எண்டோசல்ஃபான்.
1950-களில் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி இது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய விவசாயிகளால் விரும்பிப் பயன்படுத்தப்பட்ட இது, பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டுவிட்டது. காரணம், பயிர்கள் மீது தெளிக்கப்படும்போது, பூச்சிகள் மீது எத்தகைய பாதிப்புகளை உருவாக்குகிறதோ, அதே வகையிலான பாதிப்புகளை மனிதர்கள் மீதும் எண்டோசல்ஃபான் உருவாக்கியது!
சிதைக்க முடியாத ரசாயனம் எண்டோ சல்ஃபான். காலத்தைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பாதிப்புகளை உருவாக்கக்கூடியது.எல்லைகளைத் தாண்டி, மண், காற்று, நீர் எனப் பல வகைகளிலும் ஊடுருவக்கூடியது. அன்டார்டிகாவில்கூட எண்டோசல்ஃபானின் தாக்கம் பரவி இருக்கிறது.கடந்த வாரம் எண்டோசல்ஃபானுக்கு சர்வதேசத் தடை விதிப்பது தொடர்பாக, உலக நாடுகள் விவாதித்தன. மாநாட்டில் 173 நாடுகள் பங்கேற்றன. 125 நாடுகள் எண்டோசல்ஃபானின் தடையை உறுதி செய்தன. 47 நாடுகள் குழப்பமான சூழலில் அமைதி காத்தன. ஒரே ஒரு நாடு மட்டும் எண்டோ சல்ஃபான் தடைக்கு எதிராகப் போராடியது... அது இந்தியா!
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எண்டோ சல்ஃபானைப் பயன்படுத்தும் அனுமதியைப் பெற்று இருக்கிறது இந்தியா. இதற்கு நம்முடைய அரசு சொல்லும் சப்பைக்கட்டு, மாற்றுப் பூச்சிக் கொல்லிகள் இந்தியாவில் இல்லை என்பது!
இயற்கை வேளாண்மையில், காலங்காலமாக மூலிகைப் பூச்சி விரட்டியை நாம் பயன்படுத்து கிறோம். நவீன வேளாண்மையிலும்கூட, வேப்ப எண்ணெய் கலந்து அடி உரம் இட்டால், பூச்சி கள் அண்டாது. இப்போதுகூட, ஆந்திரத்தில் அரசே நூற்றுக்கணக்கான கிராமங்களை இயற்கை வேளாண்மைக்குத் திருப்பி வெற்றி பெற்று இருக் கிறது. ஆக, உண்மையான காரணம் மாற்று இல்லை என்பது அல்ல. இந்தியாவில் ஆண்டுக்கு, 8,500 டன் எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படு கிறது. 4,000 கோடி இந்தத் தொழிலில் புரளு கிறது. காசு அரசின் கண்களை மறைக்கிறது!
இந்தியாவில், ஆயிரக்கணக்கானோர் எண்டோசல்ஃபானால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, கேரளத்தில் காசர்கோடு பகுதியில் பலர், புற்றுநோய், மூளை வளர்ச்சிக் குறைபாடு, உடல் ஊனம் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்கள். மண்ணே நஞ்சானது. கடும் எதிர்ப்பால் கேரளம், எண்டோசல்ஃபானுக்குத் தடை விதித்தது. தொடர்ந்து, கர்நாடகமும் தடை விதித்தது. இந்தத் தடை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், விஷத்துக்கு ஆதரவாகவே முடிவு எடுத்திருக்கிறது அரசு.
இவர்கள் யாருடைய பிரதிநிதிகள்?
ஆனந்த விகடன், 2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக