ஏன் அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது?இந்தியாவில் கரோனாவுக்குப் பலியான முதல் மக்கள் பிரதிநிதி என்பதால் மட்டும் அல்ல; வேறு ஒரு விஷயத்துக்காகவும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரான அன்பழகனின் மரணம் பேசப்பட வேண்டியதாகிறது. தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் அரசியலர்கள் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மோசமான பிம்பத்தின் மீது இந்த மரணம் தாக்குதல் நடத்துகிறது. அது முக்கியமானது.தமிழ்நாட்டின் பொதுப்புத்தி விதந்தோதும் எந்தக் கூறுகளையும் கொண்டதல்ல அன்பழகனின் கதை என்பதே இங்கு விசேஷம் ஆகிறது. அன்பழகன் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் அல்ல; பேச்சு – எழுத்து என்று கருத்துத் தளத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டவர் அல்ல; மக்களுக்காகப் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர் அல்ல; அரசியலில் ஈடுபட்டதால் தன்னுடைய சொத்துகளை இழந்து வீதியில் தன் குடும்பத்தை நிறுத்திச் சென்றவரும் அல்ல. இன்னும் சொல்லப்போனால், மேலோட்ட வர்ணனைகள் மூலமாக ஒரு எதிர்மறைப் பிம்பத்தை அன்பழகன் மீது எளிதாகக் கட்டிவிடலாம். அரசியல் பின்னணியுள்ள ஒரு வசதியான குடும்பத்தின் வாரிசு, அரசியல் பலத்தைத் தன் செல்வத்தையும் கூட்டிக்கொள்ளப் பயன்படுத்தியவர், பிரச்சினை என்று வந்தால் முட்டி மோதிப் பார்க்க ஆட்கள் சகிதம் மல்லுக்கு நிற்பவர், பஞ்சாயத்துகளில் முன்னால் உட்காருபவர் என்றெல்லாம் சொல்லி அவர் வாழ்வைப் பலர் அர்த்தமற்றதாக ஆக்கிவிடலாம்.

சரி, இப்படிப்பட்ட ஒருவரின் மரணம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது? ஏனென்றால், இப்படிப்பட்டவர்கள்தான் இந்தத் தலைமுறைக் கள அரசியலின் ரத்தமும் சதையுமான தளகர்த்தர்கள். எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டும் மக்கள் மத்தியில் தங்களைக் கரைத்துக்கொண்டிருப்பவர்கள். எளிய மக்கள் ஒரு பிரச்சினை என்று நாடும்போது அவர்களோடு ‘வா, பார்க்கலாம்’ என்று சொல்லி உடன் செல்பவர்கள். வறட்சியோ, புயலோ, வெள்ளமோ, கொள்ளைநோயோ எந்தப் பாதிப்பு என்றாலும் தன் சொந்தக் காசைச் செலவிட்டு, மக்களுக்கு உடனடி உதவிகளைத் தருபவர்கள். அதிகார அமைப்புடன் சாமானிய மக்கள் பேசுவதற்கான இடத்தைப் பராமரிப்பவர்கள். கட்சித் தலைமையிடம் உள்ளூர் நிலைமையைப் பேசுபவர்கள். கருத்துத் தளத்திலிருந்து அரசியல் கட்சிகளை அன்றாடத் தளத்துக்குக் கடத்துபவர்கள்.

இன்று இந்தியாவிலேயே அதிக வியாபாரம் நடக்கும் பகுதிகளில் ஒன்றான தியாகராய நகரின் வரலாற்றோடும், திராவிட இயக்க வரலாற்றோடும் இணைத்துப் பார்க்க வேண்டிய வாழ்க்கை அன்பழகனுடையது. நூற்றாண்டைத் தொடும் தியாகராய நகரானது நீதிக் கட்சியின் பெயர் பெற்ற முதல்வரான பனகல் அரசரின் சிந்தனையில் உருப்பெற்றது. ஐரோப்பாவின் சில மாதிரிகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் தியாகராய நகரின் பூங்காக்கள், வீதிகளுக்கு திராவிட இயக்க முன்னோடிகளின் பெயர்கள் சூட்டப்பட்டதில் தீர்க்கமான பார்வை உண்டு. லண்டன், பாரீஸ், அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கல்கத்தா, பம்பாய், மதறாஸின் பிரசித்தி பெற்ற பூங்காக்கள், வீதிகள் தாங்கியிருந்த மன்னர்களின், பிரபுக்களின் பெயர்களை இந்தச் சாமானியர்களின் பெயர்கள் மாற்றீடு செய்தன. பிற்பாடு, வடிகாலுக்காகக் குழி வெட்டும்போது உயிரிழந்த தொழிலாளர்கள் பெயரிலும் வீதிகள் அமைந்தன. சாமானியர்களை அதிகாரப்படுத்தும் உந்துசக்தி தியாகராய நகரின் உருவாக்கத்திலேயே பொதிந்திருக்கிறது. நிறுவனங்களினூடாக சாதாரணர்களும் இயங்குவதற்கான தாராளவெளியை அது எப்போதும் பராமரிக்கிறது.

திமுகவை அண்ணா தொடங்கியபோது அதன் துடிப்பான அடித்தட்டுத் தொண்டர்களில் ஒருவராக இருந்தவர் பழக்கடை கி.ஜெயராமன். தியாகராய நகரில் இருந்த அவருடைய பழக்கடையே பிற்பாடு அவருடைய மகன் அன்பழகனுக்கும் அடையாளம் ஆனது. திமுகவின் முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் அறிமுகமானவர் என்றாலும், கட்சியில் ஒரு களத் தொண்டராகவே தன்னை இருத்திக்கொண்டவர் ஜெயராமன். தந்தையின் வழியில் திமுக அபிமானத்திலேயே வளர்ந்த அன்பழகன் தந்தை போலன்றி தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். உலகமயமாக்கலுக்குப் பிந்தைய கால் நூற்றாண்டில் ஆண்டுக்கு சுமார் ஐம்பதாயிரம் கோடி வர்த்தகம் நடக்கும் சந்தையாக விரிந்த தியாகராய நகரின் அரசியல் டெல்லி, மும்பை, கொல்கத்தாவின் பெருநகர ஆட்டங்களோடு பிணைந்தது. துணிச்சலான அன்பழகன் தியாகராய நகரோடு இணைந்து வளர்ந்தார்.

தலைநகர் சென்னையில் திமுகவின் எந்தப் போராட்டம், பேரணி, கூட்டத்துக்கும் பெரும் கூட்டத்தைத் திரட்டிவந்தவர் அன்பழகன். ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருந்தால் வாக்குச்சாவடியையும்கூட கையில் வைத்துக்கொள்ள முடியும் எனும் அளவுக்கு மலிந்த இந்தியத் தேர்தல் அரசியலின் அதிகாரச் சண்டித்தனத்துக்கு எதிரே வரிந்து கட்டிக்கொண்டு நிற்க எதிர்க்கட்சிகளுக்கு ஆள் பலம் முக்கியம்; அந்தப் பலம் அன்பழகனிடம் இருந்தது. சிறை செல்லும் போராட்டமாக இருந்தாலும் அநாயசமாகப் பத்தாயிரம் பேரை அன்பழகனால் திரட்ட முடிந்தது. அடித்தட்டு மக்களோடு அவ்வளவு பிணைப்பு அவருக்கு இருந்தது. அதுதான் அவருடைய அரசியலின் உயிர்நாடி. அதுதான் இப்போது அவருடைய உயிர் பறிபோகவும் காரணமாக இருந்திருக்கிறது.

