தமிழின் palimpsest வரலாறு: சாரு நிவேதிதா


மிழ்ச் சமூகத்தை philistine சமூகம் என்று பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  தமிழ்ச் சமூகமே ஒட்டு மொத்தமாக சராசரிகளின், பாமரர்களின் உலகமாக மாறி விட்டது.  சென்ற மாதம் ஒரு கருத்தரங்கத்திற்குச் சென்றிருந்தேன்.  ஆயிரம் பேர் குழுமியிருந்தனர்.  ஒரு விஞ்ஞானி பேசினார். "அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் ரஷ்யர்களும் செய்ய முடியாத விண்வெளிச் சாதனையை நாம் நிகழ்த்தி விட்டோம்."  மங்கள்யான் பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி.  அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரம் பேரும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கோஷம் எழுப்பினார்கள்.  இப்படிப்பட்ட வெட்டிப் பெருமையிலேயே இன்பம் கண்டு  கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.  ஏன் வெட்டிப் பெருமை என்று சொன்னேன் என்றால், இங்கே நடப்பதற்கோ வாகனங்களில் செல்வதற்கோ சாலைகள் இல்லை.  பல்லாங்குழிச் சாலைகள் என்ற பதம் செய்தித்தாள்களில் பொது வழக்காகி விட்டது.  ஏதோ போர்க்கள பூமியைப் போல் காட்சி அளிக்கின்றன சாலைகள்.   ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடையாது.  கல்வி வசதி கிடையாது.  ஏழைகளுக்கு ஒரு கல்வி; மேட்டுக்குடிக்கு ஒரு கல்வி.  குப்பத்துக் குழந்தைகள் குப்பத்திலேயே இருக்க வேண்டியதுதான்.  மேலேறிச் செல்வதற்கான பாதை தரமான கல்வி மறுக்கப்படுவதன் மூலம் நான்கு வயதிலேயே அடைக்கப்பட்டு விடுகிறது.   இது எல்லாவற்றையும் விடக் கொடுமை, பெண்கள் தனியாக நடமாடவே முடியாத நிலை.  இப்படிப்பட்ட கொடூரமான ஏற்றத்தாழ்வுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் மலிந்த இந்த சமூகத்தைப் பற்றிய எந்தக் கவலையோ அக்கறையோ விழிப்புணர்வோ இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுவது பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி.  இதைத்தான் பாமரர்களின் உலகம் என்று சொல்லி வருகிறேன்.  எவ்வளவோ சாதனைகள் புரிந்திருந்தாலும், தங்கள் துறையில் எப்பேர்ப்பட்ட மேதைகளாகவே இருந்தாலும் சமூகப் பிரக்ஞை என்று வரும் போது ஒரு பாமரனைப் போலவே பேசுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் பத்திரிகைத் துறை எப்படி இருக்கும்?  ஒட்டு மொத்த சமூகமே சராசரித்தனத்தால் மூடிக் கிடக்கும் போது பத்திரிகையில் எழுதுபவரிடம் மட்டும் நாம் எப்படி ஒரு சமூகப் பிரக்ஞையையும் பொறுப்புணர்வையும் கலாச்சார சுரணையுணர்வையும் எதிர்பார்க்க முடியும்?  அதனால்தான் ஆங்கிலப் பத்திரிகைகளின் நடுப்பக்கக் கட்டுரைகளோடு தமிழ்ப் பத்திரிகைகளால் போட்டி போட முடியவில்லை.  இந்த ஒட்டு மொத்த மொண்ணைத்தனத்துக்கு எதிராகத்தான் கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக சிறுபத்திரிகைகள் நடத்திப் போராடி வருகிறார்கள் இலக்கியவாதிகள்.  இதே போன்றதொரு குரலைத்தான் சமஸின் கட்டுரைகளில் நான் காண்கிறேன்.   சமஸ் சிறுபத்திரிகைகளில் இயங்காமல் வெகுஜன இதழ்களிலும் நாளிதழ்களிலும் பணியாற்றியதால் இவரது கட்டுரைகள் லட்சக் கணக்கான மக்களைச் சென்று அடைந்தது ஒரு அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.



தமிழர்கள் தொல்கதைகளையும் பிம்பங்களையும் நம்புகின்றவர்கள்.  ஆகவே நிகழ்கால வரலாற்றையும் தொல்கதைகளாகவும் பிம்பங்களாகவும் மாற்றி உள்வாங்கிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள்.  எம்ஜியார் வாழும் காலத்திலேயே அவரைப் பற்றிய தொல்கதைகள் ஏராளமாக உண்டு.  எம்ஜியார் நல்லவர் என்ற பிம்பமும் அதில் ஒன்று.   மாற்றுக் கருத்துக்குப் பொதுவெளியில் இடமே இல்லை.  இப்போது சமஸ் அந்த பிம்பத்தை உடைக்கிறார்:

"பின்னாளில், ஆட்சிக்கு வந்த பின்னரும் எம்ஜிஆர் தன் கட்சிக்கு ஜனநாயகத்தைச் சொல்லிக் கொடுக்கவில்லை.  கேவலம், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு, மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல், தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறை, ஒரு கேலிச் சித்திரத்துக்காகப் பத்திரிகை ஆசிரியருக்குச் சிறைத் தண்டனை என ஜனநாயக விரோத ஆட்சியையே எம்ஜிஆர் நடத்தினார்.  எதிர்ப்பவர்களைக் கூட்டி வந்து அடிப்பதற்கென்றே அவருடைய ராமாவரம் தோட்ட வீட்டில் தனி அறைகளும் ரவுடிகளும் இருந்தது ஊர் அறிந்த ரகசியமாக இருந்தது."

இதேபோல் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாடு பற்றி:

தனது தாய்மொழியில் ஒரு கடிதத்தைக் கூடப் பிழையின்றி எழுதத் தெரியாத ஒரு சமூகம், பிறமொழிக் கலப்பின்றி ஒரு ஐந்து நிமிடம் பேசத் தெரியாத ஒரு சமூகம், தன் தாய் மொழியில் பேசுவது நாகரிகம் அல்ல எனக் கருதும் ஒரு சமூகம், தன் தாய்மொழியின் பெயரால் ஒரு மாநாடு எடுக்கிறது.  அந்த மாநாடு நடைபெறும் இடத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் 2000 வாகனங்கள் வருகின்றன.  10 லட்சம் பேர் கூடுகிறார்கள்.  ஏனைய 6 கோடி சொச்சம் பேரும் கூடச் சும்மா இல்லை.  அவர்களும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் வாயிலாக அந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.  என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்தோடு தெரிந்து கொள்கிறார்கள்.   5 நாட்கள் ஒவ்வொருவர் மத்தியிலும் ஏதோ ஒரு வகையில் தாய்மொழி உணர்வு பெருக்கெடுத்து ஓடுவதாக ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்கிறார்கள்.  மாநாடு முடிந்ததும் எல்லோருக்கும் நாளை மற்றுமொரு நாளாக விடிகிறது.

இதை அபத்தம் என்பதா, விநோதம் என்பதா, விசித்திரம் என்பதா?

செம்மொழி மாநாடு பற்றி ஊடகங்கள் வாயிலாக நாம் அறிவோம்.  அது நம்முடைய சமகால வரலாற்றில் ஒரு நிகழ்வு.  இதைப் பற்றி வருங்கால சந்ததியினர் பாடப் புத்தகங்களில் படிப்பார்கள்.  ஆனால் ஒரு செய்தியின் உள்ளாக உறைந்திருக்கும் அல்லது ஊடாடிக் கொண்டிருக்கும் மற்றொரு செய்தி என்ன?  ஒரு செய்திக்குள் புதைந்திருக்கும் மற்றொரு செய்தி என்ன?  இதை Palimpsest என்று ஆங்கிலத்தில் சொல்லலாம்.  Papyrus-இல்  எழுதப்பட்ட ஒரு விஷயத்தை அழித்து விட்டு மற்றொரு விஷயத்தை அதன் மேல் எழுதுவதை Palimpsest என்பார்கள்.

அதாவது, வரலாறு என்ற பெயரில் நாம் படித்தது எல்லாம் மன்னர்களின் கதைகளே தவிர மனிதர்களின் கதை அல்ல.  இப்போது சமஸ் நம் மனிதர்களின் கதையை palimpsest வரலாறாக சொல்கிறார்.

நமது கல்வி, மதம், அரசு எந்திரங்கள் போன்ற ஸ்தாபனங்கள் உருவாக்கும் பொதுப்புத்திக்கு எதிரான மாற்றுச் சிந்தனையையும் மாற்று அரசியலையும் Palimpsest வரலாறாக முன்வைப்பவை சமஸின் கட்டுரைகள்.  அந்த வகையில் தொகுக்கப்பட்டுள்ளதே “யாருடைய எலிகள் நாம்?” என்ற நூல்.  ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும் போதும் – ஏற்கனவே குறிப்பிட்டது போல் – இதை நானே எழுதியது போல் உணர்கிறேன்.  நாம் வாழும் சமூகத்தைப் பற்றிய தார்மீக உணர்வு இருந்தால் நீங்களும் இந்த நூலின் ஒவ்வொரு வாசகத்தையும் ஏதோ ஒரு தருணத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

தமிழ் என்ற மொழியினால் ஒன்று படும் நாம் அனைவருமே படித்து சிந்திக்க வேண்டிய நூல் சமஸின் ”யாருடைய எலிகள் நாம்?”

பல விழாக்களின் போது எதற்கும் பயன்படாத ‘பொன்னாடை’யைப் போர்த்துகிறார்கள்.  அதற்குப் பதிலாக சமஸ் எழுதிய “யாருடைய எலிகள் நாம்?” என்ற இந்த நூலை வாங்கிக் கொடுக்கலாம்.  திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்குப் பரிசளிக்கலாம்.  அதை விட மேலாக, ஒவ்வொரு பள்ளி/கல்லூரி மாணவரும் படிக்க வேண்டிய பொக்கிஷம் இது.  இந்த நூல் லட்சக் கணக்கான மக்களைச் சென்றடைந்தால் ஓரளவாவது சமூக விழிப்புணர்வு ஏற்படுவதற்கு ஏதுவாகும்.


விலை ரூ.300; தொடர்புக்கு 94442 04501 thuliveliyeedu@gmail.com; samasbooks@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக