ஓவியம்: ஹாசிஃப் கான் |
‘‘வீடுகளை அழி, அவன் அடையாளம் இல்லாமல் போகட்டும்
பள்ளிக்கூடங்களை அழி, அவன் பண்பாடு இல்லாமல் போகட்டும்
நூலகங்களை அழி, அவன் வரலாறே இல்லாமல் போகட்டும்!’’
நூலகங்களை அழிப்பது போர் வியூகங்களில் ஒன்று. அழிக்கப்பட்ட நூலகங்கள்
பட்டியலைப் பண்டைய எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் இருந்து ஆரம் பிக்கலாம்.
பாரசீகத்தின் டெஸிஃபோன் நூலகம், சீனாவின் சிங் ஹுவா நூலகம், பர்மாவின் ராயல் நூலகம், யூகோஸ்லோவேகியாவின் செர்பிய நூலகம், இராக்கின் பாக்தாத் நூலகம்... நூலகங்களைத் தீயிட்டுக்
கொளுத்துவதும், சூறையாடு வதும், குண்டு வீசித் தகர்ப்பதுமே உலகம் இதுவரை கண்டிருக்கும்
முறைகள். ஜெயலலிதா இப்போது 'அஹிம்சா’ வழியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்... இடம் மாற்றி
அழிப்பது!
ஏற்கெனவே ஜெயலலிதா ஒரு நூலகத்தை
அழித்துவிட்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே அவர் நடத்திய தலைமைச் செயலக
மாற்றத்தால் அங்கு செயல்பட்ட பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தில் இருந்த
அரிய ஓலைச்சுவடிகள், செம்மொழி நூல்கள், சங்க இலக்கியப் பழைய பதிப்புகள், பழைய இதழ்கள் தொகுப்புகள் யாவும் செல்லரித்துக்கொண்டு
இருக்கின்றன. உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் மீது இப்போது அவர் கை வைத்திருப்பது
தமிழ் அறிவுலகின் நூற்றாண்டுக் கனவு மீதான குரூரமான தாக்குதல்.
தமிழகத்தில் 4,028 பொது நூலகங்களும் 12,620 ஊராட்சி நூலகங்களும் இருக்கின்றன. ஆனால், இன்றைய நவீன உலகில், ‘நூலகம்’ என்ற சொல்லுக்கு உள்ள விரிவான அர்த்தத்தைக்கொண்டு இருப்பது
அண்ணா நூலகம் மட்டும்தான். 172 கோடியில், 3.75 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில், 9 தளங்களில் அமைந்து இருக்கும் இது ஆசியாவின் இரண்டாவது
பெரிய நூலகம். ஏறத்தாழ 12 லட்சம் புத்தகங்களைவைக்கும்
கொள்ளள வைக்கொண்ட இதில், இப்போது 5.5 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழ்ப்
புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் 1.5 லட்சம். இங்கு உள்ள புத்தகங்களின்
மதிப்புக்கு ஓர் உதாரணம் ‘என்சைக்ளோபீடியா ஆஃப் ஹ்யூமன்
பயாலஜி’. மருத்துவம் தொடர்பான இந்த நூல்
தொகுதியின் விலை எவ்வளவு தெரியுமா?
1,99,545.
உலகின் முக்கியமான பதிப்பகங்களான ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான நூல்கள்
அத்தனையும் அண்ணா நூலகத்தில் உண்டு. யுனெஸ்கோவின் உலக இணைய நூலகத்துடன் இணைக்கப்
பட்ட இதன் மூலம், உலகின் முக்கியமான நூலகங்கள்
எதையும் தொடர்புகொள்ள முடியும்.
பசுமைத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றிக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் உள்ள
ரம்மியமான சூழலும் நல்ல நூலக அறிவைக்கொண்ட இதன் ஊழியர்களின் ஒத்துழைப்பும்
தமிழகத்தின் வேறு எந்த நூலகத்தின் சூழலோடும் ஒப்பிட முடியாதவை.
ஒரு வாசகருக்கு அண்ணா நூலகம் எவ்வளவு நெருக்கமானது என்பதைச் சொல்ல, இங்கு உள்ள சொந்த நூலகப் பிரிவையும் பார்வையற்றோருக்கான
பிரிவை யும் குறிப்பிடலாம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களைக்
கொண்டுவந்து இங்கு படிக்க முடியும். பெரும்பாலும் வீடுகளில் வாசிப்புக்கு ஏற்ற
சூழல் இல்லாத நம் சமூகத்தில், ஒரு வாசகர் முற்றிலும்
குளிரூட்டப்பட்ட ஓர் அறையில் அமர்ந்து தன்னுடைய புத்தகத்தைப் படித்துவிட்டுச்
செல்லலாம் என்பது எவ்வளவு அற்புதமான வாய்ப்பு!
சுமார் 500-க்கும் மேற்பட்ட பிரெய்லி
புத்தகங்களையும் நாம் விரும்பும் புத்தகத்தைப் பார்வையற்றோருக்கான பிரெய்லி
வடிவில் மாற்றித் தரும் இயந்திரத்தையும் கொண்ட பார்வையற்றோருக்கான பிரிவு, அவர்களுக்குக் கிடைத்த பரிசு.
அண்ணா நூலகத்தின் மிகச் சிறந்த பிரிவு குழந்தைகள் பிரிவு. செயற்கை மரம், பறவைகள், குரங்குகள் என 15,000 சதுர அடிப் பரப்பளவிலான இந்தப் பிரிவில், 50 ஆயிரம் புத்தகங்கள், ஏராளமான கணினிகள் இருக்கின்றன. குழந்தைகள் இங்கு நீதிக்
கதைகளைப் படிக்கலாம், கணினியில் பார்க்கலாம், அறிவுசார் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
நூலகம் மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியான அன்றைய தினம் நான் நூலகத்
துக்குச் சென்றிருந்தேன். குழந்தைகள் பிரிவில் குழந்தைகள் படித்துக்கொண்டு
இருந்தார்கள். வறிய தோற்றத்தில் ஒரு சிறுமியும் செழுமையான தோற்றத்தில் ஒரு
சிறுவனும் படித்துக்கொண்டு இருந்த மேஜையை நோக்கிச் சென்றேன்.
''உன் பேர் என்னப்பா?''
''ஸ்ரீவத்சன்.''
''வீடு எங்கே இருக்கு?''
''மாம்பலம்.''
''உன் பேர் என்னம்மா?''
''அனுசுயா.''
''உன் வீடு எங்கே இருக்கு?''
''இங்கதான் பக்கத்துல...''
''எங்கே?''
''(தயங்கித் தயங்கி...) கோட்டூர்ல...
சேரில..!''
- ஒரு சமூகத்தில் உண்மையான சமத்துவம்
இப்படித்தான் ஆரம்பிக்கிறது. ஜெயலலிதாவின் முடிவு நேரடியாகத் தாக்குதல்
நடத்தியிருப்பது இந்தச் சமத்துவத்தின் மீதுதான். யாழ்ப்பாணம் நூலகத்தை இன
வெறியர்கள் தீயிட்டு அழித்தார்கள். அண்ணா நூலகத்தை ஜெயலலிதா இடம் மாற்றி
அழிக்கப்போகிறார். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை!
நூலகம் இருக்கும் இடத்தில் குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை
கொண்டுவரப்படுவதன் மூலம் தமிழகம் குழந்தைகள் நல மருத்துவத்தில் முன்மாதிரி
மாநிலமாக மாறும் என்று அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.
தமிழகத்தில் குழந்தைகள் நல மருத்துவத்தில் அரசு காட்டும் அக்கறை எந்த அளவுக்கு
இருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம், சென்னை எழும்பூர் அரசினர்
குழந்தைகள் மருத்துவமனை. 1968-ல் பெரிய கனவுகளுடன் தொடங்கப்பட்ட
இந்த மருத்துவமனையில் 40 துறைகள் இருக்கின்றன. துறைகள்
அளவில் ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனை இது.
இன்றைக்கு இந்த மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறையில் அறுவை சிகிச்சை செய்ய
நிபுணர்கள் கிடையாது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் கிடையாது. இதய நோய்ப் பிரிவில், இதய செயல்பாட் டைத் துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் கேத்
லேப் கருவி கிடையாது. எல்லாத் துறை களும் ஒன்று அல்லது இரண்டு சிறப்பு மருத்துவ
நிபுணர்களை மட்டுமே கொண்டு இயங்குகின்றன. கிட்டத்தட்ட 25 சதவிகிதப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி அரசு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன்
சிலிண்டர்கள் இல்லாததால், ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்தது நினைவிருக்கலாம். தமிழகத்தில் கிட்டத்தட்ட 50 அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் நலப் பிரிவு இருக்கிறது.
அநேகமாக எல்லாமே மருத்துவர்கள், உபகரணங்கள் பற்றாக்குறையுடன் தான்
இயங்குகின்றன. போதிய மருத்துவர் களும் மருத்துவ உபகரணங்களும் இல்லாத நிலையில், வெறும் கட்டடங்களை மட்டும் கட்டிக்கொண்டேபோவதால் யாருக்கு
என்ன பயன்?
நிச்சயமாக கருணாநிதியின் சாதனைதான்... அண்ணா நூலகம். மருத்துவமனையின் பெயரால்
அதை அழித்துவிடுவதாலேயே கருணாநிதியின் பெயரையும் அழித்துவிட முடியும் என்று
ஜெயலலிதா நம்பினால், அது அறியாமை.
அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகம் பிரிட்டிஷ் படைகளால் அழிக்கப்
பட்டபோது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர்
தாமஸ் ஜெபர்சன் சொன்னார்: ''மக்களின் தேவைகளை அறிந்துகொள்ள, உலகில் எந்தெந்தத் துறைகளில், என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றனவோ, அவ்வளவையும்கொண்ட நூலகமாக இதை மீண்டும் நிர்மாணிப்போம்.''
தன்னுடைய வார்த்தைகளுக்காக ஜெபர்சன் கடுமையாக உழைத்தார். அவருக்குப் பிந்தைய
அமெரிக்க அதிபர்கள் அத்தனை பேரும் உழைத்தார்கள். இன்றைக்கு 460 மொழிகளைச் சேர்ந்த 14.4 கோடிப் புத்தகங்கள், வரைபடங்கள், குறுந்தகடுகள், கையெழுத்துப் பிரதிகளுடன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் உலகின்
மிகப் பெரிய நூலகமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆட்சியாளர்களுக்குப்
புத்தகங்களுடனும் நூலகங்களுடனும் இருக்க வேண்டிய உறவுக்கு உதாரணமாக லைப்ரரி ஆஃப்
காங்கிரஸும் ஜெபர்சனும் வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்கள். வரலாற்றில் ஜெயலலிதாவும்
நினைவுகூரப்படுவார். பண்டைய இந்தியாவின் அறிவுச் சுரங்கமான நாளந்தா நூலகத்தை
அழித்து இன்றும் நினைவுகூரப்படும் முஹம்மது பின் பக்தியார் கில்ஜிபோல!
Super
பதிலளிநீக்குArticle I appreciate you