நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார், “இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்களைப் பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்?”
நான் சொன்னேன், “இந்திய ஊடகங்களை ஆங்கில ஊடகங்கள், பிராந்திய ஊடகங்கள் என்று தனித்தனியே பிரித்துப் பார்க்க
ஏதும் இல்லை. அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர, பொதுவாக நம்முடைய ஊடகங்கள் காப்பி ஊடகங்கள். நம்முடைய
ஆங்கில ஊடகங்கள் மேற்கத்திய ஊடகங்களை காப்பியடிக்கின்றன; பிராந்திய ஊடகங்கள் ஆங்கில ஊடகங்களை காப்பியடிக்கின்றன.”
மேலோட்டமாக இது சாதாரணமான விஷய மாகத் தெரியலாம். அப்படி அல்ல. ஊடகங்கள்
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற - மேற்கத்திய மன்னராட்சிக் கால - ராபர்ட்
கார்லைல் சிந்தனையேகூட மேலோட்டமானதுதான். என்னைக் கேட்டால், ஊடகங்கள்தான் நவீன சமூகத்தின் எதிர்காலத்தைக் கல்வித்
துறையோடு சேர்ந்து கட்டியமைக்கும் கொத்தனார்கள் என்று சொல்வேன்.
எங்கிருந்து வருகிறது பார்வை?
இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவரைப் பற்றியும்
ஒரு பார்வை இருக்கிறது. உதாரணமாக, உங்களுக்கு மன்மோகன் சிங்கைப்
பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மோடியைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மம்தாவைப்
பற்றி ஒரு கருத்து இருக்கலாம். சன்னி லியோனைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம்.
ஆனால், இந்தக் கருத்துகளைத் தாண்டி
பொதுவில் - நம் அனைவர் மத்தியிலும் - ஒரு கருத்து இருக்கிறது. மன்மோகன் சிங்
எதையும் வேகமாகச் செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்; மோடி ஒரு காரியக்காரர் என்று நினைக்கிறோம்; மம்தாவைக் கோபக்காரராகவும் சன்னி லியோனை எதற்கும்
துணிந்தவராகவும் பார்க்கிறோம். நம்மிடம் இந்தப் பொதுவான பார்வையை உருவாக்கியது
யார்? யோசித்துப்பாருங்கள். மன்மோகன்
சிங்கையோ சன்னி லியோனையோ நம்மில் எத்தனை பேருக்கு நேரடியாகத் தெரியும்? எந்த அடிப்படையில் நாம் அவர்களைத் தீர்மானிக்கிறோம்? இந்தத் தீர்மானங்கள் மன்மோகன் சிங்கின் எதிர்காலத்தையோ, மோடியின் எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு
வகிக்கின்றன என்றால், இந்த நாட்டின் எதிர்காலத்தைக்
கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது யார்?
சந்தேகமே வேண்டாம். ஜனநாயகத்தில் ஊடகங்கள் அவ்வளவு சக்தி பெற்றிருக்கின்றன.
கருத்துகளை, சிந்தனைகளை உருவாக்குவதன் மூலம்
சமூகத்தின் போக்கையே தீர்மானிக்கின்றன. ஆனால், ஒரு சமூகத்தின் பார்வையை உருவாக்கும் ஊடகங்கள் ஒரு நாட்டில், காலனிய இரவல் சிந்தனையோடும் பார்வையோடும்தான் காலம்
தள்ளுகின்றன என்றால், அந்தச் சமூகத்தின் - நாட்டின்
பார்வையும் சிந்தனையும் எப்படி இருக்கும்?