நகரத்தின் இரவு. ஒரு உணவு விடுதி. மங்கிய வெளிச்சம். ஒரு கொலையை விடுதிக்குள்ளேயே முடித்துவிட்டு, சிகெரெட் பிடித்தபடி உட்கார்ந்திருக்கும் கொலையாளிகள் பேசிக்கொள்கிறார்கள், “அடுத்து ஜெயலலிதா - அந்தம்மாதான் வரப்போறாங்க. இன்னும் இருவத்தியஞ்சு வருஷத்துக்கு நீ நிம்மதியா தொழில் செய்யலாம்…”
ராஜன், செந்தில், குணா, தம்பியண்ணன், முத்து, சந்திரா, அன்பு என்று ஏழு பாத்திரங்களைச் சுற்றி, விசுவாசத்துக்கும் துரோகத்துக்கும் இடையில் காவிய மரபில் கட்டப்பட்டிருக்கும் ‘வடசென்னை’ படத்தை, ‘மேலும் ஒரு கேங் வார் சினிமா’ என்று கடக்கவே முடியாது. விளிம்புநிலையினர் மையம் நோக்கி நகர முற்பட்டாலும், இங்கே காலம் முழுமைக்கும் அவர்கள் உதிரிகளாகவும், கும்பல்களாகவுமே நீடிக்கக் காரணம் யார், எது என்பதைத் தீவிரமான கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
ஒவ்வொரு அரசியல் நிகழ்வும் நம் சமூக வாழ்க்கையில் திருப்பங்களை உண்டாக்குகிறது. ஒவ்வொரு அரசியல் தலைவரின் வாழ்வும் மரணமும் தனிமனிதர்கள் கனவுகளையும் வாழ்வையும் குலைத்துப்போடுகின்றன. இங்கே எம்ஜிஆர் அபாரமான படிமம் ஆகியிருக்கிறார். மக்கள் தங்கள் கடவுளாக யாரைப் பார்க்கிறார்களோ அந்த அரசியல் தலைவரின் பெயரைச் சொல்லி, அந்த மக்களின் பிரதிநிதிகளாக அதிகாரத்துக்கு வருபவர்கள்தான் பிற்பாடு அதே மக்களை ஒடுக்கும் ஆட்சியதிகாரத்தின் பிரதிநிதிகளாகவும் உருவெடுக்கிறார்கள். மக்களால் தங்களுக்கு எதிராகத் திரும்பும் உள்ளூர் பிரதிநிதிகளை அடையாளம் காண முடிகிறது. ஆனால், அவர்களுக்குப் மேலேயுள்ள கடவுள்களை, அந்தக் கடவுள்களையும் வெறும் கருவிகளாக்கிவிடும் அரசியலை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை அல்லது கண்டும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தனி மனிதர்களின் துரோகங்கள் வரலாற்று துரோகங்கள் ஆகிவிடுகின்றன.
கடற்கரை மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் ராஜன், தன்னை வளர்த்துவிட்ட எம்ஜிஆர் கட்சியின் பிரதிநிதியான முத்துவோடு யுத்தத்துக்குத் தயாராகிறான். காவல் துறையோடு மோதுகிறான். ஆனால், எம்ஜிஆர் அவன் நெஞ்சத்தில் எப்போதும் நேசத்துக்குரிய தலைவராகவே நீடிக்கிறார். எம்ஜிஆரையோ, கட்சியையோ, எம்ஜிஆரையும் கருவியாக்கிவிடும் அரசியல் சக்தி எது என்பதையோ அவன் கேள்விக்குள்ளாக்கவில்லை. கடல் சமூகப் பின்னணியில் வந்த பொதுவுடமைத் தலைவரான ம.சிங்காரவேலரின் நினைவாக அவர் பெயரில் மன்றம் திறக்கிறான். கல்வி - விளையாட்டு வழி அரசுப் பணிகளுக்குச் செல்ல அடுத்த தலைமுறையை அந்த மன்றத்தின் மூலம் ஊக்குவிக்கும் அவன் அந்தப் பகுதிக்குள் ஆளுங்கட்சியான அதிமுகவை மட்டும் அல்ல; எதிர்க்கட்சியான திமுகவையும் அனுமதிக்கவில்லை. எந்தக் கட்சியும் உள்ளே வரக் கூடாது என்கிறான். அவனைத் தாண்டி மக்கள் மத்தியில் நுழைய அரசியல் கட்சிகளால் முடியவில்லை. ராஜனுடைய அரசியலற்ற அரசியல் அவனைப் புதைகுழிக்கு அனுப்புகிறது. அடுத்து, ராஜன் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறான் அன்பு.
இந்திய ஜனநாயகம் எப்படி தனிநபர் பிம்பம் சார்ந்து வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறது; இங்கே துதிபாடலும் பகையும்கூட எப்படி தனிமனிதரில் தொடங்கி தனிமனிதரோடு முடிந்துவிடுகிறது என்பதை அறுத்துப்போட்டிருக்கிறார் வெற்றிமாறன். முத்துவின் வீட்டில் அதிமுக கொடி பறக்கிறது; கடற்கரையில் மக்களுடைய குடியிருப்புகளை அகற்ற அதிகாரிகள் பேச்சு நடத்தும்போது சுவரில் புகைப்படமாக எம்ஜிஆர் சிரிக்கிறார். எல்லாமே அப்பட்டம் என்றாலும், எல்லோருமே கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள்.
கிராமங்களைக் கொன்று விழுங்கிப் பெருக்கும் இந்தியப் பெருநகரங்கள் ஒவ்வொன்றும் தனக்குள்ளேயே அழுக்குப் படிந்த சில ‘கருப்பு நகர’ங்களை உருவாக்குகின்றன. இந்தக் ‘கருப்பு நகர’ உருவாக்கமானது, காலனியத்தின் நீட்சி; இந்திய நகர்ப்புறத் திட்டமிடலில் நம்முடைய ஆளும் வர்க்கம் தவிர்க்க விரும்பாத ஓர் அங்கம். நாட்டின் பெரிய நகரமான மும்பையின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் - கிட்டத்தட்ட எழுபது லட்சம் பேர் - மும்பை நகரின் வெறும் எட்டு சதவீத நிலப்பரப்புக்குள் அடைக்கப்பட்டிருப்பதும், சென்னையில் இன்று நம் கண் முன்னே உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கண்ணகி நகரின் வரலாறும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. நவீன நகரம் குறித்து நாம் வெளியே பகட்டும் சிந்தனைகளுக்கும் இந்தக் ‘கருப்பு நகர’ங்களுக்கும் என்ன தொடர்பு?
கண்மண் தெரியாத, அனைத்து மக்களுக்குமானதாக அல்லாத, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத, சூழலைக் கெடுக்கும் நம்முடைய பகாசுர வளர்ச்சிக் கொள்கையின் அரக்கத்தனத்துக்கு எண்ணூர் ஒரு உதாரணம். எண்ணூரின் கழிமுகம் இன்று சர்வ நாசமாகிவிட்டது. ஆனால், நகரின் வளர்ச்சிக்காக எண்ணூரும், கடற்கரை மக்களும் கொடுத்திருக்கும் விலை என்பது இன்று பெரும்பான்மை சென்னைவாசிகளுக்கேகூட தெரியாது. “நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்குகிறோம், சென்னையை அழகுபடுத்துகிறோம், வளர்ந்துவரும் நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறோம்” என்ற வெவ்வேறு காரணங்களில் பிரிட்டிஷார் காலம் தொடங்கி வதைகளை எதிர்கொண்டுவருகிறார்கள் கடற்கரை மக்கள். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், 1985-ல் மெரினாவில் நடந்த அரச வன்முறை அவர்களின் இதயத்தில் விழுந்த ஆழமான காயம். கடற்கரையிலிருந்து வெளியேற்ற முற்பட்ட அரசை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது அரசு. போராட்டத்தில் முன்னின்றவர்களை வேட்டையாடியது. அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையயும் உருக்குலைத்தது. இன்றும் திட்டங்கள், மிரட்டல்கள், அச்சத்தினூடேதான் கழிகிறது கடற்கரை வாழ்க்கை.
உலகெங்கும் விளிம்புநிலை மக்களின் அரசியல் வாழ்வோடு பொருத்தும்போது, இந்தப் படத்தில் வரும் எம்ஜிஆர், அதிமுக, முத்து, ராஜன் எல்லோருமே குறியீடுகளாகிப்போகிறார்கள். அதனால்தான் படத்தில் ராஜன் கேள்வி கேட்கும் காலகட்டத்துக்கும் அன்பு கேள்வி கேட்கும் காலகட்டத்துக்கும் இடையில் பெரிய கால இடைவெளி இருந்தாலும், அவர்களுடைய கேள்விகள் கால, எல்லை வரையறைகளைத் தாண்டி உலகெங்குமுள்ள அடித்தட்டு மக்களின் கேள்விகளாகிவிடுகின்றன.
“யூனிஃபார்ம் போட்டா ஜனத்துக்கு வேலை செய்யிங்கய்யா. அத வுட்டு அரசியல்வாதிங்களுக்கும் யாவாரிங்களுக்கும் வேலை செய்றீங்க?”
“எங்க ஊடுங்களை இடிக்கிறதுதான் நாட்டோட வளர்ச்சியா சார்?”
“படிச்சிருந்தா புரிஞ்சுடுமா? புரிஞ்சுருந்தா கடலுக்கு மீன் புடிக்கப் போறவன் லைஃப்புக்கு எல்ப் பண்றோம்னு சொல்லிட்டு, கடலோரத்துலேர்ந்து ஆறு கிலோ மீட்டர் தள்ளி கண்ணகி நகர்ல கொண்டுபோய் குடி வெப்பீங்களா?”
“எங்க போனாலும் திரும்பி வர ஊர் இருக்குற நம்பிக்கையிலதான் ஊரவிட்டுப் போறாங்க. திரும்பி வரச்சொல்லோ ஊரே இருக்காதுன்னா எப்புடி போவாங்க? குப்ப மேடோ, குட்சயோ, இது நம்ம ஊரு. நம்மதான் அதுக்கு சண்ட செய்யணும்... திருப்பி அடிக்கலேன்னா இவனுக நம்மள அட்சு ஓட உட்னே இருப்பானுங்கோ!”
அரசியல் சமூகத் தளத்தில் சட்ட மீறல்களும், வன்முறையும் எப்படி ஒரு உத்தியாகப் பயன்பாட்டை அடைகிறது என்பதை ‘ஆளப்படுவோரின் அரசியல்’ (The politics of governed) நூலில், “அரூபமான வெகுஜன இறையாண்மையுடன், உலகின் பெரும் பகுதிகளில் இன்று, மக்கள் எப்படி தாங்கள் ஆளப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகளுக்குக் கற்பிக்கிறார்கள்” என்று எழுதியிருப்பார் பார்த்தா சாட்டர்ஜி. ராஜனும், அன்பும் அதையே கற்பிக்கிறார்கள்!
- நவ.2018, 'இந்து தமிழ்'
நகரத்தின் இரவு. ஒரு உணவு விடுதி. மங்கிய வெளிச்சம். ஒரு கொலையை விடுதிக்குள்ளேயே முடித்துவிட்டு, சிகெரெட் பிடித்தபடி உட்கார்ந்திருக்கும் கொலையாளிகள் பேசிக்கொள்கிறார்கள், “அடுத்து ஜெயலலிதா - அந்தம்மாதான் வரப்போறாங்க. இன்னும் இருவத்தியஞ்சு வருஷத்துக்கு நீ நிம்மதியா தொழில் செய்யலாம்…”
பதிலளிநீக்குதவறு, கொலை செய்யப்படுவதற்கு முன்னால் இராஜன் தன் கூட்டாளிகலிடம், அடுத்து ஜெயலலிதா தான் என்று சொல்வார், அதன் பிறகு தான் கொலை நிகழும்
விமர்சனம் செய்த விதம் திரைப்படத்தினைப் பார்க்கும் ஆர்வத்தை மிகுவித்தது. நன்றி.
பதிலளிநீக்குஆழ்ந்த பார்வையுடன் கூடிய விமர்சனம். பொதுத்தளத்தில் எழுதப்படும் விமர்சனங்களில் இருந்து முற்றிலும் வேறான ஒன்று. சமஸ் அவர்களின் பார்வை நிச்சயம் சினிமா ரசிகனை தரம் உயர்த்தும். நன்றி சமஸ்.
பதிலளிநீக்கு