புது தில்லி இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1,64,415 கோடி என அறிவித்த அடுத்த சில நாட்களில் தங்களுடைய பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 4,57,500 கோடி என்று அறிவித்திருக்கிறது பெய்ஜிங். ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைக் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியா 11.6 சதம் அதிகரித்திருக்கிறது; சீனா 12.7 சதம்!
கடந்த சில ஆண்டுகளாகவே இப்படியொரு போட்டி ஊக்குவிக்கப்படுகிறது. உங்களுக்கு ஞாபகம் இருந்திருக்கலாம். வெகு நீண்ட காலமாக நாம் பாகிஸ்தானுடனான போட்டியை முன்வைத்தே நம்முடைய ராணுவ வியூக நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டிருந்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட நம் ராணுவத்தின் பலங்கள், பலவீனங்கள், அண்டை நாடுகளுடனான போர் சாத்தியங்களை ஒப்பிட்டு புதிய இலக்குகளை நிர்ணயிக்கும்போது பாகிஸ்தானுடனான ஆய்வறிக்கைக்கே பிரதான கவனம் அளித்தது நம்முடைய பாதுகாப்புத் துறை. ஆனால், இப்போது நம்முடைய கவனம் மாறுகிறது. அதாவது, இன்னொரு பனிப்போர்!
இந்தப் பனிப்போர் உருவாகவில்லை. திட்டமிட்டு ஊதிப்பெருக்கி உருவாக்கப்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்த ஊதிப்பெருக்கல் 2007-ல் திட்டமிடப்பட்டது. அதாவது, உலகப் பொருளாதார வீழ்ச்சியால் சர்வதேச ஆயுதச் சந்தை 9 சத இழப்பைச் சந்தித்தபோது; ஈராக்கிலிருந்தும் ஆப்கனிலிருந்தும் அமெரிக்கா படைகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்தபோது; அமெரிக்க ஆயத நிறுவனங்கள் சற்றே ஆட்டம் காணத் தொடங்கியபோது!
உலகில் பாதுகாப்புக்காகச் செலவிடும் நாடுகளில் அமெரிக்காவே முன்னணி வகிக்கிறது. ஏறத்தாழ ரூ. 75 லட்சம் கோடி மதிப்புள்ள சர்வதேச ஆயுதச் சந்தையில் 41.5 சத ஆயுதங்களை அமெரிக்கா வாங்கிக் குவிக்கிறது. சுமார் 20 சத ஆயுதங்களை வாங்கும் ஐரோப்பிய நாடுகளிலும் 7.5 சத ஆயுதங்ளை வாங்கும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் சூழல் சரியில்லாத நிலையில், அடுத்த இடத்தில் இருக்கும் சீனா (5.8 சதம்) - இந்தியா (2 சதம்) இடையே ஒரு பனிப்போரை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கின.
இப்படித்தான் இந்த ஆட்டம் தொடங்கியது. விளைவு? 2008-ல் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 41,000 கோடிக்கு அமெரிக்காவுடன் ஆயுத ஒப்பந்தங்களில் நாம் கையெழுத்திட்டிருக்கிறோம். கடந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையின்போது, மேலும் ரூ. 15,000 கோடிக்கு '10 சி & 17 குளோப் மாஸ்டர்' விமானங்களை வாங்க நாம் முடிவெடுத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப் பெரிய ஆயுத விநியோகஸ்தராக அமெரிக்கா உருவெடுத்திருக்கிறது. உலகிலேயே அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடு அமெரிக்கா; இறக்குமதி செய்யும் நாடு இந்தியா!
இப்போது சீனாவுடனான போட்டியில் நாம் உற்சாகமாகிவிட்டோம். நாட்டில் அத்தியாவசிய பிரச்னைகள் ஆயிரமாயிரம் சூழ்ந்திருந்தாலும் ஆயுதங்களை வாங்க மேலும் மேலும் ஒதுக்கீட்டை உயர்த்திக்கொண்டிருக்கிறோம். ஆயுத நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். இதற்காகத்தான் - ஒவ்வொரு நாட்டையும் சுற்றி இத்தகைய பனிப்போர்ச் சூழல்களையும் ஆயுதங்கள் வாங்குவதற்கான தேவையையும் உருவாக்குவதற்காக - ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் கோடிகளைச் செலவிடுகின்றன ஆயுத நிறுவனங்கள்.
இந்தியாவுக்கு சீனாவுடனான இந்தப் போட்டி தேவைதானா? அதாவது, பாதுகாப்புத் துறையில்?
நாட்டின் 60 கோடி மக்கள் கல்வியறிவற்றவர்களாக உள்ள ஒரு தேசம், ஒரு நாளைக்கு ரூ. 100-க்கு வழியில்லாத 50 கோடி மக்களைக் கொண்ட ஒரு தேசம், சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகும் கல்வித் துறைக்காக அதிகபட்சம் ரூ. 52,057 கோடிக்கு மேல் ஒதுக்க முடியாத ஒரு தேசம் பாதுகாப்புக்காகவும் ஆயுதங்களுக்காகவும் இத்தனைச் செலவிடுவது தேவைதானா?
இந்தச் செலவை நியாயப்படுத்துபவர்கள் வெளிநாட்டு ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி நியாயப்படுத்தலாம். ஆனால், வர்த்தக நலன் சார்ந்த சர்வதேச அரசியல் சூழல் மற்றும் அணு ஆயுதப் பாதுகாப்புச் சூழல் பின்னணியில் அத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு இன்றைக்கு இல்லை. அதேசமயம், வறுமையும் விரக்தியும் சூழ்ந்த பின்னணியில் ஓர் உள்நாட்டுப்போரை எதிர்கொள்வதற்கான எல்லாச் சூழல்களும் இந்தியாவுக்கு இருக்கின்றன.
ஒரு முன்னேறும் நாட்டை எதிரியாக்கிக்கொண்டு, ராணுவ பலத்தை மட்டுமே பெருக்கினால் அந்த நாட்டின் நிலை என்னவாகும்? ஏற்கெனவே இஸ்லாமாபாத் ஆட்சியாளர்கள் உலகுக்கு அந்தப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
இப்போது நாம் சீனாவாகப் போட்டியிடுகிறோமா?; பாகிஸ்தானாகப் போட்டியிடுகிறோமா?
ஆனந்த விகடன் 2011
Good...But your concept is not in depth
பதிலளிநீக்குBy
Venky
சமஸ் சார்... ஒரு பிரச்னையை நீங்கள் அணுகும் கோணம் வேறு எவராலும் யூகிக்கவே முடியாதது. சூப்பர்ப் சார்!
பதிலளிநீக்கு-சாந்தி முருகேசன், மதுரை.
சீனாவும் இந்தியாவும் சேர்ந்தால் இரண்டு நாடுகலுமே நல்ல முன்னேரலாம்! இதை யாரும் முன்னெடுக்கிரகலா?
பதிலளிநீக்கு