லண்டன்


குதூகலம் தொற்றிக்கொண்டது. ஆசிரியர் அசோகன் அப்போதுதான் கூப்பிட்டு சொல்லியிருந்தார். “லண்டன் போகிறீர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருந்தினராக. ஒரு வாரம். கொண்டாடிவிட்டு வாருங்கள்.” லண்டன் காமன்வெல்த் மாநாட்டையொட்டி வந்திருந்த அழைப்பு அது.
எந்த ஊர்ப் பயணமுமே குதூகலத்தைக் கொண்டுவந்துவிடக் கூடியதுதான் என்றாலும், என்னளவில் இது கூடுதல் விசேஷத்துக்குரியது. சிறுவயது தொட்டு என்னை வசீகரித்துவந்திருக்கும் சொற்களில் ஒன்று லண்டன்.
வரலாற்றின் ஒரு மாணவனாக லண்டன் கதைகள் எனக்கு எப்போதுமே வியப்பூட்டிவந்திருக்கின்றன. அலெக்ஸாண்டிரியா, கான்ஸ்டான்டிநோபிள், பாக்தாத் இப்படி எத்தனையோ நகரங்கள் வரலாற்றில் ஓங்கி நின்றிருக்கின்றன - ஒரு காலகட்டத்தை வசப்படுத்த முடிந்த அவற்றால் இன்னொரு காலகட்டத்துக்கும் அதை நீட்டிக்க முடிந்ததில்லை. ரோம், டெல்லி போன்ற நகரங்கள் தன்னளவில் ஒரு எல்லைக்குட்பட்ட செல்வாக்கை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் பராமரித்துவந்திருக்கின்றன. எனினும், இவை எவற்றோடும் லண்டனை ஒப்பிட முடியாது.


உலகில் இன்றுள்ள பழமையான பெருநகரங்களில் தொடர்ந்து தன் உலக செல்வாக்கைப் பேணிவரும் நகரம் அதுவே. உலகப் போர்களை அது எதிர்கொண்டிருக்கிறது. கொள்ளைநோய்களை அது எதிர்கொண்டிருக்கிறது. இயற்கைப் பேரிடர்களை அது எதிர்கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து எல்லா தாக்குதல்களுக்கும் சவால்களுக்கும் லண்டன் முகம் கொடுக்கிறது.

எப்போதும் காலத்தை முந்திக்கொண்டு தன்னைத் தகவமைப்புக்குத் தயார்படுத்திக்கொள்கிறது லண்டன். ஏனைய நகரங்களோடு ஒப்பிடுகையில், “அரசியல் வல்லாண்மைக்கு ஒரு வாஷிங்டன், பொருளாதார வல்லாண்மைக்கு ஒரு நியூயார்க், ஆராய்ச்சி - கண்டுபிடிப்புகள் வல்லாண்மைக்கு ஒரு சிலிக்கான் வேலி - இவை மூன்றுக்கும் இன்று ஒருசேர முகம் கொடுக்கிறது லண்டன்” என்று பிரிட்டிஷார் சொல்வதுண்டு. ஈராயிரம் வருஷங்களாக அது எப்படி தொடர்ந்து துடிப்போடு பாய்கிறது என்பதை அங்கு தங்கி பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் எண்ணம். இப்போது அது சாத்தியம் ஆகிறது.

பிரிட்டிஷ் அரசின் அழைப்பின்பேரில் செல்வதில் ஒரு அனுகூலம் இருந்தது. பிரிட்டனின் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கிற பலரைச் சந்திக்கிற வாய்ப்பும் இந்தப் பயணத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. லண்டன் மாநகர நிர்வாகம், கல்வி - ஆராய்ச்சி, நிதியாள்கை என்று பல துறை ஆளுமைகளுடனான உரையாடலுக்கும் ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.

கோடைகாலத்தின் தொடக்க நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த பயணம் என்றாலும், பருவ நிலை அங்கு வெயிலைக் கொண்டுவந்திருக்கவில்லை. “உங்களோட வீம்பையெல்லாம் ஊரோடு வெச்சிட்டு வந்துடுங்க. இன்னைக்குக்கூட காலையில ஐஸ் மழை. ராத்திரில வெப்பநிலை ஆறு டிகிரிக்குக் கீழே போய்டுது. கோட் - சூட், ஷூ, க்ளௌ, தெர்மல் வாங்கிக்கங்க. நம்மூர் உடுப்பை வெச்சு சமாளிச்சுடலாம்னு நெனைச்சீங்கன்னா குளிர்ல விரல் வெடிச்சுடும்” என்று முன்னெச்சரித்தார் லண்டன் நண்பர் ராஜகோபால்.
சென்னை - லண்டன் பயணம் அவ்வளவு நீளமானது இல்லை. 8,206 கி.மீ. சுமார் 11 மணி நேரம். அவர்களுடைய நேரத்திலிருந்து நம்முடைய நேரம் 4.5 மணி முந்தியிருக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டால் மாலை 6.30 மணிக்கு விமானம் லண்டனைச் சென்றடையும்.

தொடக்கக் காலங்களில் எனக்கு விமானப் பயணம் அச்சம், எரிச்சல் தரக்கூடியதாக இருந்தது. ரயில் பயணங்களைப் போல ஒரு சொகுசு அதில் இல்லை. வாகனம் எதுவானலும் மனதுக்கு நிலத்தோடு ஒரு பிடிமானம் வேண்டியிருக்கிறது. விமானம் அதை அறுத்துவிட்டு மேலெழும்போது இந்த நிலத்தோடு தனக்கு இருக்கும் பிடிமானமும் அறுந்துவிட்டதாக மனம் நம்புகிறது. இரைச்சல், காதடைப்பு, மண்டையழுத்தம், விமானியின் அச்சுறுத்தும் அறிவிப்புகள் இவை எல்லாமும் கூடி விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கையில், “ஐயா, தயைகூர்ந்து வண்டியை நிறுத்து. நான் பொடிநடையாகவேனும் போய் சேர்ந்துகொள்கிறேன்” என்று விமானியிடம் முறையிடத் தோன்றியிருக்கிறது. சீக்கிரமே அது மாறியது.

இன்று விமானப் பயணம் ஒரு ஆன்ம தரிசனம் ஆகிவிட்டது. விமான ஜன்னல் வழியே கீழே தோன்றி மறையும் நதிகள், மலைத்தொடர்கள், பாலைவனங்கள், பெருங்காடுகள் ஒவ்வொன்றும் சிறுசிறு புள்ளிகளாகையில் மனம் சரசரவென ஒரு நீளக் கம்பளமாக விரியும். ‘பேருருவங்களே சிறு புள்ளிகளாகும்போது நீ யார், எவ்வளவு சிறியன், எவ்வளவு அற்பன்!’ என்ற கேள்வி முளைக்கும்.  உடல் சிறுக்கும். கைகள் குவியும். பல தருணங்களில் அந்தப் பெரும் சக்தியை கீழே பணிந்து வணங்க முற்பட்டிருக்கிறேன். மரணத்தின் உயிர் எதுவோ, அது அங்கே உறைந்திருப்பதாக உணர்ந்திருக்கிறேன். காலமும் இடமும் காணாமல்போவதன் விளைவாகவும் இருக்கலாம்.

சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பயணத்தை ஆசியாவிலிருந்து ஐரோப்பாவைக் கடக்கும் பயணமாகவும் விரிக்கலாம். “எந்த ஊரையும் பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பார்ப்பதுபோலவே பார்க்கக் கற்றுக்கொள்” என்று சொல்வார் தாத்தா. “எந்த வயதிலும் குழந்தைமையைத் தக்கவைத்துக்கொள்” என்பது அதன் சாராம்சம்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்படுகிறது. பிரெஞ்சு ஒயின் வாசம் விமானத்தினுள் கசிகிறது.

(வெள்ளிதோறும் பயணிப்போம்...)

ஜூன், 2018, ‘ தி இந்து’

4 கருத்துகள்:

  1. நீங்கள் சென்றுவந்தபோதே இவ்வாறான அருமையான தொடர் உங்களிடமிருந்து வரும் என ஆவலோடு எதிர்பார்த்தேன். வழக்கம்போல் உடன் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்திய பதிவு.

    பதிலளிநீக்கு
  2. லண்டன் செல்லவேண்டும். என ஆவல். தங்கள் கட்டுரை பாதிப்பு .

    பதிலளிநீக்கு
  3. நான் உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் படித்து உங்களை போன்ற எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற எண்ணம் பற்றிக் கொண்டதன் விளைவாக நானும் எழுதுகிறேன் என் சாயலில்...
    கார்த்திக்.அரியலூர்

    பதிலளிநீக்கு
  4. நான் உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் படித்து உங்களை போன்ற எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற எண்ணம் பற்றிக் கொண்டதன் விளைவாக நானும் எழுதுகிறேன் என் சாயலில்...
    கார்த்திக்.அரியலூர்

    பதிலளிநீக்கு