சுஜித் மரணத்துக்கு யார் பொறுப்பாளி?


சமூகவியலாளர் சீனிவாச ராமாநுஜம் அமெரிக்கா போனார். அமெரிக்காவுக்கு அது அவரது முதல் பயணம். நியூயார்க் புறநகர் விடுதி ஒன்றில் தங்குவதற்கு அவருக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கே சில வாரங்கள் அவர் தங்கியிருக்க வேண்டும். கொட்டும் பனியும் வீட்டு நினைவும் ஓய்வு நாள் ஒன்றில் இந்தியவுணவு சாப்பிடும் ஆசையை அவருக்குள் கொண்டுவந்தன. அங்காடிக்குச் சென்று, ஆயத்த தோசை பொட்டலத்தை வாங்கிவந்தவர் ஓவன் அடுப்பில் அதைச் சூடாக்க வைத்தார். தொலைபேசி அழைப்பானது சில நிமிஷங்கள் அவர் கவனத்தைப் பறித்துவிட அறை முழுக்கப் புகை மண்டியது. அடுப்பு தீப்பிடிக்கும் முன்னர் அவர் அதை அணைத்தாலும் தீ அலாரம் ஒலிக்கத் தொடங்கலானது. ஜன்னல்களை அவசரமாகத் திறக்க முற்பட்டார் ராமாநுஜம். விடுதி வரவேற்பறையிலிருந்து தொலைபேசி அழைப்பு. முதல் கேள்வி: “நீங்கள் பத்திரமா?”

விடுதிப் பணியாட்கள் ஓடி வருகிறார்கள். முதல் கேள்வி: “உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே!” அடுப்பை மின் இணைப்பிலிருந்து அவர்கள் துண்டிக்கிறார்கள். எல்லா ஜன்னல்களும் திறக்கப்பட்டு, புகை வெளியேற்றப்படுகிறது. ஆனாலும், தீ அலாரம் சத்தம் போடுவதை நிறுத்தியபாடில்லை. “இதை நிறுத்தலாமா?” என்கிறார் ராமாநுஜம். “இதை நிறுத்த எங்களுக்கு அதிகாரமில்லை. தீயணைப்புத் துறையினர் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்துதான் நிறுத்த வேண்டும்.”

ஓரிரு நிமிஷங்களில் தீயணைப்பு வாகனம் வருகிறது. அறையைப் பார்வையிடுகிறார்கள். தீ அலாரத்தை நிறுத்துகிறார்கள். அடுப்பைப் பத்திரமாகத் தாங்கள் கொண்டுவந்த பெட்டிக்குள் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்கள். விடுதிப் பணியாளர்கள் சொல்கிறார்கள்: “அது தடயவியல் துறை ஆய்வுக்குச் செல்லும். ஒருவேளை கூடுதல் நேரம் சூடாக்கப்பட்டு, தீப்பிடிக்கும் சூழல் உண்டானால் அடுப்பு தானாக மின்சாரத்தைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். தீப்பற்றும் சூழல் உண்டாகக் காரணம் என்ன - அந்தச் சாதனத்தின் தயாரிப்பில் உள்ள குளறுபடியா அல்லது பயன்படுத்தப்பட்ட விதத்தில் உள்ள குளறுபடியா என்று தடயவியல் துறையினர் கண்டறிவார்கள். தவறு நம் தரப்பிலானது என்றால், பிரச்சினை இல்லை; அடுப்புக்குக் காப்பீடு செய்திருக்கிறோம் வந்துவிடும்; ஒருவேளை அடுப்பு தயாரிப்பில் ஏதும் பிரச்சினை என்று கண்டறியப்பட்டால் அந்த நிறுவனம் தண்டனைக்குள்ளாகும்” என்கிறார்கள் விடுதிப் பணியாளர்கள்.

தன்னுடைய வேலைக்குப் புறப்படுகிறார் ராமாநுஜம். மாலையில் அவர் தனது அறைக்கு வந்தபோது புத்தம் புதிய ஓவன் அடுப்பு ஒன்று அங்கே இருக்கிறது. சில நாட்களில் ராமாநுஜம் விடுதியைக் காலிசெய்து ஊருக்குப் புறப்படுகிறார். எந்த சேதத்துக்கும் அவரிடம் விடுதி நிர்வாகம் ஒரு டாலர்கூட வாங்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியம், அவரை யாருமே குற்றஞ்சாட்டவில்லை; அப்படி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு பேரிடருக்குப் பிறகும் நடக்கும் பழிபோடும் விளையாட்டின்போதும், இந்தக் கதையும் அது உள்ளடக்கியுள்ள ஒவ்வொரு இழையும் நினைவுக்கு வரும். ஒரு பேரிழப்புக்குப் பிறகும், பொறுப்பேற்பு தனி மனிதர்களுடையதா; அரசினுடையதா என்று விவாதிக்கும் ஒரு சமூகத்திடம் யாராலும் பொறுப்புணர்வை உட்புகுத்திவிட முடியாது. தனிமனிதர்கள் தவறிழைப்பது இயல்பு; அதை எதிர்கொள்ள ஒரு அமைப்பு ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு பொறுப்புணர்வோடும் திட்டமிடலோடும் செயல்படுகிறது; ஒரு தனிநபரின் பிரச்சினையை எப்படி சமூகத்தினுடைய ஒரு உறுப்பின் பிரச்சினையாகக் கருதி அது அணுகுகிறது என்பதன் மூலமாகவே அமைப்புகள் சமூக மதிப்பீட்டைப் பெறுகின்றன.

நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் சுஜித், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து நான்கு நாட்கள் போராட்டத்துக்குப் பின்னும் சிதைந்த சடலமாக மீட்கப்பட்டது நம் ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டிய குற்றம் என்றே நான் நினைக்கிறேன். குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோரைக் காரணமாக்கிப் பேசுவது வக்கிரம்.ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் இந்தியா முழுக்கவும் நடக்கிறது. இந்திய விவசாயிகள் தம் உயிரைக் காத்துக்கொள்ள இன்று கடைசி வழியாக நம்பியிருப்பது ஆழ்துளைக்கிணறு. ஒவ்வொரு ஆழ்துளைக்கிணறும் லட்சங்களில் உருவாகிறது. வீழும் நிலத்தடி நீர்மட்டம் காரணமாக நூறடி தொடங்கி ஆயிரமடி வரை தோண்டப்படும் ஒரு கிணறு பொய்த்துப்போவது ஒரு விவசாயக் குடும்பத்தின் முதுகெலும்பை முறித்துவிடும் சுமை. கடனுக்குக் காசு வாங்கி இன்னொரு கிணற்றை முயற்சிக்கும் விவசாயிகள் முந்தைய கிணற்றை முழுமையாக அடியாழம் வரை களிமண், கற்கள், மணல் கலவையைக் கருவிகள் துணையோடு உட்செலுத்தி மூட வேண்டும் என்பது எல்லோருக்கும் இயலக்கூடியதல்ல.

சுஜித்தின் பெற்றோர் தங்கள் நிலத்தில் சில வருஷங்களுக்கு முன் கைவிடப்பட்ட ஆழ்துளைக்கிணற்றைத் தங்களாலான வகையில் மூடியிருக்கிறார்கள். மழை அந்த அரைகுறை மூடலில் பள்ளத்தைத் தோற்றுவித்திருக்கிறது. குழந்தையைப் பெற்றவர்களுக்குப் பொறுப்பு வேண்டாமா என்று கேட்டால், பொறுப்பு வேண்டும்; கேள்வி என்னவென்றால், ஒரு குழந்தையின் உயிருக்கு அதன் பெற்றோர் மட்டும்தான் பொறுப்பா? ஒரு ஜனநாயக நாடு, பொறுப்புள்ள குடிமைச் சமூகம் ஒவ்வொரு உயிரும் அவரவர் பொறுப்பு என்று கருதுமேயானால் அது வெட்கக்கேடு இல்லையா?

எளிய மக்களின் உயிர் - அதிலும் கிராமப்புற எளிய மக்களின் உயிர் இந்த நாட்டில் துச்சம். சாமானிய உயிருக்கு இந்நாட்டிலுள்ள துச்சமான மதிப்புபிலிருந்தபடிதான் பிள்ளையைப் பறிகொடுத்தவர்களையே குற்றவாளிகளாக்கிப் பேசும் தடித்தனம்  உயிர் வளர்க்கிறது. ஒரு சாமானிய உயிர் இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதையே கண்டிராத மனதிலிருந்துதான் சுஜித்துக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம்கூட எரிச்சலாக வெளிப்படுகிறது.

மன்னியுங்கள், நாம் அந்த இடத்தில்தான் இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் சென்ற பத்தாண்டுகளில் 13 குழந்தைகள் இப்படி ஆழ்துளைக்கிணறுகளில் விழுந்திருக்கிறார்கள். இந்தியா முழுக்க இந்தக் கணக்கெடுப்பை நீட்டித்தால் எண்கள் நீண்டுகொண்டே செல்லும். ஆனாலும், இதற்கான மீட்புப்பணி, அதற்கான சாதனங்கள், அதற்குரிய திட்டமிட்ட நடைமுறைகள் என்று எதுவுமே நம் நாட்டில் இதுவரை வரையறுக்கப்படவே இல்லையே, ஏன்? இந்த அலட்சியத்துக்கும், இப்படி விழும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் எளிய மக்களின் குழந்தைகள்; சமூகத்தில் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருப்பவர்களின் குழந்தைகள் இப்படி விழ பெரும்பாலும் வாய்ப்பில்லை என்ற பின்னணிக்கும் தொடர்பே இல்லையா என்ன?

புதைசாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகளில் இயந்திரங்களுக்குப் பதிலாக மனிதர்களை இறக்கி கடந்த கால் நூற்றாண்டில் 620 பேரைக் கொன்றிருக்கிறோம். யார் பொறுப்பு?  ஐந்தாண்டுகளில் சாலைப் பள்ளங்கள் மட்டும் 14,926 உயிர்களைப் பறித்திருக்கின்றன. யார் பொறுப்பு? சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறோம்; எளிய மக்களின் குழந்தைகளைப் பாதுகாக்க ஏன் முடியவில்லை என்ற சாமானியர்களின் கேள்வி மேலோட்டமானது இல்லை. நம்முடைய அறிவியல் வளர்ச்சி எந்த அளவுக்கு சாமானிய மக்களின் வாழ்க்கையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கிறது; நம்முடைய விஞ்ஞான அரசியல் எத்தகைய பண்பை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது என்கிற கேள்வியையே அது சாமானிய பாஷையில் வெளிப்படுத்துகிறது.

சுஜித் மரணம் மிக முக்கியமான ஒரு விஷயத்தை மீண்டும் நம் கவனம் நோக்கித் தள்ளியிருக்கிறது: பேரிடர் மேலாண்மை அமைப்புகள், பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகள் இந்த நாட்டில் எந்த அளவிற்கு வலுவாக இருக்கின்றன? இது ஆழ்துளைக்கிணறு விபத்துகள் சம்பந்தப்பட்ட விஷயம்  மட்டும் அல்ல. சர்வதேசத்துடன் போட்டியிடும் அணு உலைகள், பெரும் ஆலைகள், பேரபாயத் திட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்க் கேள்வி கேட்போரை முடக்கி நம் மண்ணில் அனுமதிக்கிறோம். நாளை ஒரு விபரீதம் என்றால், அதை எதிர்கொள்ள எந்த அளவிற்கு நாம் முன்தயாரிப்போடு இருக்கிறோம்? கூடங்குளத்திலோ, கல்பாக்கத்திலோ ஒரு விபத்து என்றால் நம்முடைய அமைப்புகள் எந்த அளவிற்குத்  துரிதமாகச் செயலாற்றும் வல்லமையைப் பெற்றிருக்கின்றன?

சுஜித்தை மீட்க நான்கு நாட்களுக்கும் மேலாகப் போராடிய ஒவ்வொருவரின் அக்கறையும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியன. மகத்தான அந்த மனிதநேய வெளிப்பாடு தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நடந்த கண்ணீர் மல்கிய பிரார்த்தனைகளுக்கு ஒப்பானது. ஆனால், பேரிடர் மேலாண்மை என்பது அந்த நேர அக்கறை மட்டும் அல்ல; முன்னெச்சரிக்கையிலிருந்து கூடிய நிபுணத்துவம், முன்கூட்டிய கற்பனை,  முன்கூட்டிய திட்டமிடல், முன்கூட்டிய தயாரிப்பு, காலத்தே வெளிப்படுத்தப்படும் செயலாற்றல்!

சுஜித் மரணத்தையொட்டி நம்மூரில், ‘பொறுப்பு யாருடையது?’ என்ற விவாதத்துக்குத் தொக்காக 1987-ல் அமெரிக்காவில் இப்படி ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த கைக்குழந்தை ஜெஸிகா சிக்கிய விவகாரத்துக்குப் பின் அமெரிக்க பெற்றோர் மத்தியில் உண்டான விழிப்புணர்வும்,   ஆழ்குழாய்க்கிணறு விவகாரத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும் கதையாகப் பேசப்படுவதைக் கேட்க முடிகிறது. அமெரிக்கக் கதையில் ஜெஸிகா மீட்கப்பட்டார். எனினும் அதன் பின், அப்படியொரு குழந்தை இனி குழியில் சிக்கிவிடும் சூழலும்கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உறுதியை ஒட்டுமொத்த அமெரிக்கச் சமூகமும் சேர்ந்தே ஏற்றது. ஒவ்வொரு தனிமனிதரில் தொடங்கி அரசு வரை பொறுப்பெடுத்துக்கொள்வதன் வழியாகவே சாத்தியமானது அது. பொறுப்புத்துறத்தல் அல்லது பழிபோடுதல் வழியாக நடந்தது அல்ல அது!

அக்டோபர், 2019, ‘இந்து தமிழ்’

2 கருத்துகள்:

  1. //சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறோம்; எளிய மக்களின் குழந்தைகளைப் பாதுகாக்க ஏன் முடியவில்லை என்ற சாமானியர்களின் கேள்வி மேலோட்டமானது இல்லை. நம்முடைய அறிவியல் வளர்ச்சி எந்த அளவுக்கு சாமானிய மக்களின் வாழ்க்கையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருக்கிறது; நம்முடைய விஞ்ஞான அரசியல் எத்தகைய பண்பை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது என்கிற கேள்வியையே அது சாமானிய பாஷையில் வெளிப்படுத்துகிறது.//

    அருமையாக சொன்னீர்கள்.
    சுஜித்தின் சம்பவம், அது போன்றவை நடைபெறுகின்ற போது வெளிநாட்டு நண்பர்கள் மிகவும் வருந்துகிறேன் என்று தெரிவித்து பின் மௌனமாகவே இருப்பார்கள். அவர்கள் மௌனத்தின் காரணத்திற்கு பின்னால் சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகின்ற நீங்க இப்படி எல்லாம் செய்யலாமா என்றே இருக்கும் என்பதை நினைத்து வெட்கி அவமானமாகி போவேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான, ஆழமான பதிவு. தொன்று தொட்டே நாம் பழி காண பழகிவிட்டோம். பிரச்சனையா, சிக்கலா? வீடு முதல் சமூகம் வரை நம் பொறுப்பு உணர்வதில்லை. சமூக கட்டமைப்பில் தனி மனித அக்கறை எத்தகைய முக்கியம் என்பதை என்று உணரப் போகிறோம் எனத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு