கரோனா கிருமியின் பரவலை ஏற்க நாம் தயாராக வேண்டும்: மருத்துவர் - அரசியலர் செந்தில் பேட்டி


அடிப்படையில் மருத்துவரும், தற்செயல் அரசியலருமான இரா.செந்தில், வெகுமக்களிடையே எப்போதும் புழக்கத்தில் இருப்பவர். தீவிரமான வாசகர், சமூகச் செயல்பாட்டாளர், பாமகவின் தாராளர்களில் ஒருவர், தருமபுரி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனா கிருமியின் தாக்கம் சுகாதாரப் பிரச்சினையாக மட்டுமல்லாது, சமூக, பொருளாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில், கிருமியிடமிருந்து தப்பிக்கும் உத்திக்கு மாற்றாகக் கிருமியை எதிர்கொள்ளும் உத்திக்கு மாற வேண்டும் என்று பேசுபவர் செந்தில். இந்தியா முந்தைய உத்தியிலேயே தொடர்ந்து சென்றால், பசியில் பல கோடி மக்களை நாம் தள்ளிவிடுவோம் என்பதால், பிந்தைய உத்தியையும் பரிசீலிப்பது மிகுந்த அவசியம் ஆகிறது.

கரோனாவுடனான இன்றைய சூழலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கரோனா தொடர்பிலான உலகின் ஒவ்வொரு செய்தியையும் நான் வாசிக்கிறேன். தொடக்கத்தில் கிருமியிடமிருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்பட்ட வழிமுறைகளையே ஒரு மருத்துவராக நானும் தீவிரமாக நம்பினேன், பின்பற்றினேன். இது நாட்களில் அல்லது வாரங்களில் முடியும் பிரச்சினை இல்லை என்பதை நாளடைவில் புரிந்துகொண்டுவிட்ட நிலையில், நாம் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று யோசிக்கலானேன். ஏனென்றால், நான் மருத்துவத்தில் மட்டும் அல்ல; அரசியலிலும் இருக்கிறேன்; அன்றாடம் சாமானிய மக்கள் சந்திக்கும் அவலங்களைப் பார்க்கிறேன், பலர் சொல்லக் கேட்கிறேன். இது நீங்கலாக உலகின் பல்வேறு நாடுகளும் இதை எப்படி அணுகுகின்றன என்றும் பார்க்கிறேன். மொத்த உலகமும் கரோனாவுடன் வாழப் பழகி அதை எதிர்கொண்டு கடப்பது எனும் உத்தி நோக்கியே நகர வேண்டும்.  ஏனென்றால், வேறு வழி நமக்கு இல்லை.

கரோனாவை எதிர்கொள்ளும் உத்தி என்று எதைச் சொல்கிறீர்கள்? நாம் முன்னதாக அம்மை உள்ளிட்ட தொற்றுநோய்களை எதிர்கொண்டதுபோலவா?
அதேதான். ருபெல்லா உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுவும் ஒரு கிருமித் தொற்றால் உண்டாகும் நோய்தான். தட்டம்மையைப் போல தோலில் பொரிபொரியாகக் கொப்பளங்கள் தோன்றும். இரண்டு மூன்று நாட்கள் லேசான காய்ச்சல் இருக்கும். பிறகு, தானாகவே சரியாகிவிடும். ஆனால், இதே ருபெல்லா கர்ப்பிணிகளைத் தாக்கினால், அது கருவில் இருக்கும் குழந்தைக்குக் கடும் பாதிப்புகளை உண்டாக்கும். இப்போது ‘எம்எம்ஆர்’ தடுப்பூசி வந்ததும் ருபெல்லாவை அதன் மூலம் எதிர்கொள்கிறோம். தடுப்பூசிக்கு முன்பு இதை எதிர்கொள்ளக் கையாண்ட முறைகளில், ‘ருபெல்லா விருந்து முறை’யும் ஒன்று. அதாவது, ருபெல்லாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டில் விருந்து நடக்கும். திருமணமாகாத பெண்கள் அந்த விருந்துக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ருபெல்லா நோய்க்கு ஒரு முறை இலக்கானால், பிற்பாடு அவர்களுடைய பேறு காலத்தில் மீண்டும் இந்நோய் வராது என்பதற்காகக் கிருமியை விருந்து வைத்து அழைக்கும் இந்த அணுகுமுறை மேலை நாடுகளில் இருந்தது. கரோனாவை நாம் இவ்வளவு எளிமையாக அணுக முடியாது என்றாலும், கடந்த காலங்களில் அம்மையை எப்படி நம் சமூகம் எதிர்கொண்டதோ அப்படியான ஓர் அணுகுமுறைக்கேனும் நாம் திரும்ப வேண்டும்.

கரோனா தன்னுடைய தகவமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும் கிருமியாக இருக்கிறது. ஏற்கெனவே, தொற்றுக்குள்ளானவர் மறு தொற்றுக்கு ஆளாக மாட்டார் என்று எந்த நிச்சயமும் இல்லை. அப்படியிருக்க துணிந்து இப்படியான முடிவை நாம் எடுக்க முடியுமா?
துணிந்துதான் ஆக வேண்டும். மேலும், துணிவதால் பெரிய இழப்புகளை நாம் சந்திக்கப்போவதும் இல்லை; துணியாமல் இருக்கப்போவதால் தப்பிக்கப்போவதும் இல்லை. இந்தியாவில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டது 2020, ஜனவரி 30. நூறு நாட்களை நெருங்கிவிட்டோம்; கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்; ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவு. ஆகவே, உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பத்து மடங்குகூட இருக்கலாம் என்கிறார்கள். அப்படிப் பார்த்தாலும், அது அச்சுறுத்தும் எண்ணிக்கை இல்லை. அமெரிக்காவில் 2020, ஜனவரி 15 அன்று முதல் நோயாளி கண்டறியப்பட்டார். இந்த நூற்றுப்பத்து நாட்களில் பன்னிரண்டு லட்சம் பேருக்கு கரோனா தொற்று அங்கு கண்டறியப்பட்டிருக்கிறது. அறுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவின் மக்கள்தொகையானது இந்திய மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இந்தியாவில் மட்டும் அல்ல; பாகிஸ்தான், வங்கதேசம் இன்னும் பல ஆப்பிரிக்க நாடுகள் இங்கெல்லாமும் கரோனாவின் பாதிப்பு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட குறைவாகவே இருக்கிறது. இதற்கான காரணத்தை வைரஸியலாளர்கள்தான் ஆய்வுகளின் வழி பின்னர் கண்டறிவார்கள்.

அப்படிப் பார்த்தால், இந்தியாவிலேயேகூட தென்இந்தியா, வடஇந்தியா, வடகிழக்கு இந்தியா மூன்றுக்கும் இடையிலேயே கிருமியின் தாக்கத்தில் வேறுபாடு தெரிகிறது, இல்லையா?
ஆமாம். முக்கியமாக, தமிழ்நாடு பாதிப்பைக் குறைவாகவே எதிர்கொள்கிறது. மூவாயிரத்து ஐந்நூறு பேர் இதுவரை தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதில் தொண்ணூறு சதத்துக்கும் மேலானவர்கள் எந்த அறிகுறியும் வெளிப்படாதவர்கள். இதுவரை மொத்தமாகவே தமிழ்நாட்டில் ஒரு டஜன் பேருக்குத்தான் வென்டிலேட்டர் தேவை ஏற்பட்டிருக்கிறது; இறந்தவர்களிலும் எவரும் வென்டிலேட்டர் தேவை சார்ந்து இறக்கவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். வயதானவர்கள், ஏற்கெனவே வேறு நோய்களோடு இருப்பவர்கள், பலவீனர்களே உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகு சூழலில் ஏன் பல கோடி மக்களை ஊரடங்கின் வழி துயரத்தில் ஆழ்த்த வேண்டும்?

அப்படியென்றால், கரோனா தொற்றாளர்களை வீட்டிலேயே தனிமையில் வைத்துப் பராமரிப்பது, தீவிர பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் அல்லது வீட்டில் வைத்துப் பராமரிக்கும் வசதியற்றவர்களை மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது என்ற முடிவுக்கு நாம் நகரலாம். ஏனென்றால், வரவிருக்கும் நாட்களில் எண்ணிக்கை பெரும் அலையாக உருவெடுக்கும். அன்றைய சூழலில் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால், நம்மிடம் உள்ள மருத்துவக் கட்டமைப்பின் வளங்களை அதற்குள் நாம் வீணடித்திருப்போம்...
சரியாகச் சொன்னீர்கள்... இன்றைக்கே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகள் திணறுகின்றன. மருத்துவர்களைக் கடுமையாக வேலை வாங்கிக்கொண்டிருக்கிறோம்; பெரிய பாதிப்பு இல்லாத நோயாளிகளுக்காக. நாளை தீவிர பாதிப்புகளோடு நிறைய பேர் வரும்போது, நம்மிடையே உள்ள மருத்துவர்கள் தங்கள் திராணியை இழந்து களைப்படைந்து நிற்பார்கள். அந்நிலைமை நேரக் கூடாது என்றால், நாம் அணுகுமுறையை மாற்ற வேண்டும். லேசான பாதிப்புக்குள்ளாகுபவர்கள், தீவிர பாதிப்புக்குள்ளாகுபவர்கள் என்று இரு பிரிவினரையும் தனித்தனியே பராமரிக்க இரு வகை மருத்துவமனைகளைக்கூட அரசு யோசிக்கலாம்.

இப்படி யோசிக்கும்போது, தொற்றுப் பேரலைக்கேற்ப மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், இல்லையா?

அது தவிர்க்கவே முடியாதது. உண்மையில், இன்றைய அணுகுமுறையிலும் தொற்று, மரணங்கள் இரண்டையும் சில மாதங்களுக்குத் தள்ளிப்போடுகிறோமே அன்றி, முற்றிலுமாக நாம் தவிர்க்கவில்லை. மேலும், கரோனா தொற்றை மட்டும் கவனப்படுத்தும்போது, ஏனைய எல்லா நோயாளிகளுக்கான சிகிச்சைகளும் அப்படியே தேங்கிவிடுகின்றன; அது சார்ந்த பாதிப்புகள் தொடரும்; நாட்டை முடக்கிவைத்திருப்பதன் வழி பசி – பட்டினியில் பல கோடி மக்களைத் தள்ளுகிறோம். அது சார்ந்த பாதிப்புகள் தொடரும். ஊரடங்குச் சூழல் நீடிப்பதால், ஜனநாயகம் நெருக்கடிக்குள்ளாகிறது. அது சார்ந்த பாதிப்புகள் தொடரும். இவற்றோடு ஒப்பிட கரோனாவின் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

- மே ‘இந்து தமிழ்’


2 கருத்துகள்:

  1. வாரங்களில் முடியும் பிரச்சனை இல்லை. - தவறான வாக்கியம்.

    வாரங்களில் முடிகிற பிரச்சினை இல்லை என்று வரவேண்டும்.

    சரி செய்க.

    கருத்துகள் சரிதான். ஆனால் காலம் கடந்த ஞானோதயம்.

    பதிலளிநீக்கு
  2. this kind of alternative views has to come up. then only things will get clear.

    பதிலளிநீக்கு