ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் புகைப்படம் ஒன்று என்னிடம் உண்டு. ஜீப்பின் முன்புறம் உள்ள பேனட் மீது நின்றுகொண்டு மக்கள் மத்தியில் அவர் ஆவேசமாகப் பேசும் படம் அது. அங்கிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர் பேசும் படங்களை வரிசையாக நகர்த்திக்கொண்டே வந்தால், அவரது தேர்தல் மேடைகளும் வாகனங்களும் அடுத்துவரும் காலத்தை முன்கூட்டிச் சொல்லும் குறியீடுகளாகத் தோன்றுகின்றன. காலந்தோறும் அவை மாறிவந்திருக்கின்றன. மக்களிடமிருந்து விலகிவந்திருக்கின்றன. அந்த மேடைகள் வெளிப்படுத்தும் மேலாதிக்க உணர்வையும் அந்நியமாதலையும் அடுத்து வரும் காலகட்டத்தில் மேலும் மேலும் அதிகரித்திருக்கின்றன ஜெயலலிதாவின் நிர்வாகச் செயல்பாடுகள்.
நாட்டிலேயே மக்களால் எளிதில் அணுக முடியாத முதல்வராகப் பெயர் பெற்ற ஜெயலலிதா, இந்தத் தேர்தல் காலத்திலும்கூட நாட்டு மக்களின் சூழலை நேரடியாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. சாலை வழிப் பிரச்சாரப் பயணம் என்பது வெவ்வேறு பகுதி மக்களை அவர்களுடைய நேரடி வாழ்க்கைப் பின்னணியில் சந்திப்பதற்கான வாய்ப்பு மட்டும் அல்ல; ஊர் சூழல் எப்படியிருக்கிறது, மக்களின் வாழ்க்கைப்பாடு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட. தன்னுடைய பெரும்பான்மைப் பயணங்களை ஹெலிகாப்டர் வழியாகவே திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதா இப்போதும்கூட உண்மையான உலகத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக இல்லை.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் – கீழே வேட்பாளர்கள்; மேலே அவர் மட்டும் என்பதான – மேடை முடியாட்சிக் கால, சர்வாதிகார மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகம் தவிர வேறெங்கும் மக்களாட்சி நடக்கும் ஓரிடத்தில் இப்படியான ஒரு மேடையமைப்பில் ஒரு மாநிலத்தின் முதல்வரோ, பிரதான கட்சியின் தலைவரோ உட்கார முடியுமா என்று கற்பனையிலும் நினைக்க முடியவில்லை.
ஏப்ரல் 11 விருத்தாசலம் நிகழ்வு தொடர்பாக அந்த நிகழ்ச்சிக்குச் சென்றுவந்தவர்களிடம் பேசும்போது நடந்தது ஒரு விபத்தாகத் தோன்றவில்லை. நம்முடைய அரசியல்வாதிகளின் ஆணவத்தினாலும் அதன் தொடர்ச்சியாக அதிகார வர்க்கத்தினரிடமும் கீழேயுள்ள நிர்வாகக் கட்டமைப்பினரிடம் ஊடுருவியிருக்கும் அலட்சியத்தாலும் நடத்தப்பட்ட கொலைகளாகவே தோன்றுகின்றன.











