அன்பழகன் பேசும் சில காணொலிகளை நான் பார்த்தேன். கரோனா தொற்று தொடர்பில் அவர் போதிய விழிப்புணர்வைப் பெற்றிருந்தவராகவே தெரிகிறார். கூடுமானவரை வீட்டுக்குள்ளேயே இருத்தல், சமூக இடைவெளியைப் பராமரித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திகூட அவர் ஒரு காணொலியில் பேசுகிறார். கட்சியினருடனும் கட்சியின் தலைமையுடனும் உரையாட கணினியையும் இணையத்தையும் அன்றாடம் பயன்படுத்தியிருக்கிறார். அதேசமயம், மக்களைச் சந்திக்கையில் கறாரான சமூக இடைவெளியைப் பராமரித்தல் சாத்தியமே இல்லை என்பதை அறிந்திருந்தும் மக்கள் சந்திப்பை அவர் நிறுத்தவே இல்லை. முகக்கவசமும், கையுறையும் அணிந்தபடி எளிய மக்களுக்கான உதவிகளை, அவர்களுக்கான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்க நெரிசலான குடிசைப் பகுதிகளுக்கு அபாயத்தை உணர்ந்தும் தினமும் சென்றிருக்கிறார். துணிந்தே உயிரை விட்டிருக்கிறார். மக்களுக்காக உரமாகியிருக்கிறார்.

ஒரு அன்பழகன் இறந்ததால் இப்போது கவனத்துக்கு வந்திருக்கிறார்; அரசியலர்கள் மீதான நம்முடைய மோசமான வெறுப்பைச் சுமந்தபடியே பல அன்பழகன்கள் களத்தில் எப்போதும் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கிருமித் தொற்றுக்கு அஞ்சி, வீட்டையே தீவாக மாற்றிக்கொண்டு, வீட்டுக்கு வரும் காய்கறிகளையும் கிருமிநாசினியால் கழுவி, பணத்தைக்கூட துவைத்துப் பயன்படுத்தியபடி பாதுகாப்பைப் பேணும் சூழலை அன்பழகன்களும் தேர்ந்தெடுக்கலாம். மாறாக, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நிலையிலும், தன் சொந்த செலவில் கரோனா நிவாரண உதவிகள் அளிக்க மக்களை நோக்கி அவர்களைத் தள்ளுவது எது? வெறுமனே பதவி, அதிகாரத்துக்கான முனைப்பு என்று இதைப் புறந்தள்ளிவிட முடியுமா? மிக முக்கியமாக, நாம் தீர்மானித்திருக்கும் அரசியல் மதிப்பீடுகளில் அன்பழகன் போன்ற சாமானிய கள அரசியல் செயல்பாட்டாளர்களுக்கான சமூக மதிப்பு என்ன?

சாதாரண நாட்களில் அன்பழகன்களின் வாழ்வும் மரணமும் சாதாரணமாகக் கடந்துவிடும். ஆனால், ஒரு கொள்ளைநோய் காலகட்டமானது அரசியலையும் அரசியலர்களையும் இழிந்த பார்வையுடன் நோக்கும் போலியான நம்முடைய மேட்டிமை மதிப்பீடுகளின் மீது கல் எறிகிறது. கரோனா காவலர்கள் என்று மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை வரிசைப்படுத்தி வாழ்த்தும் வரிசையில் அன்பழகனைப் போல ஒவ்வொரு கட்சியிலும் மக்களுக்காக அர்ப்பணிப்போடு களத்தில் செயலாற்றும் அரசியலர்கள் இடம்பெறுவார்களா? முடியாது என்றால், ஏன் அது நமக்கு சாத்தியமாகவில்லை? அதற்கும் நம் மனதிலுள்ள மேட்டிமைக்கும் சம்பந்தம் இல்லையா?

- ஜூன், 2020, ‘இந்து தமிழ்’

13 கருத்துகள்:

 1. மிக அருமை... பரந்துபட்ட பார்வை...ஆழமான உணர்தல்...அன்னார்க்கு மனமார்ந்த அஞ்சலிகள்...
  அ. பிலிப் ஷனான், திருச்சி...

  பதிலளிநீக்கு
 2. நன்றி... ஒரு களப்பணியாளனின் தியாகம் மிகச்சரியாக புரிந்து கொண்டமைக்காக....

  பதிலளிநீக்கு
 3. சரியான நேரத்தில் நேர்த்தியான பதிவு. தன் உயிர் போனாலும் பரவாயில்லை..மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆழ் நிலை எண்ணம் எல்லோருக்கும் வந்து விடுமா என்றால் இல்லை என்றே சொல்வேன். தலைமை சொல்வதற்கு முன் தான் செய்து முடிக்க வேண்டும் என்கிற வெறித்தனம் 61வயதில் ஒருவர் இப்படி எல்லாம் இருக்க முடியுமா என்கிற வினாவோடு பல அரசியல் வாதிகள் இவர் மரணத்தை சுய மதிப்பீடு செய்ய வேண்டிய தருணம்.வெண்ணெய் திரண்டு வரும் போது தாளி உடைந்த கதையாக இவர் இழப்பு எதிர் வரும் பொது தேர்தல் திமுக வுக்கு நல்ல எதிர்கால அடிப்படையில் அவர் கடந்து போக வில்லை. கடமை.. கடமை.. கடமை என்கிற ஒரு புள்ளியில் மட்டுமே ஜெ. அன்பழகனின் பயணம் இருந்திருக்கிறது என்பது தங்கள் கட்டுரை வாயிலாக புலப்படுகிறது. தெளிவான அரசியல் வாதிகள் மேட்டுமை எண்ணத்தில் இருப்பதை இவர் போன்றவர்கள் உடைத்து விட்டு நல்ல உதாரண புருஷனாக மக்கள் மனதில் வாழ்கிறார்கள் என்பதே நிஜம்.

  கட்டுரை சிறப்பு.
  இரா. முத்துக்குமரன்
  அற்புதபுரம்
  குருங்குளம் மேல்பாதி அஞ்சல்,
  தஞ்சை - 613303

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொன்றையும் வைத்து அரசியல் செய்பவர்களுக்கு சரியான கட்டுரை. சமூகப்பிரக்ஞையோடு தன் பணியினை மேற்கொண்ட ஒருவருக்கு சிறப்பான அஞ்சலி.

  பதிலளிநீக்கு
 5. பெரும்பாலான அரசியல்வாதிகளைப் பணம் சம்பாதிக்கும் சக்தி மையமாகவே கருதும் பொதுமக்கள் எண்ணத்திற்கு எதிராக, மக்களுக்கு உதவ அவர்களுக்கிடையே கலந்து உதவி, அதன் காரணமாகவே உயிரையும் விட்டிருக்கும் அன்பழகன் போற்றுதலுக்குரியவராகவே கருதப்படுவார்!

  பதிலளிநீக்கு
 6. மிகச் சரியான நேரத்தில் வந்த மிகச் சிறப்பான பதிவு

  பதிலளிநீக்கு
 7. முதலில் தன்னுடன் பழகியோர்க்கு உதவிசெய்யும் மனிதனாகவும்,பின்பே அரசியல்வாதியாகச் செயல்படும் அனைவருமே இந்தச் சிக்கலை எதிர்கொள்வர்.ஆபத்து காலங்களில் பழகியவர்கள் துயரப்பட்டு நிற்கும்போது தன்னிலை மறந்தே போகும்.அன்பழகன் அத்தகையவர்.

  பதிலளிநீக்கு
 8. மிக சிறந்த மதிப்பீடும் நடுலையான பார்வையும் உண்மைக்கு மிகநெருங்கிய விவரிப்பும் உள்ள கட்டுரை.

  பதிலளிநீக்கு
 9. அரசியல் அமைப்பில் இருப்பவர்களின் களப்பணியின் துயரங்களை மெல்லிய இடைவெளியில்லாமல் அழுத்தமாக தெரிவிக்கப்பட்ட கட்டுரை.இருந்தாலும் ஒரு உயிர் இழப்பு என்பது வருத்தம் அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 11. Epppothum dmk vai ethirthu pathivu poduveergal.....ஆனால் புத்தகத்தை தாண்டி உண்மையை அறிந்து தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள் அண்ணா....

  பதிலளிநீக்கு