தீவிரவாதத்தை ஒழித்த பயங்கரவாதி!

கொல்லப்பட்டார் ஒசாமா பின்லேடன்!
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள், இரு பெரும் போர்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்கள், லட்சக்கணக்கான கோடிகளைப் பலியிட்ட பின் வெள்ளை மாளிகை தனது மகத்தான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அறிவிப்பு வெளியானபோது, நள்ளிரவு என்றும் பாராமல் வீதிகளில் கூடி, ஆடித் தீர்த்தார்கள் அமெரிக்கர்கள். வரும் செப். 11 வரை  கொண்டாட்டங்கள் தொடரலாம்!
ஒசாமா பின் முஹம்மது பின் அவாத் பின்லேடனின் ஒரே சாதனை என்ன? ஒசாமாவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் மாறியது. உலகில் தனி ஒரு நாடே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா அரசுகளும் கை கோத்தன. ஆயுதக் குழுக்களை அழிப்பதில் ஒன்றிணைந்தன. பல தேசியப் போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டன!
ஆயுதக் குழுக்கள் மூலம் அரசுகளைத் தகர்க்கலாம் என்பதுதான் ஒசாமாவின்  நம்பிக்கையாக இருந்தது. ஆனால், உலகின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான காரணங்களுக்காகக்கூட ஆயுதக் குழுக்கள் செயல்பட முடியாத நிலையை உருவாக்கியதைத்தான், ஒசாமாவின் ஒரே 'சாதனை’யாக நான் நினைக்கிறேன்!
''அமெரிக்கா எல்லா நாடுகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள நினைக்கிறது. எல்லா நாடுகளின் வளங்களையும் கொள்ளையடிக்க நினைக்கிறது. அதன் முகவர்கள்தான் நம்மை  ஆள வேண்டும் என்று நினைக்கிறது. இதற்கு நாம் எல்லோரும் சம்மதிக்க வேண்டும்என்று  நினைக்கிறது. எதிர்ப்பவர்களைப் பயங் கரவாதிகள் என்கிறது. யார் பயங்கரவாதி... அமெரிக்காவா? அமெரிக்காவின் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்ப் பவர்களா?''
- ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தன் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளுக்கு ஒசாமா பின்லேடன் அளித்த பதில் இது.
''அமெரிக்கா எதைச் செய்ய நினைக்கிறதோ, அதைச் செய்து முடிக்கும். உலகத்துக்கு நாம் மீண்டும் சொல்லும் செய்தி இதுதான்!''
- ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்தபோது, ஒசாமாவின் மரணத் தைப்பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டது இது.
அமெரிக்கா எதை எல்லாம் செய்ய நினைக்கிறதோ, அதை எல்லாம் செய்து முடித்துவிடுவதால்தான், ஒசாமாக்கள் உருவாகிறார்கள் என்பதை அமெரிக்க அதிபர்களுக்கு யார் சொல்வது?
ஆனந்த விகடன் 2011 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக