கோமாளிகளின் கூடாரம்!

ஸ்ரீலஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் தன்னுடைய மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சாரிய ஸ்வாமிகளைச் சட்டபூர்வமாக நியமித்தது ஒருநாள் நகைச்சுவையாக மாறிப்போனதை நம் சமூகத்தின் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும். சர்வ வல்லமை மிக்க முதல்வரையோ, பிரதமரையோகூட உங்களால் கேள்வி கேட்க முடியும். ஆனால், ஆதீனகர்த்தாக்களையோ, மடாதிபதிகளையோ ஒன்றுமே செய்ய முடியாது. இதற்கு எப்படிச் சிரிப்பது?
   தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுக்கும் மடங்களுக்கும் நீண்ட வரலாறு உண்டு. தமிழுக்கு அவை தொண்டாற்றிய காலமும் உண்டு. இன்றைக்குச் செம்மொழி அந்தஸ்து தமிழுக்குக் கிடைக்க அடிப்படையான சங்க இலக்கிய ஓலைச்சுவடிகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பாதுகாத்துவைத்து இருந்தவை ஆதினங்களும் மடங்களும்தான். அவற்றிடம் இருந்துதான் ஓலைச்சுவடிகளை வாங்கி அச்சுக்குக் கொண்டுவந்தார் உ.வே.சா. பக்தி இலக்கியத்துக்கும் சைவச் சித்தாந்தத்துக்கும் ஆதினங்களின் பங்களிப்பு மகத்தானது. ஆனால், இவை எல்லாமே கடந்த காலம். இன்றைக்கு அவை பழமையின் முடைநாற்றம் அடிக்கும் கோமாளிகளின் கூடாரங்கள். ஒரு பெரும் அபாயம் என்னவென்றால், இந்தக் கோமாளிகளிடம் பல்லாயிரக்  கணக்கான கோடி ரூபாய் சொத்துகள் வேறு இருக்கின்றன. முக்கியமாகக் கோயில்கள்!
   மதுரை ஆதீனத்தையே எடுத்துக்கொண்டால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக அதற்கு 1250 ஏக்கர் நிலம் இருக்கிறது; ஒரு தெருவே சொந்தமாக இருக்கிறது; ஏராளமான  வணிக வளாகங்கள் இருக்கின்றன; கோயில்கள் இருக்கின்றன. ஒருகாலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது (மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விலை மதிப்பு போட்டால் எவ்வளவு இருக்கும்?) இப்போது மீனாட்சி அம்மன் கோயிலை மீட்கும் திட்டத்தில் இருக்கிறாராம் நித்யானந்தர். நடந்தாலும் நடக்கும்; யார் கேட்க?
   சோலை சுந்தரபெருமாள் தன்னுடைய ‘தாண்டவபுரம்’ நாவலில், திருஞானசம்பந்தருக்கும் ஒரு ருத்ரதாசி பெண்ணுக்கும் இருந்த உறவைப் பூடகமாகக் குறிப்பிட்டதைக் கண்டித்து பெரும் அபச்சாரம் நேர்ந்துவிட்டதாகக் குதித்தார்கள் ஆதீனத்தின் அடிப்பொடிகள். நித்யானந்தரின் நியமனம் அவர்களைப் புல்லரிக்க வைத்திருக்கும் என்பதில் உங்களுக்குச்     சந்தேகமும் உண்டா என்ன?
ஆனந்த விகடன் மே 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக