‘‘நாங்கள் நிறைய சம்பாதிக்கிறோம். முன்னெப்போதையும்விட நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால், அரசாங்கம் நெருக்கடியில் இருக்கிறது. ஏன் என்னைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு எனப் பிரத்யேகமான வருமான வரியை அரசாங்கம் வசூலிக்கக் கூடாது?’’ - அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வரிச் சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபே சொன்ன யோசனை இது.
வாரன் பஃபேயின் யோசனையை ஒபாமா உடனடியாக ஏற்றிருக்கிறார். ஒரு மில்லியன் டாலர்களுக்கு அதிகமாகச் சம்பாதிக்கும் அமெரிக்கர்கள் இனி தங்கள் வருமானத்தின் கணிசமான பகுதியை வரியாகச் செலுத்தும் வகையில் பஃபேயின் பெயரிலேயே ‘பஃபே ரூல்’ என்ற திட்ட வரைவை அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஒபாமா. அமெரிக்கர்களிடம் கவரக் கூடிய ஓர் அம்சம் இது. அமெரிக்க முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள். ஆனால், தான் வாழும் சமூகத்தின் மேலான அக்கறையைத் தேவை ஏற்படும்போது எல்லாம் வெளிப்படுத்துகிறார்கள். பில் கேட்ஸ் உலகின் மிகப் பெரும் பணக்காரராக அறியப்பட்ட நாட்களில்தான் அவருடைய ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை’ உலகின் மிகப் பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியது. ஏழை நாடுகளின் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்குத் தேடித் தேடி உதவத் தொடங்கியது.
அமெரிக்கர்கள் முதலாளித்துவத்தைப் பின்பற்றுகிறார்கள். முதலாளித்துவத்துக்கு என்று சில அறநெறிகளையும் பின்பற்றுகிறார்கள். முதலாளித்துவம் நமக்குப் பிடிக்கிறதா, இல்லையா; அது நல்லதா, கெட்டதா என்பது வேறு விஷயம். இந்தியாவும் முதலாளித்துவத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால், முதலாளித்துவ அறநெறிகளை நாம் கடைப்பிடிக்கிறோமா?
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுக் காலத்தில் பணக்காரர்கள் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து இருக்கிறது. ‘பெயின் அண்ட் கோ கன்சல்டன்ஸி’யின் ஆய்வின்படி, 2000-க்குப் பின்னர் இந்தியாவில் பணக்காரரர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 11 சதவீதம் என்கிற அளவில் வளர்ந்துவருகிறது. கடந்த ஆண்டு ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை உலகெங்கும் ஒரு பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 4.8 ஆயிரம் கோடி) மேல் சொத்துகள் வைத்து இருப்போரின் பட்டியலை வெளியிட்டது. ஏறத்தாழ ஆயிரம் பேர் கொண்ட அந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை 49. இந்த 49 பேருடைய மொத்த சொத்துகளின் மதிப்பு 222.1 பில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 லட்சத்து 66 ஆயிரத்து 80 கோடி). இந்திய அரசின் 2011-12-ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த வரி மற்றும் வரியில்லாத வருவாய் மதிப்பீட்டு அளவு ரூ. 10.57 லட்சம் கோடிதான். அதாவது, இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரி வருமானமும் 49 பணக்காரர்களின் சொத்து மதிப்பும் கிட்டத்தட்ட சமம். ஆனால், நாட்டின் வரி வருவாயில் பணக்காரர்களின் இந்த வளர்ச்சி எந்த அளவுக்குப் பிரதிபலிக்கிறது?
இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடி. ஆனால், வருமான வரி செலுத்துபவர்கள் 4 சதவிகிதத்துக்கும் குறைவு. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், மொத்த வரியின் பங்கு சுமார் 10 சதவிகிதம்தான்.
இந்தியாவில் ரூ. 8 லட்சத்துக்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள எவருக்கும் விதிக்கப்படும் வருமான வரி 30 சதவிகிதம். நீங்கள் மாதம் ரூ. 70 ஆயிரம் சம்பளம் வாங்கும் மென்பொருள் நிறுவன அதிகாரியாக இருக்கலாம்; அல்லது ஆயிரம் பேருக்கு மாதம் ரூ. 70 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் தரும் பத்து மென்பொருள் நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபராகவும் இருக்கலாம். ஆனால், நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி... உங்கள் வருமானத்தில் 30 சதவிகிதம்தான். இந்தியா ஏன் பெரும் பணக்காரர்களுக்கு எனப் பிரத்யேக வரி விதிக்கக் கூடாது?
வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடு, முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்குத் தேவையான சலுகைகளை வரையறுப்பதுபோலவே அவர்களுடைய கடமைகளையும் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப வரையறுப்பது முக்கியமானது. அமெரிக்கா ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாகச் சம்பாதிப்பவர்களைப் பெரும் பணக்காரர் என்று வரையறுத்து இந்த வரியை விதிக்கப்போகிறது. இந்தியச் சூழலில் இந்தத் தொகையை இன்றைய சூழலில் ரூ. 1 கோடி எனத் தீர்மானிக்கலாம். ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்குப் புதிய வரிவிதிப்பு முறையைக் கொண்டுவரலாம்.
இந்த நாடு டாடா, அம்பானிகள் வீட்டுச் சமையல் அறைகளுக்கும்கூட மானிய விலையிலேயே எரிவாயுவை அனுப்பும் நாடு. பணவீக்கமும் விலைவாசி உயர்வும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நாட்டை விரட்டிக்கொண்டு இருக்கும் சூழலில், இந்த நாட்டின் டாடா, அம்பானிகள் ஏன் இதுபற்றி சிந்திக்கக் கூடாது?
2011 நாணய விகடன்
நல்லதொரு கருத்து, இனி ஒரு விதி செய்வோம்....
பதிலளிநீக்குகா. ஜெயசீலன்.
சென்னை
Here in India corporates/company owners are not paying their due as per the existing laws. They are breaking their heads to find loop holes. Indian corporates have miles to go...Unless suitable legal frame work is created they exploit Indian masses, leave alone proactively paying.
பதிலளிநீக்குGovindasamy Sekar
We now have a super-rich tax levied as a surcharge of 10% (in addition) on those with income more than 1 crore.
பதிலளிநீக்குநல்ல கருத்து
பதிலளிநீக்கு. அசோக்