ந்து வர்றான். தப்பா நடந்துக்கிட்டா கூப்பிட்டுத் திருத்தணும். மேம்படுத்தணும். ஒழிச்சுக்கட்டணும்னு நெனைக்கக் கூடாது” என்பார். தவறு பெரிதாக இருந்தால் தண்டிப்பார். மன்னிக்கவும் செய்வார். எந்தக் காலகட்டத்திலும் சாமானிய தொண்டர்கள் அவரைச் சந்திக்க முடியும். சும்மாவாவது வந்து பார்த்துப் போவார்கள். ‘ஐயா, என்னை ஞாபகம் இருக்குங்களா? சந்திச்சு இருபது வருஷம் ஆகுது!’ என்பார் ஒருவர். ‘போன மாசம் கடலூர் கூட்டத்துல தேடினேன், உம் முகம் காணலியே சுப்பிரமணியம்!’ என்று இவர் அவரை அசரடிப்பார்.
திமுக சிக்கலில் இருந்த ஒருசமயம், கடையநல்லூரிலிருந்து ராஜாமணி என்று ஒரு தொண்டர் வந்திருந்தார். வந்த மாத்திரத்தில் அவருடைய உள்ளூர் கோஷ்டி சண்டையைச் சொல்லி நீளமாகப் புகார் வாசித்தார். ‘ஏன்யா, இந்தக் கட்சியைக் காப்பாத்த வெளியே நான் எவ்வளவு போராடிக்கிட்டு இருக்கேன், நீங்க உங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு, நாசம் பண்றீங்களே?’ என்று ஏகமாகத் திட்டிவிட்டார். வந்தவர் முகம் சுணங்கிவிட்டது. போய்விட்டார். கால் மணி நேரம் இருக்கும். ‘துரை, அந்தப் பெரியவரைக் கையோட அழைச்சுக்கிட்டு வா!’ என்றார். ஊருக்கு பஸ் ஏற நின்றவரைத் துரத்திப் பிடித்து அழைத்து வந்தோம். ‘ராஜாமணி, என்னை மன்னிச்சுடுய்யா, அங்கிருந்து அவ்வளவு தூரம் பயணம் செஞ்சு உன் கஷ்டத்தைச் சொல்ல வந்தவன்கிட்ட என் கஷ்டத்தைக் கோபமா காட்டிட்டேன்’ என்றார். ‘தலைவா!’ என்று சொல்லி அந்தப் பெரியவர் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டார். கட்டுக்கோப்பை அன்பாலும் உருவாக்க முடியும்!
அமைச்சரவையில் இருப்பவர்களை எப்படிக் கையாள்வார்?அவருக்குச் செல்லக்கூடிய ‘ஃபைல் நோட்’டை வைத்தே ஆளைக் கணக்கிட்டுவிடுவார். நல்ல விஷயம் என்றால், மனதாரப் பாராட்டுவார். மோசம் என்றால், திட்டும் நிச்சயம். எதை வேண்டுமானாலும் சகித்துக்கொள்வார். களத்துக்குப் போகாமல் இருந்தால், பொறுத்துக்கொள்ளவே மாட்டார். ‘ஏசியில உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்க்கணும்னா எதுக்குய்யா அரசியலுக்கு வந்த? மக்களாலதான் நாம இந்த இடத்துல உட்கார்ந்திருக்கோம்கிறதை மறந்துட்டீன்னா, ரொம்ப சீக்கிரமே வந்த இடத்துக்கே போய்டணும்!’ என்று சொல்வார். சாதி, மதக் காழ்ப்போ வெறியோ தென்பட்டால் சகிச்சுக்கவே மாட்டார். தூக்கிடுவார்!
சமூகநீதிக் குரலாக வளர்ந்த திமுக, எந்த அளவுக்கு இன்றைக்கு விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தோருக்குக் கட்சிக்குள் அதிகாரம் அளிக்கிறது?பெரும்பான்மைவாதத்தோடு ஜனநாயகமும், பணத்தோடு தேர்தல் அரசியலும் பிணைக்கப்பட்டிருப்பதால் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பின்தள்ளப்பட்டுவிடுவது எல்லாக் கட்சிகளிலுமே நடக்கிறது. அதனால்தான் எந்த இடஒதுக்கீட்டின் வழி கல்வி, அரசு வேலைவாய்ப்பில் சமூக நீதியைக் கண்டடைந்தோமோ அதே இடஒதுக்கீட்டைக் கட்சிப் பதவிகளுக்குள்ளும் கொண்டுவந்தார் கலைஞர். அதிகாரப் பரவலாக்கத்தை வெறுமனே வார்த்தைகளில் கையாண்டவர் அல்ல அவர். தமிழகத்தின் 32 மாவட்டங்களை திமுக 73 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வகிக்கிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அடுத்த நிலையில் மூன்று துணைச் செயலாளர் பதவிகள். இந்த மூன்று இடங்களில் ஒன்று பெண்களுக்கானது, ஒன்று பட்டியல் இனத்தவருக்கானது. ஒரு இடம் பொது. இப்படி ஒன்றியம், வட்டம், கிளைக் கழகம் வரை ஒதுக்கீடு உண்டு. திமுகவில் பதவியில் இருக்கும் எவரும் அடையாளம் நிமித்தமாக இருக்க மாட்டார்கள்; முழு அதிகாரத்துடன் செயலாற்றுவார்கள் என்பதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.
கட்சி நிர்வாகிகள் கீழே எப்படிச் செயல்படுகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளைப் போல நீங்கள் ‘லெவி முறை’ எதையும் வைத்திருக்கவில்லை. ஒருவகையில், நிதியாதாரமற்ற சூழல் ஊழலுக்கு வழிகோலக்கூடியது இல்லையா?திட்டவட்டமாக இல்லாவிட்டாலும் திமுகவிலும் அப்படி ஒரு நடைமுறை இருக்கத்தான் செய்கிறது. தங்கள் செலவுகளுக்குக் கட்சியினர் அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்றால், நன்கொடை வசூலித்துதான் நடத்துவார்கள். மேலதிகச் செலவை நிர்வாகிகள் பகிர்ந்துகொள்வார்கள். மற்றபடி இந்திய அரசியலில் ஊழல் என்பது கட்சி வரையறைகளுக்கு அப்பாற்பட்டு, வேறொரு விரிவான தளத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.
கட்சி ஒருகாலத்தில் கீழ் நிலையிலிருந்தே சித்தாந்தப் பிடிமானத்துடன் ஆட்களை வளர்த்தெடுத்தது. சின்ன கிராமங்களில்கூட இருந்த படிப்பகங்களை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இன்று கட்சி எதிர்கொள்ளும் பெரிய சவால் - சித்தாந்தத் தளத்தில் அது அடைந்துவரும் வீழ்ச்சி. இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?காலச் சூழலில் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று வெயில் தகித்தது. கட்சியை நிழல் தரும் மரமாகக் கருதியது சமூகம். இன்றைக்குக் கட்சி பெருமரமாகி, சாலை முழுக்க நிழலை நிறைத்திருக்கிறது. நிழல் பழகிப்போனவர்கள் மரத்தின் பயன் என்ன என்று கேட்கிறார்கள். ஆனால், வெயில் அடித்துக்கொண்டுதான் இருக்கிறது. வெயில் இருக்கும் வரை மரத்தின் தேவையும் இருக்கும்.
நவம்பர், 2017
‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து...
நூலை வாங்க தொடர்புக்கு: 7401296562
inbaraj.s@thehindutamil.co.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக