நான் லாபி செய்கிறேனா?: ஸ்ரீனிவாசன்


                                   இது ஸ்ரீனிவாசனின் பொற்காலம்! ஒருபக்கம், தென்னகத்தின் பெரும் சிமென்ட் நிறுவனமான அவருடைய 'இந்தியா சிமென்ட்ஸ்’ வடக்கிலும் கிளை பரப்பிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், அவருடைய 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி ஐ.பி.எல். போட்டிகளில் கோடிகளை வாரிக் குவிக்கிறது. இந்தியாவைத் தாண்டியும் கோலோச்சுகிறார் ஸ்ரீனிவாசன். சர்வதேச கிரிக்கெட் ஆணையமே அவர் சொல்படி ஆடுகிறது. புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் மிதக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை அவருடைய 'இந்தியா சிமெண்ட்ஸ்' அலுவலகத்தில் சந்தித்தேன்.

                                   ''இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிகளில் புரள்கிறது. ஆனால், இன்னமும் பெரும்பான்மை இந்திய இளைஞர்கள் டென்னிஸ் பந்துகளை வைத்துத்தான் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற என்ன செய்யப்போகிறீர்கள்?''
''வாரியத்துக்கு வரும் வருமானத்தில் 70 சத விகிதத்தை மாநிலச் சங்கங்களுக்கும் 26 சதவிகிதத்தை வீரர்களுக்குச் சம்பளமாகவும் கொடுத்துவிடுகிறோம். எஞ்சிய தொகையில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குகிறோம். இதுதான் கணக்கு. இப்போது தேனியில் தொடங்கப்பட்டு இருக்கும் கிரிக்கெட் அகாடமியைப் போல, நாடு முழுவதும் மாவட்டங்கள்தோறும் கிரிக்கெட் அகாடமிகளைத் தொடங்க இருக்கிறோம். விளையாடுவதற்குத் தேவையான பொருட்களை இலவசமாகத் தர இருக்கிறோம். சூழல் விரைவில் மாறும்!'' 

                                   ''ஆண்டுக்கு 2,000 கோடி வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியத்துக்கு வருமான வரிவிலக்கு தேவைதானா?''
''தேவையா, இல்லையா என்பது இல்லை. இவ்வளவு காலம் வருமான வரிவிலக்கு இருந்தது. அது மேலும் தொடர வேண்டும் என்று நினைக்கிறோம்... அவ்வளவுதான். ஆனால், வருமான வரிவிலக்கு இல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவில் இத்தனை ஊர்களில் இன்றைக்கு நீங்கள் கிரிக்கெட் மைதானங்களைப் பார்க்க முடியாது!''

                                   ''சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆதிக்கம் செலுத்துகிறதா?''
''சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் மீது காலங்காலமாக யார் ஆதிக்கம் செலுத்திவந்தார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். இன்றைக்கு கிரிக்கெட்டை ஆடும் மக்கள், பார்க்கும் ரசிகர்கள், கிரிக்கெட்டில் கொட்டும் பணம் எல்லாமே இந்தியாவில்தான் அதிகம். முன்புபோலன்றி, இப்போது நாம் நம்முடைய உரிமைகளைக் கேட்டுப் பெறுகிறோம். இது எப்படி ஆதிக்கம் ஆகும்?''

                                   ''அரசியல்வாதிகளாலும் தொழிலதிபர்களாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிர்வகிக்கப்படும் சூழல் எப்போது மாறும்?''
''கிரிக்கெட் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களால் அது நிர்வகிக்கப்பட வேண்டும். அவ்வளவுதானே? ஏன் தொழிலதிபர்களாலோ, அரசியல்வாதிகளாலோ நிர்வகிக்கப்படக் கூடாது என்று நினைக்கிறீர்கள்? உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் அப்பா காலத்தில் இருந்து 'இந்தியா சிமென்ட்ஸ்’ கிரிக்கெட்டை ஆதரித்துவருகிறது. வீரர்களுக்கு நிறுவனத்தில் வேலை அளித்துவருகிறது. அணிகளை நடத்திவருகிறது. ஒரு தொழிலதிபர், கிரிக்கெட் ரசிகராக இருக்கக் கூடாதா?''

                                   ''கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் இருக்கும் நீங்களே, ஐ.பி.எலில் ஓர் அணியைச் சொந்தமாக்கிக்கொண்டது தவறு இல்லையா?''
'' 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ ஒரு ஸ்ரீனிவாசனுக்கு மட்டும் சொந்தம் இல்லை. 'இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான பங்குதாரர்களின் சொத்து அது. இந்தியா சிமென்ட்ஸுக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள தொடர்பு அரை நூற்றாண்டுக்கும் மேலானது. 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ தவிர, 12 அணிகள் எங்களுக்குச் சொந்த மாக இருக்கின்றன. அவை எல்லாம் தவறாகாத போது, இது மட்டும் எப்படித் தவறாகும்?''

                                   ''ஒரு தமிழராக தமிழகத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் உரிய இடம் கிடைத்திருப்பதாகக் கருதுகிறீர்களா?''
''இல்லை. இன்னும் நிறையப் பேர் ஆட வேண்டும். ஆனால், அது வாரியம், தேர்வாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. வீரர்களின் தகுதி சம்பந்தப்பட்டது. நீங்கள் நன்றாக விளையாடினால், உங்களுக்கான இடம் நிச்சயம்!''

                                   ''ஐ.பி.எல். மவுசு குறைகிறதா?''
''ஒருபோதும் குறையாது. இடையில் லலித் மோடி செய்த தவறுகளால் ஐ.பி.எல். மீது ஒரு களங்கமான தோற்றம் உருவானது உண்மை. ஆனால், அதைக் கடந்து வந்தாயிற்று. இப்போது ஆட்டம் நடக்கும் மைதானங்களுக்குப் போய்ப் பாருங்கள். எங்கும் ஹவுஸ்ஃபுல்!''

                                   ''தேர்தலுக்காக ஐ.பி.எல். போட்டிகளை இந்திய அரசு தள்ளிவைக்கச் சொன்னபோது மறுத்துவிட்ட  வாரியம், இப்போது சஹாரா நிறுவனம் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் விதிகளையே தளர்த்தும் அளவுக்கு அடிபணியக் காரணம் என்ன?''
''முதல் ஆண்டு ஐ.பி.எல். பெரும் வெற்றி பெற்று, மக்கள் இரண்டாவது சீஸனுக்காகக் காத்திருந்த காலகட்டம் அது. அப்போது போட்டிகளைத் தள்ளிவைத்து இருந்தால், மக்களும் ஏமாந்திருப்பார்கள்; எங்களை நம்பிப் பணம் கொடுத்த தொலைக்காட்சி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனால் மறுத்தோம். சஹாராவைப் பொறுத்த அளவில் அவர்களுடைய கோரிக்கை நியாயமானது. அதை ஏற்றதால் யாருக்கும் இழப்பு இல்லை. அதனால் ஏற்றோம்.''

                                   ''ஒரு கிரிக்கெட் ரசிகராகச் சொல்லுங்கள்... க்ளாஸிக் கிரிக்கெட்டை 20-20 அழித்துக்கொண்டு இருக்கிறதுதானே?''
''முதன்முதலில் 20-20 ஆட்டத்தைப் பார்த்தபோது, எனக்கே அதை ஏற்றுக்கொள்வதில் நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால், அது இன்றைக்கு அடைந்திருக்கும் வளர்ச்சி, நிச்சயம் ஒரு கிரிக்கெட் புரட்சி. ஒரு புதிய பார்வையாளர் படையையே அது கொண்டுவந்து இருக்கிறது. முக்கியமாகப் பெண்களையும் சிறுவர்களையும். இனி கிரிக்கெட் என்றால்... அது டெஸ்ட், ஒன் டே, 20-20 மூன்றையுமே குறிக்கும். ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்றைக்குமே அழிந்துவிடாது. க்ளாஸிக் இஸ் க்ளாஸிக்!''

                                   ''கிரிக்கெட்தான் இந்தியாவில் எல்லா விளையாட்டுகளையும் அழுத்துகிறது. பரிகாரமாக கிரிக்கெட் வாரியம் ஏன் பணம் இல்லாத ஏனைய விளையாட்டு அமைப்புகளுக்கு உதவக் கூடாது?''
''நிறைய உதவ நினைக்கிறோம். உதவிக்கொண்டும் இருக்கிறோம். இப்போதுகூட அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்புக்கு  12.5 கோடி ரூபாய் கொடுத்தோம்.''

                                   ''தமிழகத்தில் சிமென்ட் உற்பத்தித் துறையை வளர்த்தெடுத்ததில் உங்களுக்குப் பெரிய பங்கு உண்டு. சுற்றுச்சூழல் சார்ந்து தமிழகம் இப்போது அதற்குப் பெரிய விலையைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இதை உணர்கிறீர்களா?''
''சிமென்ட் என்பது ஒரு நாட்டின் உள் கட்டமைப்பின் உயிர்நாடி. ஒரு சிமென்ட் தொழிற்சாலையை சுண்ணாம்புக் கல் கிடைக்கும் இடத்தில் மட்டும்தான் நிறுவ முடியும். இந்தியாவில் எட்டு மாநிலங்களில் - அங்கும் சில இடங்களில் மட்டும்தான் சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது. ஆனால், சிமென்ட் தேவையோ ஒட்டுமொத்த நாட்டுக்குமானது. 40 வருடங்களுக்கு முன் நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது இந்தியாவின் சிமென்ட் உற்பத்தி 1.9 கோடி டன். இன்றைக்கு தமிழகத்தின் உற்பத்தியே 3.5 கோடி டன். நாடும் வளர்ந்து இருக்கிறது. நாமும் வளர்ந்து இருக்கிறோம். ஆனால், சுற்றுச்சூழல் பிரச்னையில் இப்போது எல்லா சிமென்ட் ஆலைகளுமே கவனம் செலுத்திவருகிறோம். மாசற்ற தொழில்நுட்பம், மரம் வளர்ப்பு என்று நாங்களும் சூழலைப் பாதுகாக்க நிறைய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்.''

                                   ''இந்தியாவில் சிமென்ட் விலை கூடிக்கொண்டேபோகிறது. ஆலை அதிபர்களின் சிண்டிகேட், குறிப்பாக உங்கள் தலைமையிலான லாபிதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுவதுபற்றி என்ன சொல்கிறீர் கள்?''
''அர்த்தமற்ற குற்றச்சாட்டு இது. சிமென்ட் ஆலைகளுக்கான நிலக்கரி விலையில் இருந்து எங்களுக்கான வரிகள் வரை எல்லாமே உயர்ந்து இருக்கின்றன. விலைவாசி உயர்வைப் பற்றி நீங்கள் எல்லாம் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். நாங்கள் பேசவில்லை. அவ்வளவுதான். எங்களுக்கு எதுவுமே குறைந்த விலையில் கிடைக்காதபோது, நாங்கள் மட்டும் எப்படிக் குறைந்த விலைக்கு சிமென்ட்டைக் கொடுக்க முடியும்?''
ஆனந்த விகடன் ஏப்ரல் 2012

3 கருத்துகள்:

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  பதிலளிநீக்கு
 2. சமஸ் சார்!

  தங்களின் கேள்விகள் ஒவ்வொன்றும் நறுக்கு தெரித்தாற்போல் இருக்கிறது. அதற்கு சீனிவாசனின் மழுப்பல்களே பதில்களாகி இருக்கின்றன.

  பதிலளிநீக்கு