கருணாநிதி சகாப்தம்


உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, நாடு திரும்பிய படையினரை வரவேற்கவும் மறுத்த முதல்வராக இருந்தவர் அவர்.

ஒரு பிரிட்டன், ஒரு பிரான்ஸைக் காட்டிலும் அதிகமான, ஜெர்மனிக்கு இணையான மக்களைக் கொண்ட தமிழ்நாட்டின் நீண்ட கால முதலமைச்சர் கருணாநிதி; நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவரும் அவர். ஐம்பதாண்டு காலம் திமுக எனும் பெரும் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக அவர் இருந்தார். அவர் கட்சி வென்றாலும் தோற்றாலும் அவருக்குத் தோல்வி தராமல் அறுபதாண்டு காலம் சட்ட மன்ற உறுப்பினராக மக்கள் திரும்பத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்தனர். எண்பதாண்டு காலப் பொது வாழ்க்கை. என்றாலும் ஆறடி நிலத்துக்கு, ஆளுங்கட்சியுடன் மரணத்துக்குப் பிறகும் அவர் போராட வேண்டியிருந்தது. காவிரி நதிப் படுகையில் பிறந்த கருணாநிதி, கூவம் நதிக்கரையின் கழிமுகத்தை வந்தடைந்த 95 ஆண்டு பயணத்தில் தூக்கிச் சுமந்த பாரம் மிக்க கனவு தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்திருந்தது.



குளங்களும் மரங்களும் வறுமையும் நிறைந்த, வேறு வசதிகள் ஏதுமற்ற குக்கிராமம் திருக்குவளை. அங்கிருந்துதான் அவ்வளவு பெரிய கனவையும் தன்னுடைய தனிமையில் சுமந்தபடி தூக்கிக்கொண்டு ஓடிவந்தான் அந்தச் சிறுவன். திருக்குவளையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு, திருவாரூருக்கு, தஞ்சாவூருக்கு, சேலத்துக்கு, ஈரோட்டுக்கு, காஞ்சிபுரத்துக்கு, சென்னைக்கு. ஒரே துணையாக இழிவு இருந்தது. சாதி இழிவு, செல்வ இழிவு, ஞான இழிவு. பள்ளிக்கூடத்தில் இடம் மறுக்கப்பட்டபோது குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று தலைமையாசிரியரை அந்தச் சிறுவன் மிரட்ட வேண்டியிருந்தது. ஐந்து முறை முதல்வரான பின்னரும், சாதி இழிவு என்னைத் துரத்துகிறது என்று அந்த முதியவன் ஒரு பேட்டியில் கண்ணீர் விட்டு அழ வேண்டியிருந்தது.

கருணாநிதியின் வாழ்க்கை மஹாத்மாவினுடையது இல்லை; அதனாலேயே அது முக்கியமானதாகிறது. ஒரு சாமானியன் சறுக்கக் கூடிய எல்லா பலவீனங்களிலும் பலமான கருணாநிதி சறுக்கி விழுந்திருந்தார். எல்லா மேன்மைகளுக்கும் இடையே கீழ்மைகளும் அவர் வாழ்வில் இருந்தன. சுயநலம், சூது, ஊழல், குற்றம், குடும்ப வாரிசு அரசியல் என எல்லாச் சேறுகளும் அவர் மீது அப்பியிருந்தன. புனிதம் என்று எதுவும் அங்கில்லை. சடாரென்று நம்மை நோக்கித் திரும்பி, ‘ஏன் இவ்வளவு வேட்டையாடிகள் நிறைந்த, இவ்வளவு வலிகள் மிகுந்த, இவ்வளவு இழிவுகள் சுமத்தப்பட்ட வாழ்க்கை எனக்குத் தரப்பட வேண்டும்?’ என்று அவர் கேட்டால், பதில் சொல்ல நமக்கும் ஒரு வார்த்தையும் கிடைக்கப்போவதில்லை.

பேராளுமை ஒருவரைக் கண்டடைய இந்திய மனத்துக்கு மூன்று கண்ணாடிகள் வேண்டும். உயர் சாதி அல்லது உயர் வர்க்கத்தில் அந்த ஆளுமை பிறக்க வேண்டும். வெள்ளை நிறத் தோல் அல்லது நுனி நாக்கு ஆங்கிலம் வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு மேதைகளின் அங்கீகாரம் வேண்டும். மூன்றும் இல்லாவிடில் துறவிக்கோலம் பூண வேண்டும். அப்போதுதான் இந்திய மனதின் கண் திறக்கும். முன்னோடிகள் பெரியார், அண்ணாவுக்குக் குறைந்தபட்சம் மூன்றில் ஒன்று இருந்தது. உயர் வர்க்கத்தில் பிறந்தவர் பெரியார். ஆங்கிலத்தில் கரை கண்டவர் அண்ணா. மூன்றுமே இல்லாத கருணாநிதியை ஒரு சராசரி இந்திய மனதால் அடையாளம் காணவோ, அங்கீகரிக்கவோ முடியவில்லை. கருணாநிதி தன் பேராளுமையை நிரூபிக்கக் கடைசி வரை போராடினார் - இந்திய மனமோ கடைசி வரை அவருடைய இழிவுகளின் வழி அவரை அடையாளம் காண முற்பட்டுக்கொண்டிருந்தது.

இழிவு துரத்தியது. திரையுலகில் ஒரு காலகட்டத்தையே கட்டியாண்ட கருணாநிதி, அரசியல் பதவிகளுக்கெல்லாம் வருவதற்கு முன்பே சென்னை கோபாலபுரத்தில் சொந்த வீடும் காரும் வாங்கி செல்வந்தர் ஆகியிருந்தார் என்றாலும், திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்து அரசியல் வழியாகவே கருணாநிதி சம்பாதித்தார் என்றே கதை பேசினார்கள். முதியவர் நேருவின் காதல்களை ப்ளே பாய் சாகசங்களாகப் பேசி மகிழ்ந்தவர்கள் கருணாநிதியின் திருமண உறவுகளைக் கொச்சைப்படுத்தினார்கள். வரலாற்றில் கருணாநிதி தன் எல்லாப் பங்களிப்புகளையும் வரிசைப்படுத்தினாலும், ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியின் வாழ்க்கையை வரையறுப்பதுபோல ‘கடினமான உழைப்பாளி என்று கருணாநிதியைச் சொல்லலாம்’ என்று முடித்துக்கொள்ள முற்பட்டார்கள்.

வரலாற்றில் கருணாநிதிக்கு உரிய இடத்தை அளிப்பது என்கிற தார்மிகத்தை ஒரு விமர்சகன் அடைவதும் இந்தியாவில் சுலபம் இல்லை. அதற்கு ஒரு விமர்சகன் எங்கோ தன்னை அறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சுயஅறுப்பு. சாதிய, மேட்டிமைய, தூய்மைய அகங்காரத்திலிருந்து வெளியேறாத ஒரு மனதால் கருணாநிதியை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஒரு தீண்டாமை மனம் நிராகரிப்புக்கான காரணங்களை உற்பத்திசெய்துகொண்டே இருக்கும். என்னைப் பொறுத்தளவில் அரசியலில் கருணாநிதி ஒரு தலித். அதனால்தான் தன்னளவில் அழுத்தத்தை உணர்ந்தவர்கள் - அவர்கள் எந்தக் கருத்தியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருந்தாலும் - கருணாநிதியை ஓர் உந்துசக்தியாகக் கண்டார்கள். அதிகாலையில் எழுந்தால், அடுக்குமொழியில் பேசினால், கவித்துவமாக எழுதினால் தங்களாலும் தடைகளை உடைத்துக்கொண்டு அரசியல் களத்தில் மேலே வர முடியும் என்று நம்பினார்கள்.

கருணாநிதி மறைந்த அன்று இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளிவைக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாத ஒரு தலைவரின் மறைவுக்கு இந்திய அரசு இப்படியான மரியாதையை அளித்தது கருணாநிதிக்கே முதல் முறை. வாய்ப்பிருந்தும் ஏனைய பல மாநிலத் தலைவர்களைப் போல தன்னை டெல்லி அரசியலில் கரைத்துக்கொண்டவரில்லை கருணாநிதி. சென்னையில் அமர்ந்தபடியே டெல்லி தர்பாரைத் தீர்மானிப்பதில் மாநிலத் தலைவர்களுக்கான பங்குச் சூழலை உருவாக்கினார். ஏழு பிரதமர்களின் ஆட்சியோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் அவருக்குப் பங்கிருந்தது.

பிரிட்டிஷ் காலனியாதிக்க இந்தியாவில் திராவிட நாடு வேட்கையோடு அரசியல் களம் புகுந்த பெரியார், அண்ணா வழிவந்தவர் கருணாநிதி. இந்திய சுதந்திரத்தோடு தனி நாடு கனவு இற்றுப்போனபோது தமிழ் மக்களை ரத்தக்களறியில் திருப்பிவிடாமல் இந்திய ஒன்றியம் எனும் அமைப்புக்குள் சாத்வீக வழியில் தேசிய இனங்கள் தம் உரிமைகள், அதிகாரங்களை வென்றெடுக்கும் வழிமுறையைக் கண்டதும், தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை விரிவாகப் பயிற்றுவித்ததும் திராவிட இயக்கத்தின் முக்கியமான சாதனை. அவர்கள் உருவாக்கிய ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ முழக்கமானது இந்தியா என்கிற சிந்தனையையும் விஸ்தரிப்பதானது. நாட்டின் பாதுகாப்பு நீங்கலாக எல்லா அதிகாரங்களையும் மாநிலங்கள் சிந்திப்போம் என்ற அண்ணாவின் கனவு பல விஷயங்களில் பிற்பாடு உருவான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடத்தக்கது.

அண்ணா வழியில், மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருணாநிதி, நாட்டிலேயே முதல் முறையாக மாநில சுயாட்சியை வலியுறுத்தி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மாநிலங்களுக்கு என்று கொடி கேட்டவர், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிக் கொடியையும் முன்மொழிந்தார். கூட்டாட்சிக்கான பாதைபோல கூட்டணிகளைக் கையாண்டவர் இந்தியாவின் கூட்டணி யுகத்துக்கு வித்திட்டவர்களில் ஒருவரானார்.

நவீன தமிழ்நாட்டின் சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், தொழிற்பேட்டைகள், அணைகள், சமத்துவபுரங்கள், நூலகங்கள் என்று கட்டுமானங்கள் நெடுகிலும் தன்னையும் நிறைத்துக்கொண்டார் கருணாநிதி. அவர் முன்னெடுத்த சமூகநீதி ஆட்சிக் கொள்கை அதுவரை அரசுப் பணியைப் பார்த்திராத ஒரு பெரும் கூட்டத்தை அரசு அலுவலகங்களுக்குள் நிறைத்தது. வேளாண் துறையை ஊக்குவித்தபடி அவர் உருவாக்கிய நவீன தொழில் கொள்கையானது, மாநிலத்தின் வளர்ச்சியில் எல்லா சமூகங்களுக்கும் இடம்கொடுத்தது. அரசிடமிருந்து அடித்தட்டு மக்கள் அந்நியமாகிவிடாமல் இருக்க அவர் அறிமுகப்படுத்திய சமூகநலத் திட்டங்கள் உதவின. சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட தமிழ்க் கனவுக்கான குறியீடாக கவி வள்ளுவரை அவர் கட்டமைத்தார்.

சட்ட மன்றத்தில் பேசியதைத் தொகுத்தால் மட்டுமே ஒன்றரை லட்சம் பக்கங்கள் வரக்கூடிய அளவுக்கு உரையாற்றியவர், பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்தவர் கருணாநிதி. கவிஞர், கதாசிரியர், பத்திரிகையாளர், திரைக்கலைஞர் என்று ஏராளமான அறிவடையாளங்களால் தன்னை நிறைத்துக்கொண்ட கருணாநிதி, தன்னுடைய கட்சியின் தளபதிகளாக வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் அடித்தளத்திலிருந்து வந்தவர்கள் - அவர்களில் பலர் அடாவடிகளுக்குப் பெயர் போனவர்கள். தலைநகர் சென்னையில் ஒரு கபாலி இருந்தார். பின்னாளில் கபாலியின் மகன் மருத்துவர் ஆனார். வேறு பல கபாலிகளின் பிள்ளைகள் அரசின் ஒப்பந்ததாரர்கள் ஆனார்கள். குற்றச் சாயல் கொண்ட செல்வந்தர்கள் ஆனார்கள். அவர்களின் பிள்ளைகளும் படித்தார்கள். எப்படியும் குடும்பங்களின் தோற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளில் மாறியது. சமூகத்தின் ஒப்பனை மதிப்பீடுகளுக்காக கபாலிகளை கபாலிகளாகவே ஒதுக்கிவைத்து, அவர்கள் பிள்ளைகளையும் கபாலிகளாகத் தொடரவிடுவதா அல்லது கபாலிகளை அரசியலதிகாரத்துக்குள் அணைத்து, கபாலிகளின் சந்ததி அடையாளம் உருமாற வழிவகுப்பதா என்ற கேள்வியை உன்னத அரசியல் பேசியோர் முன் தூக்கி வீசினார் கருணாநிதி. கருணாநிதியின் முக்கியமான அரசியல் இது.

அராஜகரான கருணாநிதிக்கு ஜனநாயகத்தின் மீது அபாரமான பிடிமானம் இருந்தது. சட்ட மன்றக் கூட்டங்களில் பங்கேற்பதிலும் விவாதிப்பதிலும் பெரிய ஆர்வத்தை வெளிப்படுத்தியவர் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளித்தார். சுதந்திர இந்தியாவின் கருப்புக் காலகட்டமான நெருக்கடிநிலை நாட்களில் தன் ஆட்சியைப் பறிகொடுத்து, அடக்குமுறைக்கு எதிராக நின்றார். கட்சியையே கலைக்கும் நிர்ப்பந்தமும் அந்நாட்களில் அவருக்கு வந்தது. உயிரே போனாலும் கப்பல் தலைவன் கப்பலைச் செலுத்தியபடியே மடிவான் என்றார்.

திமுகவுக்குள் கருணாநிதியின் ஜனநாயகம் முரண்பாடுகளில் நிறைந்திருந்தது. உட்கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து நடத்தினார். விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு கட்சிப் பதவிகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். எந்த ஒரு சமூகமும் பெரிதாகத் தலை தூக்கிவிடாதபடியும் அதேசமயம் எல்லாச் சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படியும் செய்தார். எனினும், அண்ணா காலத்தில் கட்சிக்குள் விரிந்து பரவியிருந்த ஜனநாயகத்தின் எல்லை கருணாநிதிக்கு உட்பட்டதாகச் சுருங்கியது. சித்தாந்த தளத்தில் கட்சியால் முன்னகர முடியவில்லை. அறிவார்த்த தளத்தில் கட்சி மேலும் சரிந்தது. இரண்டாம், மூன்றாம், நான்காம் வரிசைத் தலைவர்கள் அணிவரிசையில் பெரிய பள்ளம் விழுந்தது.

எந்தக் குடும்பம் கருணாநிதி எல்லா உயரங்களையும் அடைய கட்சிக்குத் துணை நின்றதோ அதே குடும்பம் அவருடைய எல்லா புகழும் கீழே சரியவும் கட்சி சீரழியவும் காரணமாக இருந்தது. அவருடைய கடைசி ஆட்சிக் காலகட்டத்தில் நடந்த அவர் புகழ் பாடும் விழாக்களும் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவில் அவர் உட்கார்ந்திருந்த தோரணையும் தன்னை அவர் ஒரு ராஜராஜ சோழனாகப் உருமாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வியை உண்டாக்கியது. கட்சியைத் தோல்விகள் முற்றுகையிட்டன. புதிதாக வந்திருந்த வரலாறு தெரியாத ஒரு தலைமுறைக்கு அவர் வெறும் காட்சிப்பொருளாகவும் கேலிப்பொருளாகவும்கூட மாறியிருந்தார்.

இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு தந்தைமை ஸ்தானத்தை மானசீகமாக தமிழ்ச் சமூகம் கருணாநிதிக்குக் கொடுத்திருந்தது. திமுக தலைவர் ஆகி அரை நூற்றாண்டை அவர் தொட்ட நள்ளிரவு. பேச்சுமூச்சிழந்த நிலையில் அவரை வீட்டிலிருந்து தூக்கிப்போட்டுக்கொண்டு ஓடிவருகிறார்கள். அவருடைய வீடிருக்கிற கோபாலபுரம் பகுதியே பதற்றத்தில் நிற்கிறது. பெரும் கூட்டம். வாயைச் சேலைத் தலைப்பால் பொத்தியபடி நிற்கும் பெண்கள், குழந்தைகளைத் தோளின் மீது தூக்கி உட்காரவைத்துக்கொண்டபடி எக்கி நிற்கும் ஆண்கள், கண்கள் இடுங்கிய வயசாளிகள், பெரிய இளைஞர் கூட்டம், பர்தா அணிந்த இளம் பெண்கள் - எல்லோர் முகங்களிலும் பதைபதைப்பு. பேச்சுமூச்சின்றி வெளியே கொண்டுவரப்படும் அவரைப் பார்க்கிறார்கள். அந்தக் கணம் வரை உச்ச அழுத்தத்திலிருந்த அன்பு நெஞ்சுக்கூட்டை உடைத்துக்கொண்டுவரும் அழுகையாகப் பீறிடுகிறது: ‘‘ஐயோ என் தலைவா...’’

கருணாநிதி மறைந்த அன்று தமிழ்நாடு உறைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றிப் பேச ஒரு கதை இருந்தது. நல்லதோ, கெட்டதோ அவருடைய வாழ்க்கை, அவருடைய அரசியல் நுழையாத வீடு என்று ஒன்று தமிழ்நாட்டில் அவர் காலத்தில் இல்லை.

காவிய வாழ்க்கை. நண்பர்களிடம் காசு வசூலித்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். தெருக்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். ஊர் ஊராக அலைந்து நாடகம் போட்டார். ‘அம்பாள் என்றைக்கடா பேசினாள்?’ என்று அதிரவைக்கும்படி கேள்வி கேட்டார். காதலித்தார். சுயமரியாதைக்காரனுக்குப் பெண் கிடையாது என்றார்கள் பெண் வீட்டார். பெற்றோர் தேர்ந்தெடுத்த வேறொரு பெண்ணை மணந்தார். திருமணம் முடித்த அடுத்த வாரமே கூட்டங்கள் பேச வெளியூர் போனார். நான்கே வருடங்களில் மனைவியைப் பறிகொடுத்தார். அடுத்தது இன்னொரு கல்யாணம். போராட்டங்கள். சிறை. அப்புறம் இன்னொரு காதல். கல்யாணம். நடுநடுவே சினிமா. ஆட்சியதிகாரம். இடையில் தலைவனைப் பறிகொடுத்து நண்பனின் உதவியோடு தலைவரானார். அடுத்து அதே நண்பனை முரண்பாட்டில் கட்சியிலிருந்து நீக்கினார். நண்பன் அரசியல் போட்டியாளரானார்; மரணம் வரை கருணாநிதியால் வெல்ல முடியாதவரானார். நண்பனின் மரணத்துக்குப் பின்னும் யுத்தம் தொடர்கிறது, நண்பனின் அரசியல் வாரிசுடன். இம்முறை மாறி மாறி வெல்கிறார்கள், தோற்கிறார்கள். சண்டமாருதம் செய்துகொண்டிருந்த அந்தப் பெண் யாரும் எதிர்பாராத ஒரு நாளில் காலமாகிறார். கருணாநிதி அதே காலகட்டத்தில் மௌனமாகிறார். காலமெல்லாம் பேசிக்கொண்டிருந்தவரால் அதற்குப் பிறகு சாகும் வரை பேச முடியவே இல்லை.

காவிய வாழ்க்கை. கருணாநிதிக்கு மட்டும் இல்லை; அவரோடு சேர்த்து மெரினாவில் உடல் அடங்கியிருக்கும் அந்த நால்வரின் வாழ்க்கையுமே அப்படித்தான் இருந்தது. ஒரு நாடகாசிரியன், ஒரு வசனகர்த்தா, ஒரு நடிகன், ஒரு நடிகை. நான்கு பேரும் மாபெரும் நாடகங்களை நடத்தியவர்கள். அந்த நாடகங்களுக்குள்ளேயே அவர்களுடைய வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டவர்கள். பல சமயங்களில் அவர்களுடைய வாழ்க்கையே நாடகமாக விரிந்தது. பார்வையாளர்களாக இருந்த மக்களால் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. பார்வையாளர்களும் நாடகத்தின் பாத்திரங்களாக மாறினார்கள். தமிழ் எல்லோரையும் இணைத்திருந்தது. கருணாநிதியோடு சேர்த்து ஒரு காலகட்டம் மெரினாவில் உறைந்துகொண்டது. ஒரு சகாப்தம் மண்ணுக்குள் தன்னை மூடிக்கொண்டது!

ஆகஸ்ட் 2018, ‘இந்து தமிழ்’

18 கருத்துகள்:

  1. கருணாநிதியைப் பற்றிய மிக நேர்மையான அலசல். அவருக்கான உண்மையான அஞ்சலியும் கூட.

    பதிலளிநீக்கு
  2. அருமை... கருணாநிதியின் உயர்வையும், தாழ்வையும் அலங்காரமில்லாத வார்த்தைகளால் மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் சமஸ்!

    பதிலளிநீக்கு
  3. நாடகாசிரியர்,வசனகர்த்தா, நடிகன்,நடிகை - மிகச் சரி. ஆனால் அந்த வசனகர்த்தா செய்த சமூக புரட்சியை மற்றவர் செய்ய முடியாமல் போனதற்கும் மிகப் பெரிய காரணமுண்டு....

    பதிலளிநீக்கு
  4. உண்மை
    இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள

    பதிலளிநீக்கு
  5. "கருணாநிதிக்கு மட்டும் இல்லை; அவரோடு சேர்த்து மெரினாவில் உடல் அடங்கியிருக்கும் அந்த நால்வரின் வாழ்க்கையுமே அப்படித்தான் இருந்தது. ஒரு நாடகாசிரியன், ஒரு வசனகர்த்தா, ஒரு நடிகன், ஒரு நடிகை. நான்கு பேரும் மாபெரும் நாடகங்களை நடத்தியவர்கள். அந்த நாடகங்களுக்குள்ளேயே அவர்களுடைய வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டவர்கள். பல சமயங்களில் அவர்களுடைய வாழ்க்கையே நாடகமாக விரிந்தது. "


    அருமை... அருமை..

    பதிலளிநீக்கு
  6. சமீபத்தில் கருணாநிதி பற்றி சில பதிவுகளுக்கு சரியாக பதிலளிக்க முனைந்தாலும், அனைத்தயும் புரிய வைக்க தேவையான வரிகளை தேடி சோர்ந்து போய்விட்டிருந்தேன். சமஸின் இந்த கட்டுரை எனக்கு உடுக்கை இழந்தவன் கை. நன்றி. இப்போதைய தேவையை இதை விட எப்படி சொல்லிவிட முடியும்?

    பதிலளிநீக்கு
  7. கலைஞரின் 94 வருட வாழ்க்கையை அதன் சவால்களை, சறுக்கல்களை, சாதனைகளை, அவர் எதிர்கொண்ட காழ்ப்புகளை அருமையாக தீட்டியுள்ளீர்கள். மிக சிறப்பான எழுத்து. கலைஞரைப் பற்றி அறியாதவர்களுக்கு என்னுடைய ஒரு முக்கியமான பரிந்துரையாக இக்கட்டுரை இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. எங்கள் வீடும் அதில் ஒன்று. மன்னார்குடி சித்தமல்லியில் அப்பா இறந்துபோனபோது எனக்கு வயது 1.5. கருணாநிதி கொடுத்த பென்ஷன் பணம் அம்மாவின் வாழ்வாதாரமாக கடந்த 40 வருங்களாக....தஞ்சை ஓசானம் முதியோர் இல்லத்தில் அம்மாவின் இறுதி காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது....

    பதிலளிநீக்கு
  9. ஊழலையும்,மதுவிலக்கு ரத்தையும், அவசரனிலை காலத்தில் பதவி பறிப்புக்கு முன், பின் என இரு வேறு நிலையை எடுதார். பதவிக்காக எதையும் விட்டுக் கொடுபா அது ஈழத்தமிழர் வாழ்வாயினும், பிராமண இந்து எதிர்பு கொள்கை ஆயினும். இவைகளை சொல்லாமல் இவரின் கட்டுரை எப்படி முழுமையாகும்?

    பதிலளிநீக்கு
  10. ஊழலையும்,மதுவிலக்கு ரத்தையும், அவசரனிலை காலத்தில் பதவி பறிப்புக்கு முன், பின் என இரு வேறு நிலையை எடுதார். பதவிக்காக எதையும் விட்டுக் கொடுபா அது ஈழத்தமிழர் வாழ்வாயினும், பிராமண இந்து எதிர்பு கொள்கை ஆயினும். இவைகளை சொல்லாமல் இவரின் கட்டுரை எப்படி முழுமையாகும்?

    பதிலளிநீக்கு
  11. "தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவில் அவர் உட்கார்ந்திருந்த தோரணையும் தன்னை அவர் ஒரு ராஜராஜ சோழனாகப் உருமாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வியை உண்டாக்கியது"
    "சுயஅறுப்பு. சாதிய, மேட்டிமைய, தூய்மைய அகங்காரத்திலிருந்து வெளியேறாத ஒரு மனதால் கருணாநிதியை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது"
    I think these two statements are contradicting each other.. I don't understand what was the problem that if he is thinking that he is RajaRaja Chozhan.. Isn't it coming from Castiest mentality?
    You think that he should always be polite in nature?

    பதிலளிநீக்கு
  12. Thiru karunanidhi avarkalai patriyum avarin vaalkai matrum sadhanaikal patriyum thelivaga puriyum padi sollirukirar hates off

    பதிலளிநீக்கு
  13. காலத்திற்கேற்ற மிக முக்கியமான கட்டுரை.மக்களுக்குத் தேவைப்படுகிறதோ இல்லையோ இன்றைய திமுக என்ற கட்சிக்கு தன்னளவில் மாற வேண்டும் என்று நினைத்தால் உங்கள் விமர்சனம் அவர்களுக்கு உதவும்....

    பதிலளிநீக்கு