பெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையையும் சாடுகின்றனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களில் இப்படியான பேச்சுகள் வந்தபோதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.
நான் அவர்களிடம் இரு கேள்விகளை முன்வைத்தேன்.
“தங்கைகளே, இன்றைய தலைவர்கள் எல்லோரையுமே சுயநலவாதிகள், செயல்படாதவர்கள் என்று நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள். நானும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன். இப்போது நம் கருத்துப்படி, மாற்றம் வேண்டும் என்றால், இவர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். சரி, நாம் சுயநலவாதிகள் என்று குறிப்பிடுபவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேரம் வரை உழைக்கிறார்கள், நூறு வயதை நெருங்கும் சூழலிலும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படியென்றால், மாற்று அரசியல் பேசும் பொதுநலவாதிகள் இளைஞர்கள் நாம் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்? உண்மையில் எவ்வளவு நேரத்தைப் பொது வேலைக்குக் கொடுக்கிறோம்?”
“தம்பிகளே, நாம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையைப் பற்றி பெரிதாகப் பேசுகிறோம். கடந்த மூன்று வருடங்களில் மூன்று இளைஞர்களின் மரணம் தமிழகத்தை அதிரவைத்தது. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் மூவரும் செய்த ஒரே குற்றம் காதலித்தது. நிகழ்தகவு மாற்றி அமைந்தால், அந்த மூவரில் ஒருவர் நீங்களாக இருந்திருக்கலாம் அல்லது அந்த மூவரால் காதலிக்கப்பட்ட பெண்கள் உங்கள் தோழியராக இருந்திருக்கலாம். நாளை இதே சாதி உங்கள் கழுத்திலும் உங்கள் தோழியர் கழுத்திலும் அரிவாளை வைக்கலாம். ஒரு சக மாணவராக, இதற்கு எதிராக நீங்கள் வெளிப்படுத்திய எதிர்வினை என்ன? சாலை மறியலில் போய் உட்கார வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு கருப்புப் பட்டையை அணிந்துகொண்டு அன்றைக்குக் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்குக்கூடவா நம் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் இல்லை?”
அரங்கம் நிசப்தமானது.
ஒரு சமூகம் கீழே எந்த அளவுக்குத் தார்மிகத் துடிப்போடு ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கே மேலே அதன் பிரதிநிதிகளிடத்தில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தை ஆளும் வர்க்கமானது அந்தச் சமூகத்தின் கடைந்தெடுத்த பிழிவு. மேலே திரளும் வெண்ணெய் ஊளை நாற்றமெடுக்கிறது என்றால், கீழே பாலும் ஊளை அடிக்கிறது என்றே பொருள்.









































