பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம்!

 
    இந்த 34-வது சென்னைப் புத்தகக் காட்சியின் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்கள் யார்? யாருடைய புத்தகங்கள் விற்பனையில் அதிகமாக இருக்கின்றன?
அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ராமச்சந்திர குஹா, விக்ரம் சேத்?
இல்லை.
ஜெயமோகன், இமையம், பெருமாள்முருகன்?
கிடையாது.
அட, வைரமுத்து, ரமணி சந்திரன்?
ம்.. ஹூம்.
    இப்போதெல்லாம் புத்தகக் காட்சிகளில் ஒரு புதிய படை எழுத்தாளர்கள்தான் கலக்குகிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியையும் அவர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தப் புதிய படை எழுத்தாளர்களைப் பதிவிறக்க எழுத்தாளர்கள் என்று நாம் அழைக்கலாம்.
அதென்ன பதிவிறக்க எழுத்தாளர்கள்?

    இவர்கள் இந்தத் துரித உலகத்துக்கேற்ற துரித சிந்தனையாளர்கள் - துரித எழுத்தாளர்கள் - இணையத்தின் கைப்பிள்ளைகள். இட்லி, வடையில் தொடங்கி லத்தீன் அமெரிக்க இலக்கியம் வரை சகலத்தையும் இவர்கள் எழுதுவார்கள். அம்பானி, பிரபாகரன், டெண்டுல்கர், வீரப்பன், இரோம் ஷர்மிளா... யாரைப் பற்றியும் இவர்களால் எழுத முடியும். உலக சினிமாக்களை உள்ளூர் சினிமாக்களுடன் ஒப்பிடுவார்கள், போர்ஹேவினுடைய எழுத்துகளில் உள்ள கூறுகளை மணிரத்னம் படத்தில் வரும் தமாசில் கண்டுபிடிப்பார்கள், புவிவெப்பமாதல் பிரச்னையில் ஒபாமாவுக்கு யோசனை சொல்வார்கள், நோபல் பரிசு பெற தங்கள் நண்பர்களைப் பரிந்துரைப்பார்கள், தமிழ்ப் பத்திரிகைகளை ஒரு பிடி பிடிப்பார்கள்... கூர்ந்து கவனித்தால் ஏதாவது ஒரு பதிப்பகத்தில் இருப்பார்கள்.
    இவர்களுடைய முதல் கடவுள் 'கூகுல்'. உப கடவுள் 'விக்கிபீடியா'. இவர்கள்தான் இந்தக் காலத்தை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்; வரலாற்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் புதிய வரலாற்றில் இவர்கள் ஹிட்லரைப் பற்றி புத்தகம் எழுதினால் ஹிட்லர் அதில் நிகரற்ற கதாநாயகனாக இருக்கிறார்; மறுவாரம் கோட்சேவைப் பற்றி புத்தகம் எழுதினால் காந்தி அதில் வில்லனாகிப் போகிறார்.
    இந்த இடத்தில் வாசகரை நாம் குறைகூற முடியாது. ஏனென்றால், புத்தகங்களைப் பிரசுரிக்கும் பதிப்பகங்களின் கைத்திறமை அப்படி. புத்தகத்தை கண்ணுக்கு இதமாகத் தயாரிக்கும் இவர்கள், ஒருபுறம் பத்து தரமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பிரசுரித்துக்கொண்டே மறுபுறம் நூறு பதிவிறக்க எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பிரசுரிக்கிறார்கள். இந்த நூற்றுப்பத்து புத்தகங்களும் அடுத்தடுத்த அலமாரிகளில் ஒன்றறக் கலந்திருக்கின்றன. வாசகர் என்ன செய்வார்? குழம்பிப்போகிறார்;
பதிவிறக்க எழுத்தாளர்கள் பிரித்து மேய்கிறார்கள்.
    இப்படிப்பட்ட புத்தகங்களைப் பிரசுரிப்பதில் மிகப் பிரபலமாகத் திகழும் பதிப்பகம் ஒன்றில் பணியாற்றும் பதிவிறக்க எழுத்தாள நண்பருடன் நேற்று உரையாட நேர்ந்தது. பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் பெருமிதத்தோடு சொன்னார்: "எங்கள் வேகத்துக்கு இன்றைக்கு யாராலும் புத்தகம் போட முடியாது. பத்து நாட்களுக்குள் ஒரு புத்தகத்தை எங்களால் முடிக்க முடியும்.''
   ஆக, அவர்களுக்கு புதிதாக ஒரு தலைப்பு கிடைத்திருக்கிறது; கூடிய விரைவில் இப்படியொரு புத்தகம் வரலாம்: 'பத்து நாட்களுக்குள் புத்தகம் போடுவது எப்படி?'
   தமிழ் வாசகர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது!


தினமணி, 2011

2 கருத்துகள்:

  1. தமிழ் வாசகர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் சமஸ். எல்லாமே கேவலமாகப் போய்க் கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு