விடியலுக்கு இன்னும் வெகுநேரம் இருந்த இரவிலேயே அங்கு வந்தடைந்திருந்தோம். கடும்பனி கார் ஜன்னலின் கண்ணாடி மீது நுங்கு தசைபோல் படர்ந்திருந்தது. அதிகாலையில் புறப்பட்டு இரவில் திரும்பிவிடும் வகையில் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார் ஹெலன். நெடுஞ்சாலையை ஒட்டியும், பிரதான சாலையிலிருந்து பிரிந்தோடி, ஊருக்குள் சுற்றி இன்னொரு பிரதான சாலையில் போய்ச் சேரும் வகையிலும் அமைந்திருந்த கிராமங்களாகத் தேர்ந்தெடுத்து இந்தப் பயணத்தில் அவர் கோத்திருந்தார். வெளியே இருந்த பொழுதுக்கும், கடிகாரம் காட்டும் நேரத்துக்குமான தொடர்புகள் முற்றிலுமாக அறுபட்டிருப்பதாகத் தோன்றியது. கார் கண்ணாடிக்கு வெளியே சாலைக்கு மேலே கொட்டிக்கிடந்த நட்சத்திரங்கள் மத்தியில் வானம் தன்னை உள்ளடக்கிக்கொண்டிருந்தது. அந்த இருட்டிலும் கிராமங்களின் சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடங்களில் அங்காடிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் என்று அனேகமாக எல்லா வசதிகளும் தென்பட்டன. ஊருக்குள் பிரிந்த சாலை நோக்கி காரை ஓட்டலானார் ஹெலன். ஜன்னல் கண்ணாடியைக் கொஞ்சம் கீழ் இறக்கினேன். அடர் கருநீலத்தில் இருபுறங்களிலும் விரவிக்கிடந்த வயல்களில், அணிவகுப்பில் நிற்கும் சிப்பாய்களைப் போல அலையலையாகக் குத்திட்டு நின்றிருந்தன தானியக் கதிர்கள். இடைவெளி விட்டுவிட்டு தூரத்தில் விளக்கெரியும் பண்ணை வீடுகள். புரண்டுகொண்டிருந்த கிராமத்தை விளக்கொளி வழியே பார்த்தபடியிருந்தேன்.
“எல்லாக் கிராமங்களுமே இப்படிதான் இருக்குமா ஹெலன்?”
“கிட்டத்தட்ட. கிராமங்களைப் பழைய இயல்புக்குக் கொண்டுவருவது எப்படி என்பதுதான் யாருக்கும் பிடிபடவில்லை. இது கொஞ்சம் விசித்திரம். கிராமங்களில் ஆட்கள் இருக்கிறார்கள்; சொல்லப்போனால், இப்போது வருடந்தோறும் கிராமங்களில் குடியேறுவோர் எண்ணிக்கை மெல்லக் கூடுகிறது. விவசாயிகளுக்கு அரசாங்கம் நிறைய மானியமும் கொடுக்கிறது. அங்காடிகள், மருத்துவமனைகள், வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள் இப்படியான அத்தியாவசிய வசதிகள் இருக்கின்றன. இருந்தும் கிராமங்கள் உயிர்ப்பாக இல்லை; அவை செத்துக்கொண்டிருக்கின்றன.”
“எனக்குப் புரியவில்லை. கிராமங்களில் புதிதாகக் குடியேறுவோர் என்றால், அவர்கள் யார்?”
“நகரங்களில் குடியிருக்க வாய்ப்பில்லாதவர்கள். வசதிக் குறைவு காரணமாக அவர்கள் இங்கே நகர்கிறார்கள். அவர்களுக்கு பிழைப்பு இங்கே இல்லை. நகரத்திலுள்ள நிறுவனத்துக்குத் தினமும் போய் வந்தபடியோ, வீட்டிலிருந்தபடி கணினி வழியாகவோ வேலை செய்வார்கள். இல்லையென்றால் பணிஓய்வுபெற்றவர்கள். கிராமத்தோடும், இங்குள்ள பூர்வக்குடிகளோடும் அவர்கள் எந்தத் தொடர்பையும் உருவாக்கிக்கொள்வதில்லை. அங்காடிகள், பெட்ரோல் நிலையங்களுக்கு வந்து செல்வதுதான் கிராமத்தோடு அதிகபட்சம் அவர்களுக்குள்ள உறவு. பிள்ளைகளைக்கூட நகரங்களிலேயே படிக்கவைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், வீட்டுச் சாமான்களைக்கூட பலர் நகரங்களிலேயே வாங்கி வந்துவிடுகிறார்கள். போன வருஷத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஐயாயிரம் கிராமப்புற அங்காடிகள் மூடப்பட்டிருக்கின்றன. பள்ளிக்கூடங்கள் பத்து மாணவர்களுக்காகவும் இருபது மாணவர்களுக்காகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.”
“பூர்வக்குடிகள், விவசாயிகள்?”
“பூர்வக்குடிகளின் அடுத்தடுத்த தலைமுறையினர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துவிடுகிறார்கள். கிராமங்கள் முதியவர்களுக்கானதாகிவிடுகிறது. விவசாயிகள் மட்டுமே இங்கேயே இருப்பவர்கள். வேளாண்மை முழுக்கவும் இயந்திரமயமாகிவிட்ட சூழலில், அவர்களுடைய எண்ணிகையும் குறைவு. பிரிட்டன் மொத்த மக்கள்தொகையில் வெறும் ஒன்றரை சதவீதத்தினர் விவசாயிகள். வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் ஐரோப்பாவிலிருந்து இங்கு பிழைக்க வந்திருப்பவர்கள். அவர்கள் நகர்ந்துகொண்டேயிருப்பார்கள்.”
“எந்த நாடாக இருந்தாலும் சரி, கிராமங்கள் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்றால், விவசாயம் உயிர்ப்போடு இருக்க வேண்டும். இங்கே விவசாயம் எப்படி இருக்கிறது?”
“நஷ்டத்தில் இல்லை. லாபகரமாகவும் இல்லை. சரியாகச் சொல்வதானால், பிரிட்டன் விவசாயிகளுக்கு இன்றைக்கு வருமானமாகக் கிடைப்பதில் சரிபாதிக்கும் மேலானது மானியம். அந்த ஆக்ஸிஜனில்தான் விவசாயம் இங்கே உயிரோடு இருக்கிறது.”
“இந்தியாபோல் சிறு விவசாயிகள் கையில் அல்லாமல், இங்கே விவசாயம் முழுக்கப் பெருவிவசாயிகள் கைகளில்தான் இருக்கிறது, இல்லையா?”
“ஆமாம், மொத்தமாகவே சுமார் இரண்டு லட்சம் பேரிடம்தான் மொத்த விவசாய நிலமும் இருக்கிறது. சராசரியாக ஒவ்வொருவர் கையிலும் இருபது ஹெக்டேர் முதல் நூறு ஹெக்டேர் வரை நிலம் இருக்கும். பிரிட்டனின் மொத்த நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. கிழக்குப் பகுதியில் உணவு தானியச் சாகுபடி அதிகம். தென் மேற்கில் கால்நடை வளர்ப்பு அதிகம். பெரும்பான்மை இங்கே கோதுமைச் சாகுபடிதான். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான் என்றாலும், விவசாயத்திலிருந்து விரியும் உணவுத் துறை பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரிட்டன் இன்னமும் ஆதிக்கம் செலுத்தும் துறை இது. மோட்டார் கார், விமானங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் கூட்டு மதிப்பைவிட உணவுத் துறை நிறுவனங்களின் மதிப்பு அதிகம். வருஷத்துக்குக் கிட்டத்தட்ட மூவாயிரம் கோடி பவுண்டுகளை பிரிட்டன் பொருளாதாரத்துக்கு உணவுத் துறை வழங்குகிறது. அதேபோல, ஏழில் ஒருவருக்கு வேலையும் அளிக்கிறது. அதனால் விவசாயத்தைத் தனித்துப் பார்க்கும் பார்வை இங்கே இல்லை.”
“விவசாயிகளுக்கான மானியங்களை நீக்க வேண்டும்; எல்லாத் துறைகளையும்போல விவசாயத் துறையையும் கையாள வேண்டும் என்ற குரல்களை இங்கே மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?”
“ஏனைய துறைகளைப் போன்றதல்ல விவசாயம் என்ற அறிவு பிரிட்டனுக்கு உண்டு. அதனால் உலகெங்கும் ஒலிக்கும் இத்தகைய குரல்களுக்கு இங்கே பெரிய மதிப்பு கிடையாது. ஏனென்றால், உணவு தானியத் தயாரிப்பு என்பது பிற உற்பத்தித் துறைகளைப் போன்றதல்ல. பருவநிலை மாறுதல்களும் மக்கள்தொகைப் பெருக்கமும் உணவு தானியத்துக்கான தேவையை அதிகப்படுத்திவருகின்றன. விவசாயம் மூலம் லாபம் கிடைக்காவிட்டால் விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியாது. கூட்டம் கூட்டமாக விவசாயிகள் நிலங்களைத் தரிசாக போட்டுவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். இன்றைக்கே ஒரு பிரிட்டன் விவசாயியின் சராசரி வயது என்ன தெரியுமா? 60. புதிய தலைமுறையினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. வெளியிலிருந்து ஆட்கள் வருவது நின்றால், இன்றைக்கே பிரிட்டன் விவசாயத் துறை ஸ்தம்பித்துவிடும் நிலையில்தான் இருக்கிறது.”
கார் ஒரு மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. பொழுது புலர்ந்திருந்தது. பெரிய புல் சரிவில் ஏராளமான ஆடுகளை ஓட்டிக்கொண்டு மூன்று பேர் சென்றார்கள். கீழே இறங்கி கொஞ்சம் நடக்கலாம் என்று தோன்றியது. காரை நிறுத்திவிட்டு நடந்தோம். வெயில் இதமாக இறங்கிக்கொண்டிருந்தது. எங்கும் பசுமை. தண்ணீருக்கு இங்கே குறைவே இல்லை. ஊருக்குள் நுழைந்த வீதி ஒன்று கடைத்தெருவுக்கு இருவரையும் கொண்டுசென்றது. சின்ன காபி கடை. ஒரு மூதாட்டி இருந்தார். காபி கேட்டோம். எங்களைப் பற்றி விசாரித்தவர் காபியோடு சேர்த்து இரண்டு ரொட்டித்துண்டுகளையும் கொடுத்தார். அதற்கு பணம் வேண்டாம் என்றார். உள்ளூர் தயாரிப்பாம். வாயில் வைத்த மாத்திரத்தில் பொறுபொறு ரொட்டிகள் நாவில் கரைந்தன. ரொட்டிகளுக்கும் சேர்த்துப் பணம் கொடுத்துவிட்டு “இது ரொட்டிக்கான எங்கள் மரியாதை” என்றேன். மூதாட்டி காபிக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்ச பணத்தைக் கொடுத்துவிட்டார். “அடுத்த முறை இந்தப் பகுதியைக் கடந்தால் இந்த ரொட்டிகளின் சுவை உங்களை இங்கே அழைத்து வரட்டும்” என்றார். மீண்டும் நாங்கள் காரை நிறுத்தியிருந்த புல்சரிவு நோக்கி நடந்தோம். வெறித்துக்கிடந்த வீதிகளில் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை. எதிர்த்திசையில் வந்த ஒரு முதியவரும் மூதாட்டியும் எங்களைப் பார்த்ததும் நிதானித்தார்கள். அவர்கள் ஏதோ பேச விரும்புவதுபோல இருந்தது. நான் பெரியவரை வணங்கினேன். அவரும் வணங்கினார். நடைமேடையில் நின்றபடி கூர்ந்து பார்த்தவர் புன்னகைத்தபடி என் முதுகில் தட்டிக்கொடுத்தார். மூதாட்டியும் சிரித்தார். பின்னர் அவர்கள் எங்களைக் கடந்தார்கள். ஹெலன் அவர்களைத் திரும்பிப் பார்த்தபடி நின்றுவிட்டு, பெருமூச்சு விட்டபடி நடந்தார்.
“தொழில் புரட்சியின் தொடக்கக் காலங்களிலேயே விவசாயத்திலிருந்து பெருந்தொகை மக்கள் இங்கே வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். 1850 வாக்கிலேயே பிரிட்டனில் ஐந்தில் ஒருவர்தான் விவசாயத்தில் இருந்திருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் உலகிலேயே மிகக் குறைவான விகிதாச்சாரம் இது. விவசாயத்திலிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு மக்களை வெளியேற்றி ஏனைய துறைகளை நோக்கி நகர்த்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த நாடு வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இது.”
“இன்றைக்கும் அந்த நம்பிக்கையைப் பேசுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?”
“உண்மைதான், இருக்கத்தான் செய்கிறார்கள். பிரிட்டனுக்கே எப்போது விவசாயத்தை ஏனைய துறைகளோடு வரிசைப்படுத்திப் பார்க்கக் கூடாது என்ற பாடம் கிடைத்தது என்றால், இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு! இரண்டு உலகப் போர்ச் சூழல்களிலும், கடுமையான உணவுத் தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட்டது. ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது. அதிலும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஐந்தில் ஒரு பங்காக உணவு இறக்குமதி குறைந்தபோதுதான், உணவுக்கு வெளிநாடுகளை நம்புவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை பிரிட்டன் ஆட்சியாளர்கள் தீவிரமாக உணர்ந்தார்கள். வீடுகளிலும் பொதுப் பூங்காக்களிலும் காய்கறி, பழச் சாகுபடிக்கு மக்களை ஊக்குவிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்ட நாட்கள் அவை. விவசாயி என்பவர் உணவுப் பாதுகாப்பாளர் என்று அப்போது உணர்ந்த பிறகுதான் அடுத்தடுத்து வேளாண் பாதுகாப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண் விளைபொருட்களுக்கு நிச்சயமான விலை, சந்தை ஆகியவை உறுதிசெய்யப்பட்டன. நிலவுடைமைச் சட்டத்தின் வழி விவசாய நிலங்களிலிருந்து விவசாயிகளை யாரும் வெளியேற்ற முடியாத சட்டப் பாதுகாப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும், விவசாயம் என்னவாகுமோ எனும் பயம் பொதுச் சமூகத்துக்கு இன்றும் இருக்கிறது. பருவநிலை மாறுபாடு காரணமாக சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம் குறைவு என்பதால், புதிதாக விவசாயம் நோக்கி வருபவர்கள் குறைவு. ‘பிரெக்ஸிட்’ விவாதங்களிலும்கூட ஐரோப்பாவிலிருந்து வேலைக்கு ஆட்கள் வருவது தடைபட்டால், பிரிட்டன் விவசாயம் என்னவாகும் என்பது அதிகம் விவாதிக்கப்பட்டது.”
நாங்கள் ஓரிடத்தில் உட்கார்ந்தோம்.
“அரசியல் தளத்தில் இதெல்லாம் எத்தகைய தாக்கங்களை உண்டாக்கியிருக்கிறது?”
“அதிக அசமத்துவம் நிலவும் பகுதிகளில் கிராமப்புறமே முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக தென்மேற்கு பிரிட்டனில் கடுமையான ஏற்றத்தாழ்வு இருக்கிறது; அங்கே வருமானம் மிகக் குறைவு. தொழிலாளர் கட்சி இப்போது இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறது. கிராமப்புறத் தொழிலாளர்களின் ஊதியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கலைக்கப்பட்ட வேளாண் ஊதிய வாரியத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொழிலாளர் கட்சி பேசுவதற்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது.”
“ஹெலன், நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை. விவசாயத்தின் வீழ்ச்சியும், கிராமங்களின் வீழ்ச்சியும் பிரிட்டன் இதுவரை முன்னெடுத்த தொழில் கொள்கையுடன் பொருத்திப் பேசப்படுகிறதா? நாம் செல்லும் திசை சரியல்ல என்பது எங்கேனும் பேசப்படுகிறதா?”
“பேசுகிறார்கள். ஆனால், மிகச் சன்னமாகத்தான் அத்தகைய குரல்கள் ஒலிக்கின்றன. என்றாலும் புறக்கணிக்க முடியாத குரல்கள். சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அது என்னவென்றால், தனிமை – அதாவது சமூகப் புறக்கணிப்பால் உண்டாகும் தனிமை – ஒரு பெரிய கொள்ளைநோயாகிவருகிறது என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. இயற்கையான ஆயுள் காலத்துக்கு முன்னதாகவே மன அழுத்தத்தால் பலர் முன்கூட்டி இறந்துவிடுகிறார்கள் என்கிறார்கள். ஐரோப்பாவிலேயே பிரிட்டன்தான் இன்று தனிமையின் தலைநகரம். பெரிய முரண் என்னவென்றால், பிரிட்டிஷ் குடிமக்களில் மேல்நிலையில் உள்ள 1% கனவான்கள் மொத்த செல்வத்தில் 48% அளவு வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களும் மகிழ்ச்சியாக இல்லை. சராசரியாக 780 லட்சம் டாலர்கள் சொத்து இருப்பவர்கள்கூட தங்களுக்குப் பதற்றமும் அதிருப்தியும் தனிமையும் இருப்பதாகப் புலம்புகின்றனர் என்றால், அது ஏன் என்ற கேள்வி இன்று பேசப்படுகிறது. ஆனால், வழக்கம்போல இப்படிக் கேள்வி எழுப்புவோரை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று சாடும் லாவணியும் தொடர்கிறது.”
“மூன்று தொழில் புரட்சிகளை அடுத்துவரும் நான்காவது தொழில் புரட்சி காலகட்டத்தில்கூட இதை விவாதிக்கவில்லை என்றால், எப்போது விவாதிக்கப்போகிறோம்?”
“கிராமங்கள் மட்டும் இல்லை, பிரிட்டனில் ஒருகாலத்தில் தொழில் கேந்திரங்களாக இருந்து இன்று முக்கியத்துவம் இழந்த நகரங்களிலும்கூட வாழ்க்கை சிக்கலாகித்தான்வருகிறது. பல ஊர்களில் சமூகங்களைப் பிணைக்கும் இழைகள் அறுகின்றன. சமூகங்கள் கூடும் இடமாக, கலாச்சாரவெளியாக திகழ்ந்த ‘டவுன் ஹால்’கள் பல இடங்களில் மூடப்பட்டுவருகின்றன. ரக்பி விளையாட்டுக் கழகங்கள், கால்பந்து சங்கங்கள் போன்றவைகூட புரவலர்கள் இல்லாமல் மூடப்படுகின்றன. சமூகத்தின் பெரும் தொகுதி எண்ணிக்கையிலான மக்கள் வெறும் உருப்படிகளாக உருமாற்றப்படுவதைப் பார்க்க முடிகிறது.”
“ஆமாம், வேலை இல்லாவிட்டால் என்ன, அரசாங்கமே எல்லோருக்கும் உணவுக்கு ஏற்பாடுசெய்துவிட்டால் போகிறது என்று பேசுபவர்கள் மக்களைக் கிட்டத்தட்ட உருப்படிகள் ஆக்கும் மனநிலையில்தானே பேசுகிறார்கள்? விலங்குகள்போல அடித்தட்டு மக்களும் ஒரு நாட்டில் வாழலாம்; ஆனால், அந்த நாட்டின் எந்தப் போக்கைத் தீர்மானிப்பதிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும், உரிமையும் இருக்காது.”
இரண்டு ஆடுகள் எங்களைச் சுற்றிச்சுற்றி வந்தன. அவற்றைத் தட்டிக்கொடுத்தபோது உற்சாகமாகி தலையாடின. “செயற்கை இறைச்சி வந்தால் இந்த உலகில் ஆடுகள் என்னவாகும்?” ஹெலன் கைகளை விரித்தார். ஆடுகளின் தலையை வருடிக்கொடுத்துவிட்டு, நாங்கள் திரும்பி காருக்கு நடந்தோம். கிராமங்கள் ஒவ்வொன்றாகக் கடந்தன. அதற்குப் பின் வெகுநேரம் இருவருமே தொடர்ந்து பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இடையில் சாலையோர உணவகம் ஒன்றில் வண்டியை நிறுத்தி ‘ஃபிஷ் அண்ட் சிப்ஸ்’ சாப்பிட்டோம். வீட்டை அடைந்தபோது இருட்டு போர்த்தியிருந்தது.
“எனக்கென்னவோ இந்தக் கிராம அத்தியாயத்தைப் பயணத்தில் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது சமஸ். மனம் எனக்கு கனமாக இருக்கிறது. பிரிட்டனிலிருந்து நீங்கள் புறப்படுகையில் இனிமையான நினைவுகளோடு செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன்.”
“மன்னியுங்கள், இதுதான் நான் விரும்பியது. இன்றைய அனுபவங்கள்தான் இந்த லண்டன் பயணத்தைப் பரிபூரணப்படுத்துகின்றன. இனிமையான நினைவுகளை மட்டும் அல்ல; ஒவ்வொரு பயணத்தின்போதும் சில படிப்பினைகளையும் கொண்டுசெல்லவே நான் விரும்புகிறேன். இந்தப் பயணம் நெடுகிலும் எனக்குப் பெரிய வழிகாட்டியாக நீங்கள் உதவினீர்கள். மறக்க முடியாத உதவி. நீங்கள் தமிழ்நாட்டுக்கு ஒருமுறை வர வேண்டும்.”
ஹெலன் புன்னகைத்தபடி கை குலுக்கி விடை கொடுத்தார்.
வீடு திரும்பியதும் கொஞ்ச நேரம் தூங்கினேன். அலுவலகத்திலிருந்து ராஜ் வந்ததும் இருவரும் ஹீத்ரோ புறப்பட்டோம். விமான நிலையத்தில் லண்டன் வந்து செல்லும் பயணிகளுக்குப் பல்வேறு சமூகங்களையும் பிரதிபலிக்கும் முகங்கள் பதாகைகளில் நன்றி தெரிவித்தன. ராஜ் கை குலுக்கினார்.
“உங்களுடைய அனுபவங்களும் சேர்த்தே இந்தப் பயணத்தில் எனக்கு ஒரு பார்வையைக் கொடுத்தது ராஜ், பெரிய நன்றி.”
“அதெல்லாம் இருக்கட்டும்… ஒன்றுமே வாங்கவில்லையே! லண்டனிலிருந்து ஊருக்கு என்ன கொண்டுசெல்லப்போகிறீர்கள்?”
“எதையும் வாங்கிச்செல்லவில்லை. ஒரு உறுதியை மட்டும் கொடுத்தும் எடுத்தும் செல்கிறேன். எவரும் நம்மை உருப்படிகளாக்கிவிட முடியாது.”
கையசைத்தேன்!
(லண்டன் பயணம் நிறைந்தது)
This series has been very excellent. Your narrating styles anchors the reader on each and every line. Hats off for NOT writing about major tourist attractions...especially in London. And, big thanks for traveling to the country side of England and also interviewing the immigrants. London is a huge ENGINE on all different aspects, which is directly and indirectly fueled by native and immigrant population of all demographic groups. You covered it very well. If situation materializes, please make a trip to the country side of France and Germany as well and compare the culture in their major cities. If you are coming to the east coast of USA, I'd be honored to host you :-)
பதிலளிநீக்குMy previous comment is from mstraudio@gmail.com
பதிலளிநீக்குமிக அருமையான பயண கட்டுரை - நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்தியா மட்டுமல்ல, நிறைய நாடுகள் விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றவே விருன்புகின்றன, அதுவே நாட்டின் வளர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நிலை கண்டிப்பாக மாறும் - தமிழகத்தில் அதற்கான விதை நம்மாழ்வார் போன்றவர்களால் விதைக்கப்பட்டு, முளைக்க தொடங்கிவிட்டன. அவை மரமாகும் வரை காத்திருப்போம்.
பதிலளிநீக்குதொடர்ந்து இத்தொடரை வாசித்தேன். லண்டனைப் பற்றிய ஒரு பறவைப் பார்வையினைத் தந்த விதம் பாராட்டத்தக்கது. உங்கள் எழுத்தில் வாசித்தபோது மிகவும் யதார்த்தமாக, மனதில் பதியும்படி இருந்தது.
பதிலளிநீக்குOne of the reasons people in UK or US are moving towards villages or far-away suburbs is because the natives want to get away from immigration crowds
பதிலளிநீக்கு