(என்னுடைய வலைத்தளத்திலும் சரி, முகப்புத்தகத்திலும் சரி, எப்போதுமே தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களை வெளியிடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது கிடையாது. என்னுடைய எழுத்துகளைச் சேகரித்துவைக்கும், மேலும் சிலரிடம் கொண்டுசெல்லும் இடங்களாகவே அவற்றைக் கருதிவந்திருக்கிறேன். ஆனால், இந்தப் பதிவை நான் இங்கு பகிர்ந்துகொள்வது விதிவிலக்காகிறது.)
போத்தன் ஜோசப்பை நீங்கள் அறிவீர்களா? என் தாத்தாவின் கதாநாயகர்களில் ஒருவர் அவர். 1930-களில் இந்தியாவையே கலக்கிக்கொண்டிருந்தவர். அந்நாட்களில் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த பத்திரிகையாளர். தன்னுடைய பத்திகளால் 'கிரானிகல்', 'கேபிடல்', 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' என்று பல பத்திரிகைகளின் அடையாளத்தை மாற்றியவர். ராம்நாத் கோயங்காவுக்கு, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகையை அவர் வாங்கியதும் பத்திரிகையை வளர்த்தெடுக்க ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளரை ஆசிரியராக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தபோது, இரண்டாவது அபிப்பிராயமே இல்லாமல் அவருடைய தேர்வாக இருந்தவர் போத்தன் ஜோசப். அந்நாள்களில் போத்தன் ஜோசப் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றால் தன்னால் ஐந்நூறு ரூபாய் மட்டுமே ஊதியமாக அளிக்க முடியும் என்று தெரிவித்தார் கோயங்கா. ஆனாலும், போத்தன் ஜோசப் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தில் பணியேற்றார். காரணம், ராம்நாத் கோயங்கா ஆசிரியர் இலாகாவுக்கு அளிப்பதாக ஒப்புக்கொண்ட சுதந்திரம்.
ஓர் உண்மையான பத்திரிகையாளனின் முதல் விருப்பம் எப்போதுமே சுதந்திரம்தான். கோயங்காவால் நாட்டின் மிகப் பெரிய பத்திரிகை சாம்ராஜ்ஜியமாக உருவாக்கப்பட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழும நிறுவனங்களில் இன்றைக்கும் எது இருக்கிறதோ, இல்லையோ அன்றைக்கு கோயங்கா ஆசிரியர் இலாகாவுக்கு அளித்த அந்தச் சுதந்திரம் அப்படியே இருக்கிறது (ஆசிரியர் இலாகாவினர் அந்தச் சுதந்திரத்தை எப்படி, எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பது வேறு விஷயம்). என்னைப் பொறுத்த அளவில் ஒரு பத்திரிகையாளனாக 'தினமணி'யில் பணியாற்றும் கடைசி நொடி வரை அந்தச் சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவித்தேன்.
நான் பத்திரிகையாளனானதோ, 'தினமணி'யில் சேர்ந்ததோ விபத்தல்ல. கதைகள் கேட்டு வளர்ந்த கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். பத்திரிகைத் துறை தொடர்பாக எனக்குள் ஆழமான விதைகளை ஊன்றியவர் என்னுடைய தாத்தா எஸ். ராஜகோபாலன். வாசிப்பிலும் இசையிலும் தேர்ந்த ஞானமுடைய அவர் பத்திரிகைத் துறை சார்ந்து அடிக்கடி குறிப்பிடும் இரு நபர்களே பத்திரிகை உலகை நோக்கி என்னை இழுத்தவர்கள். அந்த இருவர்: ராம்நாத் கோயங்கா, எஸ்.எஸ். வாசன்.
பத்திரிகை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய அறநெறிகளுக்காக வாசனையும் அவசர நிலைக் காலத்தின்போது, ஆட்சியாளர்களை எதிர்கொண்ட நெஞ்சுரத்திற்காக கோயங்காவையும் அடிக்கடி நினைவுகூருவார் தாத்தா. சின்ன வயதிலிருந்தே வீட்டில் 'தினமணி'யும் 'விகட'னும் கிடைத்ததால் அவையே என்னுடைய ஆதர்ச பத்திரிகைகளாகவும் ஆயின.
கல்லூரிப் படிப்பு முடிந்த பின் அங்கே சுற்றி இங்கே சுற்றி ஒரு வழியாக 'தினமணி'யில் வந்து உட்கார்ந்தபோது நிறைய கனவுகள் இருந்தன. இப்போதும் அவற்றில் பல கனவுகளாகவே இருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. ஆறு ஆண்டுகள். முதல் மூன்று ஆண்டுகள் மோசமானவை; அடுத்த மூன்று ஆண்டுகள் அற்புதமானவை. மோசமான என்னுடைய நாட்களை அற்புதமானவையாக மாற்றியவர் என்னுடைய ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
இதழாசிரியர் எஸ். சிவக்குமார் சொன்னதால் , 'ஈட்டிங் கார்னர்' பகுதியில் நான் எழுதிய கட்டுரைகள் மூலமாக எனக்கு கிடைத்த பேறு வைத்தியநாதனின் நட்பு. 'தினமணி'யில் ஆசிரியர் தவிர்த்து தலையங்கங்கள் எழுதியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களும் பெரிய ஜாம்பவான்கள்; வயதில் மூத்தவர்கள். முப்பது வயதுக்குள் ஒரு சாதாரண உதவி ஆசிரியன் எழுதும் கட்டுரைகள் தலையங்கங்களாக மாறுவதெல்லாம் அங்கு அத்தனை எளிதல்ல. முதல் முறையாக அது எனக்கு சாத்தியமாகியது. காரணம், வைத்தியநாதன்.
உதகையில் நடைப்பெற்ற 'செம்மொழிக்கோவை' ஆலோசனைக் கூட்டத்தின்போது...
பிரிவு உபசார விழாவின்போது...
திருச்சி 'தினமணி' ஆசிரியர் இலாகா...
தலையங்கத்தில் தொடங்கி தலையங்கப் பக்கத் துணைக் கட்டுரைகள், அரசியல் அரங்கம், நூல் அரங்கம், கொண்டாட்டம், கதிர், சிறப்பு மலர்கள் என்று எனக்கு அவர் வாய்ப்பளிக்காத இடங்களே இல்லை. 'தினமணி' தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பவள விழா மலர் கொண்டுவர அவர் உத்தேசித்தபோது, அந்தக் குழுவில் நான் இருந்தேன். செம்மொழி மாநாட்டையொட்டி, தமிழ் மொழி தொடர்பான ஓர் ஆவணமாக ஒரு சிறப்பு மலரைக் கொண்டுவர வேண்டும் என்று 'செம்மொழிக்கோவை'யை அவர் கொண்டுவர முடிவெடுத்தபோதும் அந்தக் குழுவில் நான் இருந்தேன். இந்த 3 ஆண்டுகளில் 'தினமணி'யின் பல வியூகக் கூட்டங்களில் அவர் எனக்கு இடம் அளித்திருக்கிறார். எவ்வளவு கடுமையான விமர்சனங்களுக்கும் இடம் அளித்திருக்கிறார். கட்டுரைகள் வெளியாகும் நாள் அன்று காலையில் எழுந்து செல்பேசியைப் பார்த்தால், முதலில் வந்திருக்கும் பாராட்டு குறுந்தகவல் அவருடையதாகவே இருக்கும். மிக ஆழமான ஒரு நட்பு அது!
இத்தகைய பின்னணியில் நான் ஏன் 'தினமணி'யிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற கேள்வி எழலாம். நிறைய காரணங்கள். முக்கியமாக வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் தந்த அழுத்தம்; அதற்கு 'விகடன்' நல்ல களமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு; 'விகடன்' ஆசிரியர் ரா. கண்ணன் தந்த நம்பிக்கை.
என்னுடைய முடிவை வைத்தியநாதனிடம் சொன்னபோது அங்கீகரித்தார். "எங்கிருந்தாலும் ஜொலிப்பீர்கள்'' என்றார்.இன்றைக்குப் பணி முடிந்து புறப்படுகிறேன். கோவையிலிருந்து செல்பேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்துகிறார் வைத்தியநாதன். தன் நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஓர் ஊழியனை வாழ்த்தி பிரிவு உபசார விழா நடத்துகிறது நிர்வாகம். நண்பர்கள் கூடி விடை கொடுகிறார்கள். அலுவலகத்திலிருந்து வெளியே வருகிறேன். அலுவலகப் பெயர்ப் பலகையில் ஜொலிக்கிறது...'நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்...' சாலையில் இறங்கி நடக்கிறேன்... என்னை 'தினமணி'க்குத் தேர்ந்தெடுத்த திருச்சிப் பதிப்பின் அன்றைய துணை செய்தி ஆசிரியர் எம். பாண்டியராஜன் - முதன்மைச் செய்தியாளர் இரா. சோமசுந்தரம், இதழாசிரியர் எஸ். சிவக்குமார், செய்தி ஆசிரியர்கள் ந. குருசாமி, வ. ரங்காச்சாரி, ஆசிரியர் கே. வைத்தியநாதன்... ஒவ்வொருவர் முகமும் நினைவில் வந்துபோகிறது; எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!
வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குவாழ்த்த்துக்கள் சமஸ்.. வாங்க..வாங்க.. சென்னைக்கு வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்... வாங்க!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குPlease remove the word verification option for ease of putting comments.
பதிலளிநீக்குவாழ்த்துகள் சமஸ்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇரண்டு இன்ப அதிர்ச்சிகள் எனக்கு.ஒன்று சமஸ் ஆனந்தவிகடனுக்கு மாரி சென்னை வ்ருவது.இரண்டாவது உன்கட்டுரையில் குறிப்பிட்ட உன் தாத்தா எஸ்.ராஜகோபாலன் என்ற பெயர், அந்த பெயரை படித்ததுமே என்னுள் ஒரு மின்னல் வெட்டியது, யார் இந்த சமஸ் என்று தேடினால், என் அனுமானம் சரிதான் ஸ்டாலின். பட்டுக்கோட்டையில் உன் மாமா வீட்டில் தாத்தாவோடு அமர்ந்து பி.யு.சின்னப்பாவின் பாட்டைகேட்டவன் நான். கலை சென்னையில்தான் இருக்கிறேன் வா நேரில் நிறைய பேசுவோம், அம்மாவையும்,உன் மனைவியையும் கேட்டதாக சொல்லவும்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. எனக்கு நீடாமங்கலம். விகடனில் சில நிருபர் நண்பர்கள் இன்னும் உள்ளனர். ப்ளாகிலும் அவ்வப்போது எழுதுங்கள்
பதிலளிநீக்குவாழ்த்த்துக்கள் சமஸ்...
பதிலளிநீக்குசிங்காரச் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. கூடவே நானும்...
பதிலளிநீக்குவாழ்த்துகள் சமஸ்
பதிலளிநீக்குவாழ்துக்கள் நண்பரே!ஆனந்தமாய் ஜொலிப்பீர்கள்!
பதிலளிநீக்குபொங்கு கடல் அத்தனையும் போய் எடுத்து பார்த்தாலும்
பதிலளிநீக்குதங்குகின்ற முத்துக்கள் எத்தனையோ?
எல்லாம் தலை எழுத்து ஈசன் அவன் கையெழுத்து
என்பது அல்லாமல் தன் அறிவால் ஆக்கியது ஏதுமில்லை
துன்பமில்லை எந்நாளும் இன்பமே
நீங்கள் மென்மேலும் உயர எனது வளர்பிறை வாழ்த்துக்கள்
சுந்தர பாண்டியன்
வாழ்த்துக்கள் சமஸ். நிறைவாகச் செய்க.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே....உண்மையில் சுதங்திரமாகச் செயற்படும் பத்திரிகையாளன் எந்தப் பத்திரிகையில் பணியாற்றுகின்றான் என்பது என்னைப்பொருத்தளவில் முக்கியமல்ல...எங்கிருந்தாலும் அவன் இலக்காகக் கொண்டுள்ள மக்களுக்காக குரல் கொடுக்கின்றான் என்பது தான் முதனிலையானது. எனவே நீங்கள் எங்கு சென்றாலும் சுதந்திரமான பத்திரிகையாளனாக மக்கள் பணியைத் தானே நிறைவேற்றப்போகின்றீர்கள்...வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குதியாகராஜா நிரோஷ்
வாழ்த்த்துக்கள் சமஸ்..
பதிலளிநீக்குAatril (Kaveri) sakkatai kalappathe pavam endra ooril irunthu, Aatraiye (Koovam)sakkataiyaga mattri, savari sella thittamidum oorugu sellum Nanba... Vasantangal un voil vara prathikiren.
பதிலளிநீக்குவெகு நாட்களுக்கு பின்னர் படிக்க நேர்ந்த து உங்கள் கட்டுரையை,பரவாயில்லை ,நானும் முன்னால் விகடன் மாணவ நிருபன் என்ற முறையில் மகிழ்கிறேன்,
பதிலளிநீக்குகாசுக்காக மாரடிக்கும் விகடனில் இருந்து வெளியே வந்து விட்டிர்களா?வரும் போது வாழ்த்து தெரிவிக்கிறேன்
பதிலளிநீக்கு