நானும் ராஜும் பேடிங்டன் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தோம். “பிரிட்டனின் கிராமப்புறங்களைப் பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று சொன்னீர்கள் இல்லையா? நாம் நாளைக்கு அங்கு செல்வோம். அதற்கு முன் கூடுதலாக இன்னும் இரண்டு விஷயங்களை மட்டும் இந்தப் பயணத்தில் நீங்கள் இணைத்துக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். பிரிட்டனின் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு. இது அவசியம் நம் மக்களுக்குச் சென்றடைய வேண்டியது. நாம் இப்போது ஆக்ஸ்ஃபோர்டு செல்கிறோம்.”
பிரிட்டனின் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்தப் பயணத்தில் அதுகுறித்து எழுதுவதற்காக ஏற்கெனவே ஹெலனுடன் பலரையும் சந்தித்திருந்தேன். கல்விப்புலம் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக கிங்ஸ் கல்லூரி, வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகம் இரண்டுக்கும் சென்றிருந்தேன். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் செல்லும் திட்டத்தை வேறொரு சந்திப்பின் நிமித்தம் கடைசி நிமிடத்தில் கைவிட வேண்டியதாயிற்று. இப்போது ஆக்ஸ்ஃபோர்டு பயணம் தானாக வந்தமைந்தது ஒரு திளைப்பை உண்டாக்கியது.
“இலங்கை தமிழரான பேராசிரியர் ஃபாத்திமஹாரன் ஆக்ஸ்ஃபோர்டில் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறார். என் நண்பர் வழி நண்பர் அவர். ஆக்ஸ்ஃபோர்டு செல்லும் வழியிலும் நாம் கிராமப்புற பிரிட்டனைப் பார்க்க முடியும். மேலதிகம் நீங்கள் தெரிந்துகொள்ள நாளைக்கு உங்கள் தோழியோடு ஒரு சுற்று சுற்றிவாருங்கள்.”
ஐந்தாறு பெட்டிகளைக் கொண்ட சின்ன ரயில் அது. தேம்ஸ் நதியை ஒட்டியும் வெட்டியும் அமைந்திருந்த ரயில் பாதை நெடுகிலும் நிலம் பச்சை பூரித்திருந்தது. நீரோடைகள், பச்சை வயல்கள், அடர்ந்த, உயர்ந்த மரங்கள், இடையிடையே கிராமங்களை வேகமாக கடந்துகொண்டிருந்தது ரயில். வெளியே நல்ல மழை. அது நிலத்துக்குக் கூடுதல் அழகைத் தந்தது.
“இங்கே தொடக்கக் கல்வி எப்படி இருக்கிறது?”
“பிரிட்டனில் தொடக்கக் கல்விக்குப் பெரிய முக்கியத்துவம் தருவார்கள். அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்கள்தான் பெரும்பான்மை. ‘கல்வி அரசின் பொறுப்பு. தொடக்கக் கல்விக்குக் கட்டணம் கூடாது; அது இலவசமாகத் தரப்பட வேண்டியது’ என்று 1918-ல் சட்டம் இயற்றினார்கள். ஆக, தொடக்கக் கல்வியை பிரிட்டிஷார் ஜனநாயகப்படுத்தி முழுமையாக நூறு வருஷங்களாகின்றன. ஒரு முரண்பாடு என்னவென்றால், இங்கே ‘பப்ளிக் ஸ்கூல்’ என்று சொல்லப்படுபவை சுயநிதிப் பள்ளிகள். அரசுப் பள்ளிகளை ‘ஸ்டேட் ஸ்கூல்’ என்று சொல்வார்கள்.”
“நீங்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறீர்களா? சுயநிதிப் பள்ளிகளுக்கும் அரசுப் பள்ளிகளுக்குமான வேறுபாடு எப்படி இருக்கும்?”
“என்னுடைய நண்பர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். பிரமாதமாக இருக்கும். பள்ளிக்கூடத்தில் குழந்தைக்குக் கொடுக்கும் உணவைக்கூட பெற்றோரின் விருப்பத்தைக் கேட்டுதான் ஆசிரியர்கள் முடிவுசெய்வார்கள் என்று என் நண்பர் சொல்வார். பெற்றோர்கள் விருப்பப்பட்டால், நீச்சல் பயிற்சி, களச் சுற்றுலா போன்ற படிப்புக்கு அப்பாற்பட்ட கூடுதல் பயிற்சிகளுக்குப் பணம் கொடுக்கலாம். அதுகூட கட்டாயமல்ல. தனியார் பள்ளிகள் இங்கே பெருஞ்செலவு பிடித்தவை. உயர் வர்க்கத்தினரைத் தாண்டி இங்கே தனியார் பள்ளிகளை விரும்புவோரும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை. ஆக்ஸ்ஃபோர்டில் படிக்கும் பிரிட்டன் மாணவர்களில் கிட்டத்தட்ட அறுபது சதவீதத்தினர் அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்தவர்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அப்படியென்றால், தரம் நன்றாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்?”
உலகின் பழைமையான பல்கலைக்கழகத்தைத் தன்னுடைய அடையாளமாக்கிக்கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்டு நகரத்தை ஒன்றே கால் மணி நேரத்தில் அந்த ரயில் சென்றடைந்தது. ரயில் நிலையத்துக்கே வந்திருந்தார் பேராசிரியர். கம்பளி உடையையும் தாண்டி அன்றைய குளிரில் அவருடைய உடல் வெடவெடத்துக்கொண்டிருந்தது. குடைக்குள் இழுத்துக்கொண்டு கார் நோக்கி எங்களை அழைத்துச்சென்றார். காரில் அமர்ந்ததும், “ஒரு பெரியவரை இந்தக் குளிர் நாளில் நாம் தொந்தரவுக்குள்ளாக்கிவிட்டோம்” என்று என் காதில் கிசுகிசுத்தார் ராஜ். ஏதோ புரிந்துகொண்டவராக “தமிழாட்கள் இங்கே வருவது என் உயிருக்கு உற்சாகம் கொடுப்பது. உங்களுக்கு உதவ வாய்ப்பளிப்பதன் மூலம் என்னை நீங்கள் உயிர்ப்பிக்கிறீர்கள்” என்று சொன்னார் பேராசிரியர். அந்த நாள் முழுவதுமே அந்த உற்சாகம் அவரிடம் வெளிப்பட்டது.
ரயில் நிலையத்தைக் கடந்து ஆக்ஸ்ஃபோர்டு நகருக்குள் கார் நுழைந்தபோது மனம் திகைப்பில் ஆழ்ந்தது. வேறு ஒரு யுகத்துக்குள் நுழைவதுபோல் இருந்தது. “இந்தச் சிறிய நகரம் ஆயிரம் வருஷங்களை அப்படியே தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகம்தான் ஊர். ஊர்தான் பல்கலைக்கழகம். நீங்கள் விமானத்திலிருந்து ஆக்ஸ்ஃபோர்டைப் பார்த்தால், இதன் பழைமை அழகு புரியும். சுற்றிலும் பச்சை. நடுவே இந்தப் பழுப்பு நகரம். கனவுகளின் நகரம் இது.”
அபாரமான காதலுடன் பேசலானார் பேராசிரியர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைப் பற்றி நாளெல்லாம் பேசியவர் அதை அணுஅணுவாக அறிமுகப்படுத்தினார்.
“உலகத்தில் இன்றுள்ள பல்கலைக்கழங்களிலேயே பழைமையானதும், தொடர்ந்து செயல்படுவதும் மட்டுமானதல்ல ஆக்ஸ்ஃபோர்டு. தலைசிறந்தவற்றுள்ளும் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ‘டைம்ஸ்’ உயர் கல்வி நிறுவனத் தரவரிசையில் உலகப் பல்கலைக்கழங்களில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை இங்கே பயிற்றுவிக்கிறார்கள். 24,000 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட சரிபாதியினர் வெளிநாட்டினர். உலகின் ஆறு கண்டங்களைச் சேர்ந்த, 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்குமிடம் இது. அப்படியென்றால், இங்கே படிக்கும் ஒரு மாணவனுக்கு எப்பேர்ப்பட்ட கலாச்சார வளம் கிடைக்கும் என்று எண்ணிக்கொள்ளுங்கள்.”
ஆக்ஸ்ஃபோர்டின் ஆரம்பகாலக் கட்டிடங்கள் ஒவ்வொன்றுக்கும் அவர் அழைத்துச் சென்றார். “இங்கே எல்லாம் நம்மாட்கள் கால்கள் பட வேண்டும். நம் தமிழ் மக்களின் எண்ணங்கள் விசாலப்பட்டு, கனவுகள் விரிபட வேண்டும். தமிழ்ப் பிள்ளைகள் இங்கே வர வேண்டும். நீங்கள் அப்படி எழுத வேண்டும்.” கடுமையாக அவருக்கு மூச்சிரைத்தது. இறுதிவரை அதை அவர் பொருட்படுத்தவே இல்லை.
“இந்தப் பல்கலைக்கழகம் இதில் அங்கம் வகிக்கும் 38 கல்லூரிகளால் ஆனது. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளாகவே சுயேச்சையாக இயங்குபவை. ஒவ்வொரு கல்லூரியின் நிர்வாகம், உள்கட்டமைப்பு, செயல்பாடுகள் எல்லாவற்றையும் முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்தக் கல்லூரிகளிடமே இருக்கிறது. இந்த அதிகாரப் பரவலாக்கம், தன்னாட்சி செயல்பாடு இதைத்தான் நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா? கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் உண்டாகவும் ஆக்ஸ்ஃபோர்டில் படித்தவர்கள்தான் காரணம். 1209-ல் இங்கே சின்ன கலவரம். அப்போது இங்கிருந்து சென்ற ஆசிரியர்கள்தான் கேம்ப்ரிட்ஜ் சென்று அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்கள்.”
ராஜ் அங்கே எங்களைக் கடந்து சென்ற மாணவ - மாணவியரைச் சுட்டிக்காட்டினார். அபாரமான சுதந்திர உணர்வை அவர்களிடம் பார்க்க முடிந்தது. “நானும் பிரிட்டன் வந்ததிலிருந்தே இதைக் கவனித்துவருகிறேன் ராஜ். கிங்ஸ் கல்லூரி சென்றிருந்தபோது அதன் வாயிலிலேயே பேராசிரியரும் மாணவிகளும் ஒன்றாக நின்று புகைத்தபடி உரையாடிக்கொண்டிருந்தார்கள்.”
“சமஸ், மிகப் பழைமையான பல மதுவிடுதிகள் இங்கே உண்டு. படிப்புக்கு மட்டும் அல்ல; நல்ல பீருக்கும் ஒயினுக்கும்கூட பேர் போனது ஆக்ஸ்ஃபோர்டு.” பல்கலைக்கழகம் வரும் வழியில் நிறையக் கடைகளை ராஜ் சுட்டிக்காட்டியிருந்தார். மது விடுதிகளும் அவற்றில் உண்டு என்றார்.
“இங்கு கல்லூரிகளில் படிக்கும் வயது வந்துவிட்டால், பெரும்பாலான பிள்ளைகள் வீடுகளைவிட்டு வெளியேறிவிடுவார்கள். விடுதியிலோ, தனி வீடு எடுத்தோ தங்குவார்கள். மேற்படிப்புக்கான செலவுப் பொறுப்பும் பெரும்பாலும் மாணவர்கள் பொறுப்பாகிவிடும். இந்தக் காலகட்டத்திலேயே காதல் - இருவர் சேர்ந்து வாழ்தல் இதெல்லாமும் நடக்கும். படிப்புக்குப் பின் வேலை. அப்புறம் சில ஆண்டு இடைவெளிக்குப் பின் திருமணம். இந்த இடைவெளிக் காலம் அவர்களுக்கு ரொம்பவே முக்கியமானது. உலக நாடுகளைச் சுற்றுவது.விருப்பம்போல் வாசிப்பது. ஆய்வு மாதிரி தீவிரமான முயற்சிகளில் இறங்கிப் பார்ப்பது இதெல்லாம் இந்தக் காலகட்டத்தில்தான் நடக்கும். தீர்மானமான ஒரு விஷயம் என்னவென்றால், கல்லூரி காலத்தில் படிக்க வெளியே வரும் பிள்ளைகள் அதற்குப் பின் மீண்டும் பெற்றோர் வீட்டில் குடியேற மாட்டார்கள். பெற்றோர்கள் இதற்குப் பின் தங்களுடைய வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.”
“இந்தப் போக்கில் இப்போது கொஞ்சம் மாறுதல் நடக்கிறது என்று கேள்விப்பட்டேனே?”
“வேலை கிடைக்காத சூழலில் பொருளாதாரக் காரணங்களுக்காக சில பிள்ளைகள் மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு வருவது இப்போது நடக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், அது அரிது. அதையேகூட இங்குள்ள சமூகவியலாளர்கள் கவலையோடுதான் பார்க்கிறார்கள். ‘பிள்ளைகள் இப்படி மீண்டும் வீடு திரும்புவதால் பெற்றோர்களின் வாழ்க்கைத் தரம் குறையும்; அவர்கள் தனியாக வாழும் சுதந்திரம் பறிபோகும் என்பதோடு, பிள்ளைகள் தங்கள் அடுத்துவரும் சவாலான காலகட்டத்துக்குத் தயாராவதையும் முடக்கிவிடும். இது குடும்பங்களுக்கும் நல்லதல்ல; சமூகத்துக்கும் நல்லதல்ல. ஒருவேளை பிள்ளைகள் திரும்ப வீட்டுக்கு வந்தால்கூட, விருந்தாளிகளைப் போல அவர்களை நடத்துங்கள்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.”
நாங்கள் பேசிக்கொண்டே நடந்தபோது, இடையிடையே கட்டிடங்களின் உச்சிப் பகுதியைச் சுட்டிக்காட்டினார் பேராசிரியர். “அடிக்கடி நீங்கள் இப்படி மேல் நோக்கிப் பார்க்க வேண்டும். இங்குள்ள கட்டிங்கள் முழுவதிலும் மேலிருந்து நீரை ஊற்றுவதற்கான ‘காகோய்ல்’கள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றின் உருவத்தைப் பாருங்கள்.” அங்கிருந்த உருவங்களில் சில மனித முகமும், சில விலங்கு முகமும் கொண்டிருந்தன. மூக்கை நோண்டிக்கொண்டிருக்கும் உருவம், சிறுநீர் கழிப்பது போன்ற உருவம் என்று விநோதமான அவற்றைச் சுட்டிக்காட்டும் தருணங்களில் பேராசிரியர் சிறுபிள்ளையாக மாறினார்.
“பிரிட்டனைக் கைப்பற்றினால் ஆக்ஸ்ஃபோர்டைத்தான் தலைநகரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தேசிருந்தாராம் ஹிட்லர். ஆக்ஸ்ஃபோர்டு மீது அவரது படைகள் குண்டு வீசாததற்கு இதுவும் ஒரு காரணம்.”
உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகத்தின் முன் நாங்கள் நின்றோம். உலகிலேயே பெரியதான பல்கலைக்கழகப் பதிப்பகமும் பிரிட்டனின் மிகப் பெரிய கல்வி நிலைய நூலகமும் அதற்குள்தான் இயங்குகின்றன. “நமக்குப் பெரிய கனவுகள் வேண்டும் சமஸ், என்ன சொல்கிறீர்கள்?” என்றார். பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை.
“இப்போதைய பிரதமர் தெரஸா மே, முந்தையவர்கள் டேவிட் கேமரூன், டோனி பிளேர், மார்க்கரெட் தாட்சர்… பிரிட்டனின் 27 பிரதமர்கள் இங்கே படித்தவர்கள். இது தவிர, சர்வதேச தலைவர்கள் குறைந்தது 30 பேர் இங்கு படித்தவர்கள். ஆஸ்திரேலியாவின் ஐந்து பிரதமர்கள் இங்கு படித்தவர்கள். இந்தியக் கணக்கிலேயே இரண்டு உண்டே? இந்திரா காந்தி, மன்மோகன் சிங். 2017 வரையிலான கணக்குப்படி நோபல் பரிசு வென்றவர்களில் 69 பேர் இங்கே மாணவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ வருகைதரு பேராசியர்களாகவோ இருந்திருக்கிறார்கள். விளையாட்டு என்று எடுத்துக்கொண்டால், 160 ஒலிம்பிக் பதக்கங்களோடு தொடர்புடைய இடம் இது. கலைஞர்கள், இலக்கியவாதிகள் பட்டியலை நாம் இன்றைக்குள் பேசி முடிக்கவே முடியாது. நம் நாட்டுக் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இப்படி ஒரு பட்டியலை நாமும் உருவாக்க வேண்டும் என்று எண்ண வேண்டுமா, இல்லையா? இதுவும் ஒரு நிறுவனம்தான். இங்கேயும் பணம் பண்ணாமல் இல்லை. 30,000 பேருக்கு வேலையளிக்கும் நிறுவனம் இது. ஒவ்வொரு வருடமும் 200 கோடி பவுண்டுகள் - இந்திய மதிப்பில் சுமார் இருபதாயிரம் கோடி - பிராந்தியப் பொருளாதாரத்துக்கு இந்தப் பல்கலைக்கழகம் கொடுக்கிறது. உலகப் பெரும் பணக்காரர்களின் பிள்ளைகள் படிக்குமிடம் இது. ஆனால், இங்கே படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வரும் ஒரு மாணவன் உணவு விடுதியில் வேலை செய்துகொண்டேனும் இங்கு படித்துவிட முடியும். அதற்கான வாய்ப்புகளையும் ஒரு ஓரத்தில் வைத்திருக்கிறார்கள். நான் முதன்முதலில் இங்கே வந்தபோது ஒரு பேராசிரியர் சொன்னார், ‘பட்டதாரிகளை அல்ல; ஒவ்வொரு துறை வழியாகவும் உலகை ஆளும் தலைவர்களை நாம் இங்கே உருவாக்குகிறோம்!’ இந்த எண்ணம் எத்தனை ஆசிரியர்களிடம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்?”
அவருக்கு மூச்சிரைத்தது. “இங்கே அரசுப் பள்ளிக்கூடங்கள் பிரமாதமாக இருக்கும். ஆனாலும், இங்குள்ள சமூகம் மாணவர்களுக்கு நாம் பள்ளிக்கூடங்களில் என்ன வசதியைக் கொடுக்கிறோம் என்பதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக நினைப்பதில்லை. மாணவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதையும் ஆய்வுசெய்கிறது. சமீபத்தில் ஒரு செய்தி வாசித்தேன். அரசுப் பள்ளிக்கூடங்களுக்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் உள்ள வேறுபாடு சம்பந்தமான ஆய்வு முடிவு அது. பிரிட்டிஷ் அமைச்சரவை, நீதித்துறை, நிர்வாகத்துறை என்று ஒவ்வொரு துறையாக எடுத்துக்கொண்டு அவர்களில் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள், எத்தனை பேர் அரசுப் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள் என்று ஆய்வுசெய்திருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் படித்து வந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சரிபாதியை நெருங்குகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை இங்கே குறைவு. அப்படியிருக்க அரசத் துறைகளில் அரசுப் பள்ளிகளிலிருந்து வந்தவர்களின் விகிதாச்சாரம் குறைய என்ன காரணம் என்று ஆய்வு நடப்பதாகச் சொல்கிறது அந்தச் செய்தி. இந்த அணுகுமுறை எவ்வளவு முக்கியம் பார்த்தீர்களா? எல்லாம் பொதுவாக இருந்தாலும் எங்கோ எல்லாவற்றையும் தனித்தும் பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இதையெல்லாம் எழுத வேண்டும்.”
நான் ஆமோதித்தேன். “பல்கலைக்கழகங்கள் ஒரு தனி உலகம். மானுடத்தைக் காக்கும் வல்லமையையும் புத்துயிர்ப்பையும் கல்விக்குத் தொடர்ந்து வழங்க வேண்டிய கடமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு. அவை சமகாலத்தோடு ஒன்றியிருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், சிறப்பான ஒரு எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய பொறுப்பு அவற்றுக்கு இருக்கிறது. தனித்துவம் - தன்னாட்சியின் வழியாகத்தான் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒரு புதுப் பாதையைக் கண்டறிய முடியும். நாம் விதிகளின் வழியே மையப்படுத்தி, எல்லாவற்றையும் பொதுமைப்படுத்திவிட முயற்சிக்கிறோம்.”
அன்று மதிய உணவுக்குப் பேராசிரியரின் வீட்டுக்குச் சென்றோம். சாம்பார், பலகறி கூட்டுப் பொறியல், கோழி வருவல் என்று நல்ல விருந்து. ரயில் நிலையத்துக்குத் திரும்பும் வழியில் ஜி.யு.போப் கல்லறைக்கு அழைத்துச் சென்றார் பேராசிரியர். வழியில் வாங்கிவந்த மலர்களைக் கல்லறையின் மீது வைத்து அஞ்சலி செலுத்தினோம். “இங்கே என்னைப் பார்க்கும் பலர் ஆக்ஸ்ஃபோர்டு நகரத்திலேயே செட்டில் ஆகிவிட்டதை ரொம்ப சௌகர்யமாக நினைப்பதுண்டு. என்னால் இன்று என் சொந்த ஊர் திரும்ப முடியாது. அதேசமயம், இது என்றைக்கும் என்னுடைய சொந்த நாடும் ஆகிவிட முடியாது. எவ்வளவு மேலே போனாலும், இங்கே நாம் அந்நியர்கள் - அடையாளமற்றவர்கள். உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்லலாம், படிக்கலாம், சம்பாதிக்கலாம். ஆனால், சொந்த நாடு திரும்பிவிட வேண்டும். சொந்த ஊரில் நாம் இருக்க வேண்டும். நமக்கு ஏன் அது சாத்தியம் ஆகவில்லை? நான் நம்முடைய கல்விக்கும் இதற்கும் நெருக்கமான பிணைப்பு இருப்பதாக நினைக்கிறேன் - தனிமனிதனுடைய வாழ்க்கையை மட்டும் அல்ல; ஒரு நாட்டின் வரலாற்றையும் கல்வி தீர்மானிக்கிறது. என் உடல் சொந்த மண்ணின் சீதோஷ்ணத்துக்காக இன்று ஏங்குகிறது. இந்தக் குளிர் என் ஆன்மாவை நடுங்கச் செய்கிறது.” பேராசிரியர் தன்னுடைய இரு கைகளையும் இறுகக் கட்டிக்கொண்டார். அசர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
ஆக்ஸ்ஃபோர்டு ரயில் நிலையம் வந்தபோது அது கனத்த மௌனத்தில் உறைந்ததிருந்தது. பேராசிரியரை இறுக அணைத்து விடை கொடுத்தோம். மழை கொட்டிக்கொண்டிருந்தது.
(பயணிப்போம்...)
- ‘இந்து தமிழ்’, நவம்பர், 2018
feeling wonderful to read about Oxford university ....
பதிலளிநீக்குகல்வி கற்றுத் தருவது,வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது என நின்று விடாமல் அவர்களின் தற்போதைய நிலை பற்றிய அக்கறை பாராட்டிற்குரியது
பதிலளிநீக்குகட்டுரை மிக அருமையாக இருந்தது நம் நாட்டில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது தெரிகிறது
பதிலளிநீக்கு