ஒபாமாவுக்கு பஸ்! மன்மோகனுக்கு?

பராக் ஒபாமா இப்போது பஸ் பயணங்களுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார். அமெரிக்கப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு சாமானியர்களுடனான இத்தகைய பயணங்கள் அவருக்கு உதவும் என்று கூறுகிறார்கள் அவருடைய கட்சியினர். அமெரிக்கர்கள் இதைச் சட்டை செய்யவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு ஒபாமா தயாராகிக்கொண்டு இருப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள். 2007-08 பொருளாதார மந்த நிலைக்குப் பின் பெரிய மீட்பராக அவர்கள் பார்த்த ஒபாமா இப்போது இல்லை. கடந்த மாத இறுதியில், நாட்டின் கடன் உச்சவரம்பைத் தீர்மானிக்க எதிர்க்கட்சியினருடன் நடத்திய பனிப்போரின் முடிவில், தனக்கு விருப்பம் இல்லாத உடன்பாட்டுக்கு ஒபாமா வந்தபோதே அவர் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த மிச்ச நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன. வரலாற்றிலேயே முதல் முறையாக, சர்வதேசக் கடன் மதிப்பீட்டுத் தரச் சான்று நிறுவனமான ‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, அமெரிக்க அரசின் கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதியை ‘ஏஏஏ’ _ மிகவும் பாதுகாப்பானது _ என்கிற நிலையில் இருந்து அடுத்த நிலையான ‘ஏஏ+’-க்குத் தரம் இறக்கிய பின் ஒபாமாவின் பிம்பம் சுக்குநூறாகச் சிதறிவிட்டது. அடுத்தடுத்து, பங்குச் சந்தைகளில் தொடரும் வீழ்ச்சிகள் அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான காலத்தைக் கையாண்ட அதிபராக ஒபாமாவை மாற்றிக்கொண்டு இருக்கின்றன.
ஒபாமாவின் இந்த வீழ்ச்சிக்கு யார் காரணம்? 
கடன்தான் பொருளாதாரம்
உலகுக்கு ‘கடன்தான் பொருளாதாரம்’ என்கிtற போக்கை அறிமுகப்படுத்தியது அமெரிக்காதான். சந்தைப் பொருளாதாரமே சிறந்தது; மக்களைச் சேமிக்க வைப்பதைவிடவும் அவர்களைச் செலவழிக்கத் தூண்டுவதே சந்தைப் பொருளாதாரத்தின் ஜீவநாடி என்கிற சித்தாந்தத்தை உருவாக்கியதும் அமெரிக்கர்கள்தான். இப்போது அதற்கு விலை கொடுக்கிறார்கள். அமெரிக்காவின் இப்போதைய கடன் 14.3 லட்சம் கோடி டாலர். நாடு திவாலாகிவிடாமல் நெருக்கடியைச் சமாளிக்க தன்னுடைய கடன் வரம்பை மேலும் 2 லட்சம் கோடி டாலர்கள் அதிகரிப்பது என்றும் செலவுகளை 3 லட்சம் கோடி டாலர்கள் குறைப்பது என்றும் இப்போது முடிவு எடுத்து இருக்கிறது அமெரிக்கா. செலவுக் குறைப்பு என்கிற வார்த்தையின் மறைமுகப் பொருள் மக்கள் நலத் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் ஆகியவற்றில் கைவைப்பதுதான்.
இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்காவுக்கு இரு வாய்ப்புகள் இருந்தன: 1. வரிகளை உயர்த்தி வருவாயைப் பெருக்கி செலவுகளைக் குறைப்பது. 2. மக்களுக்கான செலவுகளைக் குறைப்பது. முதல் வழி பெரு நிறுவனங்களை & செல்வந்தர்களைப் பாதிக்கும். இரண்டாவது வழி சாமானிய மக்களைப் பாதிக்கும். ஒபாமா முதல் வழியைத் தேர்ந்தெடுத்து இருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும். ஆனால், அவரால் அந்த முடிவை எடுக்க முடியவில்லை. அவரால் மட்டும் அல்ல; எந்த அமெரிக்க அதிபராலும் அந்த முடிவை எடுக்க முடியாது. காரணம்... அரசியலைப் பின்னிருந்து இயக்கும் சந்தைப் பொருளாதாரம் & பெருநிறுவன முதலைகள். சந்தைப்[ பொருளாதாரத்தின் மிகப் பெரிய அபாயம் இது. ஒபாமாவின் வீழ்ச்சி உலகுக்குச் சொல்லும் சேதி இதுவே.

தொடரும் வீழ்ச்சிகள்
சந்தைப் பொருளாதாரத்தின் அடுத்த அபாயம்... ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அந்த நாட்டுடன் மட்டும் முடிந்துவிடாது என்பது. அமெரிக்கா ‘ஏஏஏ’ தகுதியை இழந்த அடுத்த ஓரிரு நாட்களில் பிரான்ஸும் அந்தத் தகுதிய இழக்க நேர்ந்தது ஓர் உதாரணம்.
கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக _ 2007-08 பொருளாதார மந்தநிலை உட்பட _ வெற்றிகராமாகச் சமாளித்த சீனா, இப்போதைய அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவுக்கு அதிக அளவில் கடன் கொடுத்து இருக்கும் நாடுகளில் முதல் இடத்தில் இருக்கிறது சீனா. பிரச்னை அதுவல்ல. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதம் ஏற்றுமதியை நம்பிதான் இருக்கிறது. எப்போதுமே ஏற்றுமதியை நம்பி இருக்கும் நாடுகளின் முதல் நண்பன் அமெரிக்கா. அடுத்து, ஐரோப்பிய நாடுகள். இப்போது அங்கும் நிலைமை சரியில்லை. ஐரோப்பிய நாடுகளின் இன்றைய நிலைக்கு சிறந்த உதாரணம் கிரேக்கம். கிரேக்கத்தின் கடன் தொகை ரூ. 25 லட்சம் கோடி. அந்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால், ஒன்றரை மடங்கு இது. கிட்டத்தட்ட கிரேக்கம் திவாலாகிவிட்டது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் கடன் மேல் கடன் கொடுத்து கிரேக்கத்தைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றன. கிரேக்கம் வீழ்ந்தால், அடுத்த சில நாட்களில் ஸ்பெயினும் போர்ச்சுகலும் வீழும். தொடர்ந்து அத்தனை ஐரோப்பிய நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கும். ‘யூரோ’ மதிப்பை இழக்கும். இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காகவே கிரேக்கத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு இருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். ஜப்பானோ பூகம்பம் தந்த அடியில் இருந்து இன்னமும் மீளவில்லை. ஆக, உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சரிபாதி மதிப்பைக் கொண்டு இருக்கும் அமெரிக்க & ஐரோப்பிய & ஜப்பானிய பொருளாதார வீழ்ச்சி பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுக்கும் என்று அஞ்சுகிறது சீனா. பொருளாதார நிபுணர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். ‘‘இப்போதைய தலையாய பிரச்னை நாடுகளின் கடன் அல்ல. பரவலான வளர்ச்சி குறைந்துகொண்டே இருக்கிறது; பெருநிறுவனங்கள், பெருமுதலாளிகள் மட்டும் வளர்கிறார்கள். மக்களின் விரக்தி அதிகமாகிறது’’ என்கிறார்கள் அவர்கள்.

லண்டன் ஏன் பற்றி எரிந்தது?
சமீபத்திய லண்டன் கலவரம் இதை உறுதிப்படுத்துகிறது. ஓர் ஆப்பிரிக்க கரீபியன் _ கள்ளத் துப்பாக்கி விற்பவன் _ சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தொட்டன்ஹாமில் தொடங்கிய கலவரம் பல இடங்களுக்கும் பல நாட்களுக்குப் பரவக் காரணம்... காவல் துறையினர் மீதான கோபம் மட்டும்தான் என்று யாரும் நம்பவில்லை. கலவரத்தைப்[ பயன்படுத்தி மக்கள் கடைகளில் புகுந்து கொள்ளை அடித்தார்கள்; தங்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களில் தொடங்கி காலணிகள் வரை. யாருக்கும் பயப்படாமல் _ முகத்தை மறைத்துக்கொள்ளாமல் _ தங்களுக்கு உடைமையானதை எடுத்துச் செல்வதுபோல உரிமையோடு எடுத்துச் சென்றார்கள். வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் சூழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் வெறுப்பையும் அதிருப்தியையும் ஞாபகப்படுத்துகின்றன லண்டன் கலவரங்கள்.

காத்திருக்கும் அபாயம்

இந்தியா இப்போது சந்தைப் பொருளாதாரத்தை வேகமாக சுவீகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதம் ஏற்றுமதியை நம்பி இருக்கிறது. அமெரிக்க நெருக்கடி இந்தியப் பங்குச் சந்தையில் ஒரு வாரத்துக்குள் பல்லாயிரம் கோடிகளை முழுங்கி இருக்கிறது. 75 சதவிகிதப் பங்குகள் வீழ்ந்து இருக்கின்றன. ‘‘நமது பொருளாதாரம் மிக மிக வலுவாக இருக்கிறது’’ என்று மீண்டும் மீண்டும் அறிவித்துக்கொண்டு இருக்கிறார் நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜி. விரக்தியில் இருக்கும் ஏழை இந்தியர்களின் கண்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருக்கின்றன!
2011 ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக