கொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்: ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி


நம் மக்களின் வழக்காறுகளில் கொள்ளைநோய்கள் என்னவாகப் பதிவாகியிருக்கின்றன? கரோனா காலத்திய உலகளாவிய போக்குகளைக் கடந்த காலத்தின் வழி புரிந்துகொள்ள முடியுமா? சமூக ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியனுடன் பேசினேன். பேராசிரியர் இப்போது மதுரையில் இருக்கிறார். நள்ளிரவிலும் தூங்காத நகரம் இப்போது நண்பகலிலும் கொஞ்சம் அயர்ந்திருக்கிறது.

மதுரை என்றதுமே சிலப்பதிகாரம் நினைவுக்கு வந்துவிடுகிறது, சங்க காலம் நினைவுக்கு வந்துவிடுகிறது, திருவிழாக்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. தொன்மையான மதுரை நகரம், தமிழர்களின் நினைவுகளில் இடையறாது ஒளிர்ந்துகொண்டிருக்கும் நகரம். வீட்டுக்குள் இருக்கும் உங்கள் நினைவுகளில் ஊரடங்கிய மதுரை எப்படியாகக் காட்சியளிக்கிறது?
ஒளி மங்கியதாகத் தோன்றுகிறது. அந்த ஒளி வேறு எதுவும் இல்லை, மக்களுடைய இடையறாத இயக்கம்தான் அது. வரலாற்றில் பல அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட நகரம்தான் இது. மக்களை ஒடுக்கிய ஆட்சியாளர்களின் அன்றைய அடக்குமுறைகள் எப்படி இருந்திருக்கும்? இந்த ஊரடங்கு அதைக் காட்டுவதுபோல இருக்கிறது.


பெரும் நோய்களைக் கடந்த காலத்தில் நம் சமூகம் எப்படி எதிர்கொண்டதான பதிவுகள் வெகுமக்கள் நினைவுகளில் இருக்கின்றன?

கரோனாபோல இப்படியான உலகம் தழுவிய கொள்ளைநோய் எதுவும் நாம் அறிந்த வரலாற்றிலோ வழக்காற்றிலோ கிடையாது என்றாலும், பல கொடிய கொள்ளைநோய்களின் ஊடாகவே தமிழ்ச் சமூகமும் கடந்துவந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டுகளில் பெரியம்மை, காலரா, மலேரியா மூன்றும் உண்டாக்கிய விளைவுகள் இன்னமும் மக்கள் நினைவுகளில் பொதிந்துள்ளன. மலேரியா காய்ச்சல் மலைப் பகுதிகளிலும் நீர் வளம் மிக்க பகுதிகளிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. பெரியம்மையும் காலராவும் எல்லாப் பகுதிகளிலுமே பாதிப்பை உண்டாக்கியுள்ளன. மூன்றில் காலராவின் தாக்குதல்தான் அதிகம். தமிழ்நாடு முழுக்கப் பரவலாக இல்லாதபோதிலும் பிளேக் நோயும் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியம்மையை மாரியம்மன் கோபத்தின் வெளிப்பாடாகவும், மாரியம்மனே மனிதர்கள் மீது வந்து இறங்கியிருப்பதாகவும் பார்த்த சமூகம் இது. வகைதொகை இன்றிப் பரவும் கிருமி அல்லது நோய்க்கு வேறு ஒரு முகம் கொடுப்பதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் சகஜமாக அனுசரிக்க முற்படும் அணுகுமுறையாக இதைப் பார்க்கலாம். சுத்தமும் தனிநபர் இடைவெளியைப் பேணுதலும் நோயை எதிர்கொள்வதற்கான மிக முக்கியமான வழிமுறையாகவே இருந்துவந்திருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே ஒரு தனி அறையில் நோயாளியைப் பராமரிப்பதும், நோயாளி தேறும்வரை அந்த வீட்டார் வெளி நிகழ்ச்சிகள், கூடுகைகளைத் தவிர்ப்பதும் இயல்பானது. நோய் மிகக் கடுமையாகிவிட்டால் நோயாளியின் விருப்பத்தின்பேரில், மாரியம்மன் கோயில் வளாகத்திலேயே கட்டிலில் நோயாளியைப் படுக்கவைத்து, அம்மன் அடைக்கலத்தில் நோயாளியை விடும் பழக்கமும்கூட இருந்திருக்கிறது. ஆனால், நோயாளியின் பொருட்டு ஒட்டுமொத்தச்  சமூகமும் இப்படி ஊரடங்குவது நம் மரபில் இல்லை. ஏனென்றால், அப்படி ஊரடங்கினால், பசியும் வறுமையும் குற்றமும் சூழ்ந்துவிடும். நீங்கள் கவனித்திருக்கிறீர்களா, விவசாயத்துக்கு வழியில்லாத கோடை காலத்தில்தான் பெரும்பாலான திருவிழாக்கள் நம்மூரில் நடக்கும்; அம்மனுக்குக் கூழ் ஊற்றுவார்கள்; அன்னதானம் படைப்பார்கள். ஏனென்றால், வேலைவாய்ப்பற்ற நாட்களிலும்கூட மக்களின் வாழ்க்கைச் சக்கரம் இயல்பாக இயங்க வேண்டும்; அப்படி இல்லாமல் வீட்டுக்குள் மனிதர்கள் முடங்கினால் சமூகத்தை வறுமை போர்த்திவிடும். அது பஞ்சத்தைக் கொண்டுவருவதோடு, மீண்டும் இன்னொரு நோய் பாதிப்பையும்கூட கொண்டுவந்துவிடும்.

கொள்ளைநோய்களுக்கு அடுத்து பஞ்சம் வருவதுபோல, பஞ்சத்துக்கு அடுத்தும் கொள்ளைநோய்கள் வருவது உண்டா?
ஆமாம். தாது வருஷப் பஞ்சத்தின்போது கஞ்சித்தொட்டி வைத்து மக்களுக்குப் பசி போக்கியிருக்கிறார்கள்; அதனாலேயே ‘கஞ்சித்தொட்டிப் பஞ்சம்’ என்ற பெயரும்கூட அதற்கு உண்டு. கஞ்சி ஊற்றுவதற்காக வெள்ளை அரசு கட்டித்தந்த கட்டிடம், ‘லங்கர் கானா’ என்று அழைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ‘லங்கர் கானா’ என்ற பெயரில் ஒரு தெரு இப்போதும் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் ஈசல் கூட்டம்போல ஈக்கள் கூட்டம் நம்மூர்களை ஆக்கிரமித்திருந்திருக்கின்றன. பசியாற்ற வாங்கிய கஞ்சியைச் சூடு ஆறுவதற்காகக் கீழே வைக்கும் சொற்ப நேரத்தில், அந்தப் பாத்திரங்களை ஈக்கள் சூழ்ந்துவிடுமாம். பசிக் கொடுமையால், முடிந்த அளவு அதை எடுத்துப் போட்டுவிட்டு, அப்படியே குடித்திருக்கிறார்கள். கஞ்சிக்கே இவ்வளவு தட்டுப்பாடு என்றால், வேறு எதையெல்லாம் உண்டிருப்பார்கள்? கற்றாழைக்குருத்து முதல் மாட்டுப்புண்ணாக்கு வரை உண்டிருக்கிறார்கள். பஞ்சத்தை ஒட்டி வந்த காலராவுக்குப் பசி முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. ‘புழுத்த சோளம், கம்பு, புளிச்சகீரை தின்ன / புடிச்சுமே காலரா போகும் எட்டு பேரில் / மூன்று பேர் இரண்டு பேர் மூச்சுப் பிழைப்பார்கள்’ என்கிறது ஒரு நாட்டார் பாடல். தாது வருஷப் பஞ்சம் என்பது 1876 ஏப்ரல் தொடங்கி 1878 மார்ச் வரை நீடித்திருக்கிறது. அதாவது, இரண்டு வருஷங்கள் பஞ்சமும் நோய்களும். இவ்வளவு நாட்கள் மக்கள் ஊரடங்கி இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் முடக்கியிருந்தால், என்னவாகியிருக்கும்?    கொள்ளைநோய்களும் வறுமையும் மட்டும் அல்ல; குற்றங்களும்கூட இவற்றோடு உடன் பிறந்தது; நம் முன்னுள்ள அடுத்த சவால் குற்றங்கள். பிரிட்டிஷார் காலத்தில் போலீஸ் நிர்வாகம் குறித்து ஆராய்ந்த டேவிட் ஆர்னால்ட் ‘கிராமப்புறக் குற்றங்களின் முக்கியமான பின்னணிகளில் ஒன்று பஞ்சம்’ என்கிறார். எப்போதெல்லாம் சமூகத்தை வறுமை சூழ்ந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் திருட்டு, கொள்ளை, கலகம், சந்தைச் சூறை நடந்திருக்கின்றன.

அரசு இயந்திரம் பெரிய அளவில் பணியாற்றுவதை இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. கடந்த காலங்களில் இது எப்படி இருந்திருக்கிறது? எப்போதுமே நோய்க்கான பொறுப்பு கூட்டுப்பொறுப்பு என்றாலும், இறுதி அதிகாரம் யார் கையில் இருந்திருக்கிறது, அரசின் கைகளிலா; சமூகத்தின் கைகளிலா; குடும்பங்களின் கைகளிலா; தனிநபர்களின் கைகளிலா?

இக்கட்டான காலகட்டங்களில், என் நினைவு தெரிய அரசு இயந்திரம் தமிழ்நாட்டில் எப்போதுமே வாரிச் சுருட்டிக்கொண்டு வேலைசெய்திருக்கிறது. சுகாதாரக் களப் பணியில் ஒரு புதிய கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் இங்கு உருவாக்கினார்கள். இன்றைக்குக் காட்டிலும் அன்றைக்கு நம் சமூகத்தில் நோய்த் தொற்று விழிப்புணர்வு குறைவு. குடிக்க, குளிக்க என்று எல்லாவற்றுக்கும் நீர்நிலைகளையே பெரிதும் நம்பியிருந்த காலகட்டம் அது. நோய் கண்டவரின் படுக்கை விரிப்புகள், ஆடைகளை அலசித் துவைப்பதும்கூட நீர்நிலைகளிலேயே நடக்கும். காலரா காலத்தில் இதன் வாயிலாகவே காலரா மிக எளிதில் பரவிவிடும். உள்ளாட்சி சுகாதார ஊழியர்கள் என்ன செய்வார்கள் என்றால், குளோரின் மாவை ஆற்றங்கரைக்கே கொண்டுவந்துவிடுவார்கள். குடிதண்ணீர் எடுத்துச் செல்கிற பெண்களின் குடத்துக்குள் அதைப் போட்டுவிடுவார்கள். பலருக்கு அதன் வாடை பிடிக்காது;  மேலதிகம் பித்தளை, வெண்கலப் பானைகளில் பாத்திரத்தை வேறு குளோரின் அரித்துவிடும். ஆகையால், பெண்கள் இவர்களுடைய கண்களில் படாமல் குறுக்கு வழியில் ஆற்றில் நீர் எடுக்கப் போவார்கள். அங்கும் வழிமறித்து மருந்து கலப்பதுண்டு. காலராவுக்குத் தடுப்பூசி வந்ததும் ஊர் முழுக்கத் தடுப்பூசி போடும் வேலை நடந்தது. கிராமங்களில் அதை ‘மாட்டு ஊசி’ என்று சொல்வார்கள். ஊசி போட வருபவர்கள் கையோடு ஒரு மண்ணெண்ணெய் மாண்டில் ஸ்டவ் எடுத்துவருவார்கள். கூடவே ‘ப’ வடிவில் ஒரு தகரத் தடுப்பு. காற்றடித்தாலும் தீ அணையாமல் பாதுகாப்பதற்கு. அந்த அடுப்பில் வெந்நீர் கொதிக்க வைத்து, நான்கைந்து முறை ஊசியை அதில் விளாவிவிட்டுதான் ஆட்களுக்குப் போடுவார்கள். ஆனாலும், நம்மாட்கள் ஓடுவார்கள். வீட்டுப் பரண் ஏறி, மாட்டுத் தொழுவில் ஒளியும் ஆட்கள் எல்லாம் உண்டு. இப்படி ஓடுபவர்களை மறித்து ஊசி போடுவதற்காகவே ஆஜானுபாகுவாக இரண்டு ஆட்களை உடன் அழைத்து வந்திருப்பார்கள். பள்ளிக்கூடங்களில் ஊசி போடும்போது பள்ளிக்கூடக் கதவையே அடைத்துவிட்டுத்தான் ஊசி போடுவார்கள். இதெல்லாமும் லேசுப்பட்ட வேலை இல்லை. ஒரு விஷயம், நாம் ஜனநாயக சமூகத்தில் வாழ்கிறோம். இதில் எல்லாமே கூட்டுப் பொறுப்புதான். அரசு சில பொறுப்புகளை எடுத்துக்கொள்ளலாம்; சமூகமும் குடும்பமும் சில பொறுப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.   இறுதியாக, ஒரு நோயாளியின் உடலுக்கான இறையாண்மை அவரிடம்தான் இருக்க வேண்டும்; யாரும் அதைப் பறிக்கலாகாது.

கரோனாவையும் அதையொட்டிய இந்த ஊரடங்கையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு கொள்ளைநோய் பரவும்போது கொள்ளைநோய் நேரடியாக ஏற்படுத்தும் தாக்கத்தை மட்டும் அல்ல; மறைமுகமாக உண்டாக்கும் தாக்கங்களையும் ஒரு சமூகம் கணக்கில் கொள்ள வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படும் சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்துநர்கள் இவர்கள் எல்லாம் வீடுகளுக்கே வந்துதான் தங்கள் வேலைகளைச் செய்து திரும்பும் நிலை நம் சமூகத்தில் நீண்ட காலம் இருந்தது. அதெல்லாம் மாறி, அவர்களுடைய இடம் தேடி எல்லோரும் செல்ல வேண்டிய நிலை உருவாக ஒரு பெரும் சமூக மாற்றம் நடக்க வேண்டியிருந்தது. இந்த ஒரு மாதத்தில் தங்களது கடைகளைத் திறக்க முடியாத நிலையில், அன்றாட வருவாயை இழந்த முடிதிருத்துநர்கள் பலர் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்குச் சென்று, ‘முடி வெட்டலாமா?’ என்று வேலை கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது என்றால், ஒரு பெரிய வீழ்ச்சி கீழே உண்டாகிக்கொண்டிருக்கிறது. சொந்த ஊர் திரும்புவதற்காகப் பல நூறு கி.மீ. நடந்தே தொழிலாளர்கள் இறந்துபோகிற அவலம் மேலே நமக்குத் தெரிவது; கீழே இதுபோல பல்லாயிரம் அவலங்கள் அன்றாடம் அரங்கேறிக்கொண்டிருக்கும்.  இன்றைய ஆட்சியாளர்கள் சமூகத்தின் மறைமுகத் தாக்கங்களைப் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்பதையே இந்த ஊரடங்கு வெளிப்படுத்துகிறது. கொள்ளைநோய் நேரடியாக ஏற்படுத்தும் பாதிப்பைக் காட்டிலும் இந்த ஊரடங்கின் வழி மறைமுகமாக ஏற்படுத்தும் பாதிப்புகள் நெடுநாளைக்கு இருக்கும்.

இன்று நம் வாழ்வில் ஏற்பட்டிருக்கிற சில மாற்றங்களேனும் கரோனாவுக்குப் பிறகும்  நீடிக்கும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. சாப்பிடுவதற்கு முன் சோப்பு போட்டுக் கை கழுவுவது நிலைக்கலாம்; ஆண்களும் சமையலறையைப் பகிர்ந்துகொள்வது அதிகரிக்கலாம்; ராணுவத்துக்கா சுகாதாரத் துறைக்கா எதற்கு நாம் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கேள்வி அரசியலில் முக்கியத்துவம் பெறலாம். மனிதகுலத்தின் இன்றைய வாழ்வையும் கலாச்சாரத்தையும் வடிவமைத்திருப்பதில் கொள்ளைநோய்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. நாம் வரலாற்றிலிருந்து எவ்வளவுக்குப் பாடம் படிக்கிறோமோ, அவ்வளவுக்கு அடுத்த முறை அதே சறுக்கல்களுக்கு ஆளாக மாட்டோம்!

1 கருத்து:

  1. மழைக்காலத்தில் இந்த நோய் உருவெடுத்திருந்தால், வறுமை காரணமாக பல குற்றங்கள் எப்போதோ நடந்திருக்கும்.

    பதிலளிநீக்கு