370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு


நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன்பு அந்த மாநிலத்தின் முதல்வர் நெஃப்யூ ரியோவுக்கு முன்னுதாரணமற்ற ஒரு கடிதத்தை எழுதினார். ‘நாகாலாந்தின் ஆயுதக் குழுக்கள் தேச ஒற்றுமையையும் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்தும் வகையில், இந்திய அரசமைப்பு மூலம் நிறுவப்பட்ட மாநில அரசின் சட்டபூர்வமான இருப்புக்குத் தினமும் சவால் விடுகின்றன’ என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டார். நாகாலாந்தில் ஒரு இணை அரசுபோல ஆயுதக் குழுக்கள் செயல்படுவதையே ஆளுநர் ரவி இப்படிக் குறிப்பிட்டார். அவரது குற்றச்சாட்டின் மைய அம்சம், அந்த ஆயுதக் குழுக்கள் மக்களிடத்தில் வசூலிக்கும் பணம்.

ஆயுதக் குழுக்களில் முக்கியமானதான நாகாலாந்து தேசிய சோசலிஸ கவுன்சில் (ஐமு) ஆளுநர் ரவிக்கு எதிர்வினை ஆற்றியது. ‘மக்களிடம் பணப்பறிப்பு எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை’ என்று குறிப்பிட்ட அந்த இயக்கம், ‘அதே நேரம், நியாயமான வரிகளை வசூலிக்கிறோம். மக்களிடமிருந்தும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் வரி வசூலிப்பது ஒரு தேசம் மற்றும் இறையாண்மை கொண்ட மக்களின் உள்ளார்ந்த உரிமை. நாகா அரசியல் இயக்கத்தை நடத்துவதற்கான அடிப்படை நிதியாதாரம் இந்த வரிகள். கடந்த காலத்தில் அமைதிப் பேச்சுகள் நடத்திய இடைத்தரகர்களும் இந்திய அரசுத் தரப்பும் இதை விதிகளுக்கு உட்பட்டதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதால், இது எப்போதும் ஒரு பிரச்சினையே இல்லை’ என்று கூறியது.

நாகாலாந்தையோ, இந்தியாவில் ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் நிறைந்த பிராந்தியங்களையோ அறிந்தவர்களுக்கு இது எந்த ஆச்சரியத்தையும் தராது. நான் மணிப்பூர் சென்றிருந்தபோது அதன் தலைநகர் இம்பாலில் உள்ள புகழ்பெற்ற இமா சந்தையில் மணிப்பூரின் சுதந்திர நாளைக் கொண்டாடும் சுவரொட்டிகளைக் கண்டேன். பாதுகாப்புப் படையினர் அருகிலேயே நின்றுகொண்டிருந்தார்கள். அகண்ட நாகாலாந்தைக் கோரும் குழுக்களும் மணிப்பூர் ஆயுதக் குழுக்களைப் போலவே ஆகஸ்ட் 14 நாளை நாகாலாந்தின் சுதந்திர நாளாகக் கொண்டாடுகின்றன. இந்தியாவின் மைய நீரோட்டத்தை நோக்கி இத்தகு குழுக்களையும் மக்களையும் இணைக்கும் பேச்சுகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வியூகத்தில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைக் களங்களில் நாகாலாந்தும் ஒன்று. பின்னர் வந்த பிரதமர்களில் வாஜ்பாயும்கூட, நாகர் குழுக்கள் பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள் அரசியல் உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்பதை அங்கீகரித்தார். மன்மோகன் சிங் காலத்திலும் தொடர்ந்து, கால் நூற்றாண்டாக விரிந்துகொண்டிருந்த பேச்சுவார்த்தைகள் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முழு உத்வேகம் பெற்றதுபோல் தோன்றியது. இடையிடையே வெளியான செய்திகள் நாகா குழுக்கள் முன்வைத்த தனி பாஸ்போர்ட் கோரிக்கையைக்கூட டெல்லி பரிசீலிப்பதாகக் கூறின. இப்போது எல்லாம் கரைந்துவிட்டிருப்பதை ஆளுநரின் கடிதம் சொல்கிறது.

நாகா குழுக்கள் கனவு காணும், பல மாநிலங்களிலும் பரவியிருக்கும் நாகர்கள் வாழும் பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்ட ‘நாகாலிம்’ சாத்தியமற்றது என்றாலும், இன்றைய நாகாலாந்துக்கு இந்தியா எனும் ஒன்றியத்துக்குட்பட்ட முழு தன்னாட்சிப் பிரதேசமாக அதிகாரம் அளிப்பதில் டெல்லிக்கு எந்தச் சிக்கலும் இருக்க முடியாது. நாகா குழுக்கள் கோருவதுபோல் அவர்களுக்கென்று தனித்த ஆயுதப் படையை டெல்லியால் அனுமதிக்க இயலாது போகலாம். நாகாலாந்துக்கு என்று தனிக் கொடியோ, பிராந்திய கீதமோ, குடியுரிமைப் பகிர்வோ இருப்பதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்? 

2019 ஆகஸ்ட் 5-ல், மோடி அரசால் முன்னெடுக்கப்பட்ட ‘காஷ்மீர் நடவடிக்கை’ ஜம்மு காஷ்மீரை மட்டும் இருளுக்குள் தள்ளிவிடவில்லை. நாகாலாந்து போன்று இந்தியாவின் பொதுவெளியில் அதிகம் விவாதத்துக்கு வராத, நல்ல திசை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த பல தேசிய இனப் பிரச்சினைகளையும் பள்ளத்தில் சரித்திருக்கிறது. சுதந்திர இந்தியாவிலேயே மிகத் தவறாக அர்த்தம்கொள்ளப்பட்ட சட்டக்கூறு என்று காஷ்மீரை இந்தியாவோடு இணைத்த பாலமான ‘அரசியல் சட்டக்கூறு 370’-ஐச் சொல்லலாம். பல ஆண்டுக் காலமாக காஷ்மீர் விவகாரத்தை ஒரு நெருக்கடியாக அல்லாமல் வாய்ப்பாகக் காணும் பார்வையை டெல்லி பெற வேண்டும் என்று நான் எழுதிவந்திருக்கிறேன். அப்படி ஒரு பார்வையை டெல்லி பெற்றால், காஷ்மீருக்கு மட்டும் அல்ல; எல்லா மாநிலங்களுக்குமே சுயாட்சி அளிக்கும் கருவியாக ‘அரசியல் சட்டக்கூறு 370’ கொண்டிருந்த சாராம்சங்களைக் கருத முடியும்; ஒரு வசதிக்காக ‘கூறு 35ஏ’-ஐயும், ‘அரசமைப்புக்கூறு 370’-ன் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்கிறேன்.

அரசமைப்பில் தனக்கென்று ஒரு சட்டமைப்பு, பிராந்தியத்தின் நிரந்தரக் குடிமக்கள் யார் என்று வரையறுக்கும் அதிகாரம், உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமே நிலவுரிமை என்பது உள்ளிட்ட சிறப்புரிமைகளைத் தீர்மானிக்கும் அதிகாரம், ஒன்றிய அரசின் எந்தச் சட்டமும் மாநிலத்தில் அமலாக்கப்பட மாநிலச் சட்டமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என்பதான தன்னாட்சி அதிகாரம் ஆகியவற்றை ‘அரசமைப்புக் கூறு 370’ காஷ்மீருக்குக் கொடுத்தது. தனக்கென்று தனி தண்டனையியல், குற்றவியல் சட்டத் தொகுப்புகளை மாநிலம் பயன்படுத்த அது வழிவகுத்தது. சுருக்கமாக, வரலாற்றில் நீர்க்கடிக்கப்பட்ட ‘அரசமைப்புக் கூறு 370’ அதன் மூல நோக்கத்தோடு இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தால் ராணுவம், வெளியுறவு போன்ற சில துறைகள் நீங்கலாக ஏனைய எல்லா முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை டெல்லிக்குப் பதிலாக அந்தந்த மாநில மக்களுக்கு வழங்கும் ஆற்றலைக் கொண்டிருந்தது.

ஒற்றையாட்சி வேட்கையைக் குழைத்து உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புக்கு, தற்செயலாக இந்தியாவின் இயல்புக்கு ஏற்ற கூட்டாட்சிப் பண்பை காஷ்மீர் வழியே காலம் வழங்கிய ஒரு வாய்ப்பு என்று நாம் ‘அரசமைப்புக் கூறு 370’-ஐக் கருதிட முடியும். விளைவாகவே, ‘அரசமைப்புக் கூறு 370’ தந்த உத்வேகத்தின் கீழ் ‘371 ஏ’ நாகாலாந்து மாநிலத்துக்குத் தனி அந்தஸ்து வழங்குவதாகக் கொண்டுவரப்பட்டது. நாகர்களின் பாரம்பரியச் சட்டத்தையும், நாகர்களின் நிலவுரிமையையும் பாதுகாக்கும் சட்டக்கூறு இது. அசாமின் பழங்குடிகள் நலன்களைப் பாதுக்காக்க உருவாக்கப்பட்ட ‘371பி’, மணிப்பூரின் மலைப் பகுதிகளை நிர்வகிக்கக் கொண்டுவரப்பட்ட ‘371 சி’, ஆந்திரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உள்ளூர் மக்களுக்குக் குறிப்பிட்ட பதவிகளில் வாய்ப்புக் கிடைப்பதை உறுதிசெய்யக் கொண்டுவரப்பட்ட ‘371 டி’, இந்தியாவுடன் இணைக்கப்பட்டாலும் ஏற்கெனவே சிக்கிமில் நடைமுறையில் இருந்த சில அம்சங்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்ட ‘371 எஃப்’, மிசோராமில் மிசோக்களின் கலாச்சாரத்தையும் அவர்களது நிலவுடைமை தொடர்பான உரிமைகளையும் பாதுக்காக்கக் கொண்டுவரப்பட்ட ‘371 ஜி’, அருணாசல பிரதேசத்தில் சட்ட ஒழுங்கை நிர்வகிக்கக் கொண்டுவரப்பட்ட ‘371 ஹெச்’ இவற்றையெல்லாம் ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ கோஷம் போடுபவர்களால் எப்படி விளக்க முடியும்?

அசீர்மைக் கூட்டாச்சித்துவம் என்பது இதுதான். ஒரே மனிதரின் கால்கள்தான் என்றாலும், இரு கால்களின் தனித் தனி வடிவங்களுக்கு ஏற்பவே காலணிகளை அணிகிறோம்; ஒன்றுபோல நறுக்கித் தைக்கப்பட்ட காலணிகள் ‘சீர்மை’ என்ற பெயரில் திணிக்கப்பட்டால், அதை அணிந்துகொள்பவர்களால் இயல்பாக நடக்க முடியாது. சீர்மை நேர்மறையாகவும் அசீர்மை எதிர்மறையாகவும் புரிந்துகொள்ளக் கூடியன அல்ல. காஷ்மீர், ஜம்மு இரண்டு பிராந்தியங்களிலிருந்தும் மாறுபட்டக் கலாச்சாரங்களைக் கொண்ட லடாக் இப்போது தனியே பிரிக்கப்பட்டுவிட்டது. லடாக் தனிப் பிராந்தியமாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த போராட்டக் குழுக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஆட்சியாளர்கள் மீது கடும் கோபம் கொண்டவர்கள் என்பதை விளக்க வேண்டியது இல்லை. வளர்ச்சியில் லடாக் புறக்கணிக்கப்படவும், லடாக்கியர்கள் உரிய பிரதிநிதித்துவமின்றி அழுத்தப்படவும் கடந்த காலத்தில் காஷ்மீர் ஆட்சியாளர்களின் பாரபட்சமான பார்வையே காரணம் என்று கூறுபவர்கள் அவர்கள். 2019 ஆகஸ்ட் 5 காஷ்மீர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டபோது அதைக் கொண்டாடியவர்கள் அவர்கள். அவர்களின் பிரதிநிதிகள்தான் கூடவே இதையும் கூறுகிறார்கள், ‘அரசமைப்புக் கூறு 370 நீக்கப்பட்டது பெரும் கொடுமை. லடாக் மண்ணையும் மக்களையும் சுற்றுச்சூழலையும் வெளி ஏகாதிபத்தியத்திய சக்திகளிடமிருந்து பாதுகாத்த சட்டக்கூறு அது. வெளியாள் இங்கே வந்து நிலம் வாங்க அனுமதிக்கப்படும்போது, லடாக் கான்கிரீட் காடாக மாறும்; சுற்றுச்சூழல் நாசமாகும். அரசமைப்புக் கூறு 370 கொடுத்த பாதுகாப்பு ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்கும் விஸ்தரித்திருக்கப்பட வேண்டியது.’

ஆம். நாம் பருவநிலை மாறுபாடு அச்சுறுத்தல் யுகத்தில் நுழைந்த பிறகு, ‘அரசமைப்புக் கூறு 370’-க்கு மேலும் ஒரு பரிமாணம் கிடைக்கிறது. தம் மண்ணைப் பாதுகாக்க அதன் மக்களுக்குக் கிடைக்கும் பிரத்யேக உரிமை அது. பிரதமர் மோடி அடிக்கடி சுயசார்பு தொடர்பில் பேசுகிறார். சுயஅதிகாரத்துக்கு அப்பாற்பட்ட சுயசார்பு ஒன்று சாத்தியமா என்பதை நாடு சிந்திக்க வேண்டும்.

இந்திய ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல; இந்தியாவின் பொதுக் கருத்துத்தளமும்கூட பெரும் மாறுதலை அடைய வேண்டும். காஷ்மீர் நடவடிக்கைக்குப் பிறகு, நாட்டிலேயே காஷ்மீர் மட்டுமே கொண்டிருந்த அந்த மாநிலத்தின் கொடி நிரந்தரமாகக் கீழே இறக்கப்பட்ட செய்தியை இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்கள் கொண்டாட்டமான தொனியில், ‘இனி நாடு முழுமைக்கும் ஒரே கொடி’ என்று குதூகலித்ததை நினைவுகூரலாம். அறியாமையின் வெளிப்பாடு அல்லாமல் அது வேறு என்ன? அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும் தனிக் கொடியையும் பிரத்யேகச் சட்டங்களையும் உச்ச நீதிமன்றங்களையும்கூட கொண்டிருக்கின்றன. சுவிட்ஸர்லாந்தில் எந்த ஒரு பெரும் மாற்றமும் மாநிலங்கள் அனுமதியின்றி கொண்டுவர முடியாது. இதனால் அவையெல்லாம் ஒரே நாடு இல்லையா என்ன?

தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறோம்; நிறைவில் தேசிய கீதம் பாடுகிறோம். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது அல்ல. ஒரு குழந்தையின் பெற்றோருக்குத் தாய் - தந்தை என்று இரு அடையாளங்கள் இருக்கின்றன. ‘அரசமைப்புச் சட்டக்கூறு 370’-ன் ஆன்மா இந்தியாவின் பன்மைத்துவ மகோன்னதத்தையும் அதிகாரப் பரவலாக்கத்துக்கான உச்ச சாத்தியங்களையும் ஒரு நல்ல கூட்டாட்சிக்கான அறைகூவலையும் புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து முழங்கிக்கொண்டே இருக்கிறது. தூங்கும் இந்தியாவை அது தட்டிக்கொண்டே இருக்கிறது.

- ஆகஸ்ட், 2019, ‘இந்து தமிழ்’

4 கருத்துகள்:

 1. பன்முகத் தோற்றம் கொண்ட நம்நாட்டை ஒற்றை நாடாக மாற்றம் கொண்டுவர விரும்புவோர் மதத்தின் பெயரால் அச்செயல்பாட்டை ஊக்குவிக்கிறார்கள்.இது அறியாமை.

  பதிலளிநீக்கு
 2. A thought provoking article. It points out the contradictions in our country's present day approach to the Article 370 of the Constitution. Diversity is a strength and not a weakness. This reality has been well brought out in the article. It deserves appreciation for Shri Samas's frankness in dealing such a sensitive subject.

  பதிலளிநீக்கு
 3. ஒரு மொழி ஒரு மதம் ஒரு நாடு … இது இந்தியாவிற்கானதல்ல..

  தமிழ்த்தாய் வாழ்த்து - தமிழில், தேசிய கீதம் வங்காளியில் இருக்கட்டுமே மகிழ்ச்சியோடுதானே பாடுகிறோம்.

  பதிலளிநீக்கு
 4. Get Best SEO Services in Chennai from Eumaxindia – We are Leading SEO & Digital Marketing Company in Chennai, offering numerous packages to meet your business requirements.

  SEO Services in Chennai
  Best Digital Marketing Company in Chennai

  பதிலளிநீக்கு