நான்கு பேர் மோட்டார் சைக்கிளைச் சிந்தியுங்கள்!



            போக்குவரத்து நெரிசலும் பெட்ரோல் விலை உயர்வும் செய்தியாகும்போது எல்லாம் இப்படி ஓர் எண்ணம் தோன்றும்: ஏன் இந்திய அரசாங்கம் நான்கு பேர் வரை பயணிக்கத்தக்க இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது?

            இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இங்கிலாந்தின் ஸ்டாம்போர்ட் பகுதியைச் சேர்ந்த காலின் ஃபர்ஸ் சமீபத்தில் 25 பேர் பயணிக்கத் தக்க ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கிறார். ஒரு பிளம்பரான காலின் தன்னுடைய 125 சிசி ஸ்கூட்டரின் பின்பக்கத்தைப் பாதி அளவுக்கு வெட்டி எடுத்து, 22 மீட்டர்  நீளம் கொண்ட அலுமினிய சேஸுடன் இணைத்து உருவாக்கி இருக்கும் ஸ்கூட்டர்தான் இப்போது உலகின் நீளமான ஸ்கூட்டர். சமீபத்தில் தன்னுடைய ஸ்கூட்டரில் 23 பேரை உட்காரவைத்து கின்னஸ் சாதனைக்காக சவாரி அழைத்துச் சென்றார் காலின். இதற்கு முன் ரஷ்யாவின் ஒலெக் லெஷி ரகோ 9.57 மீட்டர் நீளத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் செய்திருக்கிறார். இதுபோல நீளமான - 20, 25 பேர் பயணிக்கத் தக்க - சாதனை வாகனங்கள் அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு உதவாதவையாக இருக்கலாம். ஆனால், அவை புதுப்புது சாத்தியங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.


            ஒரு சராசரி நடுத்தரவர்க்க இந்தியக் குடும்பம் 4 அல்லது 3 பேர் கொண்டதாகச் சுருங்கிவரும் காலம் இது. ஆனால், ஒரு குடும்பஸ்தர் சந்தைக்கோ அல்லது திரையரங்குக்கோ தன்னுடைய மனைவியையும் இரு குழந்தகளையும் அரசு விதிகள்படி அழைத்துச் செல்ல வேண்டும் என்றால், மூன்று பேரை அழைத்துச் செல்ல அவர் மூன்று ட்ரிப் அடிக்க வேண்டும். தனிப்பட்ட நலன் சார்ந்து இது இம்சை என்றால், நாட்டு நலன் சார்ந்து பெரிய எரிபொருள் விரயம்.

            இந்தியாவில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ‘புல்லட் எலெக்ட்ரா டீலக்ஸ்’, ‘புல்லட் தண்டர்பேர்ட் ட்வின்ஸ்பர்க்’, ‘யமஹா என்டைசர்’, ‘பஜாஜ் அவெஞ்சர்’, ‘எலிமினேட்டர்’ ஆகியவையே இருக்கையைச் சற்று மாற்றி அமைத்தால் மூன்று பேர் தாராளமாகப் பயணிக்கத்தக்க வண்டிகள்தான். அரசு அனுமதிக்கும்பட்சத்தில் நான்கு பேர் பயணிக்கத்தக்க, பாதுகாப்பான இரு சக்கர வாகனங்களை நம்முடைய ஆட்டோமொபைல் துறையினரால் எளிதில் தயாரிக்க முடியும். இதற்கென ஒரு புதிய சந்தை உருவாகும். இந்தியப் போக்குவரத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு புதிய புரட்சியை அது உருவாக்கும்!
மோட்டார் விகடன் 2012

1 கருத்து: