எது நவயுக புரட்சி - அரசியல் பழகு!



வெயில் கொளுத்தும் நண்பகல் வேளை. ஒரு இளைஞர் சந்திக்க வந்திருக்கிறார் என்று தகவல் வருகிறது. அலுவலக வரவேற்பறையில் அமரவைக்கச் சொல்லிவிட்டு, கீழே சென்று பார்க்கிறேன். ஒடிந்துவிடக் கூடிய தேகம், கருத்துப்போன முகம், குடம் நீரைக் கவிழ்த்ததுபோல வடியும் வியர்வை.. கையில் நான்கு புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்தார் அந்த இளைஞர். எல்லாம் ஒரு இயக்கத்தால் பதிப்பிக்கப்பட்டவை. “நீங்கள் இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு இதுபற்றி எழுத வேண்டும்” என்கிறார். புத்தகங்களைப் புரட்டினால், ஒரே புரட்சி புரட்சியாக உதிர்ந்து கொட்டுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்று அந்த இளைஞரின் சொந்த ஊர். சென்னைக்குப் படிக்க வந்தவரை, புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பேச்சு ஈர்த்திருக்கிறது. முதலில் விடுமுறை நாட்களில் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இப்போது இயக்கத்தின் பகுதிநேர ஊழியர். அன்றைக்குக் கல்லூரி வேளை நாள். “இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே, கல்லூரிக்கு இன்று போகவில்லையா?” என்று கேட்டேன். பல நாட்கள் இயக்கச் செயல்பாடுகள் அவருடைய கல்லூரி நாட்களை எடுத்துக்கொண்டிருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்தின. கல்லூரி மாணவர் எனும் அடையாளத்தோடு வெவ்வேறு கல்லூரிகளில் ஆள் சேர்க்கும் வேலைக்கு இயக்கம் அவரை இப்போது பயன்படுத்திக்கொண்டிருப்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நிறையக் கோபம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. “இந்த நாடு பெருமுதலாளிகளின் நாடு. இந்து பெரும்பான்மைவாதத்தின் நாடு. ஆதிக்கச் சாதிகளின் நாடு. எந்தக் கட்சி இங்கே ஆட்சிக்கு வந்தாலும் அவை பார்ப்பனிய - பனியா, ஏகாதிபத்திய, தரகு முதலாளிய அரசாங்கங்களையே அமைக்கின்றன” என்று வரிசையாகக் குற்றஞ்சாட்டினார். “இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகம். புரட்சிதான் ஒரே தீர்வு” என்றார். புரட்சி என்று அவர் குறிப்பிட்டது, ஆயுதக் கிளர்ச்சியை. அப்புறம் நாங்கள் டீ சாப்பிடச் சென்றோம். அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு, “தயவுசெய்து இந்தப் புரட்சியில் ஈடுபடும் முன், படிப்பை நீங்கள் முழுமையாக முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.

நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது? இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக்கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.

தார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு!


பெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையையும் சாடுகின்றனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களில் இப்படியான பேச்சுகள் வந்தபோதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.

நான் அவர்களிடம் இரு கேள்விகளை முன்வைத்தேன்.


“தங்கைகளே, இன்றைய தலைவர்கள் எல்லோரையுமே சுயநலவாதிகள், செயல்படாதவர்கள் என்று நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள். நானும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன். இப்போது நம் கருத்துப்படி, மாற்றம் வேண்டும் என்றால், இவர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். சரி, நாம் சுயநலவாதிகள் என்று குறிப்பிடுபவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேரம் வரை உழைக்கிறார்கள், நூறு வயதை நெருங்கும் சூழலிலும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படியென்றால், மாற்று அரசியல் பேசும் பொதுநலவாதிகள் இளைஞர்கள் நாம் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்? உண்மையில் எவ்வளவு நேரத்தைப் பொது வேலைக்குக் கொடுக்கிறோம்?”
 

“தம்பிகளே, நாம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையைப் பற்றி பெரிதாகப் பேசுகிறோம். கடந்த மூன்று வருடங்களில் மூன்று இளைஞர்களின் மரணம் தமிழகத்தை அதிரவைத்தது. இளவரசன், கோகுல்ராஜ்,  சங்கர் மூவரும் செய்த ஒரே குற்றம் காதலித்தது. நிகழ்தகவு மாற்றி அமைந்தால், அந்த மூவரில் ஒருவர் நீங்களாக இருந்திருக்கலாம் அல்லது அந்த மூவரால் காதலிக்கப்பட்ட பெண்கள் உங்கள் தோழியராக இருந்திருக்கலாம். நாளை இதே சாதி உங்கள் கழுத்திலும் உங்கள் தோழியர் கழுத்திலும் அரிவாளை வைக்கலாம். ஒரு சக மாணவராக, இதற்கு எதிராக நீங்கள் வெளிப்படுத்திய எதிர்வினை என்ன? சாலை மறியலில் போய் உட்கார வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு கருப்புப் பட்டையை அணிந்துகொண்டு அன்றைக்குக் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்குக்கூடவா நம் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் இல்லை?”
 

அரங்கம் நிசப்தமானது.
 

ஒரு சமூகம் கீழே எந்த அளவுக்குத் தார்மிகத் துடிப்போடு ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கே மேலே அதன் பிரதிநிதிகளிடத்தில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தை ஆளும் வர்க்கமானது அந்தச் சமூகத்தின் கடைந்தெடுத்த பிழிவு. மேலே திரளும் வெண்ணெய் ஊளை நாற்றமெடுக்கிறது என்றால், கீழே பாலும் ஊளை அடிக்கிறது என்றே பொருள்.

அரசியல் பழகு!

மிக அரிதான ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. தேர்தல் சமயத்தில் ஊர் ஊராகச் சென்று மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு. முதலில், தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் ‘தி இந்து’வே நேரடியாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது; அடுத்த, எட்டு நிகழ்ச்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது அந்நகரைச் சுற்றியுள்ள ஐந்தாறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், வேளாண் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், கலை இலக்கிய மாணவர்கள், நுண்கலை மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் என்று எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 25,000 மாணவர்களுடன் இணைந்து நடத்திய கலந்துரையாடல் இது.

யார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்?



தமிழ்நாட்டில் சாதி அரசியல் சம்பந்தமாகப் பேசப்படும்போதெல்லாம், மன்னார்குடி ஞாபகம் வரும். எதையும் வாழ்வில் நேரடியாகப் பார்க்கும் களங்கள் மறக்க முடியாதவை அல்லவா! செய்தித்தாள்கள், புத்தகங்களில் நாம் படிக்கும் கதைகளும், களத்தில் யதார்த்தத்தில் நிலவும் சூழல்களும் எல்லா விஷயங்களிலும் அப்படியே பொருந்திப்போவது இல்லை. இந்தியாவில் சாதி அரசியலுக்கு இது நிறையவே பொருந்தும்.

மன்னார்குடியில் கு.பா. என்றொரு தலைவர் இருந்தார். கு.பாலகிருட்டிணன் என்பது முழுப் பெயர். திமுகக்காரர். மன்னை நாராயணசாமி காலத்துக்குப் பின், மன்னார்குடியில் கருணாநிதியின் முன்னுரிமைப் பட்டியலில் முதல் வரிசையில் இருந்தவர். கட்சியில் மூத்தவர், கடுமையாக உழைக்கக் கூடியவர், நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் இன்னல்களை எதிர்கொண்டவர் இப்படி ஏராளமான பின்னணிகள் அவருக்கு இருந்தன. முதல் நாள் பகலில் மன்னார்குடியில் கருணாநிதி கூட்டத்தில் அதிமுகவை ஆவேசமாகப் பேசும் பாலகிருட்டிணன், மறுநாள் இரவு சசிகலாவின் தம்பி திவாகரனுடன் உட்கார்ந்து உறவாடிப் பேசிக்கொண்டிருப்பார். அதிமுகவும் ஜெயலலிதாவும் அவருக்கு எதிரி. திவாகரன் அப்படி அல்ல; வேண்டப்பட்டவர்; சொந்தக்காரர்!

திமுகவின் ‘நீல நட்சத்திரப் பேச்சாளர்’களில் ஒருவரான வெற்றிகொண்டான் ஜெயலலிதா தொடர்பாகக் கடுமையாகவும் ஆபாசமாகவும் பேசிய எத்தனையோ மேடைகளில் சசிகலா தொடர்பாகப் பேச்சு வரும்போது, “பாவம், அது நம்ம வூட்டு புள்ள, ஒண்ணும் தெரியாத அப்பாவிப் புள்ளைய எல்லாத்துலேயும் சிக்கவெச்சிட்டாங்க” என்று வெளிப்படையாகச் சாதிரீதியிலான உறவில் கடப்பதை நான் நேரில் கேட்டிருக்கிறேன்.

மன்னார்குடியில் சிவா ராஜமாணிக்கம் அப்போது காங்கிரஸில் இருந்தார். தேர்தலில் அவரை எதிர்த்துத் தம் கட்சி வேட்பாளரோடு தெருத்தெருவாகப் பகலில் சுற்றும் அதிமுககாரர்கள் இரவில் தம் சாதிக்காரர்கள் வீட்டுக்கு மட்டும் போய், “ஆயிரம் இருந்தாலும் ராஜமாணிக்கம் நம்மாளு, கட்சி பார்த்து விட்டுர முடியாது” என்று மாற்றி ஓட்டு கேட்பதைப் பார்த்திருக்கிறேன்.
பொதுச் சமூகம் முக்குலத்தோர் என்று அகமுடையர், கள்ளர், மறவர் மூன்று சமூகங்களையும் ஒன்றாகக் குறித்தாலும், உள்ளுக்குள் அப்படி அல்ல. அகமுடையர், கள்ளர் சமூகங்கள் பெருமளவில் வசிக்கும் மன்னார்குடியில் அதிகாரப் போட்டி என்றைக்குமே இந்த இரு சமூகங்களிடையேதான் இருந்திருக்கிறது. பெரிய கோயில் திருவிழா அரசியல் முதல் திமுக, அதிமுக உள்கட்சி அரசியல், தேர்தல் அரசியல் வரை எதுவும் இதில் இன்றைக்கு வரை விதிவிலக்கு அல்ல.

ஒரு ஊர், இரு கட்சிகள் அல்லது இரு சமூகங்கள் சார்ந்த வரையறைகள் அல்ல இவை. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்சியிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இப்படியான பல பல உள்கதைகளை, கிளைக் கதைகளைப் பார்க்க, கேட்க முடியும்.

வசந்திதேவியும் ராமச்சந்திரனும்


சத்தியமங்கலம் வனப் பகுதிக்குச் சென்றிருந்தேன். மலைக்கு மேலே ஓரளவுக்கு மேல் சென்றுவிட்டால், நாம் எதிர்கொள்ளும் இந்தியாவில் பெரிய அளவில் மாநில வேறுபாடுகள் தெரிவதில்லை. நாடு முழுவதும் பழங்குடி மக்கள் பெருமளவில் ஒரே மாதிரியான துயரங்களையே எதிர்கொள்கிறார்கள். அவர்களுடன் பேசும்போது, தேர்தல் தொடர்பான அவர்களுடைய எண்ணப்போக்குகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. பலதும் பேசிக்கொண்டிருந்தபோது, பேச்சு அவர்களுடைய தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொடர்பாகச் சென்றது. ஆச்சரியமான விஷயம், நிறையப் பேர் திருப்தியாகப் பேசினார்கள்.

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி அது. காடு, மலை, பள்ளம் என்று பரப்பளவில் பரந்து விரிந்த மிகப் பெரிய தொகுதி. சட்டமன்ற உறுப்பினரைப் பார்க்க வேண்டும் என்றால், சாதாரணமாக 100 கி.மீ. பயணித்து வர வேண்டிய அளவுக்குத் தொலைவிலுள்ள கிராமங்களைக் கொண்டது. இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மக்கள் அவரைப் பார்க்க வருவது சிரமம் என்பதால், மலையிலேயே ஒரு அலுவலகத்தைத் திறந்து, அவரே மக்களைப் பார்க்க வருகிறார் என்றார்கள்.


குன்றி மலைப் பகுதியில், சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சாலையே இல்லாத காளிதிம்பம், இராமரணை, மாவநத்தம் உள்ளிட்ட பல கிராமங்களுக்குச் சாலை வசதியை உண்டாக்கித் தந்திருக்கிறார். காலங்காலமாக சாதிச் சான்றிதழுக்காகப் போராடிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குச் சான்றிதழ்கள் வாங்கித் தந்திருக்கிறார். தொகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வாங்கிக் கொடுத்திருக்கிறார்; இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் ஓய்வூதியம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். முக்கியமான விஷயம், கை சுத்தம் என்றார்கள். மனைவி அஞ்சல் துறையில் வேலை செய்கிறாராம். சுந்தரத்தின் குடும்ப வாழ்க்கை மனைவியின் வருமானத்தில் ஓடுவது என்றார்கள். மீண்டும் இதே தொகுதியில் நிற்கிறார் சுந்தரம்.

இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒருவர் எம்.ஜெயசீலன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லால்குடியில் நிறுத்தப்பட்டிருப்பவர். பள்ளிவிடை கிராமத்தில் வெறும் 210 சதுர அடி அளவே உள்ள வீட்டில் தாய், மனைவி, இரு மகள்களும் வாழ்ந்துவரும் மனிதர். கட்சி தரும் சிறு தொகையில் வாழ்க்கையை ஓட்டிவந்த ஜெயசீலன், இவ்வளவு காலம் வங்கிக் கணக்குகூட இல்லாமல் இருந்திருக்கிறார். ஏராளமான மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கும் ஜெயசீலன், எந்தப் பிரச்சினை என்றாலும் கூப்பிட்ட உடன் ஓடிவருபவர் என்கிறார்கள்.

சர்வமும் பணமயம் ஆகிவிட்ட இந்திய அரசியலில் இப்படியான வேட்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கான சாத்தியங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளே பெருமளவில் மிச்சம் வைத்திருக்கின்றன. இடதுகளின் மக்கள் நலக் கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் பல வேட்பாளர்கள் இப்படிக் கவனிக்கவைக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் தனித்துவமும் பலமும் இது. எனினும், இயக்கத்துக்குள் வளர்ந்துவந்த இவர்களையெல்லாம் தாண்டி, வெளியே வளர்ந்து இடதுகளின் மநகூ சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களே இன்றைக்குப் பெரும் கதையாடலாக மாறியிருக்கிறார்கள். முதலாமவர் வசந்திதேவி; இரண்டாமவர் ராமச்சந்திரன்!

அழுகும் கழகங்கள்!


சென்னை ஔவை சண்முகம் சாலை. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அருகிலுள்ள உணவகத்தில் விழுப்புரம் தொண்டர்கள் கூட்டம் நுழைந்தபோது மணி மதியம் மூன்றைத் தாண்டியிருந்தது. தங்கள் தொகுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேட்பாளரின் தகிடுதத்தங்களைப் பற்றி கட்சித் தலைமைக்குப் புகார் அளிக்க வந்தவர்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஏராளமான ஊர்களிலிருந்து தொண்டர்கள் வந்து போகிறார்கள். உள்ளூரிலிருந்து மேலே பேசி வேலைக்கு ஆகாத சூழலில், போராடும் நோக்கில் சென்னை வருகிறார்கள். தலைமை அலுவலகத்துக்கும் ஜெயலலிதா வீட்டுக்கும் வருபவர்களை இங்குள்ளவர்கள் அசமடக்குகிறார்கள். கூடுமானவரை பேசிக் கரைக்கிறார்கள். மசியாதவர்களை உள்ளே அழைத்து புகாரை எழுதிக் கொடுத்துவிட்டு போகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் தாண்டியும் போராட்டங்கள் நடக்கின்றன.

திருச்சி, மதுரை, தென்காசி, உளுந்தூர்பேட்டை, ஈரோடு, பெருந்துறை ஊர்களிலிருந்து வந்தவர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தார்கள். கள்ளக்குறிச்சியிலிருந்து வந்தவர்கள் தீக்குளிக்கும் போராட்டத்திலேயே இறங்கினார்கள். தி நகர் வேட்பாளர் சத்தியநாராயணா நில அபகரிப்பில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். திருச்சி தமிழரசி ஒரு போலி மருத்துவர் என்றார்கள். பெருந்துறை வெங்கடாசலம் மீது ஏராளமான முறைகேடு புகார்களுடன் விடுமுறை நாளன்றுகூட அவர் ஒரு சொத்தைப் பதிவுசெய்திருப்பதாகச் சொன்னார்கள். ஒவ்வொருவர் கையிலும் நிரூபிக்க ஏராளமான ஆவணங்களும் இருந்தன.
 

நாம் பேசிக்கொண்டிருக்கும் கதை, ஜெயலலிதாவே நேரில் வந்து “நான் நிறையத் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்” என்று கூறினாலும், “ஐயோ, அம்மா நீங்கள் கடவுள்” என்று மறுக்கும் ரக தொண்டர்களைக் கொண்ட அதிமுகவில் நடப்பது. “தலைவர் ஒரு முடிவெடுத்தால் அதில் ஒரு கணக்கு இருக்கும்” என்ற பேச்சுக்குப் பேர் போன திமுகவும் கடுமையாக அடிவாங்கியிருக்கிறது. கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தைத் தாண்டி, கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளையே  முற்றுகையிட வருகிறார்கள். பாளையங்கோட்டை, சீர்காழி, மண்ணச்சநல்லூர், சோழிங்கநல்லூர், குன்னூர் என்று வரிசையாகக் கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.
 

இதுவரை அதிமுகவில் 26 தொகுதிகளிலும் திமுகவில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மாற்றம் நடந்திருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில், மாற்றங்கள் தொடர்கின்றன. எல்லா மாற்றங்களுக்குமே எதிர்ப்பு மட்டுமே காரணம் இல்லை என்றாலும், ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியைத் தாங்க வல்லவர்கள் இல்லை என்ற முடிவுக்குக் கட்சித் தலைமை வரும்போது, அதன் முந்தைய முடிவு தவறானது என்பது வெளிப்படையாகிறது.
 

கட்சிக் கட்டுப்பாடு, வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் புள்ளிகளின் மிரட்டல், மேலே வேட்பாளர் தேர்வில் பங்கேற்றிருக்கும் நிழல் அதிகார மையங்களின் ‘லாபி’ இவையெல்லாவற்றையும் தாண்டியும் ஒரு கட்சியின் கீழ்நிலை தொண்டர்கள் இப்படிப் போராட்டக் குரலோடு கட்சித் தலைமைகளை நோக்கி வருவது தமிழகத்துக்குப் புதிது; ஜனநாயகத்துக்கு நல்லது. இந்த விஷயத்தில் இதைத் தாண்டி அம்பலத்துக்கு வந்திருக்கும் ஒரு சங்கதி நாம் விவாதிக்க வேண்டியது. அது, இரு கட்சிகளுக்கும் அடிவரை புரையோடியிருக்கும் ஊழல். இந்த ஊழலுக்கு வெளியே இருப்பவர்களை அறிய முடியாத அளவுக்கு தலைமைகள் அந்நியமாகி இருப்பது.

ஜனநாயகம் யார் கையில்?


ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் புகைப்படம் ஒன்று என்னிடம் உண்டு. ஜீப்பின் முன்புறம் உள்ள பேனட் மீது நின்றுகொண்டு மக்கள் மத்தியில் அவர் ஆவேசமாகப் பேசும் படம் அது. அங்கிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர் பேசும் படங்களை வரிசையாக நகர்த்திக்கொண்டே வந்தால், அவரது தேர்தல் மேடைகளும் வாகனங்களும் அடுத்துவரும் காலத்தை முன்கூட்டிச் சொல்லும் குறியீடுகளாகத் தோன்றுகின்றன. காலந்தோறும் அவை மாறிவந்திருக்கின்றன. மக்களிடமிருந்து விலகிவந்திருக்கின்றன. அந்த மேடைகள் வெளிப்படுத்தும் மேலாதிக்க உணர்வையும் அந்நியமாதலையும் அடுத்து வரும் காலகட்டத்தில் மேலும் மேலும் அதிகரித்திருக்கின்றன ஜெயலலிதாவின் நிர்வாகச் செயல்பாடுகள்.

நாட்டிலேயே மக்களால் எளிதில் அணுக முடியாத முதல்வராகப் பெயர் பெற்ற ஜெயலலிதா, இந்தத் தேர்தல் காலத்திலும்கூட நாட்டு மக்களின் சூழலை நேரடியாகத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. சாலை வழிப் பிரச்சாரப் பயணம் என்பது வெவ்வேறு பகுதி மக்களை அவர்களுடைய நேரடி வாழ்க்கைப் பின்னணியில் சந்திப்பதற்கான வாய்ப்பு மட்டும் அல்ல; ஊர் சூழல் எப்படியிருக்கிறது, மக்களின் வாழ்க்கைப்பாடு எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பும்கூட. தன்னுடைய பெரும்பான்மைப் பயணங்களை ஹெலிகாப்டர் வழியாகவே திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதா இப்போதும்கூட உண்மையான உலகத்துக்கு முகங்கொடுக்கத் தயாராக இல்லை.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் – கீழே வேட்பாளர்கள்; மேலே அவர் மட்டும் என்பதான – மேடை முடியாட்சிக் கால, சர்வாதிகார மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகம் தவிர வேறெங்கும் மக்களாட்சி நடக்கும் ஓரிடத்தில் இப்படியான ஒரு மேடையமைப்பில் ஒரு மாநிலத்தின் முதல்வரோ, பிரதான கட்சியின் தலைவரோ உட்கார முடியுமா என்று கற்பனையிலும் நினைக்க முடியவில்லை.

ஏப்ரல் 11 விருத்தாசலம் நிகழ்வு தொடர்பாக அந்த நிகழ்ச்சிக்குச் சென்றுவந்தவர்களிடம் பேசும்போது நடந்தது ஒரு விபத்தாகத் தோன்றவில்லை. நம்முடைய அரசியல்வாதிகளின் ஆணவத்தினாலும் அதன் தொடர்ச்சியாக அதிகார வர்க்கத்தினரிடமும் கீழேயுள்ள நிர்வாகக் கட்டமைப்பினரிடம் ஊடுருவியிருக்கும் அலட்சியத்தாலும் நடத்தப்பட்ட கொலைகளாகவே தோன்றுகின்றன.

அரசியலதிகாரமே வலிய ஆயுதம் - திருமாவளவன்



தமிழக அரசியல் களம் தேர்தல் வெப்பத்தில் தகிக்கும் சூழலில், திருமாவளவன் ஓடிக்கொண்டிருக்கிறார். இது கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே எடுத்த நேர்காணல். ஆறு வெவ்வேறு நாட்களில் மணிக் கணக்கில் நீண்ட நேர்காணல். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காத்திரமான தலித் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன் எல்லாக் கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டார். கூடுமானவரை உண்மைக்கு முகம் கொடுத்தார். எதிர்த்தரப்பு நியாயங்களுக்கும் மதிப்பளித்தார். தவறுகளை யோசிப்பவராகவும் மறுபரிசீலனை செய்பவராகவும் தெரிந்தார். சமகால அரசியல் தலைவர்கள் மத்தியில் இவையெல்லாம் அரிதாகிவருவதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆரம்ப காலக் கதைகளிலிருந்து நாங்கள் பேசினோம்.

அவர் வரலாற்றில் இருக்கிறார்!


நிதானம் அல்ல; நிதானமின்மையே மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களை வெளிக்காட்டுகிறது. நம்மூரில் “இந்த வேலையைச் செய்ததற்கு நீ வேறு வேலை செய்து பிழைக்கலாம்” என்று கூறினாலே அது எந்த வேலையைக் குறிக்கும் என்பது எல்லோருக்கும் புரியும். முதுபெரும் தலைவர் கருணாநிதியை விமர்சிக்கையில் நீட்டி முழங்கி, வலிய கருணாநிதியின் சாதியை இந்த வசவின் பின்னணியில் கொண்டுவந்து இணைத்தார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. “நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. அவருக்கு நாகஸ்வரம் வாசிக்கக் கூடியத் தொழில் தெரியும். அதனால் சொன்னேன்” என்றபோது வைகோவிடமிருந்து வெளிப்பட்ட உடல்மொழி, அவரது வார்த்தைகளைக் காட்டிலும் ஆபாசமானது.

வைகோ பிறகு மன்னிப்புக் கேட்டார். வைகோவிடமிருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றாலும், மனிதர்களை மதிப்பிடும்போது அவரவர் சாதியின் பின்னணியைக் கொண்டுவந்து பொருத்திப் பேசும் அசிங்கம் இங்கு பொதுவானதாகவே இருக்கிறது. பொதுமேடைகளில் இதை அரசியல் கலாச்சாரமாக வார்த்தெடுத்ததில் திராவிட இயக்கத்துக்கும் முக்கியமான பங்கு உண்டு. சாதியத்தையும் சாதியையும் சாடுவது வேறு; எல்லா மனிதர்களையும் அவர் பிறப்பின் அடிப்படையில் சாதியோடு சேர்த்துப் பொதுமைப்படுத்தி வசைபாடுவது வேறு. சாதி ஒழிப்புக்காக இறுதி வரை போராடிய பெரியாரும் இதற்கு விதிவிலக்கல்ல. “பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனியம் வந்தது. எனவேதான், பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்” என்று சொன்னவர் பெரியார். எனினும், வேறுபாடு இருக்கிறது. ஆதிக்கச் சாதியை நோக்கிய வசை என்பது வலியில் உருவாகும் கோபத்தின் வெளிப்பாடு. ஒடுக்கப்பட்ட சாதிகளை நோக்கிய வசை என்பது இழிவான எண்ணத்தின் வெளிப்பாடு.

தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடம் கருணாநிதி மீதான விமர்சனங்களில் சாதி கூர்மையாகத் தனித்து இயங்கு வதை ஒரு ஊடகனாகப் பல்வேறு தருணங்களில் கவனித்திருக்கிறேன். கருணாநிதி சாதிரீதியிலான இழிவை எதிர்கொள்ளும்போதெல்லாம் என் ஞாபகங்கள், மறைந்த கலை விமர்சகர் தேனுகாவை நோக்கி இயல்பாகச் செல்லும். 


இனி விவசாயம் உங்களைத் தூங்கவிடப்போவதில்லை!


ஜாட் உள்ளிட்ட ஐந்து சமூகங்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 10 நிமிடங்களுக்குள் ஒருமனதாக நிறைவேற்றி யிருக்கிறது ஹரியாணா அரசு. ஏப்ரல் 3-ம் தேதிக்குள் தங்கள் இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். இல்லையெனில், கிளர்ச்சி தீவிரம் அடையும் என்று கெடு விதித்திருந்தனர் ஜாட் தலைவர்கள். முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையிலான அரசு கெடுவுக்குள் இடஒதுக்கீட்டை அறிவித்துவிட்டாலும், பிரச்சினை தீர்ந்துவிட்டதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பிரச்சினைக்கான தீர்வு அது இல்லை.

ஹரியாணாவில் ஜாட்டுகள் நடத்திய போராட்டங்களில் ரூ.20,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகச் சொன்னது அசோசேம். கலவரங்களின் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் மாநாடும் ரத்தானது. மீண்டும் மாநாடு நடத்தப்படலாம். ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த முதலீடுகள் வருமா என்பது கேள்விக்குறி. இந்தப் போராட்டங்களின்போது 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்தியாவில் சாமானிய உயிர்களுக்கு என்றைக்கு மதிப்பு இருந்தது? அதேசமயம், அசோசேம் குறிப்பிடும் இழப்பும் முதலீட்டாளர்கள் மாநாடு ரத்தானதால் ஏற்படும் இழப்பும் ஆட்சியாளர்களை யோசிக்கவைக்கக் கூடியவை. யோசிக்கட்டும்!

இடதுசாரி கட்சிகள் இணைப்பு தொண்டர்கள் கையில் - சீதாராம் யெச்சூரி


சீதாராம் யெச்சூரி யுத்த களத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் அல்ல; இந்திய இடதுசாரி இயக்கம் முழுமைக்கும் இது முக்கியமான ஒரு யுத்தம். பாஜக நாட்டின் எல்லா பாகங்களிலும் கிளை பரப்பிக்கொண்டிருக்கும் சூழலில், இடதுசாரிகள் தம் கோட்டையாகப் பார்க்கும் வங்கத்திலும் கேரளத்திலும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இரு இடங்களிலுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று நினைக்கிறார்கள்; கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் காலம் அவர்களை நிறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அரை நூற்றாண்டு `திமுக - அதிமுக' அரசியலுக்கு முடிவுகட்டும் நோக்கில் கட்சி கட்டியிருக்கும் கூட்டணியை நம்பிக்கையுடனே பார்க்கிறார் யெச்சூரி. தேர்தல் களத்தைத் தாண்டியும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரிடம் நிறையப் பேசினேன்.

மாற்றம்: சீரழிவுகளிலிருந்து பேரழிவுக்கு!



தமிழகத்தில் இடதுசாரிகள் அமைத்த ‘மக்கள் நலக் கூட்டணி’ தேமுதிகவிடம் சரணாகதி அடைந்த நாளன்று அக்கூட்டணிக் கட்சிகளைச் சாராதவர்களிடமிருந்தும் வலி மிகுந்த வார்த்தைகள் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 124 தொகுதிகளையும் முதல்வர் வேட்பாளர் என்கிற அந்தஸ்தையும் தேமுதிகவிடம் கொடுத்ததோடு கூட்டணியின் பெயரையும் பறிகொடுத்து, ‘விஜயகாந்த் கூட்டணி’ ஆக மாறியிருக்கிறது இடதுசாரிகள் அமைத்த நால்வர் அணி. தேமுதிக வாங்கியிருக்கும் 124 இடங்கள் தனிப்பெரும்பான்மைக்குரிய 118 இடங்களைக் கடந்தவை (52.9%) என்பதோடு, குறைந்தபட்சம் கூட்டணி அரசு எனும் வார்த்தையைக்கூட தேர்தல் உடன்பாட்டு அறிக்கையில் நால்வர் அணியால் சேர்க்க முடியவில்லை. ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று பேரம் முடித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். மிச்சமுள்ள 110 இடங்களை நான்காகப் பிரித்தால், இக்கூட்டணியின் மூலம் அடைந்த பலன் என்ன என்பதை நால்வர் அணிக்குத் தேர்தல் முடிவுகள் உணர்த்திவிடும்.

ஓராண்டுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ‘திராவிட அரசியலுக்கு மாற்று’ என்ற முழக்கத்துடன் தமிழகத்தைச் சுற்றிவந்தது பொதுத்தளத்தில் ஒரு ஈர்ப்பையும் புதிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருந்தது. அரை நூற்றாண்டு ‘திராவிட அரசியல்’ தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் இன்றைய இழிவான சூழ்நிலையின் வெளிப்பாடு அது. இதே முழக்கத்துடன் பாஜக, பாமக உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் களத்தில் நின்றாலும், இடதுசாரிகள் கவனம் ஈர்க்கக் காரணம் சாதி, மதச்சார்ப்பற்ற அவர்களுடைய நிலைப்பாடும், அவர்கள் பேசும் விளிம்புநிலை அரசியலும், அவர்கள் தம் முன்னுதாரணங்களாக முன்னிறுத்தும் சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற எளிமையும் நேர்மையும் மிக்க ஆளுமைகளும்.தமிழகத்தில் இதுவரை இல்லாத சூழலாக, இந்தத் தேர்தலில் சுமார் 1.08 கோடி இளைஞர்கள் - 22.92% பேர் - புதிதாக வாக்களிக்கிறார்கள். திமுக, அதிமுக இரண்டுக்கும் எதிரான மனநிலையை இந்தப் புதிய தலைமுறை வாக்காளர்களிடம் பெரிய அளவில் கவனிக்க முடிந்தது. அவர்களைக் குறிவைத்து இறங்குவதற்கான களம் இடதுசாரிகளுக்கு இயல்பாக அமைந்திருந்தது. நிச்சயமாக இடதுசாரிகள் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறவர்கள் அல்ல என்றாலும்கூட, இப்படியான ஒரு தரப்பை ஆதரிப்பது, தமிழகத்தின் சமகால அரசியல் போக்குக்கு எதிராக நிற்பதற்கான தார்மீக ஆதரவாகப் பார்க்கப்பட்டது. இப்போது இடதுசாரிகள் உருவாக்கியிருக்கும் கூட்டணியோ எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது. வாக்காளர்கள் முன்பு கடைசியாக அவர்கள் முன்வைத்திருக்கும் தேர்வு என்ன? கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக விஜயகாந்த்!

இந்திய அரசியலையும், இந்தியாவின் இன்றைய சமூகச் சூழலையும் உற்றுநோக்கும் எவருக்கும் இப்படியொரு கேள்வி அடிக்கடி எழக்கூடும். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நாளுக்கு நாள் வறுமையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். அதிகாரம் பெருமுதலாளிகள் காலில் குவிகிறது. சாதி, மத, இனப் பாகுபாடுகள் அதிகரிக்கின்றன. எல்லாமும் சேர்ந்து சாமானிய மக்களை உக்கிரமாகத் தாக்குகின்றன. இத்தகைய சூழலில் இவை எல்லாவற்றுக்கும் எதிராகப் பேசும், ஒரு இயக்கம் மக்களிடம் இயல்பாகப் பரவ வேண்டும். மக்கள் தன்னெழுச்சியாக அதை வாரி அணைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் நடப்பதென்ன? நேர் எதிராக நாளுக்கு நாள், மிக மோசமாக அடிவாங்குகிறார்கள் இடதுசாரிகள். காரணம் என்ன?மாற்றம் எனும் சொல் கேட்பதற்கு எவ்வளவு வசீகரிக்கக் கூடியதோ அவ்வளவுக்குக் கையாளும்போது அபாயகரமானது. கைப்பிடியற்ற வாள் அது. எதிரியைத் தாக்குகிறதோ இல்லையோ; சரியாகக் கையாளவில்லையெனில், கையாள்பவரின் கைகளை அது பதம்பார்ப்பது நிச்சயம். அடிப்படையில் தூய்மைவாதத்தை முன்னிறுத்தும் சொல் மாற்றம். இடதுசாரிகள் இந்தியாவில் இவ்வளவு தூரம் கீழே வந்ததற்கும், நாளுக்கு நாள் அடிவாங்குவதற்கும் தூய்மைவாதத்துடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு ஒரு முக்கியமான காரணம். இடதுசாரிகளிடம் தூய்மைவாதப் பேச்சு அதிகம். தூய்மைவாதப் பேச்சுக்கான செயல்பாடு குறைவு. ஊரையெல்லாம் விமர்சிப்பவர்கள் கடைசியில் தாம் செல்ல அதே பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் எதிரியின் சுத்தத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் கைகள் மட்டுமல்ல; உங்களுடன் கை கோத்து நிற்பவர்களின் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். சரியாகச் சொல்வதெனில், இடதுசாரிகள் தங்களது எதிரிகளை மிகச் சரியாக நிர்ணயிக்கிறார்கள். நண்பர்களை அடையாளம் காணும்போது மோசமாக சொதப்புகிறார்கள். வரலாற்று வாய்ப்புகளைத் தாமாக முனைந்து நாசப்படுத்திக்கொள்வதில், அலாதியான வேட்கையை வெளிப்படுத்துகிறார்கள்.

உள்கட்சி விவகாரமா அதிமுக கூத்துகள்?


அதிமுகவில் ஜெயலலிதா அதன் நிரந்தரப் பொதுச்செயலாளர் மட்டுமே அல்ல; அங்குள்ள ஒரே நிரந்தர உறுப்பினரும் அவரே; அவருடைய அமைச்சரவையின் ஒரே நிரந்தர அமைச்சரும் அவரே என்று சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே அக்கட்சியினுள் நடக்கும் மாற்றங்கள் பொதுவெளியில் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலலிதா. 2011-ல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர்.

ஒரு முதல்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் அமைச்சரவையை மாற்றியமைத்துக்கொள்வது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்புரிமை. அரசின் நிர்வாகம் செழுமையாக மாற்றங்கள் உதவும் என்பதே இந்தச் சிறப்புரிமைக்கான அடிப்படை. தமிழகத்தில் அமைச்சர்கள் என்னென்ன காரணங்களுக்காக நீக்கப்படுகிறார்கள் அல்லது சேர்க்கப்படுகிறார்கள் என்பது வெளியே யாருக்கும் தெரியாத மர்மம்.

பொதுவாக, ஒரு அமைச்சர் நீக்கப்படுகிறார் என்றால், எப்படியும் அதற்குப் பின்வரும் மூன்றில் ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும். 1. விசுவாசமின்மை, 2. திறமையின்மை. 3. அதிகார துஷ்பிரயோகம். எப்படிப் பார்த்தாலும் இந்த மூன்றில் ஒரு காரணத்துக்காக நீக்கப்படுபவர் எப்படி மிகக் குறுகிய கால இடைவெளிக்குள் மீண்டும் அமைச்சரவைக்குள் இடம்பெற முடியும்? கோகுல இந்திரா, உதயகுமார், வேலுமணி, ஆனந்தன், சண்முகநாதன் ஆகியோர் இப்படித்தான் நீக்கப்பட்டு, மீண்டும் சேர்க்கப்பட்டார்கள். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, ரமணா ஆகியோர் இப்படித்தான் இரு முறை சேர்க்கப்பட்டு, இரு முறை நீக்கப்பட்டார்கள்.

ஒவ்வொரு முறை அமைச்சர்கள் நீக்கத்தின்போதும் புலனாய்வுப் பத்திரிகைகள் வழி நம்மை வந்தடையும் செய்திகளில், பெயர்களில் வேறுபாட்டைக் காண்கிறோமே தவிர, காரணங்களில் வேறுபாட்டைக் கண்டதில்லை. இப்படியான ‘செய்திக் கசிவு’களில் உளவுத் துறையின் கைங்கர்யமும், ஆளுங்கட்சியின் அருளாசியும் எப்படிக் கலந்திருக்கும் என்பது ஊடக உலகை அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாதது அல்ல. மொத்தத்தில், பொதுமக்களிடம் இச்செய்திகள் உருவாக்கும் பிம்பம்: ‘முதல்வருக்குத் தெரியாமல் பெரிய தவறுகளில் இந்த அமைச்சர் ஈடுபட்டிருக்கிறார்; இப்போதுதான் அது முதல்வர் கவனத்துக்கு வந்தது; உடனே கறாராக அவர் நடவடிக்கை எடுத்துவிட்டார்!’

இந்தக் கதைகள் உண்மை என்றால், திரும்பத் திரும்பத் தவறுகள் செய்யும் அமைச்சர்களைக் கொண்ட அரசியல் கட்சி அதிமுகவாகவும் திரும்பத் திரும்ப ஏமாற்றப்படுபவர் ஜெயலலிதாவாகவுமே இருக்க வேண்டும். ஜெயலலிதாவோ இப்படியான செய்திகள் மூலமாகவே தன்னை ஒரு தேர்ந்த நிர்வாகியாக நிறுவிக்கொண்டிருக்கிறார்.

2011-ல் திமுக அரசு கஜானாவைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டது என்று சொன்னபோது, திமுகவின் நிர்வாகச் சீர்கேட்டுக்கான உதாரணமாக ஜெயலலிதாவால் உதாரணப்படுத்தப்பட்டது, திமுக விட்டுச்சென்ற ரூ.1 லட்சம் கோடிக் கடன். 2016-ல் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்போது ஜெயலலிதா விட்டுச்செல்லும் கடன் ரூ.2.11 லட்சம் கோடி. திமுக விட்டுச்சென்ற கடனாவது காலங்காலமாகத் தொடர்ந்துவந்த அரசுகள் விட்டுச்சென்ற கடன்களின் நீட்சி. தன்னுடைய 5 ஆண்டு ஆட்சியில் மட்டும் அதைவிட அதிகமான கடனை உருவாக்கியிருக்கிறது அதிமுக அரசு. இது எந்த வகையான நிர்வாகத்துக்கான சான்று?

இந்த இந்து விரோதியை அழிக்க ஆர்எஸ்எஸ் சங்கல்பம் பூண்டால் என்ன?


சாதிய வன்முறைகள் நடக்கும்போதெல்லாம் ஆர்எஸ்எஸ் ஏன் வாய்மூடி இருக்கிறது?' என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. சாதிய அமைப்புக்கு எதிராக எப்போதுமே பேசுவதில்லை என்பதால்தான் ‘இப்போது ஏன் பேசுவதில்லை' என்ற கேள்வியும் எழுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவை நிலைகுலைய வைத்த எந்தச் சம்பவத்தின்போதும் ஆர்எஸ்எஸ் வாய் திறந்து பேசியதாகவோ, களத்தில் போய் நின்றதாகவோ தெரியவில்லை. சுதந்திர இந்தியாவை அதிரவைத்த கீழவெண்மணி சம்பவத்தின்போது - 44 தலித்துகள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டபோது - ஆர்எஸ்எஸ் என்ன செய்தது? சுந்தூரில் 8 தலித்துகள் கொன்றழிக்கப்பட்டபோது என்ன செய்தது? பதானில் 21 தலித்துகள் கொல்லப்பட்டபோது என்ன செய்தது? சுதந்திர இந்தியாவின் மிக அவமானகரமான நிகழ்வு என்று அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனால் குறிப்பிடப்பட்ட, 58 தலித்துகள் கொல்லப்பட்ட லக்ஷ்மண்பூர் பதே சம்பவத்தின்போது என்ன செய்தது?
 

சில நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் இருக்கின்றன. 2002-ல் டெல்லி வஸந்த்குஞ்சில் வேதக் கல்வி நிறுவன அடிக்கல் நாட்டு விழாவுக்கு அத்வானி வந்தபோது, இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் வசித்துவந்த தலித் குடும்பங்களை வெளியேற்றினார்கள். வேதக் கல்வி நிறுவனம் தொடங்கும் சமயத்தில் தலித்துகள் அங்கு இருந்தால், புனிதம் கெட்டுவிடும் என்றார்கள்.  அத்வானியோ, ஆர்எஸ்எஸ்ஸோ இதற்கு ஆட்சேபித்ததாக நினைவில்லை. அதே வருஷத்தில்தான் துலினா சம்பவமும் நடந்தது. இறந்துகிடந்த ஒரு மாட்டின் தோலை உரித்துக்கொண்டிருந்த ஐந்து தலித்துகளை அடித்தே கொன்றார்கள். குற்றவாளிகள் ‘விஷ்வ ஹிந்து பரிஷத்' தொண்டர்கள் என்ற செய்தி வந்தபோது, “எத்தனை மனித உயிர்களையும்விட உயர்வானது ஒரு பசுவின் உயிர்” என்று அந்தப் படுகொலையை நியாயப்படுத்தினார் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கிரிராஜ் கிஷோர். ஆர்எஸ்எஸ் இதைக் கண்டித்ததாக நினைவில்லை. அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்து மதத்தின் மிகப் பெரிய விரோதி சாதி. இந்துக்களை இந்து மதத்திலிருந்து விரட்டும் மாபெரும் தீயசக்தியும் அதுதான். இந்து மதத்தைக் காப்பதையே தன் பிரதான கடமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு நூற்றாண்டை நோக்கி நகரும் தருணத்திலேனும் அதன் உண்மையான எதிரியை அங்கீகரிக்க வேண்டுமா, இல்லையா?


அப்பச்சி சாமி


விருதுநகர். வெயில் இந்த ஊரில்தான் இப்படி அடிக்கிறதா அல்லது இந்த ஊரில்தான் இப்படித் தெரிகிறதா என்று தெரியவில்லை. காலையிலேயே சுள்ளென்று விழுந்தது. ஊரில் அன்றைக்கு முழுவதும் சுற்றித் திரிந்தபோது, ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. யார் தலையிலும் துண்டு இல்லை, முக்காடு இல்லை, கையில் குடையில்லை; விருதுநகர்க்காரர்கள் நாளெல்லாம் வெயிலில் நனைந்துகொண்டிருந்தார்கள். இந்த ஊர்வாகும் சேர்ந்துத்தான் காமராஜரின் அலுக்காத உழைப்பில் வெளிப்பட்டிருக்குமோ என்று தோன்றியது.

சுலோச்சனா தெரு முக்கில் வண்டியை நிறுத்தினார் ஆட்டோக்காரர். “இதுல நேரே போனா அப்பச்சி வீடு, நடந்துருவோம்” என்று சொல்லிவிட்டு அவரே துணைக்குக் கூட வந்தார். குறுகலான தெரு. சின்னச் சின்ன கடைகள். நான்கு பேர் சேர்ந்தாற்போல் உட்கார முடியாத இடங்கள் வணிகத்தளங்களாக இருந்தன. பரபரவென்று வேலையில் இருந்தார்கள். ஒரு சாப்பாட்டுக் கடை. கடையைக் காட்டிலும், கடைக்கு வெளியே இருந்த உணவு வகைகளின் பட்டியலின் நீளம் அதிகமாகத் தோன்றியது. நடக்க ஆரம்பித்தோம்.

காமராஜர் ஆட்சிக் காலத்துக்குப் பின் அரை நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. அவருக்கு முன்பும் சரி, அவருக்குப் பின்னும் சரி; ஆட்சியில் இருந்த முதல்வர்கள் எவருமே சாமானியமானவர்கள் அல்ல. சாதுர்யர்கள், ராஜதந்திரிகள் என்று பெயரெடுத்தவர்கள். தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்ட முதல்வரும் அல்ல அவர். வெறும் 9 வருஷங்கள்தான் ஆட்சியில் இருந்தார். 1954 முதல் 1963 வரை. எது இன்னமும் மீண்டும் மீண்டும் காமராஜர் பெயரை உச்சரிக்க வைக்கிறது?

கொல்லும் அமைதி


தொலைக்காட்சியில் அந்தச் செய்தி ஓடியபோது, பக்கத்தில் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். என்ன நினைத்தானோ சின்னவன் அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து ஓடிவந்தான். அப்படியே காலில் சாய்ந்தவன் முகத்தை மடியில் புதைந்துகொண்டான். வீடு அப்படியே உறைந்துபோன மாதிரி இருந்தது. மனம் பதைபதைத்துக்கொண்டே இருந்தது. யாராலும் பேச முடியவில்லை.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருஷங்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட சாதி ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள். பெண்களை உடைமைகளாகப் பார்க்கும் மனோபாவம் கற்காலத்திலிருந்தே தொடர்வது என்றாலும், சாதியை மீறித் திருமணம் செய்துகொள்ளும் அத்தனை பேர் மீதும் சாதிய திமிர் பாய்ந்துவிடவில்லை; இடம் பார்த்தே பாய்கிறது. பொதுவில் சாதி ஆணவக் கொலைகள் என்று உச்சரிக்கப்பட்டாலும், இப்படிக் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்.

ஒவ்வொரு கொலையும் கொடூரமானது என்றாலும் உடுமலைச் சம்பவம் இவ்வளவு உக்கிரமாக நம்மைத் தாக்கக் காரணம் அந்த வீடியோ. அது ரத்தமும் சதையுமாக வெளிப்படுத்தும் உண்மை. நம்மில் பலர் வெறும் சொல்லாக அல்லது பெருமிதமாக மட்டுமே பயன்படுத்தும் சாதியின் அசலான குரூர முகம்.

நகரத்தில், ஊர்க் கடைவீதியில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் அந்தக் கொலை சாவதானமாக நடக்கிறது. கடைக்குச் செல்லும் இளம் தம்பதியை மூன்று பேர் கொண்ட ஒரு குழு பின்தொடர்ந்து நடக்கிறது. இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து சேரும் இருவர் அவர்கள் அருகே வண்டியை நிறுத்துகின்றனர். தம்பதியை நோக்கி கும்பல் நகர்கிறது. கணவன் - மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டுகின்றனர். பின், சாவதானமாக மோட்டார் சைக்கிளை எடுக்கிறார்கள். சாவதானமாகச் செல்கிறார்கள்.

கொலை நடந்த இடத்தில் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்த மக்களின் கையறு நிலை, நடந்துகொண்டிருந்த கொலை, துடித்துக் கொண்டிருந்த உயிர்கள்… இவை எல்லாவற்றையும் விட, பயங்கரமானது கொலையாளிகளின் சாவதானம். அவர்களுடைய திமிர். அவர்களுடைய அமைதி… எங்கிருந்து கிடைக்கிறது கொலையாளிகளுக்கு இவ்வளவு துணிச்சல்? சம்பவம் நடந்து இரு நாட்களாகியும் இன்னும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு வார்த்தையைக்கூட உதிர்க்காத முதல்வர், பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து வெளிப்படும் அசாத்தியமான அமைதியையும் கொலையாளிகளிடமிருந்து வெளிப்பட்ட அமைதியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

நீங்கள் இருக்க வேண்டிய இடம் டெல்லி அல்ல ராகுல்!


கொல்கத்தாவில் 2016 தேர்தலுக்கான வியூகத்தை வகுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, “மக்களிடம் ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். கள்ளக்கூட்டு. இந்த ஒரு வார்த்தைதான் திரிணமுல் காங்கிரஸாருக்கு மம்தா அளித்திருக்கும் தேர்தல் மந்திரம். இதை ஊர் ஊராக மக்களிடம் போய் சொல்ல பிரத்யா பாசு, தேவஸ்ரீ ராய், சிரஞ்ஜீத், தேவ், மூன் மூன் சென், பாய்சுங் பூட்டியா, லக்ஷ்மி ரத்தன் சுக்லா என்று ஒரு பெரிய நடிக - விளையாட்டு நட்சத்திரப் பட்டாளத்தையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

மம்தா பிரயோகிக்கும் வார்த்தை கூசவைப்பதாக இருக்கலாம். அப்படியான உறவைத்தான் அங்கு தேர்தல் உத்தியாக காங்கிரஸாரும் இடதுசாரிகளும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இதன்படி, தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் இரு தரப்பும் அதிகாரபூர்வமாக தனித்தனியே நிற்கும். ‘கள்ளப் பங்கீட்டு தொகுதிகளில்’ பரஸ்பரம் ‘டம்மி வேட்பாளர்கள்’ போட்டு விட்டுக்கொடுத்துக்கொள்வார்கள்; மம்தாவுக்கு எதிராக பரஸ்பரம் கை கோத்து வேலை செய்வார்கள்.

தங்களை ஜனநாயகவாதிகளாகவும் தாராளச் சிந்தனையாளர்களாகவும் காட்டிக்கொள்ளும் நாட்டின் இரு முக்கியக் கட்சிகளின் இப்படியான ‘கள்ளக்கூட்டு’ உறவு வெட்கக்கேடு. அதைத் தாண்டி தேர்தலில் கரைசேருவதற்கான உத்தியும் அல்ல இது.

ஜெயலலிதாவாதல்!


திமுகவின் ‘முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவியில பாத்திருப்பீங்க.. நேர்ல பாத்திருக்கீங்களா? என்னம்ம்ம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!' விளம்பரமும் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் களேபரங்களும் தேசியக் கவனம் பெற்றிருக்கின்றன. இந்த 5 ஆண்டுகளில் சென்னையிலிருந்து கொடநாடு, பெங்களூருவைத் தாண்டி ஜெயலலிதா சென்ற இடங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் - அரசியல்வாதிகள் இடையேயான தொலைவுக்கான குறியீடு ஜெயலலிதாவின் அரசியல்.

இந்திய அரசியலில் கேலிக்கூத்துகளுக்கு எந்தக் காலத்திலும் பஞ்சம் இருந்ததில்லை. எனினும், ஜெயலலிதாவையும் அதிமுகவினரையும் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. எட்ட முடியாத உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள். வெள்ளத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்ற மக்களுக்குத் தன்னார்வலர்கள் கொண்டுசென்ற நிவாரணப் பொருட்களைப் பறித்து, ஜெயலலிதா ஸ்டிக்கர்களை அதிமுகவினர் ஒட்டியதாகட்டும்; சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த வீரர் கணேசனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, கதறியழுத தாயின் கையில் ஜெயலலிதா படத்தைத் திணித்ததாகட்டும்; பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், கதறக் கதற சிறுமியின் கையில் ஜெயலலிதா உருவப்படம் பச்சை குத்தப்படுவதை அதிமுக அமைச்சர்கள் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டதாகட்டும்; இந்தியாவின் ‘பின்நவீனத்துவ அரசியல்’  பிம்பம் ஜெயலலிதா.

ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் தெரியும்போதே அஷ்ட கோணலாய் ஜெயலலிதாவின் அமைச்சர்கள் போடும் கும்பிடுக்கு ஈடு இணையே இல்லைதான். எனினும், முழுப் பெருமையையும் பேசும்போது, ஒரு முன்னோடியை விட்டுவிட முடியாது. அதுவும் அவரது நூற்றாண்டு தருணத்தில். சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு “பச்சை குத்திக்கொள்வீர்! பொதுச்செயலாளர் புரட்சித்தலைவர் ஆணை!” என்று அறிவிப்பு வெளியிட்டவர் எம்ஜிஆர். பச்சையைக் கட்சி விசுவாசச் சின்னமாக அமல்படுத்தியவர்.

திராவிட இயக்கம் வழிவந்தவர்கள் பச்சை குத்திக்கொள்வதா என்று பலர் திடுக்கிட்டார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள்.  “இதுவரை எதற்கு யாரைக் கேட்டேன்? இதற்குக் கேட்பதற்கு?”  என்பதுபோல எம்ஜிஆர் பதில் அளித்தார். கோவை செழியன், பெ.சீனிவாசன், கோ.விஸ்வநாதன் மூவரும் ‘இது பகுத்தறிவுப் பாதைக்கு முரணானது' என்று கடிதம் எழுதினார்கள். மூவரையும் கட்சியிலிருந்து எம்ஜிஆர் நீக்கினார்.

அதிமுக, இப்படித்தான் வளர்ந்தது அல்லது வளர்த்தெடுக்கப்பட்டது.

வேகம் விவேகம் அல்ல மந்திரி!


தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த ஒரு நாள். பொழுதைக் கழிக்கப் பக்கத்திலிருந்த சுட்டிப்பையன் உதவினான். அவன்தான் கேட்டான், “அங்கிள், இன்ஜின் டிரைவர்ஸ் ரயில் போய்க்கிட்டிருக்கும்போது எங்கே போயி உச்சா போவாங்க?” இந்திய ரயில் இன்ஜின்களில் கழிப்பறை கிடையாது. இதுபற்றியெல்லாம் நாம் யோசிப்பதும் கிடையாது. ஒரு கேள்விக்கான பதிலையே சொல்ல முடியாமல் தத்தளித்தபோது, அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டான். “நீர்க்கடுப்பு வந்தா என்ன செய்வாங்க? வயித்தால வந்தா என்ன செய்வாங்க?”

முதல்வர் வேட்பாளர்: ஜனநாயகமா, சர்வாதிகாரமா?


தொடர்ந்து பயணங்கள். குறுக்கும் நெடுக்குமாக. தேர்தல் சூடு பரவும் சூழலில், தமிழக மக்களின் மனநிலை ஓரளவுக்குப் பிடிபடுவதுபோலவே தோன்றுகிறது. ரயிலோ, பஸ்ஸோ, ஆட்டோவோ உடன் பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும் பேச்சில் இயல்பாக வந்து அரசியல் ஒட்டிக்கொள்கிறது. நம்மூரில் மக்கள் தயக்கத்தைவிட்டு அரசியல் சூழலை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டாலே, ஆளுங்கட்சிக்கு அனர்த்தம் என்று அர்த்தம். வெளிப்படையாக அதைப் பார்க்க முடிகிறது. அடுத்து யார் என்று கேட்டால், பொதுவாக, மறுபடியும் இவங்களேதான் சார் என்றோ அடுத்த பெரிய கட்சியின் தலைவர் பெயரோதான் பதிலாக இருக்கும். இப்போது அவற்றைத் தாண்டி “இரண்டு பேருமே வரக்கூடாதுங்க” என்கிற குரல்களும் சகஜமாக கேட்கின்றன. “சரி, அப்போ வேற யாரு?” என்றால், “அதாங்க குழப்பமா இருக்கு. நம்பிக்கையா யாருமே கண்ணுல தெரியலீயே!” என்கிறார்கள்.

தமிழகத்தில் ஏனைய கட்சிகளைத் தாண்டி இடதுசாரிகள் மூன்றாவது அணியாக உருவாக்கியிருக்கும் ‘மக்கள் நலக் கூட்டணி’ எல்லோர் கவனத்திலும் விழுந்திருக்கிறது; ஆனால், மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் கூட்டணியாக அதுவும் உருவெடுக்கவில்லை. “கூட்டணியெல்லாம் சரி, யாரை நம்பி ஓட்டுப்போட? ஜெயிக்குறதுக்கு முன்னாடியே எங்காளு இவருதான்னு ஒத்துமையா ஒருத்தரை அவங்களால காட்ட முடியலீயே!” என்று கேட்டார் ஆட்டோக்காரர் குமரேசன். மக்களால் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாமல் இருக்கலாம்; தங்கள் தேவையைக் கோடிட்டுக் காட்ட ஒருபோதும் அவர்கள் தவறுவதில்லை.

இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?


திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.


காந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா?



தென்காசி போயிருந்தேன். ரயிலில் வழக்கம்போல் உடன் பயணித்தவர்களுடன் உற்சாகமான உரையாடல் அமைந்தது. இளைஞர்கள் இருவர் ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் தொடர்பாகப் பேச ஆரம்பித்தனர். உரையாடல் மெல்ல சாதி நோக்கி நகர்ந்தது. பேச்சு சமகால தலித் இயக்கங்கள், அம்பேத்கர், காந்தி என்று விரிந்து, காந்தி எனும் புள்ளியைத் தொட்டபோது, அவர்களிடமிருந்து கசப்பான வார்த்தைகள் விழத் தொடங்கின. “சமூக விடுதலைக்கு காந்தியை எப்படி ஒரு வழிகாட்டியாகக் கருத முடியும்?” என்றார் ஒருவர். “இந்தியாவில் தலித் அரசியலை சிசுவிலேயே சிதைக்கப்பார்த்தவர் காந்தி” என்றார் இன்னொருவர். சாதியத்துக்கு எதிரான காந்தியின் செயல்பாடுகள் சிலவற்றை நான் குறிப்பிட ஆரம்பித்தபோது, “காந்தி தலித்துகளுக்காகப் பேச ஆரம்பித்ததெல்லாம் பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகுதானே? அதுவும் அம்பேத்கர் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் பேச ஆரம்பித்தார்?” என்றார்கள் இருவரும். இப்படியான புரிதலற்ற பேச்சுகள் புதியன அல்ல. எனினும், நாளுக்கு நாள் இத்தகைய கசப்புணர்வுகள் இளைய தலைமுறையிடம் வளர்வது, இந்தியாவில் விளிம்புநிலை அரசியல் எதிர்கொள்ளும் பேராபத்தாகவே தோன்றுகிறது. காந்திய வெறுப்பு அரசியலுக்குப் பின், குறைந்தது நூற்றாண்டு வரலாறும் பலதரப்பு அரசியல் சதிகளும் இருக்கின்றன. காங்கிரஸை ஒழித்து தம் அரசியலை முன்னே கொண்டுவர அநேகமாக இந்தியாவின் ஏனைய அரசியல் கட்சிகள் பெரும்பான்மையும் காந்தி எதிர்ப்பை ஒரு செயல்திட்டமாகவே முன்னெடுத்திருக்கின்றன. மறுபுறம், காங்கிரஸோ காந்திய மதிப்பீடுகளிலிருந்து விடுபட காந்தியை மறக்கத் துடித்தது. இன்றைய சூழலில் எந்த அரசியல்வாதிக்குத்தான் காந்தி தேவைப்படுவார்!

சிறு வயதில் வீட்டு வேலைக்காரர் ஒருவரின் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார் காந்தி. இதைப் பார்க்கும் புத்திலிபாய் காந்தியை அழைத்து, அந்தச் சிறுவனுடன் பேசக் கூடாது என்று கூறி காந்தியைக் குளிக்கச் சொல்கிறார். காந்தி காரணம் கேட்கிறார். அந்தச் சிறுவன் கீழ்சாதியைச் சேர்ந்தவன் என்று குறிப்பிடும் புத்திலிபாய், அவனுடன் பேசியதால் தீட்டு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார். அப்போது காந்தி தன் தாயிடம் கேட்கிறார், “நாம் எல்லோரும் ராமனின் குழந்தைகள் என்று சொல்வீர்களே, அப்படியென்றால் உக்காவும் ராமனின் குழந்தைதானே?”

உயர் கல்விக்காக காந்தி லண்டன் செல்ல முடிவெடுக்கும்போது அவருக்கு வயது 15. அவர் சார்ந்த மோத் சாதி வழக்கப்படி வெளிநாட்டுப் பயணத்தை அனுமதிக்க முடியாது என்று சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள் சாதியத் தலைவர்கள். “வெளிநாடு செல்வேன். இதில் சாதி தலையிடவே கூடாது” என்கிறார் காந்தி. காந்தியை சாதி பிரஷ்டம் செய்கிறார்கள். சாதியை மீறியே காந்தி வெளிநாடு சென்றார்.

தென்னாப்பிரிக்காவில் அவர் எதிர்கொண்ட முதல் அடித்தட்டு மனிதரின் வழக்கு பாலசுந்தரத்தினுடையது. தன்னுடைய முண்டாசுத் துணியைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு, இரு கைகளையும் கூப்பியவாறு கூனிக்குறுகி, உடைந்த பற்களிலிருந்து ரத்தம் வழிய காந்தி முன் வந்து நின்ற தமிழர். கூலித் தொழிலாளி. அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த ஆங்கிலேயர் பாலசுந்தரத்தை அத்துமீறித் தாக்கியிருக்கிறார். பாலசுந்தரத்தின் முழுக் கதையையும் கேட்கும் காந்தி அவருக்காகப் பேச முடிவெடுக்கிறார். பாலசுந்தரத்திடம் இதைத் தெரிவிக்கும்போது கூடவே சொல்கிறார், “தயவுசெய்து உங்கள் முண்டாசுத் துணியைக் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்.” பின்பு ‘சத்திய சோதனை’யில் எழுதுகிறார். “மனிதர்கள் தம் சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்துவதன் மூலம் தாங்கள் கவுரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது என்றைக்குமே எனக்குப் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக இருக்கிறது.”

தென்னாப்பிரிக்காவில் கூலிகளாக இருந்த இந்தியர் களில் கணிசமானோர் தாழ்த்தப்பட்டவர்கள். ஒடுக்கப்பட்டவர்களுடனான ஆழமான உறவு காந்திக்கு அங்கே ஏற்பட்டுவிட்டது. இந்தியச் சேரிகளுக்கு இணையான குடியிருப்புகளே அங்கும் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. “நாம் நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்றால், முதலில் கண்ணியமான வாழ்க்கை முறைக்கு நாம் மாற வேண்டும்” என்று அவர்களிடம் கூறினார் காந்தி. கூலிகளின் சேரிகளுக்குச் சென்று பணியாற்றுகையில் அவர் தொடர்ந்து அவர்களிடம் வலியுறுத்திய இரு விஷயங்கள்: 1. சுகாதாரம், 2. கல்வி. தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள ஆங்கிலம் படிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார் காந்தி.

ஆரம்ப நாட்களிலேயே உடன் வேலைசெய்வோரைப் பாகுபாடின்றி வீட்டில் தங்கவைக்கும் பழக்கம் காந்தியிடம் இருந்தது. அப்படித் தங்கியிருந்த ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரின் கழிவுச்சட்டியைச் சுத்தம்செய்ய கஸ்தூர் பா மறுத்ததே காந்தி அவரிடம் கடுமையாக நடந்துகொள்ளக் காரணமாக இருந்தது. 1904-ல் பீனிக்ஸ் குடியிருப்பில் வேலைகள் தொடங்கிவிட்டன. பல்வேறு சமூகத்தினரும் சமத்துவத்தோடும் கூட்டுறவோடும் வாழும் முயற்சி இந்தக் குடியிருப்பு. ‘யார் எந்தப் பணியில் இருந்தாலும் சரி, உடலுழைப்பிலும் ஈடுபட வேண்டும், எல்லோரும் எல்லா வேலைகளிலும் பங்கேற்க வேண்டும்’ என்பது காந்தி வகுத்த அடிப்படைக் கட்டுப்பாடுகளில் ஒன்று. மலம் அள்ளுவது உட்பட.

1920 நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் காந்தி ஆற்றிய தலைமை உரையில் குறிப்பிடுகிறார், “நாம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்காகப் போராடுகிறோம். ஆனால், நம்மில் பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல், தீண்டாமைக் கொடுமையால் பிரித்துவைத்திருக்கிறோம். தீண்டாமை தொடரும் வரை நமக்குச் சுயராஜ்யம் சாத்தியமே இல்லை.”

வைக்கம் போராட்டம் 30.3.1924 அன்று தொடங்கியது. முன்னதாக வைக்கத்தில் உள்ள மோசமான சூழலை விவரித்து கேசவ மேனன் எழுதும் கடிதத்துக்கு 19.03.24 அன்று பதில் கடிதம் எழுதுகிறார் காந்தி. வைக்கம் போராட்டத்துக்குத் தன் முழு ஆதரவைத் தெரிவித்து எழுதும் இக்கடிதத்தில், காந்தி குறிப்பிடுகிறார், “அவர்கள் தீண்டாதவராக இருப்பது மட்டுமல்ல; சில தெருக்களில் நடக்கவும் கூடாது என்ற நிலை எவ்வளவு வேதனைக்குரியது! நமக்கு ஏன் இன்னமும் சுயராஜ்யம் கிடைக்கவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமே இல்லை. நம் நாட்டின் தாழ்ந்த வர்க்கத்தினர் பொது வழிகளில் நடக்கக்கூடிய உரிமைகளைப் பெற்றே தீர வேண்டும்.”

முக்கியமான விஷயம், இந்த விஷயங்கள் எல்லாம் நடந்த காலகட்டங்களில் அம்பேத்கர் பிறக்கவேயில்லை அல்லது சிறுபிராயத்தில் இருந்தார் அல்லது படித்துக்கொண்டிருந்தார்.

கான்: ஒரு வழிகாட்டி!


கான் அப்துல் கஃபார் கானின் 125-வது ஆண்டு இது. தன்னுடைய வாழ்நாளில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். அதில் 14 ஆண்டுகள், இந்தியச் சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் அனுபவித்தவை. ஒரு லட்சம் பஷ்தூனியர்கள் அணிவகுத்த அஹிம்சைப் படையை உருவாக்கியவர். இந்தியப் பிரிவினையின்போது, “எங்களை ஓநாய்களிடம்  வீசியெறிந்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் கூறிவிட்டு, கலங்கிய கண்களுடன் விடைபெற்றவர். இந்தியாவில் ஒரு இடத்திலேனும் இந்த ஆண்டு கான் நினைவுகூரப்பட்டதாகத் தெரியவில்லை. அரசியல் அடையாள நிமித்தமாகவேனும் நேருவின் 125-வது ஆண்டைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, கானை முற்றிலுமாகவே கைகழுவிவிட்டது. சரி, இந்திய முஸ்லிம்களே மறந்துவிட்ட ஒரு மாமனிதரை காங்கிரஸ் மறந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஆனால், இன்றைக்கு இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பவராக கான் இருக்க முடியும்.

காளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்?


அலங்காநல்லூர். இந்தக் குளிர்காலத்திலும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வேலையை ஆரம்பித்துவிடுகிறார் செல்வம். வீட்டில் ஐந்து மாடுகள் நிற்கின்றன. இவற்றைத் தாண்டி உதவி என்று கேட்பவர்களின் மாடுகளைப் பராமரிக்கவும் ஓடுகிறார். “நமக்கு பால் மாடு வளப்புதான் பொழைப்பு. ஜல்லிக்கட்டு காளைகள பழக்குறது பொழுதுபோக்கு. ஆறு மாசக் கன்டா இருக்குறப்பவே காளய பழக்க ஆரம்பிப்பாய்ங்க. அதோட சேந்து நாமளும் நடக்கிறது, நீச்சல் அடிக்கிறது, குத்துப் பழக்குறதுன்னு விளையாடறப்ப நமக்கும் வயசு குறைஞ்சுரும்” என்கிறார்.

செல்வத்துடன் பேசிக்கொண்டே இருந்தால், ஒரு மாட்டை வாங்கிக்கொண்டு கிராமத்துப் பக்கமாகப் போய்விடலாமா என்று தோன்றும். அப்படி ஒரு பிரியமான பேச்சு மாடுகள் மீது!

“பொறந்ததுலேர்ந்து மாட்டோடதான்யா கெடக்குறோம். மாடுங்க இல்லாட்டி வாழ்க்கையே இல்லை. நம்மளவிட யாருக்கு மாட்டைப் பத்தி தெரியப்போவுது? இந்தச் சல்லிக்கட்டு சமயத்துலதான்யா பூராப் பயலும் மாட்டு மேல அக்கறையிருக்கிற மாதிரிப் பேசிக்கிட்டு வர்றாய்ங்க. நல்ல நாள்ல இங்கெ மாடுக என்ன கதியில கெடக்குதுன்னு ஒரு பயலுக்கும் அக்கறை கெடையாது.

தமிழ்நாட்டோட பாரம்பரிய மாட்டினம் பூராவும் அழிஞ்சுக்கிட்டுருக்கு. ஒருகாலத்துல முப்பது நாப்பது ரகம் சொல்லுவாய்ங்க மாட்டுத் தரகருங்க. இப்ப அஞ்சாறு இனத்தைக் காப்பாத்துறதுக்கே போராடிட்டுருக்கோம். இது விவசாயிங்களோட பிரச்சினை மட்டும் இல்ல. பால் குடிக்குற ஒவ்வொருத்தரும் கவலைப்பட வேண்டிய பிரச்சினை. எப்படின்னு சொல்றன்.

இந்தத் தாய்க்கு என்ன பதில்?


வெயில் சுள்ளென்று தெறித்துக்கொண்டிருந்த நேரத்தில், அற்புதம் அம்மாள் வந்திருந்தார். முதுமையின் படபடப்பு. பயணமும் அலைச்சலும் தந்த களைப்பு. முகச்சுருக்கங்களில் ஓடி வழியும் வியர்வை. மூச்சிரைப்பு இன்னும் அடங்கவில்லை. 69 வயதாகிறது. ஏறாத படிகள் இல்லை. சிறைச்சாலை, வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், அரசியல்வாதிகள் - மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் வீடுகள், ஊடக அலுவலகங்கள் நீதிமன்றங்கள், சட்டப்பேரவை... மகனை மீட்பதற்காக 25 ஆண்டுகளாக அலைகிறார். பார்த்த மாத்திரத்தில் அவருடைய கனத்த பைக்குள் கைகள் செல்கின்றன. காகிதங்களை உருவுகிறார். “யப்பா, கடைசியில அறிவு வாழ்க்கைய சிறைக்குள்ளேயே முடிச்சுடுவாங்கபோல இருக்குப்பா. எல்லார் கவனத்துலேர்ந்தும் அதை வேற பக்கம் கொண்டுபோயிட்டாங்கப்பா!”

கத்தை கத்தையாகக் காகிதங்களை மேஜை மீது போடுகிறார்.

வெள்ளம் அடித்துச்சென்ற தீர்ப்பு 
தமிழகத் தலைநகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்த 2015, டிச.2-ல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியானது. ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை வளையத்திலிருந்து வெளியே வந்து, இப்போது ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும் இவர்களை விடுவிக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பேரிடியாக விழுந்தது அன்றைய தினம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட மூன்று விஷயங்கள் இத்தீர்ப்பில் முக்கியமானவை.

1. ஆயுள் தண்டனை என்பதற்கு, ‘எஞ்சிய ஆயுள் முழுவதற்குமான தண்டனை’ என்பதே அர்த்தம்.
2. மத்தியப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் தண்டனைக் குறைப்பு வழங்க முற்பட்டால், அந்த முடிவை மாநில அரசு மட்டுமே எடுத்துவிட முடியாது; மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும்.
3. தேசப் பாதுகாப்பை மனதில் கொள்ளாமல் மன்னிப்பின்பேரில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க முடியாது. தேசத் தலைவர்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுத் தாக்குதல் நடவடிக்கையாகவே கருத வேண்டும்.

சாதாரண நாட்களில் வெளியாகியிருந்தால், தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை இந்தச் செய்தி உருவாக்கியிருக்கக் கூடும்.

உணவல்ல; உயிர் கொடுக்கிறோம்!


சென்னை, திருவல்லிக்கேணி உணவு விடுதிகளுக்குப் பேர் போனது. தலைநகரில் ஒண்டிக்கட்டைகளின் பேட்டை இது என்பது அதற்கான பின்னணிகளில் ஒன்று. நூற்றாண்டுகளைக் கடந்த படா படா உணவகங்களின் மத்தியில் ‘பாரதி மெஸ்’ அப்படி ஒன்றும் பழுத்த கிழம் அல்ல. சின்னதும்கூட. சென்னை வந்த புதிதில் வெளியே வீட்டுச் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தபோது நண்பர்கள் ‘பாரதி மெஸ்’ஸுக்கு வழிகாட்டினார்கள். கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.

முதல் முறை உணவகத்துக்குள் நுழைந்தபோதே ஆச்சரியமாக இருந்தது. முகப்பிலேயே கடவுள் இடத்தில் பாரதி. தவிர, சுவர் எங்கும் பாரதியின் அரிய படங்கள். கூடவே, “இதுவரை பாரதியாரின் 5 புகைப்படங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றில் மூன்று வகையான தோற்றத்தில் உள்ளார்” என்பது போன்ற சிறுசிறு குறிப்புகள். ஒரு அலமாரியில் பாரதியின் எல்லாப் படைப்புகளும். ஒரு அலமாரியில் சலுகை விலையில் ‘பாரதி கவிதைகள்’. ஒரு அலமாரியில் விலையில்லாப் புத்தகங்கள். விரும்புவோர் தாம் படித்த புத்தகங்களை இங்கே அளிக்கிறார்கள்; விரும்புவோர் அவற்றை எடுத்துச்செல்கிறார்கள். சுவரில் ஒரு இடத்தில் எழுதியிருந்தது, “இங்கு வீட்டு முறையிலேயே சமைக்கிறோம். அஜினோமோட்டோ, சோடா உப்பு, பாமாயில், டால்டா சேர்ப்பது இல்லை. வயிற்றுக்கு எந்தப் பழுதும் நேராது; மனதாரச் சாப்பிடுங்கள்.” ஒரு இடத்தில் எழுதியிருந்தது: “நாம் தோசையில் மேல் மாவு சேர்ப்பதில்லை.”

உணவின் சுவையில் மட்டும் அல்ல; தரத்திலும் தனித்துவம் தெரிந்தது. இப்படிதான் ‘பாரதி மெஸ்’ கண்ணன் அறிமுகமானார்.

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?



நாஞ்சில் சம்பத் விவகாரம் அடங்கியபாடில்லை. ஒரு கட்சிப் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவது - மன்னியுங்கள், விடுவிக்கப்படுவது - அவ்வளவு பெரிய செய்தியா? இந்த ஆட்சியில் இதுவரை 22 முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது; 20 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; 6 பேர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவை அத்தனைக்குமான காரணங்கள் நமக்குச் சொல்லப்பட்டனவா? நாம்தான் கேட்டோமா?

எல்லோரிடமும் மன்னிப்பு கோருகிறேன்!


புத்தாண்டு நாளுக்குப் பெரிய கவனம் கொடுப்பதில்லை. உட்கார்ந்து யோசிக்கவோ, கொண்டாடித் தீர்க்கவோ என்று நாட்களை ஒதுக்குவதும் இல்லை. ஆனால், பிறந்த நாள், திருமண நாள், புத்தாண்டு நாள் போன்ற தருணங்களைக் கொஞ்சம் யோசிக்க ஒதுக்குவது முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரே ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும்போது நம்மைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக்கொள்ள இவையெல்லாமும் ஒரு வாய்ப்புதானே?

எங்கெல்லாம் குறை என்று கவனிக்க உட்காரும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட ஓட்டைகள். நம் முகத்தை நாமே அவலட்சணமாக உணர்வது அவலம். ஓட்டைகள் இருக்குமிடம் தெரியாமல் ஓடுவது தவறு என்றால், தெரிந்தும் திருத்திக்கொள்ளாமல் ஓடுவது அயோக்கியத்தனம்.

இப்போது சரிசெய்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். நிறைய. வீட்டில் ஆரம்பித்து அலுவலகம் வரையில். எல்லாவற்றையும் வெளியே சொல்லத் தேவையில்லை என்றாலும், அம்பலத்தில் செய்த தவறுகளுக்கு அம்பலத்திலேயேதானே பரிகாரமும் தேட வேண்டும்?

என்னுடைய வார்த்தைகள் - பேச்சு/எழுத்து இரண்டுமே - சில நேரங்களில் வெறுப்பை உமிழ்ந்திருப்பதை உணர்கிறேன். பொதுவாக, என் பக்கம் நியாயம் இல்லாமல் கோபிக்க மாட்டேன். ஆனால், வெறுப்பை எந்தக் கோபத்தைக் கொண்டும் நியாயப்படுத்தவே முடியாது; கூடாது.

சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?


இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழா தடைபட்டு கிடக்கிறது. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்.

ஏன் உங்கள் கண்களுக்கு நல்லகண்ணு தெரியவில்லை?


எப்போதெல்லாம் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரைக் குறிப்பிட்டு எழுதுகிறேனோ அப்போதெல்லாம் இடதுசாரி வாசகர்களிடமிருந்து காட்டமாக அழைப்புகள் வரும்: “நேர்மையான, எளிய அரசியலுக்கான உதாரணங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் எழுத்தாளர்கள் ஏன் கடந்த காலத்துக்குள் போய்ப் புகுந்துகொள்கிறீர்கள்? இன்றைக்கும் அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள் ஏன் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை?”

அடுத்த முதல்வர் சகாயம்?


எப்படி யோசித்தாலும் இப்படியொரு நிகழ்வு நினைவில் இல்லை; பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை அரசியலுக்கு அழைக்க மக்கள் கூட்டம் திரண்டதும் அதைத் தடுக்க அரசு இயந்திரம் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்ததும்!

சமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்னி றுத்தி நடந்துகொண்டிருக்கும் கோஷங்களும் பிரச் சாரங்களும் புதிதாக இருக்காது. பல்லாயிரக்கணக் கானோர் இந்த முழக்கங்களுடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். ஆனால், இணையத்தில் இருந்தவர்கள் இப்படி ஒரு கோரிக்கையோடு வீதியில் இறங்குவது தமிழகத்தில் அநேகமாக இதுவே முதல் முறை. நேரடித் தேர்தல் அரசியலில் சகாயத்துக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது; அவருக்கு அப்படியான கனவுகள், திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ‘அரசியலில் சகாயம்’ எனும் வார்த்தைகளே அரசியல்வாதிகள், கட்சி அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் அமிலத்தைப் போன்ற எரிச்சலை உருவாக்குவதை உணர முடிகிறது. அதற்குள்ளேயே சிலர் கேட்கிறார்கள், “நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா? சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது?”

அது சரி, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இதுபற்றியெல்லாம் என்ன கருத்து இருக்கிறது என்று நமக்குத் தெரியும்? மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார்? எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்?

என்னுடைய பள்ளி நாட்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக உமாசங்கர் ஐஏஎஸ் பணியாற்றிய நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. இளமைத் துடிப்போடு பணிக்கு வந்திருந்த உமாசங்கர் கலக்கிக்கொண்டிருந்தார். புது சினிமா வந்தால் டிக்கெட்டைப் பல மடங்கு உயர்த்தி விற்பது அங்குள்ள திரையரங்குகளின் வழக்கம் (மன்னார்குடி திரையரங்குகளில் அப்போது முதல் வகுப்புக் கட்டணம் ரூ.10 என்று நினைவு). ஒருநாள் இரவுக் காட்சியின்போது ஒரு திரையரங்கில் உள்ளூர் விவசாயிபோல, லுங்கி-முண்டாசோடு உள்ளே புகுந்தார் உமாசங்கர். ரூ.10 டிக்கெட்டை ரூ.100-க்கு விற்ற திரையரங்க சிப்பந்தியை கவுன்ட்டரிலேயே வைத்து கையும் டிக்கெட்டுமாகப் பிடித்தார். இன்னொரு நாள் இப்படித்தான். பெட்ரோல் நிலையங்களுக்கு மாறுவேஷத்தில் போன அவர், அளவு குறைவாக பெட்ரோல் நிரப்பியவர்களைக் கையும் பெட்ரோல் போத்தலுமாகப் பிடித்தார். இப்படி ஆற்றில் அத்துமீறி மணல் அள்ளியவர்களைப் பிடித்துவிட்டார், ரேஷன் அரிசி கடத்தியவர்களைப் பிடித்துவிட்டார் என்று ஏதாவது சேதிகள் வந்துகொண்டே இருக்கும். மக்கள் சதா பேசிக்கொண்டே இருப்பார்கள். தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மின் ஆளுகை மாவட்டமாகக் கொண்டு வந்தவர் உமாசங்கர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நிறையப் பேச வருவார். எவரும் அவரை எளிதில் சந்திக்க முடியும். எங்களூர் பக்கம் பள்ளி மாணவ-மாணவியர் பலர் வெகுநாட்களுக்கு, “உமா சங்கர்போல நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவேன்” என்று சொல்வதை சக மாணவனாகப் பார்த்திருக்கிறேன்.


மாற்றமாவோம்!


அரசியலுக்கு நிறைய விளக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இப்படியும் புரிந்துகொள்ளலாம்: சகஜீவிகள் மீதான அன்பு. அரசியல் செயல்பாடுகளுக்கு நிறைய தொடக்கங்கள் இருக்கின்றன. எளிமையாக இங்கிருந்தும் தொடங்கலாம்: சுயமாற்றம்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா ஸ்ரீராம். நுண்கலை படித்தவர். கணவர் ராஜீவ் பெங்களூருவில் பொறியாளர். இன்றைய நெருக்கடியான நகரமயமாக்கல் நவீன வாழ்க்கை, நவீன விவசாயம் நஞ்சாகத் தரும் உணவு, நவீன கல்வி உருவாக்கும் அடிமையாக்கப் பயிற்சி எல்லாவற்றினாலும் விரக்தி அடைந்தார் சங்கீதா. எல்லாவற்றுக்கும் மாற்றுத் தேட ஆரம்பித்தார். மாற்று வாழ்க்கைச்சூழல், மாற்றுக் கல்வி, மாற்று விவசாயம்… திருவண்ணாமலையில் இருக்கிறார் இப்போது. நவீன விவசாயத்துக்குப் பின்னுள்ள சர்வதேச சந்தை அரசியலை அம்பலப்படுத்தும் ‘பசுமைப் புரட்சியின் கதை’ அவர் எழுதிய முக்கியமான புத்தகம். இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே பாலமாகப் பணியாற்றும் சந்தை அமைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்றார். இப்போது நாடு முழுவதும் மாற்றத்துக்காக உழைக்கும் வெவ்வேறு தனிநபர்கள், சிறுகுழுக்கள் இடையேயான உறவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இரு வழிகள்; நாம் எந்த வழி?



நகுலனின் அமரத்துவமான கவிதை வரிகளில் இது ஒன்று: “இருப்பதற்கென்றுதான் வருகிறோம்; இல்லாமல் போகிறோம்.” விக்கிரமாதித்யன் எழுதிய ஒரு கவிதையும் அடிக்கடி முன் நின்று கேள்வி கேட்கும்: “எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்; எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்; எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?”
 

சென்னை வந்த கொஞ்ச நாளிலேயே ஒரு உண்மை அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இந்த நாடு வாழ்வதற்கானதாக அல்ல; பிழைப்பதற்கானதாக நம் வாழ்வை மாற்றிக்கொண்டிருக்கிறது.
“ஏன் மாப்ள, ஓடி ஓடிச் சம்பாதிக்குற காசையெல்லாம் சின்ன வயசுல பிள்ளைங்களுக்காகப் பள்ளிக்கூடங்கள்ல கொடுத்துடுறோம்; நடு வயசுல சம்பாதிக்கிறதைக் கல்லூரிகள்ல கொடுத்துடுறோம்; வயசான பின்னாடி மிஞ்சுற காசை ஆஸ்பத்திரிக்காரன் பறிச்சுக்குறான். உள்ளபடி நாம யாருக்குச் சம்பாதிச்சுக் கொடுக்க இந்த ஓட்டம் ஓடுறோம்? யாரு காலை ஆட்டிக்கிட்டு கடலை வேடிக்கை பார்க்க இந்த ஓட்டம் ஓடுறோம்?”
கேள்விக்கான பதிலை யோசிக்கும் முன்பே மீண்டும் ஓட்டத்தை நோக்கி விரட்டிவிடுகிறது சூழல்.


ஒருவேளை இந்தப் பள்ளிக்கூடம் தொடங்கி ஆஸ்பத்திரி வரையிலான எல்லாச் செலவுகளைத் தாண்டியும் நம்மால் கொஞ்சம் காசு சேர்த்து வைக்க முடியும் என்றால், நம் பேரப் பிள்ளைகளுக்கு அது உதவலாம். அவர்களுக்கும்கூட வைத்தியச் செலவுகளுக்கு அந்தக் காசு உதவுமே தவிர, காலை ஆட்டிக்கொண்டு கடலை வேடிக்கை பார்க்க உதவாது என்பதே உண்மை. உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து ஒரு விபரீதத்தைச் சுட்டிக்காட்டிவருகிறது. இப்போதெல்லாம் வாழ்முறை சார்ந்த நோய்களே இந்தியர்களை அதிகம் கொல்கின்றன. குறிப்பாக, இந்திய நகர்ப்புறங்களில் ஏற்படும் 80% மரணங்கள் இதயநோய், புற்றுநோய், சுவாச நோய், நீரிழிவு நோய் போன்றவற்றாலேயே ஏற்படுகின்றன. 60 வயதுக்குள் இந்நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் 13%. இந்தியாவில் 30%. இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2005-ல் 3.8 கோடியாக இருந்தது. இப்போது 6 கோடி. நீரிழிவு நோயாளிகள் 5.1 கோடி. இது தவிர, 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களைக் கொல்லும் நோய்களின் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த புற்றுநோய் முதலிடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 11 லட்சம் பேரைப் புதிதாக அது பீடிக்கிறது; 7 லட்சம் பேரை அது கொல்கிறது.

குப்பை அரசியல்!




அடையாற்றிலிருந்து அதிகபட்சம் 250 மீட்டர் தூரத்துக்குள் இருக்கிறது என் வீடு. வெள்ளம் வீட்டுக்குள் என்ன வேகத்தில் வந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டியது இல்லை. 10 நாட்களுக்குப் பின்னரே வீட்டுக்குள் நுழைய முடிந்தது. நிறைய நண்பர்கள் விசாரித்தார்கள். பொருளாதாரரீதியாகப் பெரும் இழப்புகள் நேர்ந்திருக்குமோ என்கிற கவலையில், உதவவும் பலர் முன்வந்தார்கள். அப்படியான பொருள் இழப்புகள் எதுவும் நேரவில்லை. உண்மை இதுதான். எங்கள் வீட்டில் கார், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் எதுவும் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை. ஏனென்றால், அப்படியான பொருட்கள் எதுவுமே வீட்டில் இல்லை. மிச்சமிருந்த சாமான்களும் புத்தகங்களும் அரை மணி நேரத்துக்குள் சில மூட்டைகளில் கட்டி பரண்களில் வைக்கக் கூடிய அளவிலானவை. ஆகையால், யாவும் தப்பித்தன. இதற்காக பொருட்களே இல்லை என்றால், எந்தப் பாதிப்புமே இருக்காது என்று சொல்ல வரவில்லை; என்னளவில் நான் புரிந்துகொண்டிருக்கும் ஒரு உண்மை, பொருட்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக்கொள்கிறோமோ, அவ்வளவுக்குச் சுமைகளும் சிரமங்களும் குறைவு என்பது.

ஆறா, சாக்கடையா?


சற்று ஆறுதலாக இருக்கிறது. மறைமலையடிகள் பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் மக்கள் ஆர்வமாகப் பார்த்துச் சொல்கிறார்கள்: “அடையாத்துல எவ்ளோ தண்ணீ!”

சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன. அடையாறு, கூவமாறு, கொசஸ்தலையாறு. ஏராளமான கால்வாய்கள் குறுக்கிலும் நெடுக்கிலும் வெட்டுகின்றன. ஆனால், சென்னைவாசிகளுக்கு சாலையில் எந்த நீர்நிலை குறுக் கிட்டாலும் அதற்கு ஒரே பெயர்தான். கூவம். அதுவும் ஆற்றின் பெயராக விளிக்கப்படுவது இல்லை. சாக்கடைக்கான மறுபெயர்.

கக்கா போவதும் அரசியல்தான்!


சிகாகோவிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் சதீஷ்குமார். இளைஞர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊரான வேலூர் வந்துவிடலாமா என்று நினைக்கிறேன். நம்மூரில் சமூகத்துக்காக எதாவது செய்ய வேண்டும். இன்றைய அரசியல் சூழலை எப்படி மாற்றுவது என்று கேட்டிருக்கிறார். கோவையிலிருந்து ஒரு மின்னஞ்சல். அனுப்பியிருப்பவர் மைதிலி. இரு குழந்தைகளுக்குத் தாய். இந்தச் சமூகத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்று கேட்டிருக்கிறார். மதுரையிலிருந்து ஒரு மின்னஞ்சல். தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை அவர். நாட்டின் அரசியல் சூழல் மாற்றத்துக்குப் பங்களிக்க விரும்புகிறேன். ஆனால், என்னுடைய குடும்பச் சூழலில் வீட்டைவிட்டு வெளியே வர முடியாது. எங்களைப் போன்றவர்களுக்கு என்ன வழி இங்கே இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். நிறையப் பேர் மாணவர்கள். என்ன செய்வது; எங்கிருந்து தொடங்குவது என்பதே அவை சுமந்திருக்கும் அடிப்படைக் கேள்விகள்.

உண்மையில், செய்வதற்குக் கண் முன் ஏராளமான பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. தேவை என்னவென்றால், ஒரே ஒரு தெளிவு: எல்லாமே அரசியல்தான். அரசியல் மாற்றத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்றால், முதலில் வீட்டிலிருந்து, கழிப்பறையிலிருந்தேகூடத் தொடங்கலாம்.

கொஞ்சம் விளக்கமாகவே எழுதுகிறேன்.

என் தாத்தாவுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை இருந்தது. கூடவே மூல உபத்திரவமும் இருந்தது. கழிப்பறைக்குச் செல்வது என்பது ஒவ்வொரு நாளும் அவரளவில் நரகத்துக்குச் சென்று திரும்பும் அனுபவம். இந்திய பாணிக் கழிப்பறையில் உட்காருவதும் எழுவதும் அவருக்கு மரண அவஸ்தை. பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு எழவும் உட்காரவும் சுவரில் ஒரு இரும்புக் குழாய் பதிக்கப்பட்ட இந்திய பாணிக் கழிப்பறையையே கடைசிவரை பயன்படுத்தினார். அதற்கு மூன்று காரணங்களை அவர் சொல்வார், 1. சுற்றுச்சூழலுக்கு ஓரளவேனும் இதுவே உகந்தது - தண்ணீர் சிக்கனம். 2. சுகாதாரத்துக்கு உகந்தது - நம்முடைய உடல் கழிப்பறையில் ஒட்டுவதில்லை. 3. உடலியக்கத்துக்கு நல்லது - நம்முடைய மலக்குடல் அமைப்புக்கு இப்படி உட்கார்ந்து கழிப்பதே சரியானது. தவிர, இது ஒரு வகையான ஆசனம். மூன்றுமே அறிவியல்பூர்மானவை.

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய்!


ரவு வெகுநேரமாயிற்று வேலை முடித்துச் செல்ல. குளிர் உடலுக்குள் ஊடுருவிச் சென்றது. உள்ளூர் ரயில் நிலையங்களில் எப்போதும் நிற்கும் கூட்டம் இல்லை. நடைமேடைக் கடையில் தண்ணீர் போத்தல் வாங்கினேன். தலையைச் சுற்றி கம்பளி மப்ளரைக் கட்டிக்கொண்டு, கைகளை இறுகக் கட்டியவராக உட்கார்ந்திருந்தார் கடைக்காரர். “எப்படி இருந்த ஊர், எப்படியாயிட்டு பாருங்க…” என்றார். “ஒரு பத்து லட்சம் பேர் ஊரைவிட்டுப் போயிருப்பாங்களா?” என்றார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவரே தொடர்ந்தார், “கூடவே இருக்கும். உலகப் போர் சமயங்கள்லகூட சென்னைல இவ்வளவு மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்குமானு தெரியலை. அவ்ளோ போயிருக்கு சனம். அகதிங்க மாதிரி. சீக்கிரம் திரும்பிரும். ஆனா, எவ்ளோ கஷ்டம்!” ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். அவர் இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு என் பக்கம் இரண்டை நீட்டினார். கொஞ்ச நேரம் அமைதி. “இனி மேலும் இவங்களையெல்லாம் இப்படியே விடக் கூடாதுங்க!” என்றார். சிரித்தேன். ரயில் வந்தது. வெறிச்சோடி கிடந்தது. ரயிலின் வேகம் குளிரை மேலும் கூட்ட ஆரம்பித்தது.

மக்கள் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்களா? இப்படி ஒரு கேள்வி கேட்டால், எப்போதுமே அதற்கான பதில் ஆம். ஆனால், புதிய மாற்றங்களுக்கான முயற்சிகள் ஏன் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகின்றன?

பிள்ளைகளுக்கு அரசியல் ஆபத்து.. த்ரிஷா இல்லனா நயன்தாரா கலாச்சாரம்?


அடிக்கடி நினைப்பது உண்டு. உலகில் நம்மைப் போல வேறு எந்தச் சமூகமாவது சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் வீட்டுக்கல்வியாகக் கற்றுக்கொடுக்குமா என்று. கல்வியில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக நம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். செல்வத்தில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏன் வீரத்தில் மட்டும் அவர்கள் நம்மைவிடவும் கோழைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? எது போராட்டக் குணத்தைப் பொறுக்கித்தனம் என்றும் அரசியலை ஒரு சாக்கடை என்றும் சிறுமைப்படுத்திக் காட்டி அவர்களை ஒதுக்கி வளர்க்கச் சொல்கிறது?

ஊருக்கு ஊர், பள்ளிக்குப் பள்ளி, கல்லூரிக்குக் கல்லூரி மேடை போட்டு உரக்கக் கத்த வேண்டும்போல இருக்கிறது, “கேரியர் என்ற வார்த்தையைச் சொல்லி பிள்ளைகளை அடிமைகளாக்காதீர்கள்” என்று. “உனக்கு கேரியர் முக்கியம்; உனக்கு எதிர்காலம் முக்கியம்!” எனும் வார்த்தைகளைப் போல பிள்ளைகளிடம் சுயநலத்தை விதைக்கும் ஆபாசமான வார்த்தைகள் இல்லை. மேலும், உண்மையாகவே நம்முடைய பிள்ளைகள் மகத்தானவர்கள் ஆக வேண்டும் என்றால், அதற்கும் நாம் ஊட்டி வளர்க்கும் இந்தச் சுயநல வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமும் இல்லை.

1869-ல் போர்பந்தரில் காந்தி பிறந்த வீடு மூன்று தளங்களைக் கொண்டது. காந்தி ஏழையாகப் பிறந்தவர் அல்ல. 1893-ல் காந்தி தென்னாப்பிரிக்கா செல்லும்போது அவருடைய வயது 24. தென்னாப்பிரிக்காவுக்குப் புரட்சி செய்வதற்காக அவர் செல்லவில்லை. பொருளீட்டத்தான் சென்றார். ஓரிரு வருஷங்கள் தங்கி வழக்கறிஞர் பணியாற்றச் சென்றார். ஆனால், பயணத்தில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அவருக்கு நேரிட்ட அவமானம் அவர் வாழ்க்கையை மாற்றியது. தான் எதிர்கொண்ட பிரச்சினை தன்னுடையது மட்டும் அல்ல; தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினை என்பதை உணர்ந்தார். போராடினார். மாற்றத்தை உண்டாக்கினார். கோகலே அழைப்பின்பேரில் இந்திய அரசியலில் காலடி எடுத்துவைத்தார். 1915-ல் இந்தியா திரும்பியபோது காந்திக்கு வயது 45. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமையை அனுபவிப்பதற்கான, பொருளீட்டுவதற்கான, தன் வாரிசுகளுக்கான சொத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மிக முக்கியமான காலகட்டம் என்று நம்பும் காலகட்டம் அவர் தென்னாப்பிரிக்காவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது. இந்தியா வந்த காந்தி சொத்துகளோடு வரவில்லை. அதன் பின்னரும் சாகும் வரை தன் குடும்பத்துக்காகச் சொத்து சேர்க்கவில்லை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல காந்தி.

1916-ல் கமலாவைத் திருமணம் செய்துகொண்டபோது நேருவுக்கு வயது 27. 1936-ல் இறந்தபோது, கமலாவுக்கு வயது 36. நேரு-கமலா தம்பதியின் 20 ஆண்டு தாம்பத்திய வாழ்வில் பெரும் பகுதி நேரு சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்தார் அல்லது சிறையில் இருந்தார். அலகாபாத்தில் அரண்மனை போன்ற மாளிகையில் பிறந்த நேரு, ஒருகட்டத்தில் வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் விற்கும் முடிவுக்கு வந்தார். காந்தியிடம் ஆலோசனை கேட்டு நேரு எழுதிய கடிதங்களில் முக்கியமானவை தனிப்பட்ட வாழ்வில் அவர் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் தொடர்பானவை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல நேரு.

கொல்வது பயம்


இந்தியப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘லைஃப் ஆஃப் பை’. எழுத்தாளர் யான் மார்ட்டலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு சின்ன குடும்பம் கதாநாயகன் பையினுடையது. அம்மா, அப்பா, அண்ணன், பை. வாழ்க்கைச் சூழல்களால் பாண்டிச்சேரியைக் காலிசெய்துவிட்டு புறப்படுகிறது பையின் குடும்பம். கப்பலில் பயணம். கடலில் கடும் புயலில் கப்பல் சிக்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரையும் பையின் கண் முன் கடல் காவு கொள்கிறது. பை மட்டும் உயிர் தப்புகிறான் ஒரு படகில். கூடவே ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு குரங்கு, ஒரு புலி. யாவும் கப்பலிலிருந்து தப்பியவை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள். எல்லோருக்கும் பசி. முதலில் வரிக்குதிரையை ஓநாய் கொல்லும். அடுத்து குரங்கைக் கொல்லும். அப்புறம் அந்த ஓநாயைப் புலி கொல்லும். இப்போது மிச்சம் இருப்பது புலியும் பையும். கடும் பசி. இருப்பது நடுக்கடலில். அடிக்கடி அவரவர் இருப்புக்கான சண்டை. இதனிடையே மீண்டும் ஒரு புயல். அந்தப் பயணம் எப்படி முடிகிறது?

நமக்குள் ஒரு தலைவன்!


தேசிய ஊடகங்கள் பெரும்பாலனவை சென்னை வெள்ளத்தை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மும்பையில் ஒரு பெண் தொழிலதிபர், தன் மகளை எப்படிக் கொன்றார் எனும் கதையைக் கிளுகிளுப்பான பின்னணியில் ஒரு மாதத்துக்கும் மேல் பக்கம் பக்கமாக எழுதியவர்கள். இன்றைக்கு வரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரை வாங்கியிருக்கும் தமிழக வெள்ளச் செய்தியை உள்பக்கங்களில் ஒரு மூலையில் அடக்கியிருக்கிறார்கள். ஆனால், ஆச்சரியம் அடைய ஏதுமில்லை. காலங்காலமாக நம்முடைய ‘தேசிய ஊடகங்கள்’ காலனியாதிக்க, நிலப்பிரபுத்துவ, சாதி-மத-மொழி-இன துவேஷ மனோநிலையில்தான் செயல்பட்டுவருகின்றன.

மக்கள் ஆட்சி


ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். “அது என்ன நீங்கள் ‘தி இந்து’வில் இப்படி எழுதுகிறீர்கள், ‘முகம் தெரியாத அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள்; ஆனால், அரசியல்வாதிகளை முகமாகக் கொண்ட அரசாங்கம் என்று ஒன்று இங்கே இல்லவே இல்லை!’ என்று. அரசாங்கம் வேறு; அரசு ஊழியர்கள் வேறா?” இன்னொரு வாசகர், “இது போன்ற பேரிடர்களின்போது அரசாங்கத்தை விமர்சிக்கலாமா?” என்று கேட்டிருந்தார்.

மனிதப் பேரவலம்!

நன்றி: படம்: தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன்
திர்பாராதது அல்ல. அப்படிச் சொன்னால், அது பெரும் பாவம்! சென்னை இந்தப் பருவத்தில் எதிர்கொள்ளும் கடும் மழையை அக்.16-ம் தேதி அன்று நண்பர் கணேஷ் சொன்னார். அவர் கையிலிருந்த வானிலை அறிக்கை சொன்னது. சரியாக ஒரு மாதம் கழித்து, நவம்பர் 14-ல் சென்னை கடும் மழையை எதிர்கொண்டது. நகரம் ஸ்தம்பித்தது. அடுத்த கடும் மழை நவம்பர் 22-ம் தேதி என்றது முன்னெச்சரிக்கை. நவம்பர் 30-ல் எதிர்கொள்ளவிருக்கும் மழை இவற்றின் உச்சமாக இருக்கும் என்பதையும் அப்போதே கணேஷ் சொன்னார்.