வாரிசு அரசியல் ஒரு சமூகத்தில் உண்டாக்கும் பேரிழப்பு என்ன?


அடுத்த பட்டாபிஷேகத்துக்கான முன்னோட்டம்தான் அது. தலைமை நோக்கித் தன் மகன் உதயநிதியை நகர்த்தும் முயற்சியைக் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் பதவியை அவருக்கு வழங்கியதன் மூலம் அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்றைய நாளில் வாதாம் மர நிழல் அடர்ந்த சாலைகள் வழியே காரில் வீட்டுக்குத் திரும்புகையில் கொஞ்சம் ஆச்சரியம்கூட அடைந்திருக்கக் கூடும். கட்சியின் முன்னணித் தலைவர்கள் எவரிடமிருந்தும் துளி முணுமுணுப்பு வெளியே வரவில்லை; அத்தனை பேரும் இதற்காகக் காத்திருந்தவர்களைப் போலக் காட்டிக்கொண்டனர்;  மாவட்ட அமைப்புகள் உதயநிதியை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. ஸ்டாலினை இளைஞர் அணியின் பொறுப்பு நோக்கி அவருடைய தந்தை கருணாநிதி நகர்த்தியபோது, சூழல் இவ்வளவு இசைவாக இல்லை.

நாட்டின் மூத்த கட்சியான காங்கிரஸின் அடுத்தடுத்த வரலாற்றுத் தோல்விகளுக்குப் பின், அதன் தலைவர் ராகுல் காந்தியை முன்னிறுத்தி, நாடு முழுவதும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்று ‘வாரிசு அரசியல்’ விவாதத்துக்குள்ளாகி, அதன் தொடர்ச்சியாக அவர் பதவி விலகியிருக்கும் சூழலில், இப்படி பட்டவர்த்தனமாக வாரிசுக் கொடியைப் பறக்கவிட எங்கேயோ ஒரு கட்சி கூச்சம் துறக்க வேண்டியிருக்கிறது. செம்மொழி மாநாட்டில் ஆய்வறிஞர்கள் மத்தியில், ‘ஸ்டாப் புகழ்’ பேத்தியைக் கவிதை வாசிக்க வைத்து கருணாநிதிி  அழகு பார்த்த காலகட்டத்திலேயே எல்லா இறக்கங்களையும் பார்த்துவிட்டதால், “குடும்ப அரசியல் எல்லாக் கட்சிகளிலுமே இருக்கிறது; திமுகவை மட்டும் ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள்?” என்று கம்பீரமாக முட்டுக்கொடுக்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள் கட்சிப் பிரதிநிதிகள். அதிகாரம் தன் பிறப்புரிமை என்பதுபோல இருக்கின்றன உதயநிதியின் செயல்பாடுகளும், ஊடகங்களுக்கு அவர் இது தொடர்பில் முன்னதாக அளித்திருந்த பேட்டிகளும். எல்லோருக்குமே எங்கோ, யாரோ ஞாபகப்படுத்த வேண்டியிருப்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது: அடிப்படையில், வாரிசு அரசியல் எதிர்ப்பிலிருந்து முகிழ்ந்த கட்சி திமுக.
ஜனநாயக முன்னுதாரணக் கட்சி

பெரியார் - அண்ணா இடையே எவ்வளவோ கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், மணியம்மையை வாரிசாக்கும் முயற்சியைத் திருமணத்தின் மூலம் பெரியார் உறுதிப்படுத்த  தொடங்கியபோதுதான் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் அண்ணா. 1949-ல் திமுகவைத் தொடங்கிய பிறகு, இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகத்துக்கு முன்னுதாரணக் கட்சியாக அதை உருமாற்ற முற்பட்டவர் அண்ணா. அடுத்த நிலைத் தலைவர்களுக்குத் தலைமைத்துவத்தைப் பயிற்றுவிக்கும் நோக்கில், 1955-ல் கட்சியின் இரண்டாவது மாநாட்டிலேயே பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகி, “தம்பி வா... தலைமையேற்க வா!” என்று நெடுஞ்செழியனை முன்மொழிந்தவர் தன் முடிவை ஏற்க மறுத்தவர்களிடம் சொன்னார், “நான் வலுவோடும் செல்வாக்கோடும் இருக்கும்போதே என் மேற்பார்வையின் கீழ், கழகத்தின் முன்னணியினர் பயிற்சியும் பக்குவமும் பெற வேண்டும். அப்போதுதான் குறைகளை நீக்கவும், குற்றங்களைக் களையவும் முடியும். நான் வலுவிழந்த பிறகு மற்றவர்கள் பொறுப்பேற்றால், அப்போது கழகத்தைச் சீர்ப்படுத்தவோ செம்மைப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ
என்னால் முடியாமல்போகும். வேறு யாராலும் முடியாமல் போய்விடும்!”

முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்கச் செல்லும்போது, அந்த விழாவுக்குத் தன் மனைவியை உடன் அழைத்துச் செல்லத் தயங்கியவர் அண்ணா. அவருடைய வீடு எப்போதுமே கட்சி அலுவலகம்போல எல்லோருக்கும் திறந்திருந்தாலும், கட்சி செயல்பாடுகள் அனைத்திலும் குடும்பத்தின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பை அவர் பெற்றுக்கொண்டாலும், வீட்டுக்கும் கட்சிக்கும் இடையே திட்டவட்டமான ஒரு இடைவெளியைப் பராமரித்த அண்ணா, “வீட்டுக்கும் ஆட்சிக்கும் இடையே ஒரு கோடு வேண்டும்” என்று தன்னுடைய தயக்கத்துக்குக் காரணம் சொன்னார்.

திமுகவின் நிர்வாகிகளைத் தேர்தல் வழியாகவே தேர்ந்தெடுக்கும் நடைமுறையை உண்டாக்கிய அண்ணா, நாட்டிலேயே முதல் முறையாக 1967 தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வையும் அமெரிக்க பாணியில் கட்சியினர் வழி தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். அப்படிப்பட்டவர் தொடங்கிய கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, இன்று வாரிசு அரசியலின் அபாயத்தையும் உட்கட்சி ஜனநாயகத்தின் மேன்மையையும் வெளியார் நினைவூட்ட வேண்டியிருப்பது விழுமிய வீழ்ச்சி.

உலகெங்கும் குடும்ப அரசியல்

விவாதங்களில் திமுகவினர் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. குடும்ப அரசியலின் தாக்கம் இல்லாத நாடுகள் குறைவு. அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே வாரிசுகளின் எண்ணிக்கை 29; அதாவது 5%. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளை வாசகர்களின் பங்கேற்புடன் சில ஆண்டுகளுக்கு முன் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பட்டியலிட முற்பட்டபோது, அது உள்ளூர் வரை நீண்டது நினைவுக்கு வருகிறது.

அமெரிக்காவின் இன்றைய அதிபர் ட்ரம்ப் தன் மகள் இவான்கா - மருமகன் ஜேர்டு குஷ்னர் இருவரையும் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ ஆலோசகர்கள் ஆக்கியதோடு, உச்சி மாநாடுகளிலும் சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் மகளை உரையாட வைப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. ரூஸ்வெல்ட் குடும்பம், ஹாரிஸன் குடும்பம், கென்னடி குடும்பம், புஷ் குடும்பம், கிளின்டன் குடும்பம் வரிசையில் ட்ரம்ப் குடும்பமும் செல்கிறதா என்று அங்குள்ள பத்திரிகைகள் எழுதிவருகின்றன.

வளர்ந்த நாடுகளின் ஜனநாயகங்களிலேயே இந்நிலை என்றால், முதிரா ஜனநாயகங்களைக் கொண்ட ஆசிய நாடுகளைப் பற்றி விவரிப்பானேன்? ஆசியாவிலேயே வளர்ந்த ஜனநாயகமான ஜப்பான் நாடாளுமன்றத்தில் இன்றைக்கும் குறைந்தது 30% பேர் வாரிசுகள். உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானியப் பிரதமர்கள் 30 பேரில் மூவர் மட்டுமே குடும்ப அரசியல் பின்னணி அற்றவர்கள். ஜப்பானின் சமீப காலப் பின்னடைவோடு இன்று இது விவாதிக்கப்பட்டுவருகிறது.

இந்தியாவில் குடும்ப அரசியல்

சுதந்திர இந்தியாவில் குடும்ப அரசியலைப் பற்றி  நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவந்தாலும், சமீபத்திய சில ஆய்வுகள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் கஞ்சன் சந்திரா தொகுத்த ‘டெமாக்ரடிக் டைனஸ்ட்ஸ்’ ஆய்வு நூல் 1952 முதலாக 2014 வரையிலான மக்களவை உறுப்பினர்களின் குடும்பப் பின்னணிகளை ஆராய்கிறது. புத்தாயிரத்துக்குப் பிந்தைய முதல் மூன்று மக்களவைகளைப் பிரதானப்படுத்தும் இந்த நூல் வழி கிடைக்கும் தரவுகள் குடும்ப அரசியல் சார்ந்து இதுவரை பிரஸ்தாபிக்கப்பட்ட சில நம்பிக்கைகளை உடைக்கின்றன. ‘மாநிலக் கட்சிகளைக் காட்டிலும் தேசியக் கட்சிகள் மோசமாகக் குடும்ப அரசியலை அணைத்துக்கொண்டிருக்கின்றன; இதில் நாட்டின் இரு பிரதான கட்சிகளான காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பாரதூர வேறுபாடுகள் இல்லை’ என்பது அவற்றில் முக்கியமானது.

திரிவேதி ஆய்வு மையத்தின் தரவுகளின்படி மொத்த உறுப்பினர்களில் 30% பேரை வாரிசுகளாகக் கொண்ட 2019 மக்களவை இந்தப் போக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது. சமீபத்திய இரு தசாப்தங்களை எடுத்துக்கொண்டால், 1999 முதலான உறுப்பினர்களில் பரம்பரையாக மக்களவைக்கு வருகிற காங்கிரஸாரின் எண்ணிக்கை 39; பாஜகவினரின் எண்ணிக்கை 31. நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் செல்வாக்குமிக்க 51 அரசியல் குடும்பங்களில் 17 பாஜகவினுடையது. 15 காங்கிரஸினுடையது.

பேசப்படாத முற்பட்ட சாதி ஆதிக்கம்

இந்தியாவில் எல்லா இடங்களையும்போல முற்பட்ட சாதியினர்தான் குடும்ப அரசியலிலும் கோலோச்சுகிறார்கள்; ஆனால், இது பேசப்படுவதில்லை; மாறாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களே உதாரணப்படுத்தப்படுகிறார்கள் என்கிறார் கஞ்சன் சந்திரா. “2014-ல் முற்பட்ட சாதி நாடாளுமன்ற உறுப்பினர்களில் 27.2% அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தலித்துகளிலோ இது 8.4%” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

உண்மைதான். பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான விஜயராஜ சிந்தியாவின் ஒரு மகள் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தானின் முதல்வர் ஆனார்; மற்றொரு மகள் யசோதரா ராஜே சிந்தியா அமைச்சர் ஆனார்; மகன் மாதவ்ராவ் சிந்தியா காங்கிரஸில் இணைந்து மத்திய அமைச்சர் ஆனார். மூன்றாவது தலைமுறையில் மக்களவை உறுப்பினர் ஆக்கப்பட்ட வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங் இன்று ராஜஸ்தான் பாஜகவில் வளர்ந்துவரும் தலைவர்களில் ஒருவர்; மாதவ்ராவ் சிந்தியாவின் மகன் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேச காங்கிரஸில் வளர்ந்துவரும் தலைவர்.

இந்தியாவில் குடும்ப - வாரிசு அரசியல் என்றாலே, ஏன் முலாயம், லாலு, கருணாநிதியின் குடும்பங்கள் மட்டும் உரக்கப் பேசப்படுகின்றன? ஏன் சிந்தியா குடும்பம் பேசப்படவில்லை? ஏன் தாக்கரே குடும்பமோ,  தீட்ஷித் குடும்பமோ, பஹுகுணா குடும்பமோ பேசப்படுவதில்லை? பியூஷ் கோயலோ, கிரண் ரிஜிஜுவோ எங்கிருந்து வந்தவர்கள் என்பது ஏன் யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை?

காங்கிரஸின் முதல் குடும்பம் இன்று விமர்சிக்கப்படும் அளவுக்கு நேரு - இந்திரா - சஞ்சய் காலகட்டத்தில் விமர்சிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இத்தாலியைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவரான சோனியாவுக்குப் பிறந்தவர்கள் என்பதாலேயே ராஜீவுக்குப் பின் நேரு குடும்பம் மீதான குடும்ப அரசியல் விமர்சனம் காட்டமாகியிருக்கிறதோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. சோனியா - ராகுல் எதிர்கொள்ளும் விமர்சனத்தில் சிறு பகுதியையும் இந்திராவின் இன்னொரு வாரிசுகளான மேனகா - வருண் ஏன் எதிர்கொள்ளவில்லை என்பதை இங்கே நாம் பொருத்திப்பார்க்கலாம்.

காங்கிரஸை நெருங்கும் பாஜக

குடும்ப அரசியலுக்குத் தேசிய அளவில் மோசமான முன்னுதாரணமாகிவிட்ட காங்கிரஸில், நாடு முழுக்க எவ்வளவு வாரிசுகள் கோலோச்சுகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை; 1919-ல் காங்கிரஸ் தலைவராக மோதி லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிந்தைய இந்த நூறாண்டுகளில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் நேரு குடும்பமே காங்கிரஸ் தலைமையை நேரடியாக வகித்திருக்கிறது என்கிற ஒரு வரி அதற்குப் போதும். எதிர்ப்புறம் இதைக் கடுமையாக விமர்சிக்கும் பாஜகவின் நிலைமையும் குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதுதான் மறைக்கப்படும் உண்மை. பிரம்மச்சாரியாக அறியப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சகோதர வாரிசுகள் கருணா சுக்லா, அனூப் மிஸ்ரா இருவரையும்கூட நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கி மகிழ்ந்த கட்சி அது.

மோடி அரசின் முதலாவது ஆட்சியில் இடம்பெற்ற 75 அமைச்சர்களில் 15 பேர் குடும்ப வாரிசுகள்; மக்களவையில் பாஜகவின் 38 உறுப்பினர்களின் தந்தையர்  முதல்வர்களாகவோ, துணை முதல்வர்களாகவோ பதவி வகித்தவர்கள். பாஜகவின் மாநில முகங்களான முன்னாள் முதல்வர்கள் கல்யாண் சிங், ராஜ்நாத் சிங், பிரேம்குமார் தூமல், வசுந்தரா ராஜே சிந்தியா, சிவ்ராஜ் சிங் சௌஹான், எடியூரப்பா, ரமண் சிங் யாவரின் மகன்களும் பாஜகவில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலர் கடந்த மக்களவையிலோ, இந்த மக்களவையிலோ உறுப்பினர்கள். மேலும், இன்றைய பாஜகவின் மூன்று முதல்வர்கள் அரசியல் வாரிசுகள்: தேவேந்திர பட்நவீஸ், யோகி ஆதித்யநாத், பெமா காண்டு.

முக்கியமான ஒரு வேறுபாடு

இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழும். குடும்ப அரசியலை காங்கிரஸும் கைக்கொள்கிறது; பாஜகவும் கைக்கொள்கிறது. எனில், விளைவுகளில் மட்டும் இரு கட்சிகளிடையே பாரதூர வேறுபாடு எப்படி ஏற்படுகிறது? குடும்ப அரசியலால் பாஜக அனுகூலங்களைப் பெற காங்கிரஸ் மட்டும் ஏன் சீரழிகிறது?

ஒரு சமூகத்தில் நடைமுறையில் இருக்கிற எந்தப் பண்பும் அதன் ஜனநாயகத்தில் பிரதிபலிப்பது இயல்பு. அந்த அடிப்படையில் நிச்சயமாக ஜனநாயகத்தில் குடும்ப அரசியலுக்கும் ஒரு இடம் இருக்கிறது. ஆனால், அதை ஒரு அரசியல் கட்சி எப்படிக் கையாள்கிறது என்பதில்தான் அதன் சாதுரியம் இருக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில், அதிபரின் பதவிக் காலம் நான்காண்டுகள் என்பதோடு, இரு முறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவியை வகிக்க முடியாது என்று அரசமைப்பே கட்டுப்படுத்திவிடுவதால், அதற்கு மேல் அரசியலில் ஒருவர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்த அரசமைப்பே தடையாகிவிடுகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும், ஒருவர் ஆட்சியில் நீடிக்கலாம் என்ற சூழல் நிலவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கட்டுப்பாடானது கட்சிகளின் பொறுப்பாகிறது. இந்த இடத்தில்தான் பாஜகவின் சாதுரியம் கவனிக்கப்பட வேண்டியதாகிறது.

குடும்ப அரசியலை அரவணைத்துக்கொள்ளும் அதே சமயத்தில், நேரடி வாரிசுரிமை அரசியலை பாஜக பின்பற்றவில்லை. அதாவது, காங்கிரஸில் ராஜேஷ் பைலட்டின் மகனுக்கு எப்படி ஒரு சிறப்பு நுழைவு கிடைக்கிறதோ, அப்படி பாஜகவில் கோபிநாத் முண்டேவின் மகளுக்கும் ஒரு சிறப்பு நுழைவு கிடைக்கும்; ஆனால், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தாண்டிய உயரத்துக்கு - இந்திராவுக்குப் பின் ராஜீவ், சோனியாவுக்குப் பின் ராகுல் என்று காங்கிரஸைப் போல கட்சியிலோ, ஆட்சியிலோ – நேரடி வாரிசுரிமையை மட்டுமே பெரும் தகுதியாகக் கொண்டு அவர்களால் அமர முடியாது.

அமெரிக்க பாணியில் ஒரே நபர், தலா மூன்றாண்டுகள் என்று இரு முறைகளுக்கு மேல் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதைத் தடுப்பதோடு, கட்சியிலும் ஆட்சியிலுமாக இரு பதவிகளை ஒரே நேரத்தில் ஒருவர் வகிப்பதையும் தடுக்கும் வகையிலான கட்சி விதிகளை பாஜக வரித்துக்கொண்டிருப்பதும், ‘75 வயதோடு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு கொடுத்துவிடுவது’ என்று அது சமீப காலத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கிற புதிய நடைமுறையும்கூட குடும்ப அரசியலின் செல்வாக்கை மறைமுகமாகக் கட்டுப்படுத்தக்கூடியவை. மேலும், கட்சியிலும் ஆட்சியிலும் ‘தீர்மானிக்கும் இடங்களில்’ அமர சித்தாந்தப் பிடிப்பும், கடின உழைப்பும் பாஜகவில் எல்லோருக்கும் அவசியமானதாகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால், கீழே குடும்ப அரசியலை நெகிழ்வாக அணுகும் பாஜக, தன்னுடைய தலைமையிடத்துக்கு ஒருவரைக் கொண்டுவருகையில் கறாரான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கிறது. காங்கிரஸோ மேலிருந்து கீழ் வரை குடும்ப அரசியலை அணைத்துக்கொள்வதுடன் நேரடி வாரிசு அரசியலுக்கும் இடமளிக்கிறது. விளைவாக, கட்சியில் குடும்ப வாரிசுகள் அனுகூலத்தைத் தாண்டி சுமையாகவும் சீரழிவாகவும் மாறும்போது, பாஜக தலைமையைப் போல காங்கிரஸ் தலைமையால் அவர்களைக் கேள்வி கேட்க முடியவில்லை; குடும்ப அரசியலின் அத்தனை இழிவுகளையும் கட்சி சுமக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மாநிலக் கட்சிகள் காங்கிரஸின் பாணியையே பின்பற்றின. விளைவாகவே இன்று பெரும் சீரழிவைச் சந்தித்து நிற்கின்றன.

ஒரு தந்தை அல்லது தாய் அவர்கள் சார்ந்திருக்கும் துறைக்குக் கொடுக்கும் அர்ப்பணிப்பு - உழைப்பும், அதன் மூலம் அவர்கள் பெறும் அனுபவம் - அங்கீகாரமும் அவர்களுடைய பிள்ளைகளுக்கான சமூக முதலீடு. தாய், தந்தை அரசியலைத் தேர்ந்தெடுத்தாலேயே அவர்களுடைய குழந்தைகள் அரசியலுக்கு வரக் கூடாது என்றோ, தம் பெற்றோரின் சமூக முதலீட்டைத் துறக்க வேண்டும் என்றோ அரசியல் துறையினரை மட்டும் எவரும் வலியுறுத்த முடியாது. ஆனால், அப்படி வருபவர்கள் போட்டியை எதிர்கொள்கையில், எல்லோருக்கும் சமமான தளத்தில் நிற்க வேண்டும். கீழிருந்து வரும் ஒரு தொண்டர் ஒருவர் தலைமையிடம் நோக்கி வர அவரிடம் என்னென்ன தகுதிகளைக் கட்சி எதிர்பார்க்கிறதோ அவற்றை ஒரு வாரிசும் வளர்த்துக்கொண்டிருக்க வேண்டும்; உரிய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தனிப்பட்ட வகையில் கொடுத்திருக்க வேண்டும். இந்த இடத்தில்தான் நேரடி வாரிசு அரசியல் முறை மோசமான சறுக்கலைச் சந்திக்கிறது.

வாரிசு அரசியல் கேட்கும் பெரிய பலி

அரசியல் தகுதிகளை வலுவாக வளர்த்துக்கொள்ள முடியாத பெரும்பான்மை வாரிசுகள் கட்சிக்குள் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் எளிய முறை வலுவான தலைவர்கள் எவரும் உருவாகாமல் பார்த்துக்கொள்வதும் நிபந்தனையற்ற விசுவாசிகளை வளர்த்துவிடுவதும்தான். கட்சிக்குள் தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு இதைச் சாதித்துக்கொள்பவர்கள் கட்சிக்கு வெளியே சவாலான போட்டியாளர்களை எதிர்கொள்கையில் ஈடுகொடுக்க முடியாமல் முடங்குகிறார்கள்.

நம் சமூகத்தில் பெரும்பாலானோர் இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட கட்சியின் சொந்த விவகாரமாகப் பார்க்கின்றனர். இது தவறு. சம்பந்தப்பட்ட கட்சி செல்வாக்கானதாக இருக்கும்பட்சத்தில், அந்தக் கட்சியை மட்டும் அல்லாது சமூகத்தில் அது பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரும் மக்கள் திரளையும், குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தையுமேகூட சீரழிப்பதாக நேரடி வாரிசு அரசியல் அமைந்துவிடுகிறது. இந்தியாவில் ஒரு வாரிசின் சராசரி அரசியல் காலம் 40 ஆண்டுகள் என்பதை இங்கே நினைவுகூர வேண்டும் - இந்துத்துவரும், கம்யூனிஸ்ட்டுமான நிர்மல் சாட்டர்ஜியின் வாரிசு சோம்நாத் சாட்டர்ஜி 10 மக்களவைகளில் இடம்பெற்றிருந்தார்.

நாம் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். இன்றைய காங்கிரஸில், அதன் சித்தாந்தம் மற்றும் பண்புகளுக்கு ஏற்ற ஒருவர் மோடிபோலக் கீழிருந்து மேலே வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா?

மோடி போன்று கீழிருந்து வரும் ஒருவர் கட்சியில் உச்சத்தைக் கனவு காண்பதற்கான, கற்பனைக்கான இடமே காங்கிரஸில் இல்லை. மேலே இந்திரா, அவருக்கு அடுத்து ராஜீவ், அவருக்கு அடுத்து சோனியா, அவருக்கு அடுத்து ராகுல் என்ற நேரடி வாரிசுச் சமன்பாடு உறுதியாக இயங்கும் ஒரு கட்சியிலுள்ள எந்தத் தொண்டரும் தன்னை காங்கிரஸின் தலைவராகக் கனவு காண மாட்டார்; ஏனென்றால், அப்படியான சாத்தியம் துளிகூட அவர்கள் கண் முன் தெரிவதில்லை. மேலும், ஏற்கெனவே இருக்கும் தலைமையிடம் காட்டும் விசுவாசமே கட்சிக்கும் தொண்டருக்கும் இடையிலான பிணைப்பாகிறது; இப்படிப்பட்ட சூழலில், இயல்பாக இடையில் கட்சியின் சித்தாந்தமும், உட்கட்சி ஜனநாயகமும் உதிர்ந்துபோகின்றன.

உண்மையில், இந்திராவும் ராஜீவும் சோனியாவும் காங்கிரஸிடமிருந்து சூறையாடிய பெரும் சொத்து அதுதான்; இந்திரா குடும்பத்தின் நேரடி வாரிசு அரசியலானது காங்கிரஸாரின் கற்பனையைக் களவாடிக்கொண்டது. காங்கிரஸ் என்றால், காங்கிரஸ் மட்டும் அல்ல; கூடவே, காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும், காங்கிரஸின் மனவோட்டத்தை ஒட்டிய இந்திய சமூகத்தின் ஒரு பெரும் மக்கள் திரளின் அரை நூற்றாண்டு தலைமைத்துவக் கற்பனையையும் தொலைநோக்கையும் இந்திரா குடும்பத்து நேரடி வாரிசு அரசியல் உட்செரித்துவிட்டது. அதன் வெளிப்பாட்டையே ராகுல் பதவி விலகி ஒரு மாதமாகியும் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் அக்கட்சி ஸ்தம்பித்து நிற்பதன் வழி பார்க்கிறோம்.

திமுகவினுடையது மட்டும் அல்ல இழப்பு

இப்போது திமுக கதைக்குத் திரும்புவோம். இன்றைய திமுகவில் கீழிருந்து ஒரு கருணாநிதி மேல் நோக்கி வர அதில் இடம் இருக்கிறதா? கிடையாது. இன்றைய திமுக கைக்கொள்ளும் நேரடி வாரிசு அரசியலால் உதயநிதிகளைத்தான் உற்பத்திசெய்ய முடியும்; கருணாநிதிகளை அல்ல. ஏன்? ஏனென்றால், கருணாநிதிகளைக் கீழேயே பலியிடுவதன் வாயிலாகத்தான் உதயநிதிகள் மேலே நிற்க முடியும்.  மேலும், திமுகவின் இழப்பு என்பது திமுகவின் இழப்பு மட்டுமே அல்ல; கூடவே, திமுக பிரதிநிதித்துவப்படுத்தும், திராவிட சித்தாந்த மனவோட்டத்தை ஒட்டிய தமிழ்ச் சமூகத்தின் ஒரு பெரும் மக்கள் திரளின் ஒரு தலைமுறை தலைமைத்துவக் கற்பனையையும் தொலைநோக்கையும் கருணாநிதி குடும்பத்து நேரடி வாரிசு அரசியல் உட்செரித்துவிட்டது. உதயநிதி நியமனம் அதை மேலும் நீட்டிக்கிறது!

ஜூலை, 2019, ‘இந்து தமிழ்’

6 கருத்துகள்:

 1. கட்சித்தலைவர் பதவி மட்டுமல்ல மாவட்ட செயலாளர்களும் தாங்கள் வந்த வழியை அடைத்து கொண்டிருக்கின்றார்கள்

  பதிலளிநீக்கு
 2. you are too soft on dmk. you started as if you were about to criticise wha5 happened in dmk. then you go on finding evidences what is happening in the global scene. then you bring national politics into picture. then some half baked attempt about castiesm saying because sonia is a christian, karunanidhi is backward caste etc...Samas...you have strayed a lot in three years...

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. சகோ,
  பிரஸ்தாபிக்கப்பட்ட - இதன் பொருள் என்ன?? இது தமிழ் சொல் தானா

  பதிலளிநீக்கு