இலவசங்களின் விலை!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் அவருடைய திட்டங்களையும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவர் இப்போது தன்னுடைய ஆட்சியின் பயணத்தைத் தொடங்கி இருப்பது கருணாநிதியின் பாதையில்தான்! முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், இந்த அரசு பயணிக்கப் போகும் பாதை கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. இலவச அரசியலில் எந்த வகையிலும் நாங்கள் தி.மு.க-வுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லாமல் சொல்கின்றன ஆளுநர் அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள்!
எப்போதுமே இலவசம் என்ற வார்த்தையை ஒரே அர்த்தத்தில் அல்லது ஒரே விதமான நோக்கத்தில் பார்க்க முடியாது. கல்வியிலோ, சுகாதாரத்திலோ, வேலைவாய்ப்புகளிலோ அரசு சார்பில் கட்டணம் அற்ற சேவைகளை அளிப்பது ஒரு மக்கள் நல அரசின் கடப்பாடு. தவிர, தன் மக்களில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு சில சலுகைகளை அரசாங்கங்கள் அளித்துதான் ஆக வேண்டும்!
நம்முடைய அரசு, வளர் இளம்பெண்கள் ஆரோக்கியத்துக்காக உதவி வழங்குகிறது. ஏழைப் பெண்கள் திருமணத்துக்கு நிதி வழங்குகிறது. கருவுற்ற பெண்களின் ஊட்டச்சத்துக்காக நிதி வழங்குகிறது. மூத்தக் குடிமக்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்குகிறது. இவை எல்லாம் கடமைகள். பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறது. பாடப் புத்தகங்கள், சீருடைகள், பஸ் பாஸ்கள், சைக்கிள்கள் வழங்குகிறது. இவை எல்லாம் மனிதவள முதலீடுகள். இலவச அரிசியையும் மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறியையும் இப்படிப் பார்க்க முடியுமா?

நம் நாட்டில் ஒருவரைப் பரம ஏழை என்று சொல்ல அரசு வைத்து இருக்கும் வரையறைகள் கேலிக்குரியவை. சர்வதேச அளவில் ஒரு நாளைக்கு ஒரு டாலர் சம்பாதிக்கவே அல்லாடுபவர்களை பரம ஏழைகளாக வரையறுக்கிறார்கள். தமிழகத்தில், இந்தக் கணக்கில் 30 சதவிகிதத்தினர் வரலாம். இவர்களுடைய பொருளாதார மீட்சிக்குத் திட்டங்களை அறிவித்தால், அரசை வரவேற்கலாம். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் வகுக்கும் திட்டம் இவர்களுக்கானது அல்ல. இவர்களையும் சேர்த்தது. அதாவது, ஓட்டுள்ள அனைவருக்குமானது. உதாரணமாக, தமிழக அரசின் ‘கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி வழங்கும் திட்டம்’ அரிசி வாங்கும் 1.87 கோடி குடும்ப அட்டைதாரர்களும் பயனாளிகள் என்கிறது. இது எப்படி வறியவர்களுக்கானதாகும்?
அ.தி.மு.க. அரசு 2006-ல் ஆட்சியில் இருந்து விலகியபோது, தமிழகத்தின் கடன் ரூ. 57,457 கோடி. இப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்து விலகியபோது அந்தக் கடன் ரூ. 1,01,541 கோடியாக உயர்ந்து நிற்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தமிழகத்தின் வருவாயுடன் ஒப்பிட்டால், 2006-ல் மாநிலத்தின் கடன் 22.5 சதம்; 2011-ல் 19.58 சதம். அதாவது, இரு கழக ஆட்சிகளுமே 20 சதவிகிதம் அளவுக்கான கடனை ஒரு பெரிய பிரச்னையாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அத்தியாவசய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தள்ளிப்போடும்போது மட்டும் நிதிச் சுமையைக் காரணமாகக் கூறுவதை ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே வழக்கமாகக் கொண்டு இருக்கிறார்கள்! 
ஜெயலலிதா இப்போது இந்தக் கடன் சுமையைப் பெரிய சுமை என்று பேசத் தொடங்கி இருக்கிறார். ஆனால், அவர் அறிவித்து இருக்கும் புதிய இலவசத் திட்டங்கள் இந்தச் சுமையை மேலும் பல மடங்குகள் தீவிரம் ஆக்கும்!
ஆளுநர் அறிவிப்பின்படி, செப். 15-ம் தேதி தொடங்க உள்ள ‘கிரண்டர், மிக்ஸி, மின்விசிறி வழங்கும் திட்டம்’ 2011-12-ம் ஆண்டில், 25 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ. 1,000 கோடி இந்தத் திட்டம் செலவு வைக்கலாம். 5 ஆண்டுகள் முடிவில் ரூ. 6,000 கோடிகள் இதற்குச் செலவாகி இருக்கும். மாநிலத்தின் இன்றைய கடன் தொகையில் கிட்டத்தட்ட இது 6 சதவிகிதம்!
அரசுத் தரப்பில் இதற்கு விளக்கம் அளிப்பவர்கள் அடித்தட்டு மக்கள் எல்லாம் எப்போது இந்த வசதிகளை அனுபவிப்பது என்று கேள்வி எழுப்பலாம். கடந்த ஆட்சியில், இலவசத் தொலைக்காட்சித் திட்டம் மீதான விமர்சனங்களை அப்படிதான் எதிர்கொண்டது தி.மு.க. அரசு. அதே அரசுதான் அடித்தட்டு மக்களின் அன்றாட வழக்கங்களில் ஒன்றாக மது குடிப்பதை மாற்றியது. ஏறத்தாழ ரூ. 1 லட்சம் கோடி புரளும் தொழிலாக - மாநிலத்தின் வருவாயில் 25 வருவாய் தரும் தொழிலாக மது வியாபாரத்தை மாற்றியது. மது வியாபாரத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தபோது, ‘‘இந்த வருவாய் இல்லை என்றால், எப்படி இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துவது?’’ என்று கேள்வி எழுப்பியது. அத்தியாவசியப் பிரச்னைகளுக்காக மக்கள் கேள்வி எழுப்ப முடியாமல் அவர்களை முடக்கியது. சுருக்கமாகச் சொன்னால், ஒருபுறம் இலவசங்களைக் கொடுத்துக்கொண்டே மறுபுறம், மக்களின் பணத்தைச் சுரண்டியது!
இப்போது புதிய அரசு இலவசங்களைத் தொடங்குகிறது. உலகில் இலவசங்கள் என்று எதுவுமே இல்லை; எல்லாவற்றுக்குமே மறைமுகமான விலை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு. புதிய அரசின் இலவசங்களுக்கான விலையை இப்போதே தமிழக மக்கள் யோசித்து வைப்பது நலம்!
ஆனந்த விகடன் 2011

1 கருத்து:

  1. பள்ளிக் கல்வியை அரசுடமையாக்க இவ்வளவு செலவு தேவைப்படாது என நினைக்கிறேன், அதை செயல் படுத்தலாமே.

    பதிலளிநீக்கு