தமிழ்நாட்டு அரசியலில் அரிதான அனுபவங்களைக் கொண்டவர்களில் ஒருவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா. ஓர் ஏழை இந்துவாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக, செல்லப்பாவாகப் பிறந்த கொடிக்கால், தமிழ்நாட்டின் தலித் அரசியல் எழுச்சி முகங்களில் ஒன்றாக அறியப்பட்டவர். சாதிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தனது ஐம்பது வயதுக்கு மேல் அம்பேத்கர் வழியில் இந்து மதத்தைத் துறந்தவர், இஸ்லாத்தை வரித்துக்கொண்டார். பொதுவுடைமை இயக்கம்தான் இவரது ஆரம்ப அரசியல் களம். குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் போர்க்குணம் மிக்க போராட்டங்களை முன்னெடுத்த வரலாறு அவருக்கு உண்டு. அதன் பின் ஒடுக்கப்பட்டோர் மத்தியில் நம்பிக்கை முகமாகப் பார்க்கப்பட்ட இளையபெருமாளுடன் இணைந்து பணியாற்றினார். சிறுபான்மையின முன்னேற்றப் பயணத்திலும் இணைத்துக்கொண்டவர். மைய நீரோட்ட அரசியல் பாதையே விளிம்புநிலையினருக்கான பாதை என்பவர். சுதந்திர இந்தியாவின் எழுபதாண்டு வரலாற்றுக்கான சாட்சியமான கொடிக்கால், தன்னுடைய பயணம் நெடுகிலும் காங்கிரஸையும் திராவிட இயக்கத்தையும் விமர்சனபூர்வமாக அணுகியவர், வாழ்வின் பிற்பகுதியில் காந்தியையும் அண்ணாவையும் அடையாளம் கண்டார்.
மொழியுரிமையில் உங்களுக்குள்ள பிடிப்பின் காரணமாகவே தெற்கெல்லைப் போராட்டத்தில் சிறை சென்றிருக்கிறீர்கள். சாதி எதிர்ப்பும் உங்கள் இயல்பிலேயே இருக்கிறது. அப்படியிருக்க, திராவிட இயக்கம் எப்படி உங்களை இழந்தது?
முதலாவது விஷயம் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை. நான் பெரிய கடவுள் பக்தன் அல்ல என்றாலும் ஆன்மிகம் எங்கோ மனிதனுக்கு அவசியம் என்பதை எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். இரண்டாவது, இந்த திராவிட நாடு என்று சொல்லப்பட்ட இன்றைய ஐந்து மாநிலங்களில் நாங்கள் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் இருந்தோம். மலையாள மொழி ஆதிக்கமும், மேல் சாதி ஆதிக்கமும் இணைந்து எங்களைப் பல வழிகளில் இம்சித்துவந்த அன்றைய காலகட்டத்தில், திராவிட நாடு அமைந்தால் திருவிதாங்கூர் ராஜ்ஜியம் எப்படியானதாக மாறும் என்பதில் குழப்பம் இருந்தது. நான் சொல்லும் அந்த இம்சைகளின் தீவிரத்தையும் இங்குள்ள தமிழர்களின் எதிர்மனோநிலையையும் நீங்கள் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்போது பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் பட்டம் ஏ.தாணுப்பிள்ளை ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அது தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று சொல்லியும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை சென்னை மாகாணத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அந்தக் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டி.எஸ்.ராமசாமிப் பிள்ளையே சொந்தக் கட்சிக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து ஆட்சிக் கலைப்புக்கு வழிவகுத்தார் என்றால், இதை உங்களால் நம்ப முடிகிறதா?
அப்படிப்பட்ட நாட்களில் ம.பொ.சி. தலைமை வகித்த தமிழரசுக் கழகம், திராவிட இயக்கத்தைக் காட்டிலும் கூடுதல் ஈர்ப்பைத் தருவதாக இப்பகுதியைச் சேர்ந்த எங்களுக்கு இருந்தது. ஆனால், அங்கும் நான் தொடர்ந்து இருந்திடவில்லை. ‘மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் – தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறை சென்றேன் இல்லையா, சிறைக்குள் கிடைத்த அறிமுகங்களும் அனுபவங்களும் வர்க்க மற்றும் சாதி அடிப்படையிலான போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தி, நான் சார்ந்திருந்த தமிழரசுக் கழகத்தில் இல்லை என்பதை விரைவிலேயே உணர்த்திவிட்டன. சிறையில் நான் சந்தித்த இடதுசாரி இயக்கத்தினர் “சாதி, இனம், வர்க்க விடுதலைக்குப் பரந்துபட்டு சிந்திக்கும் ஒரு அமைப்பின் கீழ் பணியாற்ற வேண்டும் – அதற்கு ஒரே வழி பொதுவுடைமை இயக்கம்” என்றார்கள். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கக் கனவுகாணும் சங்கம்புழாவின் ஒரு கவிதையை அவர்கள் வாசித்தபோது கம்யூனிஸ்ட் ஆகிவிட்டேன். அடுத்த இருபத்தைந்து வருஷங்கள் அதுவே என் இயக்கமாக இருந்தது.
அண்ணாவை முதன்முதலாக எப்போது, எங்கு பார்த்தீர்கள்?
திருத்தமிழகம் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக வடசேரியில் உள்ள பெரியாரசிங்கம் தெருவில் நடந்த கூட்டத்துக்கு வந்திருந்தார். தேதிகூட ஞாபகம் இருக்கிறது 30.7.1954. அன்றுதான் அண்ணாவைப் பார்க்கிறேன். ஆளையே அடித்துப்போடுவதாக அவருடைய பேச்சு இருந்தது. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கூறப்பட்டாலும், எப்படி வடக்கத்திய - சனாதன ஏகாதிபத்தியத்தின் கீழ் நாடு இருக்கிறது – ஏன் தமிழ் மக்களுக்கும் ஏனைய திராவிட இனத்தினருக்கும் சுயாட்சி வேண்டும் என்று பேசினார். இன்றைக்குத் திரும்பப் பார்க்கும்போது அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் எவ்வளவு தீர்க்கதரிசனம் என்பது புரிகிறது.
கேரளத்தை ஒட்டியிருக்கும் குமரியிலும் கேரளத்திலும் அண்ணாவும் அவருடைய இயக்கமும் எப்படிப் பார்க்கப்பட்டார்கள்?
தமிழர்கள் மத்தியில் தவிர, ஏனைய எந்தப் பிரதேசத்திலுமே பெரிய தாக்கம் இல்லை. காரணம் என்னவென்றால், அன்றைக்கு இந்தத் தென்னக மாநிலங்கள் யாவும் தமிழர்கள் அரசியலதிகாரத்தில் கோலோச்சிய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தன; தமிழர்களிடமிருந்தே தங்கள் பகுதிகளைப் பிரித்துக்கொண்டு, ஒரு மொழிவழி மாநிலமாக வேனும் ஆகிவிட வேண்டும் என்ற நிலையிலேயே எல்லோரும் இருந்தார்கள். திமுக தோன்றித் தலையெடுக்கும் காலகட்டத்தில்தான் தெலுங்கு பேசுவோருக்கு என்று ஒரு மாநிலம் வேண்டும் என்று ஆந்திரத்துக்கான போராட்டம் நடக்கிறது; இங்கே அதேபோல கேரளம் அமைக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்; அங்கே அப்படி கர்நாடகம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம். இப்படிப்பட்ட சூழலில், ஒரு மலையாளிக்கும் தெலுங்கருக்கும் கன்னடருக்கும் ‘திராவிட நாடு’ கோரிக்கை முன்னுரிமையாக இருக்குமா, தங்களுக்கென முதலில் ஒரு மாநிலம் அமைய வேண்டும் என்பது முன்னுரிமையாக இருக்குமா? மேலும், திராவிட நாட்டை அண்ணா ஒரு கூட்டரசாக, ஒன்றியமாகத்தான் முன்மொழிந்தார் என்றாலும், தமிழர்கள் கை ஓங்கிவிடுமோ என்ற அச்சமும் தமிழரல்லாதோரிடம் இருந்தது.
அடுத்தது சாதி. திராவிட இயக்கம் சாதிக்கு எதிராக உறுதியாகப் பேசியது. தமிழ் பேசும் பகுதிகளில் அது எடுபடக் காரணம், அதற்கான முன்வேலை இங்கே நீதிக் கட்சி தொடங்கி திராவிடர் கழகம் வரை நடந்திருந்தது. தமிழரல்லாத பகுதிகளில் அரசியல் பெருமளவில் ஆதிக்க சாதிகளின் கைகளில்தான் இருந்தது. அவர்கள் திராவிட இயக்கத்தை ஒரு அச்சுறுத்தலாகப் பார்த்தார்கள்; வெறுத்தார்கள். நீங்கள் தமிழ்நாடு நீங்கலாக ஏனைய எல்லா பகுதிகளிலும் திமுகவின் ஆரம்ப கால வரலாற்றைப் பாருங்கள்; ஒடுக்கப்பட்ட மக்கள்தான் திமுகவுக்குப் பெரிய அளவில் ஆதரவாக இருந்திருப்பார்கள். உதாரணத்துக்கு, இன்றைய கேரளத்திலுள்ள பணிக்கர் சமுதாயம் - தீயர் என்று அவர்களைச் சொல்வார்கள். திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் பெருவாரியான மக்கள் தீயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். நாராயண குரு இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். திராவிட இயக்கத்துக்குத் தளமாக அவர்கள்தான் இங்கே இருந்தார்கள். இங்கே தமிழ் பேசும் பகுதியில் குமரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை எடுத்துக்கொண்டால், தோவாளையும் அகத்தீஸ்வரமும்தான் அவர்கள் கோட்டையாக இருந்தது. குமரியில் திமுகவின் முதல் மாவட்டச் செயலாளர் யார் என்றால், வி.எம்.ஜான்; தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இதற்கிடையே ‘திமுக ஒரு பிரிவினைவாத இயக்கம்’ என்ற பிரச்சாரமும் அந்நாட்களில் இருந்தது – விடுதலை இயக்கமாகத்தானே அது அந்நாட்களிலே செயல்பட்டது? இவ்வளவுக்கும் இடையில்தான் தமிழ்நாட்டுக்கு வெளியே வளர்ந்தது திமுக. அண்ணா தலையெடுத்து, முதல்வரான பின் திமுகவுக்கு ஒரு புது உத்வேகம் கிடைத்தது. ஆனால், அவருடைய அகால மரணம் அவரையும் அவருடைய இயக்கத்தையும் தமிழ்நாட்டுக்குள் சுருக்கிவிட்டது.
தமிழ்நாட்டில் நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் என்று அண்ணா சொன்னார். பல விஷயங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அவர் உள்வாங்கவும் செய்திருக்கிறார். இன்று எல்லா விமர்சனங்களைக் கடந்தும், இந்திய அளவில் பேசப்படும் முன்மாதிரி மாநிலங்களில் ஒன்றாக அவர் வழிவந்த திமுக, அதிமுக தமிழ்நாட்டை ஆக்கியிருக்கின்றன. இத்தகைய சூழலில் அண்ணாவை இன்றிலிருந்து எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
எழுத்தாளரும் என்னுடைய நண்பருமான சுந்தர ராமசாமி என்னைப் பற்றிச் சொல்வார், ‘சமூகத்துக்குப் பயன்படுகிறவர் யாராக இருந்தாலும் அவர்களோடு கொடிக்கால் இணைந்துகொள்வார்; அவர்களிடமிருந்து பாடம் படிப்பார்’ என்று. இந்தத் தமிழ்ச் சமூகத்துக்கு அவ்வளவு செய்திருக்கும் அண்ணாவை யாரால் புறக்கணிக்க முடியும்?
என்னுடைய அரசியல் கல்வி பாபு ராமானுஜ தாஸிடமிருந்து தொடங்குகிறது. யார் இந்த பாபு ராமானுஜ தாஸ்? மங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட, காசியில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணர். காந்தி மீது அவருக்கு ஏற்பட்ட பிடிப்பு சாதிக்கு எதிரான போராட்டத்தில் அவரை உந்தித்தள்ளுகிறது. ஹரிஜன சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். எங்கிருந்தோ எங்கள் ஊர் தேடி வருகிறார். என்னுடைய தந்தைவழிப் பாட்டனார் பிச்சாண்டியின் வீட்டில் தங்குகிறார். வீட்டிலுள்ள ஒரு பத்தாயம், அதுதான் பாபு ராமானுஜ தாஸ் மேசை, படுக்கை, இருப்பு எல்லாம். அவருடைய கைப்பையே தலையணை ஆகிவிடும். காலை நான்கு மணிக்கு எழுந்து விடுவார் – அதிகாலை கண் விழிக்கும் பழக்கம் எனக்கு அவரிடமிருந்து தான் வந்தது – அடித்தட்டு மக்களைத் தேடிச்சென்று வேலை செய்வார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அந்நாட்களிலே எங்கள் ஊரில் முதன்முதலில் ஒரு பள்ளிக்கூடம் வந்தது – இரவுப் பாடசாலை; அதை உருவாக்கியவர் பாபு ராமானுஜ தாஸ். என்னுடைய பதினைந்து பதினாறு வயது வரை எனக்கு ஒரு ஆசான்போல அவர் இருந்திருக்கிறார்; அப்புறம் வேறு எங்கோ சென்றுவிட்டார். அடுத்து, பெரிய தாக்கம் உண்டாக்கியவர் டாக்டர் எம்பெருமாள் நாயுடு. அவர் லண்டனில் படித்தவர். காந்திய இயக்கத்தில் சேர்ந்ததால் கதர் மூட்டையைத் தூக்கிக் கொண்டு கிராமம் கிராமமாக மனைவியுடன் நடந்தவர். அவர்தான் ஹரிஜன சேவா சங்கத்தை இந்தப் பிராந்தியத்தில் வலுப்படுத்தினார். இடதுசாரிகளில் ஜி.எஸ்.மணி – கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முதல் மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர், அவர் தம்பி கொச்சுமணி – அவரும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்; இருவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை; மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள்; பெரிய தியாக வாழ்க்கை; பொதுவுடைமை இயக்கம் நோக்கி என்னை ஈர்த்தவர்கள். இப்படித் தொடங்கி எல்லா அரசியல் இயக்கங்களையும் ஆளுமைகளையும் பார்க்கிறேன். தனித்தமிழ் இயக்கம், பொதுவுடைமை இயக்கம், தலித் இயக்கம், சிறுபான்மையினர் இயக்கம், இவற்றுக்கு இடையே தேர்தல் அரசியல் வாயிலாக கருணாநிதி, எம்ஜிஆர் தொடங்கி இந்திரா காந்தி, மாயாவதி வரையிலான ஆளுமை களுடனான தொடர்புகள், அவர்களுடைய அரசியல் அணுகுமுறைகள்… இன்று திரும்பிப் பார்க்கும்போது நான் தொடக்கக் காலத்தில் பெரிய முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்காத காந்தியும் அண்ணாவுமே பெரிய ஆளுமைகளாக எனக்கு இன்று தெரிகிறார்கள்.
நமக்கெல்லாம் அகப்படாத ஒரு கண் சாமானிய மக்களுக்கு இருப்பதாகத்தான் இன்று தோன்றுகிறது. காந்தியையோ அண்ணாவையோ அவர்கள் அத்தனை எளிதாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்களே! மீனாட்சிபுரத்தில் லட்சுமி தியேட்டரில் டிக்கெட் கொடுத்து அண்ணா பேச்சைக் கேட்ட கூலித் தொழிலாளிகளைப் பார்த்திருக்கிறேன். ஈத்தாமொழியில் பாலு என்று ஒரு சலூன்காரர் இருந்தார். அவர் அண்ணாவினுடைய தொண்டர். ‘திராவிட நாடு’ம் ‘முரசொலி’யும் அவர் கடைக்கு வரும். எங்களூரில் அவருடைய கடைதான் திமுக ஆட்களுக்கு அலுவலகம். ஷேவிங் கிரீமைத் தடவிவிட்டு, “அண்ணாச்சி, நீங்க அண்ணாவைப் படிக்கணும், நம்மூர்ல பொறந்த உலகத் தலைவர் பார்த்தியளா?” என்று கேட்பார். “ஆமாம்பா பாலு… பாத்துப் பண்ணுப்பா. கழுத்துல கத்தியை வெச்சிக்கிட்டு இப்படிக் கேட்டா நான் என்ன பதில் சொல்ல?” என்று கிண்டலடித்துவிட்டு வருவோம். ஆனால், இன்று யோசிக்கையில் அந்த பாலுவுக்குத் தெரிந்தது நமக்கு அன்று தெரியவில்லையே என்றுதான் தோன்றுகிறது.
இந்தியர் என்ற அடையாளத்தின் கீழ் காந்தி எல்லோரையும் ஒருங்கிணைக்க முயன்றார் என்றால், தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் எல்லோரையும் ஒன்றிணைக்க முயன்றார் அண்ணா. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கும் மேம்பாட்டுக்கும் அதில் முன்னுரிமை கொடுத்தார். திமுகவுக்கு என்று சொந்தத் தலைமையகமாகச் சென்னையில் அவர் உருவாக்கிய ‘அறிவகம்’ கட்டிடத்தை எங்கள் ஊர்க்காரர் ஜானை வைத்துத்தானே திறந்தார்! அது எவ்வளவு பெரிய நுட்பமான செய்தி! அன்றைக்கு யாருக்கும் அதன் பின்னுள்ள சூட்சுமம் புரியவில்லை. ‘ஜான் ஆங்கிலம் சிறப்பாகப் பேசுவார். எப்போதும் ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையும் கையுமாகவே இருப்பார். அதனால்தான் அண்ணா அவருக்கு மரியாதை கொடுத்து கட்டிடத்தைத் திறக்கவைத்தார்’ என்றெல்லாம்கூடப் பேசியவர்கள் உண்டு. ஆனால், இன்று யோசிக்கும்போதுதானே புரிகிறது! இத்தனைக்கும் இந்த மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை சார்ந்து பலமிக்கவர்கள்கூட அல்ல; ஒரு தாழ்த்தப்பட்டவரைக் கொண்டு தலைமையகத்தைத் திறக்கச் செய்கிறோம் என்றெல்லாம் அண்ணாவோ, அவருடைய இயக்கத்தினரோ அன்றைக்குப் பேசவும் இல்லை. வெண்மணிப் படுகொலை விவகாரத்தில் அண்ணாவைக் குறைசொல்லி இன்று பேசுபவர்களைப் பார்க்கிறேன். அது ஒரு அரசு இயந்திரத்தின் தன்மையை அறிந்திராதவர்களின் அறியாமையின் வெளிப்பாடு. காவல் துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை இப்படி அத்தனையும் வெகு நீண்ட காலமாக நிலப்பிரபுத்துவமும் சாதி ஆதிக்கமும் புரையோடிப்போன ஒரு அரசு இயந்திரத்தை ஒரு அண்ணாவால் ஒரு வருஷத்துக்குள் எவ்வளவு மாற்றிவிட முடியும் என்று யோசிக்க வேண்டும். அண்ணா மீதே பழி போட்டுவிடுவோம் என்றால், பிற்பாடு வெண்மணி படுகொலைக் குற்றவாளியை ‘அவர் அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை’ என்று விடுவித்தாரே ஒரு நீதிபதி, அதை எப்படி விளக்குவது? ஆனால், நிலச்சீர்திருத்தம் இங்கே அண்ணாவுக்குப் பின்புதான் பெரிய அளவில் நடக்கிறது; அரசு ஊழியர்களின் பின்னணி மாறுகிறது; கீழே உள்ள சமூகங்கள் மேல் நோக்கி நகர்ந்தன.
இதையெல்லாம் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ஜானுக்கு மட்டும் அல்ல; சத்தியவாணி முத்துவுக்கும் பெரிய இடம் கொடுத்திருந்தார் அண்ணா. திமுக மகளிர் அமைப்புக்கு சத்தியவாணி முத்து தலைமை வகிக்க, அண்ணாவின் மனைவி ராணி உள்பட ஏனைய தலைவர்களின் மனைவியர் அனைவரும் அவருக்குக் கீழே வீதியில் இறங்கிக் கட்சிப் பணியாற்றிப் பார்த்திருக்கிறேன். சிறுபான்மையினர் இடத்திலும் அப்படி ஒரு அக்கறையை அவர் காட்டினார். பிரிவினைக்குப் பின் முஸ்லிம்களோடு பொது மேடையில் ஏறிய முதல் தலைவர் அவர்தானே! காயிதே மில்லத் முன்மொழிந்த விஷயங்களுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுக்கத் தலைப்பட்டார். நமக்கு எல்லோரையும் காலதாமதமாகத்தான் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. நம்மூரில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் உள்ள முரண்பாட்டைத்தானே முதலில் ஊதிப் பெருக்கி நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்? இப்படியான உள் முரண்பாடுகள் தரும் வெறுப்பிலிருந்து விடுபட்டு அந்தத் தலைவர்களை அணுகும் பார்வையைப் பெறவே நாம் ஒரு சுயவிடுதலை அடைய வேண்டியிருக்கிறதே!
எதனூடாகத் தலைவர்களை மறு மதிப்பீட்டுக்கு உள்ளாக்குகிறீர்கள்? புத்தகங்களா, அனுபவங்களா?
இரண்டும்தான். எதுவாக இருந்தாலும், நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம். சாமானிய இந்தியனுக்கான அரசியல் முன்னுதாரணம் என்று அண்ணாவையே சொல்வேன். எனக்கு என்னவோ எதிர்கால இந்தியாவில் மிகப் பெரியதலைவராக அண்ணா உருவெடுப்பார் என்று தோன்றுகிறது!
மார்ச், 2019, ‘இந்து தமிழ்’,
‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...
‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...
x
சாமானிய இந்தியனுக்கான அரசியல் முன்னுதாரணம் என்பது முற்றிலும் பொருத்தம்.
பதிலளிநீக்கு