ஒரு வகுப்பறை. ஆசிரியர் மன்மோகன் சிங். கரும்பலகையில் குச்சியை வைத்து சுட்டிக்காட்டிப் பாடம் நடத்துகிறார் சிங். மாணவர்களாகத் தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் அவருடைய மந்திரிமார்கள். கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் பாடத் தலைப்பு: ஊழல் செய்வது எப்படி?
இப்படி வரையப்பட்ட ஒரு சுவரோவியத்தை இந்தியாவில் எந்தக் கல்வி நிலையத்திலாவது - அதுவும் துணைவேந்தர் அறைக்கு எதிரிலேயே - நாம் பார்க்க முடியுமா? பிரதமரில் தொடங்கி அருணாச்சலப் பிரதேசத்தின் உள்ளூர் அரசியல்வாதி வரை சகலரையும் கிண்டலடிக்கும் கேலிச் சித்திரங்கள், இந்திய ராணுவம் காஷ்மீரில் நடத்தும் அத்துமீறல்களைக் காட்டமாக விமர்சிக்கும் சுவரொட்டிகள், இனவாத அரசியலுக்குக் கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கும் சுவரோவியங்கள்...
- டெல்லிவாசிகளுக்கு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆச்சர்யம் இல்லை. ஆனால், டெல்லி எல்லைக்கு அப்பாலிருந்து வரும் எவரையும் ஆச்சர்யத்திலும் பரவசத்திலும் ஆழ்த்தும் ஒரு கனவுக் கல்விச்சாலை அது.
ஒரு குட்டி இந்தியா
டெல்லியின் தென் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரின் கரடுமுரடான பரப்பில், கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஒரு குட்டி இந்தியா. மலைப் பாறைகளும் புல்வெளிகளும் மரங்களும் நூற்றுக்கணக்கான பறவைகளும் வன உயிரினங்களும் அடங்கிய இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகம், ஒரு பாடசாலை என்பது வெறும் செங்கற்களால் மட்டுமே கட்டப்படுவது இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லக் கூடியது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் ஏழாயிரத்துச் சொச்ச மாணவ - மாணவிகள் இங்கு படிக்கின்றனர். தவிர, நூற்றுமுப்பது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள். ஏராளமான துறைகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் உண்டு. அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பொதுவான துறை அரசியல்!
பேச்சுதான் ஆதாரச் சுருதி
ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதநேயம், சகிப்புத்தன்மை, பகுத்தறிவு, உண்மையைத் தேடுவதற்கான களமாக இருக்க வேண்டும்; சாகச சிந்தனைகளை வளர்ப்பதற்கான களமாக இருக்க வேண்டும்; மிக உயர்ந்த லட்சியங்களுக்காக மனித இனம் மேற்கொள்ளும் முன்னோக்கிய பயணத்துக்கு உதவ வேண்டும் என்று கனவு கண்டார் நேரு. அவருடைய மகள் இந்திராவால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், 40 ஆண்டுகள் ஆகும்போதும் அந்த தாகத்தை இன்னமும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எங்கு பார்த்தாலும் மாணவ - மாணவிகள் கைகோத்து நடக்கிறார்கள். நள்ளிரவிலும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுகிறார்கள். “பேச்சுதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆதாரச் சுருதி. பாலினச் சமத்துவத்திலிருந்துதான் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக மாண்புகள் தொடங்குகின்றன” என்கிறார்கள்.