யார் அனுப்பிய வெளிச்சம் அது?


                       வெயில் காலம் வந்துவிட்டால் வெளியேதான் தூக்கம். நகர வாழ்க்கையில் மொட்டைமாடி ஒரு தோதான இடம், போன மாதத்தில் ஒரு நாள். புழுக்கமும் கொசுக்களும் சூழ புரண்டுகொண்டிருந்தபோது நடந்த கதை இது. திடீரென வானத்தில் மேகங்களின் பின்னணியில் வெளிச்சம். இப்படியும் அப்படியுமாக ஒரு வெள்ளை வெளிச்சம் உருண்டையாக நகர்ந்தது. முதலில் இட வலமாகப் போக ஆரம்பித்த வெளிச்சம் அப்புறம் வல இடமாக, இட வலமாக, குறுக்கு நெடுக்காக, நெடுக்குக் குறுக்காக என நால்புறமும் வேக வேகமாக இப்படியும் அப்படியுமாகப் பாய்ந்தது. நிச்சயமாக அது ஒரு விளக்கு வெளிச்சம்போலவோ, ஓர் ஒழுங்கான தோற்றத்திலோ இல்லை. காயத்தைத் துடைக்க ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர் கட்டிலிருந்து பிய்த்து எடுப்பாரே பஞ்சு, அப்படி ஓர் ஒழுங்கில்லாத தோற்றம். மனைவியை எழுப்பிக் காட்டினேன். அவளும் வாயைப் பிளந்தாள்.


                          என்னவாக இருக்கும்? வானியல் நிகழ்வா, எதிரி நாட்டு சதி வேலை எதுவுமா, ஏதேனும் ஆபத்துக்கான அறிகுறியா… ஒரு எழவும் புரியவில்லை. தெரிந்த பத்திரிகை நண்பர்கள் சிலருக்கு செல்லை அடித்தால் அவர்களுக்கும் புரிந்தபாடில்லை. தூக்கத்தைக் கலைத்துவிட்ட கடுப்பை வேறு காட்டினார்கள். ஒரே ஒரு நண்பர் ’’ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான லேசர் காட்சி எதுவும் இருக்கலாம்’’ என்றார். விசாரித்தால், அதுவும் இல்லை என்கிறார்கள். சரி… அரசாங்க அமைப்புகளுக்கு எப்படியாவது உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமே… என்ன செய்யலாம்… அடி 100-க்கு என்று செல்பேசியை அழுத்தினேன். நான் அடித்த நேரத்துக்கு 100 கிடைக்கவில்லை. அடுத்தது என்ன செய்ய? அடி 108-க்கு. உடனே எடுத்துப் பேசினார் ஒரு பெண். செய்தியைச் சொல்வதற்கு முன்பே, ’’பதறாதீர்கள், வாகனம் சீக்கிரமே வந்துவிடும்” என்று என் பெயர், விலாசம் என்று விவரங்களைக் கேட்க ஆரம்பித்தவர் நான் சொன்ன தகவலைக் கேட்டதும் ஆன கடுப்பு இருக்கிறதே…
"சார் இதுக்கெல்லாம் எதுக்கு சார் எங்களைக் கூப்பிடுறீங்க?”
“இல்லமா, 108-க்கு அடிச்சா, காவல், தீ, மருத்துவம் மூணு துறைகளுக்குமே தகவல் சொல்வீங்க இல்லையா?”
“ஆமா சார். ஆனா, யாராவது பாதிக்கப்படணும். இங்கே யாருமே பாதிக்கப்படலையே” என்றவர் ஒருகட்டத்தில், போதையைப் போட்டுவிட்டு நான் பேசுகிறேன் என்றோ அல்லது லூஸு என்றோ ஒரு முடிவுக்கு வந்தவராய் ஓர் ஆணிடம் போனைக் கொடுத்தார். அந்த ஆசாமி எடுத்த எடுப்பிலேயே எகிர ஆரம்பித்தார்.
“ஏன் சார், உங்களுக்கு என்ன பிரச்னை, தப்பா நெனைக்காதீங்க, படிச்சவர்தானே நீங்க, வானத்துல ஏதுனா நடந்தா அதுக்கு போலீஸோ, ஃபயர் சர்விஸோ, ஆம்புலன்ஸோ வந்து என்னா பண்ண முடியும்? நாளைக்கு காத்தால பத்திரிகை பாருங்க. ஏதுனா விஷயம்னா போட்டுருப்பாங்க.”
“சார், நானே பத்திரிகைக்காரந்தான். நீங்க சொல்றது எல்லாம் நியாயம்தான். போலீஸோ, ஃபயர் சர்விஸோ, ஆம்புலன்ஸோ வானத்துல ஒண்ணும்  பண்ண முடியாதுதான். ஆனா, இது சம்பந்தமா யாருக்கு விஷயம் தெரியுமோ அவங்களுக்குத் தகவல் சொல்லவாவது முடியும்ல?”
ம்ஹூம். அந்த மனிதருக்கு என் விளக்கங்கள் புரிந்தபாடில்லை. “போடா பாடு” என்று திட்டாத குறையாக போனை வைத்தார்.

                                 வானத்தைப் பார்த்தேன். வெளிச்சம் இன்னும் இன்னும் அதிகமானது. இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டே இருந்தபோது செல்பேசிக்கு ஓர் அழைப்பு.
“சார், நாங்க 108-லேர்ந்து பேசுறோம். எந்தத் திசையிலேர்ந்து சார் வெளிச்சம் நகருது?”
அதே ஆண் குரல் பொறுப்பாகக் கேட்டது.
நான் விளக்கமாகச் சொல்ல, “நாங்க சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்குத் தெரியப்படுத்துறோம் சார்” என்று சொல்லிவிட்டு வைத்தது.
கொஞ்ச நேரத்தில் சைதாப்பேட்டை காவல் நிலையத்திலிருந்து அழைப்பு.
மீண்டும் அதே கேள்வி. அதே பதில்.
“அட, ஆமா சார்” என்று சொல்லிவிட்டு வைத்தது அந்தக் குரல்.
வானத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் மறைந்தது. தூக்கம் கண்களைக் கவிழ்த்தது. காலை வழக்கம்போல விடிந்தது. அந்த வெளிச்சம் வானியல் நிகழ்வோ, எதிரி நாட்டு சதி வேலையோ, ஏதேனும் ஆபத்துக்கான அறிகுறியோ அல்லது ஒன்றுமே இல்லாத விஷயமோ… எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். இப்படி ஒரு விஷயம் நடக்கும்போது இந்த நாட்டில் நாம் யாருக்கு அதை உடனடியாகத் தெரிவிப்பது? எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள அப்படி எந்த அமைப்பு இருக்கிறது?
மே 2013

1 கருத்து:

  1. unmayil enakkum indha kelvi elugiradhu. police,hospital,fire... ivatrinai thandiyum arasukkum makkalukkum idayae thagaval parimatram seidhukolla sila mukkia vishayangal irukkindrana enum vilippunarvu innum yerpadavillai.

    பதிலளிநீக்கு