புலி அரசியல்!


இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
- இந்திய அரசு சமீபத்தில் பெருமிதத்தோடு வெளியிட்ட அறிவிப்பு இது.
  ‘‘இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் சராசரி எண்ணிக்கை 1,706. முன்னதாக, 2006-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, 1,411 புலிகள் வரை இருந்தன. இப்போது 385 புலிகள் அதிகரித்திருக்கின்றன.’’
  இந்த ஒரு பத்தித் தகவல்தான் அரசாலும் ஊடகங்களாலும் தேசியப் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின் முக்கியச் செய்தியாக வெளியிடப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால், இது முக்கியமான செய்தி. ஆனால், அறிக்கையின் உள்ளேயுள்ள விவரங்களுடன் ஒப்பிட்டால் முக்கியச் செய்தி இதுவாக இல்லை!
  புலிகள் வாழும் காட்டுப் பகுதி 93,600 ச.கி.மீ-லிருந்து 72,800 ச.கி.மீ.-யாகக் குறைந்திருக்கிறது என்கிறது இந்த அறிக்கை. நாம் மிகப் பெரிய கவனம் அளிக்க வேண்டிய முக்கியமான செய்தி இதுதான். எப்படி?
  காடுகளுக்கு நாம் எவ்வளவோ அந்நியமாகவும் தொலைவாகவும் இருந்தாலும் நாட்டின் செழிப்புக்கும் நம்முடைய செழிப்புக்கும் காடுகளே ஆதாரம். ஒரு சின்ன உதாரணம்: நதிகள் யாவும் காடுகளில்தான் உருவாகின்றன.
  காடுகள் செழிப்பாக இருப்பதை எப்படி நாம் அறிந்துகொள்வது?
  புலிகள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஏனென்றால், இந்த உலக வாழ்வின் ஆதாரமான பல்லுயிர்ச் சங்கிலி அமைப்பில் புலிகள்தான் மிக முக்கியமான கண்ணி. காடுகள் செழிப்பாக இருப்பதற்கான சரியான அறிகுறி!
  ஒரு காட்டில் புலிகள் செழிப்பாக இருந்தால், அங்கு அவை விரும்பிச் சாப்பிடும் மான்களில் தொடங்கி - அவை விரும்பிச் சாப்பிடும் புற்கள் - அவை வளர்வதற்கேற்ற நீராதாரம் வரை யாவும் செழிப்பாக இருக்கின்றன என்று அர்த்தம்!
  புலிகளின் செழிப்பு - காடுகளின் செழிப்புக்கான அறிகுறியாகவும் நாட்டின் சுற்றுச்சூழல் செழிப்புக்கான குறியீடாகவும் பார்க்கப்படுவது இப்படித்தான். உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் நாடான இந்தியாவின் தேசியப் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை சர்வ நாடுகளாலும் கவனிக்கப்படுவதும் இந்தப் பின்னணியில்தான்!
  ஆக, ஒரு காட்டிலிருந்து புலிகள் வெளியேறுகின்றன என்றால், அந்தக் காடு மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!
  இந்தியாவின் ‘புலிகள் மாநிலம்’ மத்திய பிரதேசம். அங்கு புலிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தியாவின் முக்கியமான புலிகள் சரணாலயங்களில் ஒன்றான பன்னா சரணாலயம் ஏறத்தாழ புலிகள் அற்ற காடாக மாறி இருக்கிறது. இதேபோல, ராஜஸ்தானின் சரிஸ்கா காடுகளிலும் புலிகள் இல்லை.
  நாட்டில் 39 இடங்களில் அரசால் பாதுகாக்கப்பட்ட புலிகள் காடுகள் இருக்கின்றன. ஆனால், ஏறத்தாழ 30 சதத்துக்கும் அதிகமான புலிகள் இந்த இடங்களுக்கு அப்பாற்பட்ட காடுகளில் வாழ்வதாகச் சொல்கிறது இந்தக் கணக்கெடுப்பு.
  ஆந்திரத்தில் நாகார்ஜுன் சாகர், சத்திஸ்கரின் இந்திராநதி, ஒரியாவின் சிம்பிபால், பிகாரின் வால்மிகி, ஜார்கண்டின் பாலமோப் என்று புலிகள் அதிகரித்து இருக்கும் இடங்கள் யாவும் நக்ஸல்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள். தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில். காரணம்: இன்று உயிரோடு இல்லாவிட்டாலும் வீரப்பன்!
  அதாவது, பெரும்பாலும் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத காடுகளிலேயே புலிகள் அதிகரித்து இருக்கின்றன. எனில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளின் நிலை என்ன? ஏன் புலிகள் அங்கிருந்து வெளியேறுகின்றன? இதற்கான பதில் சுருக்கமானது.
  எந்தக் காரணத்துக்காக நம்முடைய அரசு தண்டகாரண்யத்தில் தன் சொந்த மக்களுக்கு எதிராகப் போர் நடத்திக்கொண்டு இருக்கிறதோ, அதே காரணம்தான் புலிகள் வாழும் காட்டுப் பகுதி குறையவும் காரணம். இந்தியக் காடுகள் பெருநிறுவனங்கள் வசமாவதும் காடுகளில் நிறைவேற்றப்படும் ராட்சதத் திட்டங்களுமே முக்கியக் காரணம்.
  கடந்த 2008-09-ல் 23.38 பில்லியன் டாலர்கள் புரளும் தொழிலாக இருந்த இந்தியச் சுரங்கத் தொழிலை 2015-ல் 45.40 பில்லியன் டாலர்கள் புரளும் தொழிலாக மாற்றும் உத்வேகத்தில் ஊக்குவித்து வருகிறது இந்திய அரசு.
  “இந்தியக் காடுகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்து சுரங்கத் தொழிலின் வளர்ச்சிதான்’’ என்கிறார் காட்டுயிர் ஆய்வாளரான மோகன்ராஜ். ‘‘கோவா அரசின் ஒட்டுமொத்த வருவாயைவிட கோவாவில் உள்ள நான்கு சுரங்கத் தொழில் அதிபர்களின் வருவாய் அதிகம். அந்த அளவுக்கு இந்தத் தொழிலில் இருப்பவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். ஆகையால், காடுகளில் அவர்கள் வைத்ததே சட்டமாகி வருகிறது’’ என்கிறார் மோகன்ராஜ்.
  இயற்கையிலாளரான தியடோர் பாஸ்கரன், ‘‘ஒரு சுரங்கம் அமைக்கப்படுவதற்காகப் பெறப்படும் அனுமதிக்கான அடிப்படையே அந்தப் பகுதி காடு அல்ல என்ற சூழலை உருவாக்குவதிலிருந்துதான் தொடங்குகிறது. சுரங்கத் தொழில் காட்டுச் சூழலை எந்த அளவுக்குச் சீரழிக்கும் என்பதற்கு கர்நாடகத்தின் குதிரேமுக் காடு ஓர் உதாரணம். ஒரு காலத்தில் காட்டுயிர்களின் சொர்க்கமாகக் காட்சி அளித்த அந்தக் காட்டில் இன்றைக்கு விலங்குகளைத் தேட வேண்டி இருக்கிறது’’ என்கிறார்.
  இது ஒருபுறமிருக்க, இந்தக் கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்குகிறார் இன்னொரு சூழலியலாளர். பெயர் வெளியட விரும்பாத புலிகள் ஆய்வாளரான அவர், ‘‘இந்தியச் சூழலில் ஒரு புலி வாழ்வதற்கு சராசரியாக 40 ச.கி.மீ. பரப்பு தேவை. ஆக, புலிகள் அதிகரிக்க வேண்டும் என்றால், செழிப்பான காடுகளின் பரப்பு அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்தக் கணக்கெடுப்பு ஒருபுறம் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் மறுபுறம் புலிகள் வாழும் காடுகளின் பரப்பு குறைந்திருப்பதாகவும் சொல்கிறது. இந்தtக் கணக்கெடுப்பும் தரவுகளும் விஞ்ஞான ரீதியிலானவை அல்ல; போலியானவை. ஆனால், வனத் துறையின் தவறை அரசு தெரிந்தே அனுமதிக்கிறது’’ என்கிறார்.
  இந்தியச் சுரங்கத் துறையில் அதிகாரபூர்வக் கணக்குகளைக் காட்டிலும் சட்ட விரோதக் கணக்குகளே அதிகம். நாட்டில் உள்ள சுரங்கங்களில் மூன்றில் இரு பங்கு சுரங்கங்கள் சட்ட விரோதமானவை. நூறு லாரி சரக்குக்கு அனுமதி பெற்றுவிட்டு இரண்டாயிரம் லாரிகள் சரக்கை ஏற்றி இறக்கும் தொழில் இது. காடுகளில் சுரங்க முதலைகள் என்ன ஆட்டம் போட்டாலும் அது வெளியே தெரிவதில்லை. இப்போது புலிகளின் வெளியேற்றம் அங்குள்ள சூழலை வெளிக்காட்டி இருக்கிறது. இந்தியக் காடுகள் வளமிழந்து வருவதையும் பெருநிறுவனங்கள் வசமாவதையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. இதை மறைக்கவே புலிகள் கணக்கெடுப்பை அரசு சாதுரியமாகப் பயன்படுத்தி இருக்கிறது. ஆனால், அழிவை எவ்வளவு காலத்துக்கு மறைக்க முடியும்?

நன்றி: ஆனந்த விகடன் 2011 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக