சூப்பர் டீலக்ஸும் தமிழ்ப் பிரக்ஞையும்



தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்தீர்களா?
- ராஜன், சென்னை.

தியாகராஜன் குமாரராஜா மதிப்புக்குரிய இயக்குநர்களில் ஒருவர். அவருடைய முதல் படமே - ‘ஆரண்ய காண்டம்’ - நல்ல தொடக்கம்தான். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்ட நிலையில், அதன் தலைப்பு சம்பந்தப்பட்டு மட்டும் எழுதலாம் என்று நினைக்கிறேன். ‘தமிழில் தலைப்பு சூட்டப்படும் படங்களுக்கு வரிவிலக்கு’ என்ற நடைமுறை இருந்தவரை ‘எந்திரன்', ‘தொடரி’ என்றெல்லாம் புதுப்புது பெயர்களை உண்டாக்கிய தமிழ் இயக்குநர்கள் ஜிஎஸ்டியின் வருகையோடு, வரிவிலக்கு வழக்கொழிந்த பின் எந்த கதி நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்ற போக்கோடு இதைப் பொருத்திப்பார்க்க வேண்டும். ‘சர்கார்’, ‘தர்பார்’, ‘என்ஜிகே’, ‘கே13’... இந்தத் தலைப்புகள் யாவுமே கற்பனை வறட்சி, மொழிப் பொறுப்புணர்வின்மையின் வெளிப்பாடு.  

சினிமாவை வெறும் பொழுதுபோக்காக அணுகும் சமூகம் அல்ல நம்முடையது. கடந்த ஒரு நூறாண்டு தமிழ் சினிமாவின் வரலாறும் தமிழ் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பிணைந்தவை. தமிழ்நாட்டில் இன்றிலிருந்து ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்களைச் சற்று உற்றுநோக்கும் ஒருவர் அவற்றுக்கும் அக்காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி படங்களில் காட்டப்பட்ட வீடுகளுக்கும் உள்ள ஒற்றுமையை எளிதாகக் கண்டுகொண்டுவிட முடியும். நம்முடைய நடை, உடை, பாவனை, அரசியல் எல்லாவற்றிலும் சினிமாவின் தாக்கம் உண்டு. மக்களிடத்தில் இவ்வளவு செல்வாக்கு செலுத்தும் துறையில் பணியாற்றும் கலைஞர்கள் அதற்குரிய சுயமரியாதையுணர்வையும் பொறுப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும். நாம் எந்த மொழியில் செயல்படுகிறோமோ, எந்த மொழியைக் கொண்டு பிழைக்கிறோமோ அதற்கு நன்றிக்குரியவர்களாக இருக்க வேண்டும். 

ஒரு படைப்பின் உள்ளடக்கம் தவிர்க்கவே இயலாதபடி கோரும் ‘ஹே ராம்’,  ‘12பி’ போன்ற தலைப்புகளுக்கான நியாயம் விதிவிலக்கு. மற்றபடி,  நீங்கள் எந்தப் பெயரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்கள் அரசியலோடும் தொடர்புடையதுதான். இன்றைக்கு இந்தியாவிலேயே அதிகமாக சினிமா பணம் கொழிக்கும் ஊர் மராத்தியர்களின் தலைநகரமான மும்பை. ஆனால், அது இந்தி சினிமாவின் தலைமையகம். திரையரங்குகளுக்குக் கையேந்தும் நிலையிலேயே மராத்தி சினிமாவும் மராத்தி சினிமா கலைஞர்களும் நிற்கிறார்கள். தமிழ் சினிமா அப்படியில்லாமல் உயர்ந்து நிற்க, நம்மவர்களிடம் நிலைத்திருக்கும் தமிழ்ப் பிரக்ஞைக்கு முக்கியமான பங்குண்டு. நம் மொழிக்கான இடத்தைப் பறிகொடுப்பதன் மூலமாக நமக்கான அதிகாரத்தையும் சேர்த்தேதான் நாம் பறிகொடுக்கிறோம் என்ற உணர்வைக் கலைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏப்ரல், 2019, ‘இந்து தமிழ்’

வாசகர்கள் ‘கேள்வி நீங்கள்... பதில் சமஸ்’ பகுதிக்கான கேள்விகளைத் தங்கள் முழு முகவரி, செல்பேசி எண், புகைப்படத்தோடு samas@thehindutamil.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ, ‘இந்து தமிழ்’ 
சென்னை அலுவலக முகவரிக்கோ அனுப்பலாம்.

3 கருத்துகள்:

  1. \\எந்த மொழியைக் கொண்டு பிழைக்கிறோமோ அதற்கு நன்றிக்குரியவர்களாக இருக்க
    வேண்டும்//
    திரைத்துறைக்கு மட்டுமல்ல மற்றத் துறைகளுக்கும் பொருந்தும்.
    நன்றி சமஸ்.

    பதிலளிநீக்கு
  2. நம்மையறியாமல் எதனையோ இழக்கிறோம் என்பதைக் கூறியவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. வழக்கம் போல பார்வைக் கோணம் முக்கியமானது

    பதிலளிநீக்கு