கரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா?



இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன என்ற க்வோ ஜிங்கின் நாட்குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தேன். வூஹான்வாசியான ஜிங் ஓர் இளம்பெண்; சமூகச் செயல்பாட்டாளர். ஜனவரியில் வூஹான் முடக்கப்பட்ட முதல் வார அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

முடக்கப்பட்ட அன்றாடம்

அன்று காலை ஜிங் எழுந்தபோது நகரம் முற்றாக முடக்கப்பட்ட செய்தி அவரை வந்தடைகிறது. இந்தச் செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது என்று அவருக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அப்படி ஒரு முன்னனுபவம் எல்லா வூஹான்வாசிகளையும்போல அவருக்கும் இல்லை. அதற்கு எப்படித் தயாராக வேண்டும், எவ்வளவு நாட்கள் நீடிக்கும்... எதுவும் தெரியவில்லை.

உடனடியாக வெளியே செல்கிறார். கடைகள் கூட்டத்தால் சூழப்பட்டிருக்கின்றன. அரிசி, நூடுல்ஸ், ரொட்டி, காய்கறிகள் என்று உணவுப் பொருட்கள் விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு மனிதர் ஏராளமான அளவில் உப்பு வாங்கிக்கொண்டிருக்கிறார். ‘ஏன் இவ்வளவு வாங்குகிறீர்கள்?’ என்று அவரிடம் இன்னொருவர் கேட்பதற்கு, ‘ஓராண்டுக்கு இதே நிலை நீடித்தால் என்ன செய்வது?’ என்கிறார். ஜிங் அதிர்ந்துபோகிறார்.

ஜிங்குக்கு எப்படியும் அவருக்குத் தேவையானவை கிடைத்துவிடுகின்றன. சீக்கிரமே நகரம் முடங்கிவிடுகிறது. குறிப்பிட்ட நேரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கான இடங்கள், கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வருகிறார்கள். பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கின்றன; திரையரங்குகள், மைதானங்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. விழாக்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் எதுவும் இல்லை. மனிதர்களுக்குள்ளான எல்லா உரையாடல்களும் சுருங்கிவிடுகின்றன. சிந்தனை முழுமையையும் கிருமி  ஆக்கிரமித்திருக்கிறது. ஜிங் தனிமையில் உழல்கிறார். சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. இடையிலேயே சீனப் புத்தாண்டு வருகிறது. அதுவும் பெரும் அச்சத்தினூடாகவும் அமைதியினூடாகவுமே கரைகிறது. ‘இந்த அமைதி என்னை அச்சுறுத்துகிறது; அருகிலுள்ள வீடுகளிலிருந்து ஏதாவது சத்தம் வரும்போதுதான் எனது அருகில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதையே உணர முடிகிறது’ என்று எழுதுகிறார் ஜிங்.

ஒரு நாள் காலாற வெளியே நடக்கும் எண்ணம் ஜிங்குக்கு வருகிறது. சாலையில் நடக்கிறார். பரபரப்பான அந்த நகரின் சாலைகள் இப்போது வெறிச்சோடி அங்கொருவர், இங்கொருவரோடு காட்சி அளிக்கிறது; பேருந்துகளில் ஆறேழு பேர் உட்கார்ந்து செல்கிறார்கள். ஜிங் கண்கள் கலங்குகின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும்?

சீனா உறுதியாகப் போராடுகிறது. அதன் தொழில்நுட்பப் பலமும், ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாகமும், அடுத்தடுத்த திட்டமிடலும் நோயோடு தீவிரமாகப் போராடுகின்றன. கரோனா சம்பந்தமான ஆய்வுகள் தரும் ஒரே ஆறுதல் செய்தி, முந்தைய பல வைரஸ்களைக் காட்டிலும் இதில் பாதிக்கப்படுவோரின் இறப்பு விகிதம் சற்றுக் குறைவு. மோசமான செய்தி, இதன் தொற்றுவிகிதம் அதிகம். கிருமி கண்கள் வழியாகவும்கூட பரவுகிறது. கிருமியின் தாக்குதலுக்குள்ளாகும் ஒருவர் அதிகபட்சம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கும்கூட அதைக் கடத்திவிடுகிறார். இன்று வரை தடுப்பு மருந்தோ, உரிய சிகிச்சையோ கண்டறியப்படாத நிலையில், அரசுகளின் பிரதான வேலை, கிருமிப் பரவலைத் தடுப்பது. ஏனென்றால், பரவல் அதிகரிக்க அதிகரிக்க இழப்புகளும் அதிகரிக்கும்.

இத்தாலியின் போராட்டம்

சீனாவுக்கு அடுத்து பெரும் விலையை கரோனாவுக்குக் கொடுத்திருக்கும் இத்தாலி, இந்த விஷயத்தில் துரிதமாகவே செயல்பட்டதுபோலத் தெரிந்தது. இத்தாலியில் வசிக்கும் நீலின் சர்க்காரின் அனுபவங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். நீலின் சர்க்கார் ஒரு பத்திரிகையாளர். ஜனவரியின் பிற்பகுதியிலிருந்து இத்தாலியின் அன்றாடத்தை எப்படி மெல்ல கரோனா மாற்றியமைத்தது என்று எழுதுகிறார்.

சீனாவில் நடப்பதை எங்கோ யாருக்கோ நடப்பதாகச் செய்தியில் பார்த்துக்கொண்டிருந்தவர்களை வெகு சீக்கிரம் அது நெருங்கி வருகிறது. படிப்படியாகப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்படுகின்றன. கால்பந்து மைதானங்கள் வெறிச்சோடுகின்றன. உணவு விடுதிகளின் செயல்பாடுகள் 6-6 மணி எல்லைக்குள் சுருங்குகின்றன. விளையாட்டு மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன. வீதிகள் ஆவியாகின்றன. பொதுவிடங்களில் முகமூடிகளோடு மூன்றடி இடைவெளியைப் பராமரிப்பவர்களாக மனிதர்கள் மாறுகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் கரோனாவின் தாக்குதல் வேகத்தை இத்தாலியால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இத்தாலி பிரதமர் செப்பி கான்ட்டே நேற்று தேசிய நெருக்கடியை அறிவித்திருக்கிறார். “நாடு மிகவும் துயரகரமான கட்டத்தில் இருக்கிறது” என்றவர், பிரிட்டனின் சவாலான காலகட்ட பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பழைய உரைகளை நினைவுகூர்ந்திருக்கிறார். நாட்டு மக்கள் இடையே தொலைக்காட்சி வழியே செப்பி கான்ட்டே உரையாற்றினார். “கிருமி  பரவுவதைத் தடுத்தாக வேண்டும்; மக்களைக் காத்தாக வேண்டும்; அதற்கு நாம் ஒவ்வொருவரும் நம்மாலான பங்களிப்பைச் செய்தாக வேண்டும். இப்போதைக்கு கிருமியிடமிருந்து தப்பிக்க நீங்கள் செய்தாக வேண்டியது கூடுமானவரை வீட்டுக்குள்ளேயே இருப்பதுதான். நான் வீட்டிலேயே இருப்பேன் என்று முடிவெடுங்கள். பொது இடங்களைத் தவிர்த்திடுங்கள். நிலைமை சீரடையும் வரை கேளிக்கைகளே வேண்டாம். மிகக் கொடிய கிருமியை எதிர்த்து வென்றாக வேண்டிய காலம் இது!”

அத்தியாவசியம் தவிர்த்து, வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தியிருப்பதோடு, அவசிய வெளித்தேவைகளுக்கும் அனுமதிக்குப் பிறகே பயணிக்க வேண்டும் என்று இத்தாலி உத்தரவிட்டிருக்கிறது. “நாங்கள் உறுதியான ஒரு செய்தியை ஐரோப்பாவுக்கு அனுப்புகிறோம்: தயாராகுங்கள்!” என்று சொல்லியிருக்கிறார்கள் இத்தாலி மருத்துவர்கள். இத்தாலியின் நிலை மொத்த ஐரோப்பாவின் நிம்மதியையும் குலைத்திருக்கிறது. இத்தாலியின் மருத்துவக் கட்டமைப்பு பலமானது என்பதோடு, மருந்து உற்பத்தித் துறையில் ஐரோப்பாவிலேயே முதலிடத்தில் உள்ள நாடும் அது.

இந்திய ஏற்பாடுகள் போதுமா?

இந்திய அரசு கரோனா விஷயத்தில் மிகத் தாமதமாகவே கண் விழித்தது என்றாலும், நிறைய நடவடிக்கைகளை இப்போது முன்னெடுக்கலாகியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் போதுமா, ஒருங்கிணைப்பில் ஏன் இவ்வளவு இடைவெளிகள், ஒருவேளை கிருமியின்  தாக்குதல் பெரிதானால் என்ன திட்டங்கள் என்று ஏராளமான கேள்விகள் எழுகின்றன. மக்கள் பீதியடையத் தேவை இல்லை; ஆனால், அரசாங்கம் பெரிய முன்னேற்பாடுகளோடுதான் இருக்க வேண்டும், இல்லையா?

சின்ன விஷயங்கள்…

நாட்டின் பெரும்பாலான அரசு, தனியார் அலுவலகங்கள் இன்று ‘பயோ மெட்ரிக் முறை’ வழியேதான் வருகைப்பதிவை மேற்கொள்கின்றன. நோய்த்தொற்றைத் தடுக்கும் விதமாக டெல்லியிலுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் தன் அலுவலகத்தில் தற்காலிகமாக இதை நிறுத்திவைப்பது என முடிவெடுத்திருக்கிறது. உரிய துறைகள் வழியே ஒட்டுமொத்த நாடும் இதைப் பின்பற்ற உத்தரவிடுவதில் என்ன பிரச்சினை?

கரோனா அபாயத்தை ஒட்டி ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்த்திருக்கிறார் பிரதமர் மோடி. நல்ல விஷயம். ஆனால், நாடு முழுக்க பல லட்சம் பேர் பங்கேற்கும் திருவிழாக்கள் தடையின்றி நடக்கின்றன. தாஜ்மஹாலைப் பார்வையிட மட்டும் ஒவ்வொரு நாளும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆக்ரா வருகின்றனர்; நாடு முழுக்கவுள்ள நூற்றுக்கணக்கான சுற்றுலாத்தலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்படி ஒவ்வொரு நாளும் கூடுகின்றனர்; வெளிநாட்டிலிருந்து வருபவர்களும்தான். இவற்றையெல்லாம் கொஞ்ச காலம் தவிர்க்க நடவடிக்கை எடுப்பதில், மக்களை அறிவுறுத்துவதில் என்ன பிரச்சினை? திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள், பொதுநிகழ்ச்சிகளைக் குறைத்திட அறிவுறுத்தும் யோசனை ஏன் இன்னும் அரசுக்கு வரவில்லை?

வெளிநாடுகளுக்கான பயணங்களைக் குறைத்திட அறிவுறுத்துகிறது இந்திய அரசு. பல நாடுகளை உள்ளடக்கும் அளவுக்கு விரிந்திருக்கும் இந்தியாவுக்குள்ளான பயணங்கள் அபாயத்தில் குறைந்தவையா? நம் ரயில்களைக் காட்டிலும் அபாயகரமான நோய்க் கடத்தல் வாகனம் இருக்க முடியுமா?  இந்தியா இன்னமும் தன் விமான நிலையங்களை வழக்கம்போலவே திறந்து வைத்திருக்கிறது. இது மிக அபாயகரமானது. விமான நிலையங்கள்தான் கரோனாவின் இறங்குதளங்கள். சர்வதேச விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதைப் பற்றியும் கொஞ்ச நாட்களுக்கு விமான நிலையங்களை மூடுவது பற்றியும் இந்தியா எப்போது  முடிவெடுக்கப்போகிறது?


ஒரு மாநிலம் வெளிநாட்டினர் உள்ளே நுழையத் தடையை அறிவிக்கிறது; இரு மாநிலங்கள் குழந்தைகளின் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்கின்றன; எல்லா மாநில முதல்வர்களையும் கூட்டி கலந்தாலோசித்து, கூட்டத்தையும் நோய்த்தொற்றையும் தவிர்க்கும் முழுமையான அறிவுறுத்தல்கள், நடவடிக்கைகளை மத்திய அரசே ஒருங்கிணைத்து அறிவிப்பதில் என்ன பிரச்சினை? முதலில், ஜனநெரிசல் தவிர்ப்பின் தொடக்க நடவடிக்கையாக வாய்ப்புள்ள துறைகளில் எல்லாம் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவது தவிர்க்கப்பட்டு, வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் முறை கொண்டுவரப்பட வேண்டும். வாய்ப்புள்ளோர் வீட்டுக்குள் இருப்பதன் வழியாகத்தான் வாய்ப்பற்றோர் வெளியில் பாதுகாப்பாக உலவும் சூழலை உருவாக்கிட முடியும். நாம் வேறு ஒரு காலகட்டத்துக்குள் நுழைகிறோம்.



இந்திய ஜனநெரிசலின் அபாயம்

சீனாவின் வூஹானைக் காட்டிலும், இத்தாலியின் ரோமைக் காட்டிலும் இந்தியாவின் பல நகரங்கள் நெரிசலானவை; கிருமிகள் பரவலுக்கான அதீத சாத்தியமுள்ளவை. எந்த அளவுக்கு நம் சுகாதார அமைப்புகள் இதன் அபாயத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை. ஒரு சதுர கி.மீ. பரப்புக்கு 1,152 பேர் அடர்த்தியைக் கொண்டது வூஹான்; 2,232 பேர் அடர்த்தியைக் கொண்டது ரோம்; சென்னையோ 26,553 பேர் அடர்த்தியைக் கொண்டது. சென்னையைப் போல மூன்று மடங்கு அடர்த்தியைக் கொண்டது மும்பை.

நாட்டின் சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு, கரோனா நோய்க்கிருமிக்கு எதிரான தன்னுடைய தலைமைச் செயல் மையத்தை சென்னையின் மையப்பகுதியில் அமைத்திருப்பது எத்தகு புத்திசாலித்தனமான நடவடிக்கை? பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் கவனிக்கும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டிருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு எதிரேதான் ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் பேர் வந்து செல்லும் சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்கிறது. நாம் இன்னும் நிலைமையின் தீவிரத்தை உணரவில்லை.

தேவை மருத்துவமனைகள்

வரலாறு நெடுகிலும் தொற்றுநோய்கள் தொடர்கின்றன. ஒரு மக்கள் நல அரசு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களோடு வரும் கரோனா போன்ற எதிரிகளை எதிர்கொள்ள எப்போதும் முன்னேற்பாடுகளுடன் இருப்பது அவசியம். சீனா மருத்துவமனைப் போதாமையால் தள்ளாடியதன் விளைவாகவே பல நூற்றுக்கணக்கானோருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை உடனடியாகக் கட்டியது; இத்தாலி இப்போது மருத்துவமனைகளின் போதாமையால் தள்ளாடுகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் காசநோய்க்கு எதிராகப் போரிட உலகம் கையாண்ட ‘சானிடோரியம் முன்னுதாரணம்’ இன்று வேறு வகையில் நமக்கு உதவலாம்.நகரங்களுக்கு வெளியே ஊர்கள் இல்லாத பகுதியில், மரங்கள் சூழ்ந்த நல்ல சுற்றுச்சூழலில், உரிய போக்குவரத்து வசதிகளுடன் நெருக்கடிக் காலத் தேவைகளுக்கு என்றே பிரத்யேக மருத்துவமனைகளை அமைக்கலாம். நோய்க்கிருமி ஏனையோருக்குப் பரவுவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நோயாளிகள் நல்ல சூழலில் கவனிக்கப்படவும், எதிர்வரும் காலங்களில் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கவும் இவை வழிவகுக்கலாம். ஒருகாலத்தில் காசநோய் சிகிச்சைக்காகக் கட்டப்பட்ட ‘தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனை’தான் பிற்காலத்தில் ஹெச்ஐவி தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முதல் மையம் ஆனது. இத்தகு மருத்துவமனைகள் நெருக்கடியான காலகட்டத்தைத் தாண்டியும் நமக்கு வெவ்வேறு வகைகளில் உதவும். நோயைத் தாண்டிய தொலைநோக்குப் பார்வை நமக்கு வேண்டும்.

கலாச்சாரக் கல்வி

ஒரு பெருநோய் உருவெடுத்து ஆட்கொள்கையில் தனிநபர், சமூகம், அரசாங்கம் என்று ஒரு நாடு மூன்று தளங்களிலும் அதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில், இந்த மூன்று தளங்களையுமே முடுக்கிவிட வேண்டிய பொறுப்பு அரசிடமே இருக்கிறது.

அன்றாடம் சோப்பைப் பயன்படுத்திக் கை கழுவும் பழக்கத்தைக் கொண்ட ஒரு சமூகத்தில் ‘அடிக்கடி கைகளை சோப்பினால் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று அரசாங்கம் சொன்னால் போதும். அது பொது இயல்பற்ற இந்தியாவில்  சோப்பு போட்டு கை கழுவுவது எப்படி என்றும் அரசாங்கம் சொல்லிக்கொடுக்க வேண்டும். பிரிட்டனிலேயே இன்று அது நடக்கிறது. ‘இருபது நொடிகளில் கை கழுவுவது எப்படி?’ என்று ஒரு காணொலியைப் பார்த்தேன். முறையாகக் கை கழுவத் தவறும்போது எங்கெல்லாம் கிருமிகள் மிச்சமிருக்கின்றன; எப்படியெல்லாம் பரவுகின்றன என்று விளக்குகிறார்கள். இந்தியாவில் அரசாங்கம் செய்ய வேண்டியது இன்னும் அதிகம்; எளியோருக்கு சோப்பு வழங்கும் பொறுப்பையும்கூட அரசு இங்கு ஏற்க வேண்டும். எந்த வயதிலும் குழந்தைகளைப் போலத்தான் தன் குடிமக்களைக் கருத வேண்டும் ஒரு மக்கள் நல அரசாங்கம்!

- மார்ச், 2020 ‘இந்து தமிழ்’ 

6 கருத்துகள்:

  1. பிரத்யேக மருத்துவ மனைகள் அமைக்கலாம். அதே சமயத்தில் பீதியைக் குறைக்கின்ற விதத்தில் சில விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  2. நாட்டின் சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு கரோனா நோய்க்கிருமிக்கு எதிரான தன்னுடைய தலைமைச் செயல் மையத்தை சென்னையின் மையப்பகுதியில் (ராஜீவுகந்தி மருத்துவமனை ) அமைத்திருப்பது எத்தகு புத்திசாலித்தனமான நடவடிக்கை . இந்த ஒரு பத்தி போதும் . நம்முடைய அரசின் நடவடிக்கை பற்றி தெரிந்து
    கொள்ள. எளிமையாகவும் அதே சமயத்தில் அறிவுபூர்வமாகவும் அமைந்த மிக முக்கியமான கட்டுரை .
    சார் நடு பக்க கட்டுரைக்காகவே இந்து
    தமிழ் திசை நாளிதழை வாங்குகிறேன் .சார் வர வர உங்களுடைய கட்டுரை நீண்ட இடைவெளி விட்டு வருவது கொஞ்சம் கஷ்டமா இருக்கு .என்னை மாரி உங்களுடைய தீவிர வாசகர்களுக்காக அடிக்கடி எழுதுங்கள் .

    பதிலளிநீக்கு
  3. நோய் பரவலை தடுக்க கிடைத்த பொன்னான நேரங்களை இந்தியா தவர விட்டுவிட்டது. இந்தியா போன்ற மருத்துவ உள்கட்டமைப்பு மோசமான நாட்டில் கொரானாவின் பாதிப்பு சைனாவைவிட மோசமானதாக இருக்கும். அரசு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை நாம் கவலைப்படுவதை விடுத்து சுய தற்காப்பு நடவடிக்கைகள் மூலமாக நம்மை நாமே காத்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. https://www.businessinsider.in/politics/news/spain-has-nationalised-all-of-its-private-hospitals-as-the-country-goes-into-coronavirus-lockdown/articleshow/74658200.cms

    மிக தீவிரமான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

    மக்களின் கூட்ட நெரிசலை அரசு தவிர்க்க கடைகள் மூடப்படுவது குறித்து
    அன்றாட உணவிற்கு வழி என்று உழைக்கும் தொழிலாளியின் நிலையை அரசு கருத்தில் கொண்டு கடைகளை மூடவேண்டும்...

    பிறகு உணவிற்கு அவர்கள் எங்கு செல்வார்கள்..

    உணவை அரசு வழங்குதலில் அவசர முறைமை கொண்டு வரவேண்டும்
    இல்லையேல் பட்டினியால் சாவு ஏற்படும்..
    முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் தொழிலாளியின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும்...


    பதிலளிநீக்கு
  5. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 19 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    எமது திரட்டியை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  6. வருத்தம் மேலிடுகிறது
    வருமுன் காக்கத் தவறிவிட்டோம்

    பதிலளிநீக்கு